கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையத்தில் உள்ள கலைஞர் தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டார். கூட்டத்தில் வருகின்ற பத்தாவது மறறும் பன்னிரண்டாம் வகுப்பிற்கான தேர்வு குறித்தும் அதற்கு அரசு கொடுத்த அறிவுரை பின்பற்றக்கூடிய நடவடிக்கைகளை அலுவலர்களிடம் கேட்டறிந்து அதற்கான அறிவுரையை அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்.
முன்னதாக பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், "அரசுப் பள்ளிகளில் கற்போம் கற்பிப்போம் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆய்வுக்கூடங்களில் மாணவர்களால் கண்டுபிடிக்கப்படக் கூடிய கண்டுபிடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த செயல் என்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது கல்வித்துறையில் தொடர்ந்து வளர்ச்சி பெற்ற மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது" என்று கூறினார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், " பள்ளிகளில் ஏற்கனவே உள்ள ஆய்வுக்கூடங்களில் நவீன மயம் ஆக்கப்பட்ட ஆய்வுக்கூடங்களாக மாற்றுவதற்கான முயற்சி செய்யப்பட்டு வருகிறது. அனைத்து வசதிகளுடன் கூடிய ஆய்வுக்கூடங்களை அமைப்பதற்கான முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
11 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு மட்டும் கொடுக்கப்பட்ட அந்த வசதி அனைத்து மாணவர்களுக்கும் கிடைப்பதற்கான வழிவகைகள் செய்யப்பட்டு வருகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு ஒவ்வொரு ஆண்டும் தேர்ச்சி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. மன அழுத்தம் இல்லாமல் மாணவர்களும் ஆசிரியர்களும் சாதனை புரிவதற்கு காரணம் இதுபோன்ற ஆய்வுக் கூட்டங்களில் அவர்களுக்கு பாராட்டு தெரிவிப்பதுதான்.
பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்கள் சரியாக படிக்கிறார்களா? என்று ஆய்வு நடத்துவதற்காக அறிவிப்பு வெளிட்டிருந்தேன் அதன்படி 2000 பேர் தங்களுடைய பள்ளிக்கு வருகை தர வேண்டும் என கூறி இருந்தார்கள் அவர்கள் அனைவரையும் பார்க்கக்கூடிய நேரம் இன்மை காரணமாக அலுவலர்களை சென்று பார்க்க வேண்டும் என கூறியிருந்தேன். அதன்படி அவர்கள் செல்ல இருக்கின்றனர்.
பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சி தொடர்பாக ஒன்றிய அரசு தனியார் சர்வே நிறுவனத்துடன் இணைந்து சர்வே எடுக்கிறார்கள். அது பெரும்பாலும் தவறுகளாக உள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த ஒரே அரசு தமிழ்நாடு அரசுதான். அனைத்து பள்ளிகளுக்கும் ஆர்டிபிசியில் இன்டெலிஜென்ஸ் மூலம் தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் அவர்களுக்கு பயிற்சி அளிக்கபட்டு வருகிறது" என்று கூறினார்.