தமிழ்நாடு

இடஒதுக்கீடு விவகாரம் : மக்களை ஏமாற்றும் பாமக - அன்புமணிக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி !

அரசியல் காரணங்களுக்காக தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும் காலங்களில் மட்டும் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு குறித்து பேசி பாட்டாளி மக்கள் கட்சி மக்களை ஏமாற்றி வருவதாக அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.

இடஒதுக்கீடு விவகாரம் : மக்களை ஏமாற்றும் பாமக - அன்புமணிக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இன்று (26.06.2024) பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், சட்டமன்றப் பேரவையில், சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திட முன் மொழிந்த தீர்மானம் குறித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

(1) பீகார் மாநிலத்தில் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பை குறித்தோ, அதை பாட்னா உயர் நீதி மன்றம் தடை செய்தது என்றோ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எதுவும் பேசவில்லை. இந்த தனித் தீர்மானத்தை முன்மொழிந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சமூக நீதி குறித்தும் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்தும், சாதிவாரி கணக்கெடுப்பு குறித்தும் விரிவாக உரையாற்றினார்கள். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உரை சட்டமன்ற குறிப்பேடுகளில் உள்ளது. ஊடகங்களிலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எனவே, தவறான மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பொதுவெளியில் பரப்ப வேண்டாம் என திரு. அன்புமணி இராமதாஸ் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

(2) 10.5 சதவீதம் வன்னியர் உள் இடஒதுக்கீடு: திரு. அன்புமணி இராமதாஸ் அவர்கள் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு குறித்து, உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, பாரா 68, 73 தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுப்பதற்கு எந்த தடையும் கிடையாது எனவும், தரவுகளை சேகரித்து, இடஒதுக்கீடு கொடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். 10.5 சதவீதம் வன்னியர் உள் இடஒதுக்கீடு வழங்க, கடந்த ஆட்சியில், அரசியல் காரணங்களுக்காக, தேர்தல் ஆதாயத்திற்காக, அவசர கோலத்தில் சட்டம் இயற்றப்பட்டது. தக்க தரவுகள் இல்லாமல் இயற்றப்பட்ட இந்தச் சட்டம் செல்லாது என அறிவித்து மாண்பமை உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில்,

(அ)​ உள்ஒதுக்கீடு வழங்க அண்மைக் காலத்தில் பெறப்பட்ட சாதிவாரி புள்ளி விவரங்கள் (pertinent and contemporaneous data) சேகரித்து ஆய்வு செய்யப்படவில்லை. உள்ஒதுக்கீடு வழங்க காலங்கடந்த புள்ளி விவரங்களை மட்டுமே அடிப்படையாக கொள்ளப்பட்டுள்ளது.

இடஒதுக்கீடு விவகாரம் : மக்களை ஏமாற்றும் பாமக - அன்புமணிக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி !

(ஆ)​ காலங்கடந்த புள்ளி விவரங்களின் (antiquated data) அடிப்படையில் வன்னியர்களுக்கு மட்டும் உள்ஒதுக்கீடு வழங்கப் மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் சமுதாயங்களின் பிற்படுத்தப்பட்ட தன்மை மற்றும் சமூக நிலை போன்ற விவரங்கள் ஏதும் ஆராயப்படவில்லை.

(இ) வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கிட மக்கள் தொகை ஒன்று மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது என்பது சட்டப்படியாக நீதிமன்றத்தால் அனுமதிக்கக் கூடியதல்ல. மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் பட்டியல்களில் உள்ள 115 சமுதாயங்களை ஒருபுறமும், ஒரேயொரு வன்னியர் சமுதாயத்தை மறுபுறமும் வேறுபடுத்திக் காட்டி வகைப்படுத்துவதற்கு சரியான காரணங்கள் ஏதும் 2021 சட்டத்தில் கூறப்படாத நிலையில், இச்சட்டம் அரசமைப்புச் சட்டத்தின் கூறுகள் 14, 15 மற்றும் 16 ஆகியவற்றிற்கு எதிராக உள்ளது. உள்ஒதுக்கீடு வழங்க ஏற்கத்தக்க காரணங்கள் ஏதுமில்லை.

​மாண்பமை உச்சநீதிமன்றம் வழங்கிய மேற்கூறிய தீர்ப்பின் அடிப்படையில் தரவுகளைப் பெற்று, ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் திரு V. பாரதிதாசன் அவர்கள் தலைமையில் அமைந்துள்ள தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு கூடுதல் செயல்வரம்பு வரையறுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு, அரசுப் பணி நியமனங்கள், கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கை குறித்த வகுப்புவாரியான விவரங்கள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், முழுமையான சாதிவாரியான மக்கள்தொகை விவரங்கள் (Population details) இல்லாத நிலையில், வேலைவாய்ப்பு மற்றும் கல்வி அடிப்படையிலான தரவுகளை (Secondary data) மட்டும் சமூக, கல்வி மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலைக்கான காரணங்களாக எடுத்துக் கொண்டு இவ்விவகாரத்தில் ஆணையம் முடிவெடுக்க இயலாது என்று தெரிவித்துள்ளது. (Without the primary population data, the commission is not in a position to decide the issue based on the available secondary data to find out whether the communities seeking internal reservation are adequately represented and require internal reservation).

மாண்பமை உச்சநீதிமன்றமும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் குறிப்பிட்டுள்ள மேற்சொன்ன காரணங்களால் தான் முழுமையான சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமாகிறது என்று தமிழ்நாடு அரசு கருதுகிறது. எனவே தான், அதனை வலியுறுத்தி இன்று பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இடஒதுக்கீடு விவகாரம் : மக்களை ஏமாற்றும் பாமக - அன்புமணிக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி !

இந்நிலையில், பொதுவெளியில் சிலர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளபடி 2008-ம் ஆண்டு புள்ளிவிவரங்கள் சேகரிக்கும் சட்டத்தின்கீழ் (Collection of Statistics Act 2008) முழுமையான சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு (Caste-based Census) மேற்கொள்ள இயலாது. சர்வே மட்டுமே மேற்கொள்ள அதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. சட்டப்படியாக, நீதிமன்றங்களிலும் நிலைக்கக்கூடிய கணக்கெடுப்பு என்றால் அது ஒன்றிய அரசால் மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டம் 1948-ன் கீழ்தான் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அண்மையில் பீகார் மாநில அரசால் மேற்கொள்ளப்பட்ட சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டங்களை, முடிவுகளை பாட்னா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததற்கான இரண்டு காரணங்களுள், உரிய சமூக, கல்வி, பொருளாதாரம் குறித்த தரவுகள் இன்றி, மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் மட்டும் ஒதுக்கீடு வழங்கியதும் ஒன்றாகும். மேலும், பீகார் மாநிலம் மேற்கொண்ட சாதிவாரியான கணக்கெடுப்பு குறித்த வழக்குகள் மாண்பமை உச்சநீதிமன்றத்தில் வழக்கு எண். SLP (C) No.016942/2023 நிலுவையில் உள்ளது.

அரசியல் காரணங்களுக்காக தமிழ்நாட்டில் பொதுத் தேர்தல், இடைத்தேர்தல் நடைபெறும் காலங்களில் மட்டும் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு குறித்து பேசி பாட்டாளி மக்கள் கட்சி மக்களை ஏமாற்றி வருகிறது என்றுதான் நாம் கருத வேண்டியுள்ளது. அனைத்து மக்களுக்கும், குறிப்பாக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, வன்னியர் சமுதாயத்தினருக்கு பயனுள்ளதாக அமைய இடஒதுக்கீடு குறித்து முழுமையாக ஆராய்ந்து, நீதிமன்றங்களால் சட்டங்கள் ரத்து செய்யப்படாமல் நிலைத்து நிற்கும் வகையில் சரியான வழிமுறைகளைப் பின்பற்றி செய்யப்பட வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் நோக்கமாகும்.

banner

Related Stories

Related Stories