
சென்னை புளியந்தோப்பு 3 ஆவது தெருவில் வசித்து வருபவர் மாஜர்கான். இவர் புளியந்தோப்பு நரசிம்ம நகர் 5 ஆவது தெருவை சேர்ந்த அஞ்சலை என்பவரிடம் கடந்த வருடம் நவம்பர் மாதம் 40% வட்டிக்கு 4 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.
பின்னர் மாஜர்கான், மாதம் ரூபாய் ஒரு லட்சத்து 60 ஆயிரம் வீதம் 5 மாதம் 8 லட்சம் பணம் கட்டியுள்ளார். இருப்பினும் அஞ்சலை மேலும் தனக்கு ரூ. 9 லட்சத்து 50 ஆயிரம் பணம் தர வேண்டும் என கூறியுள்ளார்.
இதற்கு ’வாங்கிய பணத்திற்கு வட்டியுடன் கட்டிவிட்டேனே மீண்டும் ஏன் பணம் கொடுக்க வேண்டும்’ என கேட்டுள்ளார். இதையடுத்து அஞ்சலை அவரது வீட்டிற்கு அடியாட்களை அனுப்பி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த மாஜர்கான் இதுகுறித்து புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் புளியந்தோப்பு போலீசார் அஞ்சலை மீது வழக்கு பதிவு செய்து அஞ்சலையை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அஞ்சலை பாரதிய ஜனதா கட்சியில் வடசென்னை மேற்கு மாவட்ட மகளீர் அணி செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.`








