திராவிட போராளி, மெட்ராஸ் என்று இருந்த பெயரை ‘தமிழ்நாடு’ என்று பெயர்சூட்டிய சிற்பி, பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு மற்றும் திமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று 116-வது பிறந்தநாள் தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு திமுக தலைவர்கள் பலரும் பேரறிஞர் அண்ணாவின் திருவுருப்படம், திருவுருவச்சிலை உள்ளிட்டவற்றுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.
மேலும் அண்ணாவின் நினைவுகளையும், தமிழ்ச் சமுதாயத்துக்கு ஆற்றிய தொண்டையும் நினைவுப்படுத்தும் வகையில், பலரும் வாழ்த்துகளை பதிவு வாயிலாக பகிர்ந்து வருகின்றனர். காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை அண்ணாசாலையில், அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவச் சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, துரைமுருகன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஐ.பெரியசாமி, செகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து சென்னை, அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.