ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து குரங்கம்மை நோய் உலக அளவில் பரவத்தொடங்கியதை அடுத்து, வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருகை தரும் பயணிகளிடம் வானூர்தி நிலையங்களிலேயே குரங்கம்மை பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் முதன்முறையாக சென்னை கிண்டி கிங் இன்ஸ்டியூட்டில் (king Institute) குரங்கம்மை நோய்க்கு பரிசோதனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும், குரங்கம்மைத் தொற்று எப்படி பரவுகிறது? யார் யாருக்கு பரவுகிறது? எப்படி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்? என்னென்ன சிகிச்சை முறைகள் என்னென்ன என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பொது சுகாதாரத்துறை.
அதன்படி, குரங்கம்மை நோய் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு சென்று வந்தவர்கள் 21 நாட்களுக்குள் காய்ச்சல், தலைவலி, குடல் வலி ஏற்பட்டால் 104 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.
பாதிக்கப்பட்டவர்களை வீட்டுக்கு சென்று சோதனை செய்து சிகிச்சை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் இருந்தவர்கள் அவரது குடும்பத்தினரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கவும் வழிகாட்டு நெறிமுறைகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் மருத்துவ பணியாளர்கள் பாதுகாப்பு உடையை அணிந்து பணியாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நோய் வைரஸ் தொற்று என்பதால் வைரஸ் தொற்று சிகிச்சையை இந்த நோய்க்கு தொடங்கவும் வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இத்தகைய அறிகுறி உடன் வரக்கூடியவர்களை தனியார் மருத்துவமனைகளிலும் கண்காணித்து பொது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது
இதனை அனைத்து மாவட்டங்களிலும் பின்பற்ற மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர்களுக்கு பொது சுகாதாரத்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.