ஒன்றிய கல்வி அமைச்சகம் ஆண்டுதோறும் சிறந்த உயர் கல்வி நிறுவனங்களை பல்வேறு அளவுகோல்களில் மதிப்பீடு செய்து விருதுகளை, சான்றிதழ்களை வழங்கி வருகிறது. அதன்படி ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நாடு முழுவதும் சிறந்த உயர் கல்வி நிறுவனங்களுக்கு நேற்று விருதுகளை வழங்கினார்.
இதில் பொறியியல் பிரிவில் தொடர்ச்சியாக 9வது ஆண்டாகவும், ஒட்டுமொத்த பிரிவுகளில் தொடர்ந்து 6வது ஆண்டாகவும் சென்னை ஐஐடி முதலிடத்தை பிடித்திருக்கிறது. மேலும் ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு ஆகிய இரண்டு பிரிவுகளிலும் இரண்டு விருதுகள் என்று, ஒட்டுமொத்தமாக நான்கு விருதுகளை சென்னை ஐஐடி பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில் தேசிய அளவில் ஒட்டுமொத்த பிரிவுகளில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாகவும், பொறியியல் பிரிவில் தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாகவும் முதல் இடத்தை பிடித்து சென்னை ஐஐடி சாதனை படைத்ததற்கு, ஒரு கேப்டனாக அல்லாமல், சேவகனாக பணியாற்றுவதுதான் காரணம் என சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை ஐஐடி வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஐஐடி இயக்குனர் காமகோடி பேசியதாவது, "இந்தாண்டு 200 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு நாட்டிற்கு முக்கியமான ஒன்று. நாட்டின் அனைத்து கிராமங்களிலும், நகரங்களிலும் கல்வி சென்றடைய வேண்டுமென்பது முக்கியமான நோக்கம்.
மாணவர்களுக்கு AI தொழில்நுட்பம் போன்ற வளர்ச்சி அடைந்த கல்வியை வழங்கி வருகிறோம். ஐஐடி இந்தியா அடுத்த 15 ஆண்டுகளுக்கான விதையை இன்று விதைத்து வருகிறோம். தலை சிறந்த கல்வி நிறுவனங்களில் 9 முறை முதலிடத்தை பெற்றது போதாது, 10 வது முறை தொடர்ந்து முதலிடத்தை பெறவேண்டும் என்பது தான் முக்கியம்.
நாட்டிற்கான கல்வித் தேவையை பூர்த்தி செய்வதில் ஐஐடி மெட்ராஸ் தேசத்தோடு உறுதுணையாக இருக்கும், இனி இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பது எங்களின் நோக்கம்.
அடுத்த முறை ஐஐடி மெட்ராஸ் இப்போதைய வெற்றியை விட இமாலய வெற்றி. ஐஐடியில் பணிபுரிகின்ற பேராசிரியர்கள், மாணவர்கள் என்று ஒட்டுமொத்தமாக பதினைந்தாயிரம் பேரின் கூட்டு முயற்சி, செயல்பாடுகளும், எப்போதும் தான் ஒரு கேப்டனாக அல்லாமல், ஒரு சேவகனாக பணியாற்றுவதும்தான் வெற்றிக்கு காரணம்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த வீரர் வினேஷ் போகத் 100 கிராம் எடையில், போட்டியிலிருந்து வெளிவந்தது வருத்தத்தை அளிக்கிறது. பள்ளி மாணவர்களை சிறுவயதிலிருந்தே போட்டியில் ஆர்வத்தோடு வளர்க்க வேண்டும். பெற்றோர்கள், மாணவர்களை ’படி படி’ என கூறுவதோடு இல்லாமல் விளையாட்டு போட்டிகளையும் கற்றுத்தர வேண்டும்.
மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாடு கல்வித்துறையில் நிலையான முன்னேற்றத்தில் உள்ளது. சென்னை ஐஐடியில் இணையவழியாக இளங்கலை கணிதம், இளங்கலை கணினி அறிவியல் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சென்னை ஐஐடியில் மாணவர்களின் தற்கொலையை தடுக்க பல முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வரக்கூடிய ஆண்டுகளில் இத்தகைய சிறப்பினை தக்க வைக்க மேலும் பல்வேறு முயற்சிகளை எடுப்போம்” என்றார்.