தமிழ்நாடு

அதிநவீன ஒப்புயர்வு மையமாக உயர்த்தப்பட்ட அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம்!

அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தை அதிநவீன ஒப்புயர்வு மையமாக தமிழ்நாடு அரசு தரம் உயர்த்தியுள்ளது.

அதிநவீன ஒப்புயர்வு மையமாக உயர்த்தப்பட்ட அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தை அதிநவீன ஒப்புயர்வு மையமாக உயர்த்தி, மருத்துவ சேவையில் ஒரு மேம்பட்ட மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம், 1969 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் சி.என்.அண்ணாதுரை அவர்களின் நினைவாக காஞ்சிபுரத்தில் நிறுவப்பட்டது. இந்நிறுவனம் கடந்த நாற்பது ஆண்டுகளாக தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற இடங்களிலிருந்து வரும் நோயாளிகளுக்கு இலவச புற்றுநோய் சேவை வழங்குவதில் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது.

290 படுக்கைகள் மற்றும் 230 அனுமதிக்கப்பட்ட பணியிடங்களுடன் செயல்படும் இம்மருத்துவமனை, ஒவ்வோர் ஆண்டும் 1,800–2,100 புதிய புற்றுநோய் நோயாளிகளுக்கும் 4,800–5,400 தொடர்கவனிப்பு தேவைப்படும் நோயாளிகளுக்கும் மருத்துவ சேவை வழங்கி வருகிறது. தினந்தோறும், சராசரியாக 110–130 நோயாளிகளுக்கு கதிரியக்க சிகிச்சையும், 12-15 புற்றுநோய் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும், இம்மருத்துவமனை 69,721 வெளிநோயாளிகளுக்கு கீழ்க்கண்ட பல்வேறு வகையிலான சேவைகளை வழங்கியுள்ளது.

* கதிரியக்க சிகிச்சை : 12,919 நோயாளிகள்

* கீமோதெரபி : 30,177 நோயாளிகள்

* மகளிர் மருத்துவ புற்றுநோயியல் : 2,843 நோயாளிகள்

* புற்றுநோயியல் அறுவை சிகிச்சை : 18,655 நோயாளிகள்

* வலிதணிப்புப் பராமரிப்பு : 5,127 நோயாளிகள்

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 5,400 நோயாளிகள் இம்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதன் வாயிலாக, இம்மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவ சேவை வழங்குவதில் தனது முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

புற்றுநோய் பராமரிப்பு சேவையை மேம்படுத்துவதற்காக, இந்த மருத்துவமனையை 750 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக விரிவுபடுத்தி, "புற்றுநோய்க்கான ஒப்புயர்வு மையமாக தரம் உயர்த்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இவ்வதிநவீன வசதி கொண்ட ஒப்புயர்வு மையம், 6,36,347 சதுர அடி (தரை + 5 தளங்கள்) பரப்பளவில், 250.46 கோடி ரூபாய் செலவில் முழுதும் மாநில அரசு நிதியின்கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதிநவீன ஒப்புயர்வு மையமாக உயர்த்தப்பட்ட அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம்!

இந்த குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தை செயல்படுத்தும் விதமாக, 394 கூடுதல் பணியிடங்களை அரசு பின்வருமாறு அனுமதித்துள்ளது.

49 மருத்துவ அலுவலர்கள்

2 மருத்துவம் சாராத பணியாளர்கள்

207 செவிலியர் பணியாளர்கள்

7 அமைச்சுப் பணியாளர்கள்

129 துணை மருத்துவப் பணியாளர்கள்

இம்மேம்படுத்தப்பட்ட புற்றுநோய்க்கான ஒப்புயர்வு மையம் பின்வரும் துறைகளில் தனது அர்ப்பணிக்கப்பட்ட சேவையை வழங்கும்:

1. இரத்தவியல்

2. குழந்தை புற்றுநோயியல்

3. தடுப்பு புற்றுநோயியல் / சமூக புற்றுநோயியல்

4. மாநில புற்றுநோய் பதிவு

5. புற்றுநோய் வலி தணிப்பு சிகிச்சை (Palliative cave) / நல்வாழ்வு பராமரிப்பு

இவைகளுடன் கூடுதலாக மனநல மருத்துவப் பிரிவு, காது, மூக்கு, தொண்டை மருத்துவப் பிரிவு, பல் அறுவை சிகிச்சைப் பிரிவு, மருத்துவ காஸ்ட்ரோநெட்டாலஜி பிரிவு, நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவு, இரத்தமாற்ற மருத்துவம் பிரிவு மற்றும் எலும்பியல் பிரிவு ஆகிய துறைகள் இம்மருத்துவமனையில் பன்னோக்கு சிகிச்சை சேவையை வழங்கும் விதமாக ஏற்படுத்தப்படும்.

இந்த மேம்படுத்தப்பட்ட துறைகள் நோயறிதல் மற்றும் சிகிச்சை திறன்களை மேம்படுத்துவதுடன், நோயாளிகளின் காத்திருப்பு நேரத்தைக் கணிசமாகக் குறைத்து, உயர்தர புற்றுநோய் பராமரிப்புக்கான சேவையை, குறிப்பாக வறியநிலையில் உள்ள நோயாளிகளுக்கு வழங்கும். உயர் சிகிச்சைக்கு பிற மருத்துவமனைகளுக்கு நோயாளி பரிந்துரைக்கப்படுவதை குறைப்பதன் மூலம், புற்றுநோய் சிகிச்சைக்கான நோயாளிகளின் தனிப்பட்ட செலவுகளை இத்திட்டம் கணிசமாகக் குறைக்கும்.

2030 ஆம் ஆண்டுக்குள் ஆரம்பநிலை புற்றுநோய் இறப்பை மூன்றில் ஒரு பங்காக குறைக்க வேண்டும் என்ற மாநில அரசின் இலக்கை அடைவதில் இம்மருத்துவமனை பின்வரும் கூறுகளில் கவனம் செலுத்தும்.

* புற்றுநோய் பராமரிப்பில் புவியியல் ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பது,

* புதுமையான ஆராய்ச்சியை வளர்ப்பது மற்றும் மருத்துவ பரிசோதனைகளை

எளிதாக்க முன்னணி உலகளாவிய நிறுவனங்கள் ஒத்துழைப்பது

* அதிநவீன சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவ ஆராய்ச்சியை ஊக்குவித்தல்.

இவ்வொப்புயர்வு மையம், தமிழ்நாடு மற்றும் மற்ற இடங்களிலிருந்து வரும் எண்ணற்ற குடும்பங்களுக்கும் ஒரே இடத்தில் புற்றுநோய்க்கான முழுமையான சிகிச்சையினை 24 மணி நேரமும் வழங்கும். தமிழ்நாடு அரசு, இந்த முன்னோடி முயற்சி வாயிலாக அனைவருக்கும் சமமான நீடித்த மற்றும் விரிவான புற்றுநோய் சிகிச்சை வழங்குவதில் முன்மாதிரியாகத் திகழும்.

banner

Related Stories

Related Stories