இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்கள் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமல்லாமல் சமூக நோக்கோடு செயல்படும் அறநிலையங்களாகவும் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருக்கோயில்களின் சார்பில் 25 பள்ளிகளும், 10 கல்லூரிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் மொத்தம் 22,249 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்கள் சார்பில் கொளத்தூர், திருச்செங்கோடு, விளாத்திக்குளம், ஒட்டன்சத்திரம் ஆகிய இடங்களில் 4 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டதோடு, கொளத்தூர் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு பல்கலைக்கழக விதிமுறைகளின்படி, உதவிப் பேராசிரியர்கள், நூலகர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளும் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு முதலமைச்சர் 02.11.2021 அன்று சென்னை, கொளத்தூர் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொடங்கி வைத்து, அக்கல்லூரியில் பயிலும் 240 மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கட்டணம் ரூ.10,000/- மற்றும் கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகளை வழங்கினார். இக்கல்லூரியில் B.Com., BBA, BCA, B.Sc. Computer Science ஆகிய பட்டப்படிப்புகளும், சைவ சித்தாந்தம் பட்டயப்படிப்பும் பயிற்றுவிக்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, 2022-ஆம் ஆண்டில் 480 மாணவ, மாணவியருக்கும், 2023-ஆம் ஆண்டில் 685 மாணவ, மாணவியருக்கும், 2024-ஆம் ஆண்டில் 748 மாணவ, மாணவியருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்விக் கட்டணம் ரூ.10,000/- மற்றும் கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகளை வழங்கினார். இக்கல்லூரியில் 2023-24 ஆம் கல்வியாண்டில் இறுதி ஆண்டு பயின்ற 141 மாணவ, மாணவியர் வளாக நேர்காணல் மூலம் பல்வேறு முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது வாடகை கட்டடத்தில் இயங்கிவரும் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு கொளத்தூரில் அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான இடம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறைக்கு நில மாற்றம் செய்யப்பட்ட இடம், என மொத்தம் 5.96 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய கல்லூரி கட்டுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றையதினம் அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.
இக்கல்லூரிக் கட்டடமானது, முதற்கட்டமாக தரை மற்றும் நான்கு தளங்களுடன் 20 வகுப்பறைகள், முதல்வர் அறை, ஆசிரியர்கள் அறை, அலுவலகம், ஆய்வகங்கள், கணினி அறை, கருத்தரங்கு கூடங்கள், நூலகம், உணவகம், கழிவறைகள் மற்றும் வாகன நிறுத்துமிடம் போன்ற வசதிகளுடனும், இரண்டாம் கட்டத்தில் 24 வகுப்பறைகள், ஆசிரியர்கள் அறை, கருத்தரங்கு கூடம், ஆய்வகங்கள் மற்றும் கழிவறைகள் ஆகிய வசதிகளுடன் கட்டப்படவுள்ளது.