தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் பொறுப்பு வகித்து வந்த சிவதாஸ் மீனா, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக நியமனம் செய்யப்பட்ட நிலையில், முதலமைச்சரின் தனிச்செயலாளராக பணியாற்றி வந்த முருகானந்தம், தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக நியமனமிக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த முருகானந்தம் ஐ.ஏ.எஸ்?
என். முருகானந்தம் ஐ.ஏ.எஸ், பொறியியலில் கணிப்பொறி அறிவியல் பட்டப்படிப்பை முடித்தவர்.
இதையடுத்து, இவர் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐஎ.ம்) எம்.பி.ஏ பட்டமும் பெற்றிருக்கிறார்.
பின்னர் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று ஆட்சிப் பணியில் இணைந்துள்ளார்.
இவர் 1991-ம் ஆண்டு ஐ.ஏ.எஸில் தேர்ச்சி பெற்றவர். தமிழக அரசின் பல முக்கிய பொறுப்புகளை இவர் வகித்திருக்கிறார்.
எந்தவொரு பணியை கொடுத்தாலும், அதனை திறம்பட செய்து முடிப்பவர் என்ற பெயர் எடுத்திருப்பவர் என். முருகானந்தம் ஐ.ஏ.எஸ்.
குறிப்பாக, கொரோனா பரவல் காலக்கட்டத்தில் இவர் களத்தில் நின்று பணியாற்றி இருக்கிறார்.
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுத்ததில் இவரது பங்களிப்பு அளப்பரியது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, முருகானந்தம் ஐ.ஏ.எஸ் நிதித்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக நிதித்துறையில் அனுபவம் மிக்கவர்களையே பொதுவாக இந்தப் பொறுப்பில் அமர்த்துவார்கள். ஆனால், நிதித்துறையில் பெரிய அளவில் அனுபவம் இல்லாத முருகானந்தம் ஐ.ஏ.எஸ்.ஸுக்கு இந்த பொறுப்பு கொடுத்தது விமர்சனத்துக்கு உள்ளானது.
ஆனால், தனது திறமையால் நிதித்துறை பொறுப்புகளை சிறப்பாக கையாண்டார் முருகானந்தம் ஐ.ஏ.எஸ். இதனால் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் வாழ்த்தும் பெற்றுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக முதலமைச்சரின் தனிச்செயலாளராக பணியாற்றி வந்த முருகானந்தம் ஐ.ஏ.எஸ் தற்போது தலைமைச் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.