தமிழ்நாடு

“தேர்தல் களத்தில் கண்ட காட்சி, திராவிட மாடல் அரசின் சாதனைக்கு சாட்சி”: அமைச்சர் அன்பில் மகேஸ் நெகிழ்ச்சி!

கடைமடை பகுதிகளுக்கும் காவிரி நீர் சீராக கிடைக்க வேண்டும் என்பதற்காக, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பாக டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் தமிழ்நாடு முதலமைச்சர்.

“தேர்தல் களத்தில் கண்ட காட்சி, திராவிட மாடல் அரசின் சாதனைக்கு சாட்சி”: அமைச்சர் அன்பில் மகேஸ் நெகிழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தக் களத்திற்காகத்தான் இவ்வளவு காலமாக காத்திருந்தோம். 2024 நாடாளுமன்றத் தேர்தல் எனும் ஜனநாயகப் போரில் பாசிச பா.ஜ.க அரசை தோற்கடித்து அவர்களை பத்திரமாக வீட்டிற்கு வழியனுப்பி வைக்க வேண்டும் என்றுதான் ஜனநாயகவாதிகளும், மக்களும் இவ்வளவு காலமாக தேர்தலுக்காக காத்திருந்தார்கள். தேர்தலும் வந்துவிட்டது. ஆனால் அவர்கள் நிகழ்த்தியுள்ள மதவாதம், மக்கள் விரோதம் எனும் வெறியாட்டத்தை எதிர்த்து போராட வேண்டிய சூழலும் நமக்கு உருவாகியிருந்தது.

இந்தியா எனும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டை அவர்கள் சிதைத்துக்கொண்டிருந்தார்கள். மாநில அரசுகளை மிரட்டிக் கொண்டிருந்தார்கள். சிறுபான்மை மக்களை அச்சுறுத்தி துன்புறுத்திக் கொண்டிருந்தார்கள். அரசியலமைப்பு சட்டத்தை அவமதித்துக்கொண்டிருந்தார்கள். ஏழை எளிய மக்களை மறந்துவிட்டிருந்தார்கள். மொத்தத்தில் இந்தியா என்பது பல்வேறு பண்பாடுகளை உள்ளடக்கிய ஒன்றியம் என்பதையே மறைக்க முயற்சித்தார்கள். இந்திய மக்களின் கண்ணில் காவிப் பொடியை தூவிவிட்டு கார்பரேட்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்துக்கொண்டிருந்தார்கள். இத்தகைய ஆகப்பெரும் தீய சக்தியை எதிர்த்து தேர்தல் எனும் போரில் போராடத் தயாராகிருந்தோம்.

சொல்லப்போனால் கழகத் தலைவர்-தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி போர்களத்திற்கு சென்று கொண்டிருந்தோம். மக்கள் எனும் ஆயுதத்தை கொண்டே மக்கள் விரோதிகளை விரட்டியடித்து மக்களாட்சியை மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே ஓடிக்கொண்டிருந்தது. வெற்றி மட்டுமே எங்களின் இலக்காக இருந்தது. எங்களுக்கான முதல் தேர்தலாகவும் நாட்டிற்கான இறுதி வாய்ப்பாகவும் கருதி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினோம். சொல்லில் அடங்கா வேகம் எங்களுக்குள் இருந்தது. இதுபோன்ற அனைத்து எண்ணங்களையும் அந்த ஒற்றை சிரிப்பு அழித்தது. எங்களுக்கான நம்பிக்கையை அந்த ஒற்றை சிரிப்பு கொடுத்தது.

“தேர்தல் களத்தில் கண்ட காட்சி, திராவிட மாடல் அரசின் சாதனைக்கு சாட்சி”: அமைச்சர் அன்பில் மகேஸ் நெகிழ்ச்சி!

2022 மார்ச் மாதம் 20’ஆம் தேதி எங்கள் திருச்சி தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பாக தேர்தல் பணிகளை துவங்கினோம்.

உறக்கத்தில் இருந்தவர்களை உதயசூரியன் எழுப்பி விட்டிருந்தான். தேர்தல் பணி ஆலோசனை கூட்டத்திற்காக மாவட்டக் கழக அலுவலகம் சென்று கொண்டிருந்தோம். அரசு சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியை கடக்கும் போதுதான் அந்தச் சிரிப்பு எங்களை ஆசுவாசப்படுத்தியது. முதலமைச்சரின் காலை சிற்றுண்டியை சாப்பிட்ட குழந்தை தனது சீருடையின் வலதுபக்க காலரை இழுத்து அழுத்தி வாய் துடைத்துவிட்டு சென்றது. என்னைப் பார்த்து சிரித்துவிட்டு தனது வகுப்பறைக்குள் ஓடியது. அந்தச் சிரிப்புதான் எங்களுக்கான நம்பிக்கை அளித்தது. அது அந்தக் குழந்தையின் சிரிப்பு மட்டுமல்ல. காலை அவளை பள்ளிக்கு அனுப்பிவைத்த 17 இலட்சம் தாய் மற்றும் தந்தையின் சிரிப்பு. ‘இந்தத் தேர்தலுக்காக நாங்களும் காத்துக்கொண்டிருந்தோம்’ என்று சொல்லியது அந்தச் சிரிப்பு.

திருச்சி நாடாளுமன்றத் தொகுதி தவிர்த்து கரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான ஒருசில சட்டமன்றத் தொகுதிகளின் பொறுப்புகளையும் கழகத் தலைவர் அவர்கள் எனக்கு வழங்கியிருந்தார்கள். அதன் பொருட்டு அந்தந்த தொகுதிகளிலும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்தோம்.

சுட்டெரிக்கும் வெயிலை பொருட்படுத்தாமல் மக்கள் எங்களுக்காக காத்துக்கொண்டிருந்தார்கள். எங்களின் பேச்சையோ, எங்களின் பிரச்சாரத்தையோ கேட்பதற்காக அல்ல! ஏனென்றால் ஒன்றிய மோடி அரசின் ஏமாற்று வேலைகள் அனைத்தையும் அவர்கள் அறிந்தே வைத்திருந்தார்கள். அதே நேரத்தில் திராவிட மாடல் அரசின் சாதனைகளையும் தெரிந்தே வைத்திருந்தார்கள். நாங்கள் சொல்லித்தான் அவர்களுக்கு தெரிய வேண்டும் என்பதாக சூழல் இல்லை! எங்களை வரவேற்பதற்காக மட்டுமே அவர்கள் காத்திருந்தார்கள். பாறை நீரையும் கூட உறிஞ்சும் வேகத்தில் வெயில் வாட்டி வதைத்தது.

“தேர்தல் களத்தில் கண்ட காட்சி, திராவிட மாடல் அரசின் சாதனைக்கு சாட்சி”: அமைச்சர் அன்பில் மகேஸ் நெகிழ்ச்சி!

தஞ்சாவூர் பகுதிகளில் கழக வேட்பாளர் திரு.முரசொலி அவர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்துக்கொண்டிருந்தோம். பூதலூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டபோது விண்ணமங்கலம் வாய்க்கால்களை கடந்து செல்லும் வாய்ப்பு கிடைத்து. முதலமைச்சர் அவர்களால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பகுதி. கடைமடை பகுதிகளுக்கும் காவிரி நீர் சீராக கிடைக்க வேண்டும் என்பதற்காக, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பாக டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.

அந்தப் பயணத்தின் ஒருபகுதியாக விண்ணமங்கலம் வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்பட்டுள்ளதா என கடந்தாண்டு ஆய்வு மேற்கொண்டார் முதலமைச்சர் அவர்கள். இந்த வாய்க்கால் மட்டுமல்லாமல் டெல்டா மாவட்டங்கள் முழுவதும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகுதான் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் நிகழ்வை நடத்தினார் முதலமைச்சர் அவர்கள்.

திருவையாறு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு மதிய உணவுக்காக தஞ்சாவூர் சென்று கொண்டிருந்தோம். கழக இளைஞரணி செயலாளர்- அமைச்சர் அவர்களால் திறந்துவைக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் இருந்து இளைஞர்கள் வெளியேறிக்கொண்டிருந்தார்கள். தனியார் அமைப்பின் பங்களிப்போடு மாவட்ட அளவிலான போட்டிகள் நடந்துகொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன். மேம்படுத்தப்படுவதற்கு முன்னர் காலை மற்றும் மாலை நடைபயிற்சிக்காக மட்டும் பயன்பட்ட அன்னை சத்யா விளையாட்டு மைதானம், தற்போது இளைஞர்களின் விளையாட்டுப் போட்டிகளுக்காகவும், பயிற்சிகளுக்காகவும் பயன்பட்டு வருகின்றது.

“தேர்தல் களத்தில் கண்ட காட்சி, திராவிட மாடல் அரசின் சாதனைக்கு சாட்சி”: அமைச்சர் அன்பில் மகேஸ் நெகிழ்ச்சி!

கலைஞரின் உடன்பிறப்புகள் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் 15’க்கும் மேற்பட்ட இடங்களில் உரையாற்ற வேண்டும் என முன்னரே சொல்லியிருந்தார்கள். ஓய்வில்லாமல் தஞ்சாவூரில் இருந்து ஒரத்தநாடு நோக்கி புறப்பட்டோம்.

ஒரத்தநாடு நகரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது மக்களால் அன்போடு அழைக்கும் “ஸ்டாலின் பஸ்” கம்பீரமாக எங்களை கடந்துகொண்டிருந்தது. கல்லூரி மாணவிகள், குடும்ப பெண்கள், வயதான பாட்டிகள் என எல்லோரும் ஜீப்பில் நின்றுகொண்டிருந்த எங்களைப் பார்த்து மகிழ்ச்சியோடு கையசைத்து சென்றுகொண்டிருந்தார்கள். அது அவர்களின் மகிழ்ச்சி மட்டுமல்ல. தமிழ்நாடு முழுவதும் 460 கோடி முறை விடியல் பயணம் மேற்கொண்ட பெண்களின் மகிழ்ச்சி. அவர்களின் உற்சாகமும், மகிழ்ச்சியும் எங்களுக்கு மென்மேலும் உத்வேகம் அளித்தது. அவர்களின் அந்த மகிழ்ச்சியும் ஜனநாயகத்திற்கான பிரச்சார பீரங்கிகள்தான்!

கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மணப்பாறையிலும் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக கைகாட்டியில் இருந்து புத்தாநத்தம் வழியாக சென்றுகொண்டிருந்தோம். “மணப்பாறை அரசு கலை கல்லூரி அருகே மதிய உணவை முடித்துவிடலாம்” என கழகத் தோழர்களிடம் சொல்லியிருந்தேன். அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் முயற்சியால் மணப்பாறைக்கு கொண்டு வரப்பட்ட அரசுக் கல்லூரி. மணப்பாறை மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சர் அவர்கள் கல்லூரியை திறந்து வைத்தார்.

“தேர்தல் களத்தில் கண்ட காட்சி, திராவிட மாடல் அரசின் சாதனைக்கு சாட்சி”: அமைச்சர் அன்பில் மகேஸ் நெகிழ்ச்சி!

அந்தக் கல்லூரியை கடந்த சில இளைஞர்களில் ஒருவன் என்னருகில் வந்து “ஸ்டாலின் சாருக்கு நன்றி சொல்லிடுங்க சார். நான் அரசுப் பள்ளியில்தான் படித்தேன். இரவு நேரங்களில் வையம்பட்டி சுங்கச்சாவடி அருகே டீ விற்று சம்பாதித்து வருகின்றேன். இனிமேல் ‘தமிழ் புதல்வன்’ திட்டத்தால் எனக்கும் மாதம் 1000 ரூபாய் கிடைக்கப் போகிறது. இதை எனது மேல்படிப்புக்காகவோ அல்லது எனது தங்கையின் மருத்துவ செலவுக்காகவோ பயன்படுத்திக்கொள்வேன்’ என்றான். இதே போல செல்லும் இடமெங்கும் “புதுமைப் பெண்” திட்டத்திற்கு நன்றி சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் மாணவிகள்!

அந்தக் கல்லூரிக்கு அருகே மதிய உணவை முடித்து கிராம மக்களின் வரவேற்பை பெற்றுக்கொள்வதற்காக புறப்பட்டோம். மணப்பாறை பகுதிகளில் தேர்தல் பிரச்சாரங்களை முடித்துவிட்டு மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பாபநாசம், கும்பகோணம் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக நாள்களை ஒதுக்கியிருந்தோம். ஆனால் அதற்கு முன்னதாக திருவெறும்பூர் பகுதிகளில் சில இடங்களில் வாகன பரப்புரை மேற்கொள்ள வேண்டும் என்ற சூழல் உருவானது. திட்டமிடலில் இல்லாத பணியாக இருந்தாலும், எனது மனதுக்கு நெருக்கமான பணியாக இருந்தது.

காரணம் பல இடங்களில் நான் சொல்வதுதான் "மற்ற இடங்களில் எல்லாம் கூட்டத்திற்கு முன்பு நின்று நான் உரையாற்றுவேன். ஆனால் திருவெறும்பூரில் மட்டும்தான் குடும்பத்திற்கு முன்பு நான் உரையாற்றுவேன். ஏனென்றால் திருவெறும்பூர்தான் எனது தாய்வீடு!" திருவெறும்பூர் பகுதியில் வெற்றி வேட்பாளர் திரு.துரை வைகோ அவர்களுக்கு ஆதரவாக "தீப்பெட்டி" சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தோம். எல்.ஐ.சி.காலணி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டபோது, நலச்சங்கத்தினர்கள் வெளிப்படையாக ஒலிபெருக்கியிலயே என்னிடம் சில கோரிக்கைகள் வைத்தார்கள். அப்போது "முன்பெல்லாம் இப்பகுதியில் வந்து பணிகளை மேற்கொண்டு வீட்டிற்கு சென்றால், இடுப்பு வலியும் கூடவே வீட்டிற்கு வந்துவிடும். அந்தளவிற்கு சாலைகள் இருக்கும். ஆனால் இப்போது நிலைமை அப்படியில்லை என்பதை நினைக்கும் போதே மனநிறைவாக உள்ளது" என எனது தொகுதி மக்களிடம் பகிர்ந்துகொண்டேன். கூடியிருந்த என் குடும்பத்தினர்கள் ஆர்பரித்து அதனை வரவேற்றார்கள்.

“தேர்தல் களத்தில் கண்ட காட்சி, திராவிட மாடல் அரசின் சாதனைக்கு சாட்சி”: அமைச்சர் அன்பில் மகேஸ் நெகிழ்ச்சி!

தொடர்ந்து திருவெறும்பூர் பகுதி முழுக்கவும் சுற்றி வந்தோம். எனது தொகுதியில் நான் மேற்கொண்ட பணிகளை சுயபரிசோதனை செய்துகொள்வதற்கான பயணமாகவும் அது அமைந்தது. எனது தொகுதியில் அனைத்துப் பகுதிகளிலும் சாலை வசதிகளை ஏற்படுத்தியுள்ளோம் என்றே தோன்றுகிறது.

கீழகல்கண்டார்கோட்டை பகுதி மக்களின் 15 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றி அமைக்கப்பட்ட சாலையில் சென்று, அதே பகுதி மக்களிடம் உரிமையோடும், மகிழ்ச்சியோடும் வாக்குகள் சேகரித்தோம்.

அதே போல பெரும்பாலான கிராமங்களில் சீரணி அரங்கம், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளையும் எனது சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அமைத்துள்ளோம். திருவெறும்பூர் தொகுதி மக்களின் அன்பையும், அவர்களின் மேலும் சில கோரிக்கைகளையும் பெற்றுக்கொண்டு தஞ்சாவூர் நோக்கி புறப்பட்டோம்.

சோழர்கள் ஆண்ட உழவர் பூமியின் வயல்வெளிகள் பச்சை நிறக்கொடிகளால் நிறைந்திருந்தது. அதிகாலை நேரம். தஞ்சாவூரில் இரவு தங்கியிருந்த பிறகு திருவிடைமருதூர் சென்றுகொண்டிருந்தோம். தஞ்சாவூர் நெடுஞ்சாலையை அடைவதற்கு முன்பாக சாலையோரத்தில் மக்கள் கூட்டம். விபத்து என்பது தெரிந்தது. என்னுடன் வந்துகொண்டிந்த கழகத் தோழரின் வாகனத்தில் காயம்பட்டவரை ஏற்றி மருத்துவமனை செல்வதற்காக ஆயத்தமானோம். ஆனால் அதற்குள் சக மனிதர் ஒருவர் காயம்பட்டவரை தனது காரில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனை விரைந்தார். காவல்துறை விசாரணை, ஏதேனும் சிக்கல்கள் வருமா என்பது பற்றியெல்லாம் அந்த சக மனிதர் கவலைப்படவில்லை! ஏனென்றால் சக மனிதரின் இன்னுயிரை காப்பாற்றிய அவரை "இன்னுயிர் காப்போம். நம்மை காக்கும் 48 திட்டம்" காப்பாற்றும்! காவல்துறை விசாரணை உட்பட வேறு எந்த சிக்கல்களும் அவருக்கு வராது!

“தேர்தல் களத்தில் கண்ட காட்சி, திராவிட மாடல் அரசின் சாதனைக்கு சாட்சி”: அமைச்சர் அன்பில் மகேஸ் நெகிழ்ச்சி!

மயிலாடுதுறையில் கழகத் தோழர் ஒருவரின் இல்லத்தில் இருந்த போது, விவசாய சங்கத்தினர்கள் பலர் வந்திருந்தார்கள். அனைவரும் பல்வேறு விதமான கோரிக்கைகளை முன்வைத்தார்கள். அதே நேரத்தில் அவர்கள் அனைவரும் ‘இவ்வளவு திட்டமிடுதலோடு விவசாயத்திற்கான திட்டங்களை இதற்கு முன்னர் யாரும் தீட்டியதில்லை! நானும் டெல்டாகாரன்தான் என்ற முதலமைச்சரின் சொல் பேச்சளவில் மட்டுமல்ல. செயலிலும் உள்ளது. குறிப்பாக வேளாண் சட்டங்களை எதிர்த்ததற்கும், எங்களுக்கான வேளாண் பட்ஜெட் முறையை கொண்டு வந்ததற்கும் நன்றிகள்’ எனத் தெரிவித்து தங்களின் பேராதரவை தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு வழங்குவதாக தெரிவித்தார்கள்.

திருவிடைமருதூர், பாபநாசம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டோம். வீரமாங்குடி கிராம பகுதிகளை ஒட்டி பரப்புரையில் ஈடுபட்டபோதுதான், ரூ.10.93 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு என்னால் திறந்துவைக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை கடந்தோம். திறப்பு விழாவில் நடந்த சுவாரசியம் இன்னும் நினைவில் உள்ளது. கல்விப் பாதையில் அடியெடுத்து வைக்கும் குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்குள் புது உடையில் இருந்தார்கள். அச்சூழலைப் பார்த்து அவர்கள் கூட யாரும் அழவில்லை! அங்கன்வாடி மையத்தை திறந்து அவர்களுக்கு இனிப்புகள் வழங்கிவிட்டு, வாகனத்தில் ஏறுவதற்காக வந்தபோதுதான் கவனித்தேன். ஒரு சிறுவனின் அழுகை அங்கு வந்தது முதல் கேட்டுக்கொண்டிருந்தது. காரில் உட்காரும் போது ஏன் என்று விசாரித்தேன். "ஒன்னரை வருஷம்தான் சார் ஆகுது. இன்னும் சாப்பிட கூட இவன் ஆரம்பிக்கலை. அவங்க அக்கா மாதிரியே புது டிரஸ் வேணும், உள்ள போய் அவளோட உட்காரணும் சொல்லி அழுகுறான்" என்றாள் அவனின் தாய். அங்கிருந்த அனைவரும் சிரித்தார்கள்.

இதை எழுதுவதற்கு இரண்டு நாள்கள் முன்னதாக பேராவூரணி பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்காக வாக்குகள் சேகரித்துக்கொண்டிருந்தோம். ஒரு கட்டத்தில் எனது பிரச்சார சத்தத்தை கடந்து அங்கே கூடியிருந்த பெண்களின் ஆரவாரம் அதிகமாக கேட்டது. அனைவரும் தங்களின் அலைபேசியை எடுத்து என்னை நோக்கி காட்டினார்கள். “ஸ்டாலின் சார் பணம் போட்டுட்டார்” என கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை குறிப்பிட்டு சொன்னது என்னை நெகிழ வைத்துவிட்டது. அவர்களின் அந்த ஆரவாரம் பாசிச அரசை வீட்டிற்கு அனுப்பி வைக்கும் வரையிலும் தொடரும் என்பதில் சந்தேகம் இல்லை!

செல்லும் இடமெங்கும் முதலமைச்சர் அவர்களின் திராவிட மாடல் திட்டத்தின் முகங்களை மகிழ்ச்சியோடு பார்க்க முடிந்தது. திண்ணையில் அமர்ந்து வயதான பாட்டியுடன் உரையாடிக் கொண்டிருந்த மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் தன்னார்வலர், ஓட்டு வீட்டின் முன்பான களத்தில் அமைக்கப்பட்டிருந்த இல்லம் தேடிக் கல்வி மையம் என நாங்கள் களத்தில் கண்ட திராவிட மாடல் அரசின் திட்டங்கள் அனைத்தும் எங்களுக்கான வலிமையை கொடுத்தது. "கல்வியும் சுகாதாரமும் எனது இரு கண்கள்" என்று சொன்ன தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வார்த்தையின் உண்மையை முழுமையாக உணர்ந்தோம்.

“தேர்தல் களத்தில் கண்ட காட்சி, திராவிட மாடல் அரசின் சாதனைக்கு சாட்சி”: அமைச்சர் அன்பில் மகேஸ் நெகிழ்ச்சி!

தமிழ்நாட்டு மக்களின் மகிழ்ச்சியும், ஆரவாரமும் எங்களுக்கான நம்பிக்கையை அளித்த அதே வேளையில் காங்கிரஸ் பேரியக்கத்தின் தேர்தல் அறிக்கை மக்களுக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்தது.

திராவிட இயக்கம் வலியுறுத்தும் சமூகநீதி, சமத்துவத்தை முன்னிறுத்தி, கழகத் தலைவர் அவர்களின் தேர்தல் அறிக்கையை பிரதிபலித்து வெளியிடப்பட்டுள்ள காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஜனநாயகப் போருக்கான கூடுதல் ஆயுதத்தை வழங்கியது.

ஒவ்வொரு ஏழை இந்திய குடும்பத்திற்கும் ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்கும் வகையிலான ‘மகாலட்சுமி' என்னும் திட்டம், மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு, மத்திய பல்கலைக்கழகங்களுக்கான CUET எனும் பொது நுழைவுத்தேர்வு போன்ற நாடு தழுவிய நுழைவுத்தேர்வுகள் குறித்து அந்தந்த மாநிலங்கள் முடிவெடுக்கலாம், கல்விக் கடன்கள் ரத்து, ஜி.எஸ்.டி ஏழைகளை பாதிக்காத வண்ணம் மாற்றியமைக்கப்படும் என்றும் ஜிஎஸ்டி கவுன்சில் மாற்றி வடிவமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் இந்த வாக்குறுதிகளை இந்தியா கூட்டணி கட்சிகள் அனைவரும் வரவேற்றார்கள். அவர்களுக்கு கூடுதல் பலத்தை இந்தத் தேர்தல் வாக்குறுதிகள் அளித்தது. மென்மேலும் உறக்கமில்லாமல், ஓய்வில்லாமல் தேர்தல் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டார்கள்.

“யார் பிரதமராக வர வேண்டும் என்பதை விட யார் பிரதமராக வரக்கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்” என்று சொன்ன தலைவர் அவர்களின் வழியில் மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். ஜனநாயகத்திற்கான வெற்றி உறுதி என்பதில் சந்தேகம் இல்லை.

கதிர் அரிவாளால் அறுவடை செய்து

ஏணி ஏறி தோரணம் கட்டி

பானைக்கு வர்ணம் பூசி

அரிவாள் சுத்தியலால் கரும்பு வெட்டி வெல்லம் உடைத்து

தீப்பெட்டியால் தீ மூட்டி

கைகளால் பொங்கலிட்டு

உதய சூரியனுக்கு வெற்றியை பொங்க வைப்போம்!”

- அன்பில் மகேஸ் பொய்யாமொழி

Related Stories

Related Stories