அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுநர் RN ரவி அவர்களின் தலித் மக்கள் தொடர்பான அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் Dr. மதிவேந்தன் அவர்களின் மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :
ஆதிதிராவிடர் & பழங்குடியின மக்கள் திராவிட மாடல் ஆட்சியின் சமூக - பொருளாதார வளர்ச்சி திட்டங்களால் முன்னேற்றம் கண்டு வருகிறார்கள். திராவிட மாடல் ஆட்சியில் ஆதிதிராவிடர்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளன. உண்மை அறியாமல் உளறுபவர்களை மக்கள் புறந்தள்ளுவார்கள்..
திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற நாள்முதல் செயல்படுத்தப்படும் சமூக பொருளாதார வளர்ச்சித் திட்டங்களால் ஆதிதிராவிட பழங்குடியின மக்கள் கல்வி, தொழில், பொருளாதார நிலைகளில் மாபெரும் வளர்ச்சியடைந்து வருகிறார்கள். இதனை பொறுக்க முடியாத சிலர், நல்லாட்சிக்கு களங்கம் கற்பிக்க முயற்சிக்கிறார்கள். தங்களின் சுய லாபத்திற்காக மறைமுக அரசியல் செய்பவர்களை, தமிழக மக்கள் புறந்தள்ளுவார்கள் என்பது திண்ணம். இதற்கு நடந்து முடிந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில், நாற்பது தொகுதிகளிலும் வெற்றியைத் தந்து, அவர்களை புறந்தள்ளியதே தக்க சாட்சியாகும்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் பட்டியலின மக்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களை குறிப்பிட விரும்புகிறேன்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சட்டபூர்வமான உரிமைகளை பாதுகாக்க "தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம்" உருவாக்கப்பட்டுள்ளது.
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் மூலம் 1,303 தொழில் முனைவோர்களுக்கு ரூபாய் 159.76 கோடி அரசு மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூபாய் 33.09 கோடி, 288 மகளிர் தொழில் முனைவோருக்கு மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
"அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு" திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில், உட்கட்டமைப்புகளை மேம்படுத்த, ஆண்டுக்கு 200 கோடி வீதம், ஐந்து ஆண்டுகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், 430 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3,653 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் 52,255 பயனாளிகளுக்கு 409.68 கோடி ரூபாய், மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
சாதி, சமயமற்ற சமத்துவ மயானங்களை கொண்டுள்ள 199 முன்மாதிரி கிராமங்களுக்கு 30.3 கோடி ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
சட்டக் கல்வி பயிலும் ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்கள் தொழிற்பயிற்சி மேற்கொள்ள ரூபாய் 10,000 வீதம், 774 மாணவர்களுக்கு ரூபாய் 77.40 லட்சமும், சென்னை மதுரை உயர்நீதிமன்ற நீதி அரசர்களிடம் பயிற்சி பெற ரூபாய் 15,000 வீதம் 35 மாணவர்களுக்கு ரூ. 63 லட்சமும் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
முனைவர் ஆராய்ச்சி பட்டம் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ரூபாய் 50,000ல் இருந்து, ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு, ஆண்டுக்கு 2000 மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
150 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில், 480 புதிய வகுப்பறைகள் மற்றும் 15 அறிவியல் ஆய்வுக் கூடங்கள், ரூபாய் 100 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளன. மேலும் 39 அரசு உண்டி உறைவிட பள்ளிகளுக்கு 100 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வுக்கூடங்கள் ரூபாய் 21.13 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றன.
ஆதிதிராவிடர் பழங்குடியினர் மாணவர் விடுதிகளில் மாதந்தோறும் வழங்கப்பட்ட உணவுப்படி ரூ. 1,100ல் இருந்து 1,400 ரூபாயாகவும், கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மாதம்தோறும் வழங்கப்பட்ட உணவுப்படி ரூ. 1,100ல் இருந்து 1,500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 1,71,844 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
ரூ. 300 கோடி மதிப்பீட்டில் 60-க்கும் மேற்பட்ட புதிய விடுதிக் கட்டடங்களும், ரூ. 100 கோடி மதிப்பீட்டில், 535 விடுதிகளில் பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆதி திராவிடர் மக்கள் வாழும் குடியிருப்புகளுக்கு அருகில் 28 சமுதாயக் கூடங்கள், ரூ. 32.6 கோடி மதிப்பீட்டில், 20 மாவட்டங்களில் கட்டப்படு வருகின்றன.
வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள், உடனடி நிவாரணம் பெறுவதற்கான வழிமுறைகள் தொடர்பான பயிற்சிகள் "சமத்துவம் காண்போம்" என்ற திட்டத்தின் கீழ் 771 காவல்துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்களுக்கு அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தங்கள் அறிவுத்திறனை வளர்த்துக் கொள்வதற்காக அனைத்து மாவட்டங்களிலும் ரூபாய் 117.27 கோடி மதிப்பீட்டில் 120 கிராம அறிவுசார் மையங்கள் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் தங்களது கல்லூரி படிப்பினை முடித்து வெளியில் செல்லும்போது வேலை வாய்ப்பினையும் வழங்கும் வகையில் நல்லோசை சமூக ஆய்வகங்கள் மூலம் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் விளிம்பு நிலையில் உள்ள பழங்குடியினர்களுக்கு 750 வீடுகள் கட்டுதல், தூய்மை பணியாளர் நல வாரியம், ஜெய் பீம் தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்கள் நல சங்கம், என் கல்லூரி கனவு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி போன்ற பல்வேறு புதுமையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
நமது கழக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு கடந்த 2021 முதல் ஆகஸ்ட் 2024 வரையில் பட்டியல் இன மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 7000 விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன, குறிப்பாக கடந்த ஆண்டு மட்டும் 3211 விழிப்புணர்வு முகாம்களும், நடப்பாண்டில் 2,218 விழிப்புணர்வு முகாம்கள், மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டுள்ளது.
இதனால், முன்பு எப்போதும் இல்லாத வகையில், பட்டியலின மக்கள் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் தயங்காமல் அவர்கள் வசிக்கும் மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு) அலுவலகத்தில் புகார் அளித்து வருகின்றனர். அந்தப் புகார்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989ல் தெரிவிக்கப்பட்டுள்ள உதவிகள் காலம் தாழ்த்தாமல் வழங்கப்படுகின்றன.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவுக்கு என தனி காவல்துறை தலைவர் நிலையில் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் காவல் துணை கண்காணிப்பாளர் நிலையில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை கண்காணித்து மேற்பார்வை செய்ய தனி பிரிவு ஏற்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது
இது மட்டும் இல்லாமல் முதலமைச்சரின் சமத்துவம் காண்போம் என்ற திட்டத்தின் மூலம் பட்டியலின மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உடனடியாக எவ்வாறு தீர்வு காண வேண்டும் அவர்களுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள உதவிகளை உடனடியாக எவ்வாறு வழங்க வேண்டும் என்பது குறித்து பயிற்சிகள் காவல் துணை கண்காணிப்பாளர்கள், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது இப்ப பயிற்சியின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனுக்குடன் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.
ஆதிதிராவிடர் பழங்குடியினர் மக்களின் சமூக பொருளாதார வாழ்வாதாரம் மேம்படுத்துவதற்காக பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திராவிட மாடல் ஆட்சியை குறை கூறுவோர் மக்களால் புறக்கணிக்கப்படுவார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
மக்களின் தீர்ப்பை மதிக்காமல் மக்களாட்சியின் தத்துவத்தை உணராமலும் அன்னமிட்ட தமிழ்நாட்டிற்கு நாள்தோறும் கேடு செய்வது என்பது நுணுக்கிளையில் அமர்ந்து அடிக்கிலையை வெட்டும் செயலுக்கு சமமாகும்.