சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி திமுக பொறியாளர் அணி சார்பில் அனைத்து மண்டலங்களிலும் பேச்சுப் போட்டியில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து விழா மேடையில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "உலகில் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்று வருகிறது.ஒரு மனிதனின் வரலாற்றைச், சாதனைகளை, செயல்கள் தொடர்பாக தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வருகிறது என்றால் உலக அளவில் அது கலைஞருக்கு மட்டுமே, கலைஞரே மிகப்பெரிய சாதனையாளர்.
கின்னஸ் கலைஞர் என்ற புத்தகத்தை நான் எழுதிக் கொண்டிருக்கிறேன், இந்த மாத இறுதியில் தமிழிலும் ஆங்கிலத்திலும் இந்த புத்தகம் வெளிவர உள்ளது. எடுத்த காரியத்தை முடிக்கும் வல்லமை மிக்க தலைவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்.
உலகில் வேறு எந்த தலைவருக்கும் செய்யாத சாதனைகளை தமிழ்நாடு முதலமைச்சர் செய்து வருகிறார். தமிழ்நாட்டின் மிகப்பெரிய அடையாளமாக கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை உள்ளது. கலைஞர் நூலகம் தென் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கக்கூடிய நூலகமாக உள்ளது....
இந்தியாவில் அதிகமான மருத்துவக் கல்லூரிகள் உள்ள மாநிலமும் தமிழ்நாடுதான். , இந்தியாவில் அதிகமான பொறியியல் கல்லூரிகள் உள்ள மாநிலமும் தமிழ்நாடுதான். 6 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் படித்து வருகிறார்கள்...
உயர் கல்வி மாணவர்களை அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது, உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் மாணவ, மாணவிகளுக்கு மாத மாதம் ஆயிரம் ரூபாயும் 1000 முதல்வர் தந்து வருகிறார்.உயர்கல்வியில் படிப்பவர்களுக்கு மகத்தான சாதனையை முதல்வர் செய்து வருகிறார். நான் முதல்வன் திட்டம் மூலம் இதுவரை 28 லட்ச மாணவ மாணவிகள் பயனடைந்துள்ளனர்"என்று கூறினார்.