தமிழ்நாடு

“எந்தவித மான உணர்ச்சியும் பாஜகவுக்கு இல்லை - ‘கிளீன் மோடி’ என்ற முகத்திரை கிழிந்தது” : முதலமைச்சர் உரை!

மோடிக்கு மூன்றாவது முறை வாய்ப்பு என்பது, இந்த நாட்டு மக்கள், தங்களின் தலையில் தாங்களே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்வதற்கு சமம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“எந்தவித மான உணர்ச்சியும் பாஜகவுக்கு இல்லை - ‘கிளீன் மோடி’ என்ற முகத்திரை கிழிந்தது” : முதலமைச்சர் உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இன்று (17-04-2024) சென்னையில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் தயாநிதி மாறன் அவர்களையும், தென் சென்னை தொகுதி வேட்பாளர் சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களையும் அறிமுகப்படுத்தி இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு, கழகத் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எழுச்சியுரை ஆற்றினார்.

நாளை மறுநாள் ஏப்ரல்-19 ஆம் தேதி நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல், நம் நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போர்! நாடு காக்கும் இந்த ஜனநாயகப் போரில் இந்தியா கூட்டணிக்கு வெற்றி தேடித் தர தமிழ்நாட்டின் தலைமகனான பேரறிஞர் அண்ணாவை முதன்முதலாக மக்களவைக்குத் தேர்ந்தெடுத்து அனுப்பிய தென் சென்னை தொகுதிக்கு வந்திருக்கிறேன். மாநில சுயாட்சிக் குரலாக ஒன்றியத்தில் ஒலித்து, தலைவர் கலைஞரின் மனச்சாட்சியாக விளங்கிய அண்ணன் முரசொலி மாறன் அவர்கள் வென்ற தொகுதியான மத்திய சென்னை தொகுதிக்கும் சேர்த்தே இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

தலைநகரில், தமிழ்நாட்டு மக்களுக்கு இறுதி அறைகூவல் விடுக்க கூடியிருக்கும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் என் மாலை வணக்கம்!

மத்திய சென்னை வாக்காளப் பெருமக்களுக்கு திராவிட முன்னேற்றக் கழக வெற்றி வேட்பாளர் தயாநிதி மாறன் அவர்களைத் தனியாக அறிமுகம் செய்யத் தேவையில்லை. மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக, ஒன்றிய அமைச்சராக, மத்திய சென்னையின் குரலாக மட்டுமல்ல! தமிழ்நாட்டு உரிமைக்குரலாக ஒலித்தவர் தயாநிதி மாறன் அவர்கள்! ஒன்றிய அமைச்சராக இருந்தபோது, உலகப் புகழ்பெற்ற மின்னணு நிறுவனங்களைத் தொழில் தொடங்க இந்தியாவுக்கு அழைத்து வந்தவர்! தலைவர் கலைஞரின் மனசாட்சியான அண்ணன் முரசொலி மாறன் அவர்களின் அன்பு மகன்! மீண்டும் மத்திய சென்னைக் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிக்க, தயாநிதி மாறன் அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

“எந்தவித மான உணர்ச்சியும் பாஜகவுக்கு இல்லை - ‘கிளீன் மோடி’ என்ற முகத்திரை கிழிந்தது” : முதலமைச்சர் உரை!

அடுத்து, தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில், திராவிட முன்னேற்றக் கழக வெற்றி வேட்பாளராகத் தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்கள் போட்டியிடுகிறார். எழுத்தாற்றல், கவியாற்றல் எனப் பன்முக ஆற்றல் கொண்ட தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்கள் பேராசிரியர் பணியை விட்டுவிட்டு மக்கள் பணிக்காக வந்தவர்! தலைவர் கலைஞர் அவர்களின் அன்பைப் பெற்ற மறைந்த என்னுடைய ஆருயிர் அண்ணன் தங்கப்பாண்டியனின் அன்புமகள்! திராவிடத்தின் குரலாக - தென் சென்னையின் குரலாக - தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்களது குரல் மீண்டும் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து ஒலித்திட உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கவேண்டும். இவர்கள் இருவரையும், கடந்த தேர்தலைவிட அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்கவேண்டும். தயாராகிவிட்டீர்களா? அதற்குப்பிறகு என்ன? வெற்றி உறுதி! வேட்பாளர்கள் உட்காரலாம்!

கடந்த 22 நாட்களாக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்திருக்கிறேன். பலதரப்பட்ட மக்களைச் சந்தித்து இருக்கிறேன். மக்களின் முகத்தில் தெரிந்த எழுச்சியையும், மகிழ்ச்சியையும் வைத்து சொல்கிறேன். ’நாற்பதுக்கு நாற்பதும்’நாம்தான் வெல்லப் போகிறோம்! நாட்டையும் நம்முடைய கூட்டணிதான் ஆளப்போகிறது! ஏன் என்றால், தமிழ்நாட்டில் மட்டுமல்ல வட மாநிலங்களிலும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவான அலை வீசிக்கொண்டு இருக்கிறது. இதற்குக் காரணம் பிரதமர் மோடியின் சர்வாதிகார மனப்பான்மை! மாநிலங்களை நசுக்கும் எதேச்சாதிகாரம்! ஒற்றுமையாக வாழும் மக்களிடையே பிளவை உருவாக்கும் மதவாதப் பேச்சு! எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைக்கும் பாசிச எண்ணம்!

எதிர்க்கட்சிகளே இருக்கக் கூடாது என்ற எண்ணத்துடன், பழங்குடியினத்தை சேர்ந்த, ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனைக் கைது செய்து சிறையில் அடைத்தார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களையும் சிறையில் அடைத்திருக்கிறார். தேர்தலில் சமமான களம் இருந்தால், படுதோல்வி நிச்சயம் என்று உணர்ந்து, காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் போன்ற எதிர்க்கட்சிகளின் வங்கிக் கணக்குகளை முடக்கும் செயலில் ஈடுபட்டார். மக்களை பற்றி சிந்திக்காமல், கார்ப்ரேட்கள் மட்டுமே முன்னேற வேண்டுமெனச்சிந்தித்து திட்டங்களைத் தீட்டியதால் தான், விலைவாசி உயர்ந்து, அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு வந்து நிற்கிறது.

ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பேன் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சி அமைத்த மோடி, 10 ஆண்டில் 20 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்தாரா? இல்லை! இந்தக் கேள்வியைக் கேட்டால், இளைஞர்களை பகோடா சுடச் சொன்னவர்தான் மோடி! இப்போது நடுநிலை வாக்காளர்களும் பா.ஜ.க.வின் உண்மை முகத்தை தெரிந்துகொண்டு, வெறுக்கத் தொடங்கிவிட்டார்கள்!

“எந்தவித மான உணர்ச்சியும் பாஜகவுக்கு இல்லை - ‘கிளீன் மோடி’ என்ற முகத்திரை கிழிந்தது” : முதலமைச்சர் உரை!

தேர்தல் பத்திர ஊழல் மோடியின், ’க்ளீன் இமேஜ்’என்ற முகமூடியை கிழித்து எறிந்து மோடியின் ஊழல் முகத்தைப் பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது! உடனே, மோடி என்ன செய்கிறார்? தன்னுடைய இமேஜைக் காப்பாற்றிக்கொள்ள, ”தேர்தல் பத்திரம் வந்த பிறகுதான், யார் - யாருக்கு நிதி கொடுக்கிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்தது என்று வடை சுட ஆரம்பித்துவிட்டார்.

மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே... உச்சநீதிமன்றம் முதலில் பட்டியல் கேட்டபோதே, ஏன் தரவில்லை? தேர்தலைச் சந்திக்க எல்லா கட்சிகளும்தான் நிதி வாங்குகிறார்கள்! இங்கு நிதியை வாங்கியது பிரச்சினை கிடையாது! அதை எப்படி வாங்கினீர்கள்? E.D. – I.T. – C.B.I என்று உங்கள் கூட்டணி போன்று செயல்படும் அமைப்புகளை வைத்து, தொழில் நிறுவனங்களுக்கு ரெய்டு போவது – அடுத்த சில நாட்களிலயே அந்த நிறுவனங்களில் இருந்து பா.ஜ.க.வுக்குத் தேர்தல் பத்திரம் மூலமாக நிதி வாங்குவது. பிறகு அந்த நிறுவனங்கள் மேல் நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பது என்று ஒரு மறைமுக சங்கிலித் தொடர்பு இருக்கிறதே! அதுதான் பிரச்சினைக்குரியது!

முன்னணி ஊடகங்கள் இதைப்பற்றிப் பேச மறுத்தாலும் தனிநபர்கள் பலரும், உச்சநீதிமன்ற அழுத்தத்தால் வெளியான பட்டியல்களை ஆய்வு செய்து சில ஊடகங்களில் பா.ஜ.க.வின் தில்லு முல்லுகள் அம்பலமானதே! இந்த நாடு எத்தனையோ பிரதமர்களைப் பார்த்திருக்கிறது! ஆனால், இப்படி மோடி போல் வசூல் ராஜாவாக, வசூல் வேட்டையில் ஈடுபட்டவரை வரலாறு பார்த்ததில்லை!

கொரோனாவில் கூட வசூல் வேட்டை நடத்தினார். அதற்கு என்ன பெயர் வைத்தார் தெரியுமா? பி.எம். கேர்ஸ் நிதி! எல்லாரும் நிதி உதவி செய்யுங்கள் என்று கேட்டார். மக்களுக்கு உதவத்தான் பிரதமர் கேட்கிறார் என்று பலரும் அள்ளிக் கொடுத்தார்கள். அந்த நிதி என்ன ஆனது என்றே தெரியவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டால், “அது தனியார் அறக்கட்டளை, அந்த விவரம் எல்லாம் சொல்ல முடியாது” என்று பதில் வருகிறது.

“எந்தவித மான உணர்ச்சியும் பாஜகவுக்கு இல்லை - ‘கிளீன் மோடி’ என்ற முகத்திரை கிழிந்தது” : முதலமைச்சர் உரை!

அடுத்து, உங்கள் ஆட்சிக்கு சி.ஏ.ஜி கொடுத்த சர்ட்டிபிகேட் என்ன? ”Seven Schemes, Seven lakh crore, Mega Scam” இதைப் பற்றி ஏன் வாயைத் திறக்க மாட்றீர்கள்? இதை வெளியிட்ட தணிக்கைத்துறை அதிகாரிகள் மூன்று பேரை உடனே ட்ரான்ஸ்பர் - பணியிட மாற்றம் செய்த மர்மம் என்ன?

அடுத்து, ரஃபேல் ஊழல்! காங்கிரஸ் ஆட்சியில் ஒரு விமானத்திற்கு 526 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டார்கள் என்றால், பா.ஜ.க. ஆட்சியில் 1670 கோடி ரூபாய்க்கு வாங்கினார்கள்! இதனால், பயனடைந்தது யார் என்று, காங்கிரஸ் கேட்ட கேள்விக்கு இன்றைக்கு வரை பிரதமர் பதில் சொல்லவில்லை! கார்ப்பரேட்டுகளுக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு கடன்களை தள்ளுபடி செய்து, கார்ப்பரேட் முதலாளிகளுக்காகவே எப்படி அரசை நடத்துகிறீர்கள் என்று, சகோதரர் ராகுல் நாடாளுமன்றத்தில் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியபோது, பதில் சொல்லாமல், பர்சனலாக அட்டாக் செய்தார்கள்!

அதுமட்டுமா! அவரின் எம்.பி பதவியையே பறித்தார்களே! இவ்வளவும் செய்துவிட்டு, பிரதமர் மோடி அவர்களே... நீங்கள் ஊழலைப் பற்றி பேசலாமா? அதனால்தான் சொன்னேன். உண்மையில், ஊழலுக்கு ஒரு யூனிவர்சிட்டி கட்டி, அதற்கு ஒருவரை வேந்தராக நியமிக்கவேண்டும் என்றால், அதற்குp பொருத்தமான நபர், மோடியை விட்டால் வேறு யாரும் கிடையாது! ஏன் என்றால், ஊழலைச் சட்டப்பூர்வமாக்கிய சாதனையாளர் மோடிதான்!

அதுமட்டுமா! இப்போது ஊழல்வாதிகளுக்கு கேரண்டி கொடுக்கும் “மேட் இன் பிஜேபி” வாஷிங் மெஷின் வைத்து, ஊழல் கறை படிந்தவர்களை சுத்தப்படுத்திக்கொண்டு இருக்கிறார். என்னடா? நம்மிடம் வந்து சேர்ந்தவுடனே வழக்கு வாபஸ் ஆகிறதே! பச்சையாக தெரிகிறதே! எதிர்க்கட்சிகள் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்களே! நடுநிலையாளர்கள் நாக்கைப் பிடுங்குவது போன்று கேட்கிறார்களே என்று எந்தவிதமான மான உணர்ச்சியும் இல்லாமல், திரும்ப திரும்ப அதே செயல்களில் பா.ஜ.க. ஈடுபடுகிறது.

“எந்தவித மான உணர்ச்சியும் பாஜகவுக்கு இல்லை - ‘கிளீன் மோடி’ என்ற முகத்திரை கிழிந்தது” : முதலமைச்சர் உரை!

முன்பு எல்லாம், பா.ஜ.க.வின் இந்த தில்லு முல்லுக்களை சொன்னால் எங்களைப் பார்த்து என்ன சொன்னார்கள்? “Anti-இந்தியன்” என்று சொல்வார்கள். ஆனால், இப்போது இந்தியா கூட்டணியை நாங்கள் அமைத்த உடனே அவர்களுக்கு இந்தியா என்ற வார்த்தை பிடிக்காமல் சென்று, இந்தியாவிற்கு பதிலாக, பாரத் என்று பெயரை மாற்றிவிட்டார்கள்! இப்போது, “Anti-இந்தியன்-களாக சுற்றுவது யார்? பா.ஜ.க-காரர்கள்தான்!

பா.ஜ.க.வைப் பொருத்தவரை, அவர்கள் தைரியமாக பேச காரணம், அவர்கள் கொடுப்பதுதான் மக்களுக்கு நியூஸ் என்று நினைக்கிறார்கள்! வேறு நியூஸ் வந்தால், மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு, மக்களை அதைப் பற்றிப் பேச வைத்து திசைதிருப்பிடுவார்கள்! பி.ஜே.பி. ஒரு மாநிலத்தில் வளர அவர்கள் தேடுவது, மதப் பிரச்சனைகளைத்தான்! அப்படி அங்கு பிரச்சினைகளே இல்லை என்றால், எப்படி பிரச்சினையைத் தூண்டலாம் என்று ரூம் போட்டு யோசிக்கும் கலவரக் கட்சிதான் பா.ஜ.க!

உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். நம்முடைய இந்தியாவில், ஒருவர், தான் கும்பிடும் சாமிக்கு பொரி வைத்து படைப்பார். மற்றொருவர், தான் கும்பிடும் சாமிக்கு கறி வைத்து படைப்பார். இது அவர் அவர்களின் வழிபாட்டு முறை! காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்படும் பண்பாடு!

மோடியும் - பா.ஜ.க.வும் என்ன சொல்கிறார்கள்? நீங்கள் இதை சாப்பிடக் கூடாது – அதை சாப்பிடக்கூடாது என்று சொல்கிறார்கள்! நாங்கள் பா.ஜ.க.விடம் சொல்வது, மக்கள் என்ன சாப்பிட்டாலும், நீங்கள் தயவுசெய்து அந்தச் சோற்றில் மண்ணை அள்ளி மட்டும் போடாதீர்கள்! இப்படியெல்லாம் நாங்கள் பேசுவதால், எங்களைப் பார்த்து என்ன சொல்கிறார்கள்?

ஊழல் கட்சி – குடும்ப அரசியல் என்று தேய்ந்துபோன பழைய டேப் ரெக்கார்டர் போன்று திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு பதில் சொல்லியே நாங்கள் டயர்ட் ஆகிவிடுவோம். ஆனால், அவர்கள் கூட்டணியிலும் - அவர்கள் கட்சியிலும் இருக்கும் ஊழல்வாதிகள், வாரிசுகளுக்குப் பிரதமர் மோடியே ஆதரித்து தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பேசுவார்!

“எந்தவித மான உணர்ச்சியும் பாஜகவுக்கு இல்லை - ‘கிளீன் மோடி’ என்ற முகத்திரை கிழிந்தது” : முதலமைச்சர் உரை!

என்ன வேடிக்கை? இன்னொரு வேடிக்கையும் செய்வார்! நிறைய பேர், இரவு பன்னிரெண்டு மணிக்கு தனியாக இருந்துகூட பேய்ப் படம் பார்த்துவிடுவார்கள். ஆனால், மோடி நைட் டி.வி.யில் பேசபோகிறார் என்று சொன்னால், பலரும் நெஞ்சு படபடத்துவிடும்! அந்தளவுக்கு, நாட்டு மக்களை மனரீதியாக பயத்திற்கு ஆளாக்கியிருப்பவர்தான் பிரதமர் மோடி! திடீர் என்று ஒருநாள் இரவு டி.வி.யில் வந்தார்! ஐந்நூறு ரூபாய் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று சொன்னார். எந்தவிதமான திட்டமிடலும் இல்லாமல் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்துவிட்டு, அதற்கு தினம் தினம் புதிய புதியதாக ரூல்ஸ் கொண்டுவந்தார். கேட்டால், கருப்பு பணத்தை ஒழிக்கிறேன் என்று வசனம் பேசினார்!

சரி என்று மக்களும் நம்பி, அவர் சொன்னதெல்லாம் செய்தார்கள்! கருப்பு பணம் ஒழிந்துவிட்டது? 99 விழுக்காடு பணம், திரும்ப வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி சொல்லிவிட்டது! முதலில் இந்த நடவடிக்கையை ஆதரித்த எல்லோரும் சிறிது நாளிலேயே கடுமையாக விமர்சித்தார்களே! அதோடு விட்டாரா! புதியதாக அறிமுகப்படுத்திய 2000 ரூபாய் நோட்டும் செல்லாது என்று சில ஆண்டுக்குள் அறிவித்தார். அந்தப் பணமும் 97 விழுக்காடு திரும்ப வந்துவிட்டது!

அப்போது கருப்புப் பண ஒழிப்பு என்ற மோடி மஸ்தான் வித்தை எதற்கு? அந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைதான், ஏழை எளிய – நடுத்தரக் குடும்பங்கள் மேல் நடத்தப்பட்ட முதல் தாக்குதல்! கடுகு டப்பாவில் – சுருக்குப் பையில் இருந்த பணமெல்லாம் செல்லாக் காசு ஆகிவிட்டது! சிறு - குறு நடுத்தர வியாபாரிகள் எல்லோரும் நடுத்தெருவிற்கு வந்தார்கள்.

மோடியிடம் வாஷிங்மெஷின் மட்டும் இல்லை. ஒரு பூதக்கண்ணாடியும் இருக்கிறது! அதுமூலமாக, ஏழைகளின் சுருக்கு பையில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று தெரிந்துகொண்டு, அதை எப்படி பறிக்கலாம் என்று சிந்திக்க ஆரம்பித்துவிடுவார்!

அதற்கு உதாரணம், உங்களுக்கு சுருக்குபை எதற்கு? எல்லோரும் வங்கிகளில் அக்கவுண்ட் தொடங்குங்கள் என்று சொன்னார்! அதை நம்பி மக்கள் அவர்களிடம் இருந்த பணத்தை அக்கவுண்ட்டில் போட்டார்கள். சிறிது நாளில் மினிமம் பேலன்ஸ் கம்மியாக இருக்கிறது என்று அதையும் பிடிங்கிவிட்டார்! அந்த ஃபைன்-இல் மட்டும் எவ்வளவு வசூல் தெரியுமா? 21 ஆயிரம் கோடி ரூபாய்!

“எந்தவித மான உணர்ச்சியும் பாஜகவுக்கு இல்லை - ‘கிளீன் மோடி’ என்ற முகத்திரை கிழிந்தது” : முதலமைச்சர் உரை!

தொடர்ந்து விடவில்லை! அடுத்து மீண்டும் ஒரு நாள் இரவில் நாடாளுமன்றத்திற்கு வந்து, ஜி.எஸ்.டி சட்டம் கொண்டு வந்தார்! குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, என்னுடைய பிணத்தின் மேல்தான் இந்தச் சட்டம் கொண்டு வரமுடியும் என்று சொல்லிவிட்டு, அவரே பிரதமரானதும் நடுராத்திரியில் கொண்டு வந்த சட்டம்தான் ஜி.எஸ்.டி!

மாநிலங்களுக்கு இருந்த எல்லா நிதி அதிகாரத்தையும் ஒன்றிய அரசுக்கு மாற்றினார்! இதனால், மாநிலங்கள் மட்டும் முடங்கவில்லை, மக்களும் முடங்கினார்கள். 5 – 12, 18 – 28 விழுக்காடு என்று வரம்பு வைத்து வரி போட்டார்கள். இதில் இருந்து எந்தப் பொருளும் தப்ப முடியாது!

நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு எவ்வளவு ஜி.எஸ்.டி கட்டுகிறீர்கள் தெரியுமா? அரிசிக்கு 5 விழுக்காடு! பருப்புக்கும் 5 விழுக்காடு! சேமியா - சர்க்கரை மஞ்சள் மற்றும் துணிகளுக்கு 5 விழுக்காடு வரி! பெரிய ஆன்மீக காவலர்கள் போன்று பேசுகிறது பா.ஜ.க., அவர்கள்தான் கோவிலில் ஏற்றும் சூடத்திற்கு முதல்முறையாக 18 விழுக்காடு வரி போட்டார்கள்! ஊதுபத்தி - சாம்பிராணிக்கு 5 விழுக்காடு வரி. மெழுகுவர்த்திக்கு, 12 விழுக்காடு வரி. மாணவர்களின் நோட்டுப் புத்தகங்களுக்கு 12 விழுக்காடு வரி! என்று ஏழைகளின் பணத்தைக் கொள்ளையடிக்கிறார்கள்.

இதைப் பார்த்து நாங்கள் மட்டும் விமர்ச்சிவில்லை. வடமாநிலங்களில் என்ன சொல்கிறார்கள்? ஷோலே - என்று அமிதாப் பச்சன் படத்தில் வரும் கொள்ளைக்காரன் பாத்திரம் பெயர், ‘கப்பர் சிங்!’ அந்த கொள்ளைக்கார வரிதான் ஜி.எஸ்.டி என்று சொல்லி, ‘கப்பர் சிங் டேக்ஸ்’ என்று அதை விமர்சிக்கிறார்கள்!

“எந்தவித மான உணர்ச்சியும் பாஜகவுக்கு இல்லை - ‘கிளீன் மோடி’ என்ற முகத்திரை கிழிந்தது” : முதலமைச்சர் உரை!

அடுத்து சிறிது நாளில் கொரோனா வந்தபோது, பிரதமர் இரவு டி.வி.யில் பேசுகிறார் என்று சொன்னார்கள்! சரி இது போன்ற நேரத்தில், காமெடி செய்ய மாட்டார். எதோ, மக்கள் வாழ்வாதாரத்திற்கு வழி சொல்லப் போகிறார் என்று பார்த்தால், என்ன சொன்னார்! ஞாபகம் இருக்கிறதா? மொட்டை மாடிக்கு வந்து மணி அடியுங்கள்! கைதட்டுங்கள்! விளக்கு பிடியுங்கள்! என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

வேலையும் - உணவும் இல்லாமல் தவித்த தொழிலாளிகள் ரயிலில் ஊருக்கு திரும்ப செல்லப் பணம் இல்லாமல், பல நூறு கிலோ மீட்டர் நடந்தே தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றார்களே! அப்போது, ரயில் பாதையில் நடந்து சென்றவர்கள், களைப்பில் அதிலேயே படுத்து தூங்கியிருந்தபோது, ரயில் ஏறி 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்களே! இப்படி, கொரோனாவால் நாட்டு மக்கள் அவஸ்தைபட்டபோது கூட அந்த நேரத்திலும் தனக்கான விளம்பர வாய்ப்பை பார்த்தவர்தான் பிரதமர் மோடி!

அடுத்து என்ன சொன்னார்? நான் ‘ரேவடி கல்ச்சரை’ஒழிக்க போகிறேன் என்றார்! சரி இங்கு தமிழ்நாட்டில் பா.ஜ.க.வில் சேர்ந்த ரவுடிங்களைத்தான் ஒழிக்க போகிறார் என்று பார்த்தோம். ஆனால், இலவசமாக நாங்கள் வழங்கும் மக்கள்நலத் திட்டங்களை ஒழிக்கப் பார்த்தார்! நாங்கள் தமிழ்நாட்டை வளர்க்கச் செய்த மக்கள் நலத்திட்டங்களை, இலவச திட்டங்கள் என்று குறுகிய பார்வையோடு பார்த்த பிரதமர்தான் மோடி அவர்கள்!

அதேசமயம், இன்னொரு பக்கம் கார்ப்பரேட்களுக்கு வரிச் சலுகையை அள்ளிக்கொடுத்தார்! அதுமட்டுமல்ல, ரயில்வேயில் மூத்த குடிமக்களுக்கு 50 விழுக்காடு இருந்த கட்டணச் சலுகையையும் எடுத்துவிட்டார். அதாவது, மக்களின் வறுமையிலும், இயலாமையிலும்கூட லாபம் பார்க்கவேண்டும் என்று நினைப்பவர்தான் மோடி இருக்கிறார்! இந்த லட்சணத்தில் தன்னுடைய பத்தாண்டுகால ஆட்சி வெறும் டிரெய்லர்தான் என்று பஞ்ச் டயலாக் வேறு பேசுகிறார்.

“எந்தவித மான உணர்ச்சியும் பாஜகவுக்கு இல்லை - ‘கிளீன் மோடி’ என்ற முகத்திரை கிழிந்தது” : முதலமைச்சர் உரை!

பிரதமர் மோடி அவர்களே... உங்களுடைய டிரெய்லரே இப்படி கர்ண கொடூரமாக இருக்கிறதே! உங்கள் படம் ஓடும் என்று நினைக்கிறீர்களா? கண்டிப்பாகப் படம் ரிலீஸ் ஆகப்போவதே இல்லை! இன்னொன்றையும் சொல்கிறார்! பத்தாண்டு ஆட்சி வெறும் சூப் மட்டும்தானாம்! விருந்து தயாராகிட்டு இருக்கிறதாம்! பிரதமர் அவர்களே! சூப்பே கேவலமாக இருக்கிறது என்று மக்கள் வாந்தி எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்! விருந்துக்கெல்லாம் வர மாட்டார்கள்! இதையெல்லாம் பேசி, தனக்கு மூன்றாவது முறையாக ஒரு வாய்ப்பைக் கொடுங்கள் என்று, பிரதமர் கேட்டுக்கொண்டு வருகிறார்.

மோடிக்கு மூன்றாவது முறை வாய்ப்பு என்பது, இந்த நாட்டு மக்கள், தங்களின் தலையில் தாங்களே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்வதற்கு சமம்! இதை நான் தனிப்பட்ட ஸ்டாலினாக சொல்லவில்லை! ஒரு கட்சித் தலைவராகச் சொல்லவில்லை! பொறுப்புமிகு இந்திய குடிமகனாகச் சொல்கிறேன்! மோடியின் பேச்சுகளை நாட்டு மக்களான நீங்களே எடைபோட்டு பாருங்கள். சீர்தூக்கி பாருங்கள். அவரின் பேச்சில் எதையெல்லாம் மையக் கருத்தாக பேசுகிறார்?

இதோ நாங்களும் தேர்தல் பரப்புரைக்கு உங்கள் ஆதரவு கேட்டு வந்திருக்கிறோம். கடந்த மூன்று ஆண்டுகளில் என்ன என்ன திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம், என்ன என்ன சாதனைகள் செய்திருக்கிறோம் என்று மேடைக்கு மேடை எடுத்துச் சொல்லி வாக்கு கேட்கிறோம். தி.மு.க. - காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மக்களுக்கான வாக்குறுதிகள் இருக்கிறது. அதுதான் இந்த எல்க்‌ஷனின் ஹீரோ. அதில் இருப்பதையெல்லாம் சொல்கிறோம். ஆனால், மோடி அப்படி வாக்குறுதிகள் சொல்லி வாக்கு கேட்கிறாரா? இல்லையே! எல்லாப் பிரச்சார மேடைகளையும் நாட்டு மக்களை பிளவுபடுத்துவதற்கான வாய்ப்பாகத்தான் பார்க்கிறார்.

வாயைத் திறந்தாலே, சாதி – மதம் – உணவு வேறுபாடுகளைப் பற்றி தேவையில்லாத கருத்துகளைப் பேசி எதிர்க்கட்சிகளைத் திட்டி, வெறுப்புணர்ச்சியை விதைக்கத் துடியாய் துடித்துக்கொண்டுருக்கிறார் பிரதமர் மோடி. சமூகநீதியை பேசும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை முஸ்லீம் லீக்கின் தேர்தல் அறிக்கை போல் இருக்கிறது என்று பிரிவினைவாத அரசியல் செய்கிறார். நேற்று மேற்கு வங்கத்திற்குச் சென்று, அங்கு இருக்கும் மக்களைப் பிளவுப்படுத்தப் பேசுகிறார்!

“எந்தவித மான உணர்ச்சியும் பாஜகவுக்கு இல்லை - ‘கிளீன் மோடி’ என்ற முகத்திரை கிழிந்தது” : முதலமைச்சர் உரை!

பத்தாண்டுகாலம் இந்தியாவின் பிரதமராக இருந்துவிட்டு, சாதனையாக, எதையும் சொல்ல முடியாமல் நாள்தோறும் மக்களைப் பிளவுபடுத்தும் கருத்துகளை பேசுகிறோமே! என்ற கூச்சம் துளிகூட அவரிடம் இல்லை! மோடி ஏன் எக்காரணத்தைக் கொண்டும், இன்னொரு முறை ஆட்சிக்கு வரக் கூடாது என்று சொல்கிறோம்? மோடி ஆட்சிக்கு வந்தால், அமைதியான இந்தியா அமளியான இந்தியாவாக மாறிவிடும்! ஒருதாய் மக்களாக வாழும் நம்முடைய மக்கள் மனதில் வேறுபாட்டு விதைகளைத் தூவி, இந்தியாவையே நாசம் செய்துவிடுவார்கள்!

இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது. நாடாளுமன்றத்தில் விவாதம் இருக்காது. தேர்தல் என்பதே ஜனநாயகப்பூர்வமாக இருக்காது. மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் இருக்காது. சட்டமன்றங்கள் இருக்குமா! என்பதே, சந்தேகம். ஒரே மொழி – ஒரே மதம் – ஒரே பண்பாடு – ஒரே உடை – ஒரே உணவு என்று ஒற்றை சர்வாதிகார நாடாக மாற்றிவிடுவார்கள். நாடு இருநூறு ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிடும்! வரலாறுகள் திரித்து எழுதப்படும்! அறிவியல் பின்னுக்குத் தள்ளப்பட்டு பிற்போக்கு கதைகள் புகுத்தப்படும்!

தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் பிற மாநில மொழிகள் சிதைக்கப்படும்! மக்களின் சிந்தனை மழுங்கடிக்கப்படும்! மக்களின் அடிப்படை உரிமைகள்கூட பறிக்கப்படும்! இடஒதுக்கீடு வழங்கும் சமூகநீதியைக் குழிதோண்டி புதைத்துவிடுவார்கள். புரட்சியாளர் அம்பேத்கர் எழுதிய அரசியல்சட்டம் காற்றில் பறக்க விடப்பட்டு, ஆர்.எஸ்.எஸ் சட்டம்தான் நாட்டை ஆளும்! காவிக்கொடி தேசிய கொடியாக ஆகிவிடும்! இதையெல்லாம் தடுத்தாக வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நாம் எல்லோரும் இருக்கிறோம்!

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால்தான் இந்தியா வளம் பெறும், குறிப்பாகத் தமிழ்நாடு அதிகமாக வளம்பெறும்! இங்கே திராவிட மாடல் ஆட்சியை, நாங்கள் அமைத்து, மூன்றாண்டு காலமாகப் பல்வேறு சிறப்பான திட்டங்களைத் தீட்டி வருகிறோம். நம்முடைய சாதனைகள்தான் நமக்கான அடையாளம்! ஒவ்வொரு கூட்டத்திலும், நம்முடைய திட்டங்களால் பயனடைந்த பயனாளிகளைப் பற்றிப் பேசி இருக்கிறேன்.

பயனாளிகள் கூறிய ஒவ்வொரு வார்த்தையும், அவர்கள் உதட்டில் இருந்து இல்லை! மனதில் இருந்து வந்தது. அது சொல்லும்போது அவர்கள் முகத்தில் நான் பார்த்த மகிழ்ச்சிதான், என்னுடைய வாழ்நாள் பேறு! நான் பொதுவாழ்க்கைக்கு வந்து, 60 வருடத்திற்கு மேல், ஆகிவிட்டது! எவ்வளவோ சோதனைகளையும், வேதனைகளையும் சந்தித்துத்தான் இந்த இடத்தில் நிற்கிறேன்.

“எந்தவித மான உணர்ச்சியும் பாஜகவுக்கு இல்லை - ‘கிளீன் மோடி’ என்ற முகத்திரை கிழிந்தது” : முதலமைச்சர் உரை!

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று நான் பொறுப்பேற்றுக்கொள்ள காரணம், என் உயிரோடு கலந்திருக்கும் உடன்பிறப்புகளான நீங்களும் தமிழ்நாட்டு மக்களும்தான்! தமிழ்நாட்டின் வரலாற்றை எழுதும்போது, அதில் எனக்கும் ஒரு இடம் இருக்கும்!

ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோதுதான், தமிழ்நாட்டில் ஒரு கோடியே 15 இலட்சம் மகளிர் அவர்கள் அண்ணன் தாய்வீட்டுச் சீர் கொடுத்தது போன்று, மாதா மாதம் ஆயிரம் ரூபாய் வாங்கினார்கள்! அதேபோன்று, குழந்தைகள் பசியாற காலையில் சாப்பிட்டுப் படிக்க, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் என்ற பெயரில் 16 இலட்சம் குழந்தைகள் வயிறார சாப்பாடு போட்டார்! ஆட்சிக்கு வந்த அடுத்த நாளில் இருந்து, தமிழ்நாட்டில் மகளிர் சுதந்திரமாக, கட்டணமில்லாமல் விடியல் பேருந்தில் பயணம் செய்தார்கள்!

ஏழ்மையான சூழலில் அரசுப் பள்ளியில் படித்து கல்லூரிக்கு வந்த, 4 இலட்சத்து 81 ஆயிரத்து 75 பெண் பிள்ளைகளுக்குப் புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் தந்தார்! கஷ்டப்படுகிறவர்கள் வீட்டிற்கே சென்று, மருத்துவம் பார்க்கும் ”மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தை செய்தார்!

இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டம் மூலமாகப் பல லட்சம் உயிர்களைக் காப்பாற்றினார்! இப்படி, அந்த வரலாற்றில் இன்னும் பல திட்டங்கள் இடம்பெற நமக்கு ஏற்ற ஒன்றிய அரசு வரவேண்டும். அதனால்தான், தேர்தல் அறிவித்ததும் சொன்னேன். 40 தொகுதியிலும் இந்த ஸ்டாலின்தான் வேட்பாளர்! திராவிட மாடல் அரசில் நம்முடைய சாதனைகள் ஒவ்வொரு குடும்பத்தையும் ஒவ்வொரு தனிநபரையும் சென்றடையவேண்டும் என்று பார்த்துப் பார்த்துச் செயலாற்றிக்கொண்டு இருக்கிறோம்.

மகளிர், மாணவர்கள், முதியோர், இளைஞர்கள், சிறுபான்மையினர், சமூகநீதி என்று எல்லா தளங்களிலும் நம்முடைய திட்டங்களைச் செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம். மூன்றாண்டுகால ஆட்சிக்கே இப்படி பட்டியல் போடுகிறோமே பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு ஒரு சிறப்புத் திட்டம் கூட ஏன் செய்யவில்லை என்று ஆற அமரக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!

“எந்தவித மான உணர்ச்சியும் பாஜகவுக்கு இல்லை - ‘கிளீன் மோடி’ என்ற முகத்திரை கிழிந்தது” : முதலமைச்சர் உரை!

ஓட்டு போடும் முதல் தலைமுறையும் சிந்தித்துப் பாருங்கள்! பா.ஜ.க. திரும்ப வந்தால், அடுத்தடுத்து வரும் நம்முடைய தலைமுறைகள் ஒற்றுமையாக வாழ வழி இல்லாத நாடாக இந்தியா மாறிவிடும் என்று எச்சரிக்கையாகவே சொல்கிறேன். இதையெல்லாம் நான் ஏன் சொல்கிறேன் என்றால், பல நூறு ஆண்டுகள் அந்நிய ஏகாதிபத்தியத்திலும், பல ஆயிரம் ஆண்டுகள் சமூகரீதியாவும் அடிமைப்பட்டு கிடந்த நம்முடைய நாடு, பல்வேறு தலைவர்களின் தியாகங்களாலும், பல்வேறு சமூகச் சீர்திருத்தங்களாலும், கடந்த 75 ஆண்டுகளாக நிமிர்ந்து உட்கார்ந்திருக்கிறது.

நாம் பெற்ற சுதந்திரமும் – நம்முடைய அரசியல்சட்டம் வழங்கியிருக்கும் உரிமைகளும் – நம் கண் முன்னாடியே பா.ஜ.க எனும் தேசவிரோத சக்தியால், அழிவுப் பாதைக்கு கொண்டு செல்லப்படுவதை நாம் அனுமதிக்கக் கூடாது! ஃபோட்டோ-ஷாப்பில் கட்டமைக்கப்பட்ட ’குஜராத் மாடல்’ அம்பலப்பட்டு இன்றைக்குத் திராவிட மாடல் என்பது, இந்தியா பின்பற்ற வேண்டிய மாடலாக மாறியிருக்கிறது!

அதைப் பார்த்துப் பொறுத்துக்கொள்ள முடியாமல், பழனிசாமி எப்படியெல்லாம் புலம்பிக்கொண்டு சுற்றுகிறார். நடப்பது இந்தியாவை யார் ஆளவேண்டும் என்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல்! இந்தியா கூட்டணிதான் ஆளவேண்டும் என்று நாம் சொல்கிறோம்! ஆனால், அ.தி.மு.க.வையும் - பழனிசாமியையும் கேட்டால், யார் ஆளவேண்டும் என்று சொல்லாமல் – யார் ஆளக்கூடாது என்று சொல்லாமல் – யார்தான் உண்மையான எதிரி என்றே தெரியாமல் – எதற்காக தேர்தலில் நிற்கிறோம் என்ற தெளிவே இல்லாமல் B-டீமாக, பா.ஜ.க.வுக்கு ஆதாயம் தேடித்தரக் களத்திற்கு வந்திருக்கிறார் பழனிசாமி!

ஒருபக்கம் கூட்டணி முறிந்துவிட்டது என்று சொல்வார், இன்னொரு பக்கம் பா.ஜ.க.வை எதிர்க்க முடியாது, அது கூட்டணி தர்மம் என்று சொல்வார்! அ.தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்தபோது, ”எதிர்க்கட்சிகள் பா.ஜ.க.வை அரசியலுக்காக எதிர்க்கிறார்கள்”என்று சொன்னவர் இப்போது மக்களால் ஓரங்கட்டப்பட்ட பிறகு, “எதிர்க்கட்சியான நாங்கள் ஏன் பா.ஜ.க.வை எதிர்க்கவேண்டும்”என்று அரசியல் தத்துவ மேதைகளே மயங்கி விழுவது போன்று புதுப்புது தத்துவங்களாகப் பேசுகிறார்!

“எந்தவித மான உணர்ச்சியும் பாஜகவுக்கு இல்லை - ‘கிளீன் மோடி’ என்ற முகத்திரை கிழிந்தது” : முதலமைச்சர் உரை!

இப்படிப்பட்ட பழனிசாமி தமிழ்நாட்டிற்கு மட்டும் துரோகம் செய்தவர் இல்லை. தன்னைச் சுற்றியிருந்த அத்தனைப் பேர் முதுகில் குத்தியவர்! சசிகலா – தினகரன் – பன்னீர்செல்வம் என்று அந்தப் பட்டியல் நீண்டது. பழனிசாமியை மக்கள் துரோகசாமியாகத்தான் பார்க்கிறார்கள்! பெரிய மெகா சீரியல் மாதிரியான இதில், இப்போது யாருக்கு யார் நண்பன்? யாருக்கு யார் எதிரி? யாருக்கு யார் துரோகி? இதற்கு பதில் என்ன தெரியுமா? இவர்கள் ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டிற்கும் – தமிழ்நாட்டு மக்களுக்கும் – ஏன், ஒட்டுமொத்த இந்திய மக்களுக்குமே எதிரிகள்!

பழனிசாமி ஒருபோதும் பிரதமர் மோடியையோ – அமித்ஷாவையோ – ஆளுநரையோ – விமர்சிக்க மாட்டார். ஏன் என்றால், எஜமான விஸ்வாசம்! பதவி சுகத்திற்காகவும், ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்கவும் பா.ஜ.க.வின் அத்தனை மக்கள்விரோதத் திட்டங்களையும் ஆதரித்தவர் பழனிசாமி! ஆட்சியில் இருக்கும்போது வைத்த கூட்டணியை இப்போதும் ரகசியமாகத் தொடர்ந்துக்கொண்டு இருக்கிறார்.

பா.ஜ.க.வை எதிர்க்கத் துணிவு வேண்டும்! முதுகெலும்பு வேண்டும்! இரண்டும் பழனிசாமியிடம் கிடையாது. பழனிசாமியின் ஊழல் குடுமி பா.ஜ.க. கையில் இருக்கிறது! அ.தி.மு.க.வின் ஊழல்கள் என்பது, கன்னித்தீவு கதை போல… சென்றுக்கொண்டே இருக்கும்!

தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க. – தமிழ்நாட்டைப் பாழ்படுத்திய அ.தி.மு.க. என்ற இந்த துரோகக் கூட்டணியை ஒருசேர வீழ்த்துங்கள். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்குத் துணைநிற்கப் போகும் இந்தியா கூட்டணியின் ஒன்றிய அரசை ஆட்சியில் அமர்த்துங்கள்! அதற்கு, மத்திய சென்னை வாக்காளப் பெருமக்கள் தயாநிதி மாறனுக்கும் - தென்சென்னை வாக்காளப் பெருமக்கள் தமிழச்சி தங்கபாண்டியனுக்கும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இன்று நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் நிறைவு நாள்!

“எந்தவித மான உணர்ச்சியும் பாஜகவுக்கு இல்லை - ‘கிளீன் மோடி’ என்ற முகத்திரை கிழிந்தது” : முதலமைச்சர் உரை!

இந்தியாவில் ஜனநாயகத்திற்கு நெருக்கடி ஏற்பட்டபோதெல்லாம் தெற்கிலிருந்து உதித்த சூரியனாகப் புதிய வெளிச்சத்துடன் இந்திய அரசியலுக்கு வழிகாட்டியவர் தலைவர் கலைஞர். அந்தத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு இது! அவரின் நூற்றாண்டுக்குத் தலைசிறந்த பரிசாக நாங்கள் கொடுக்கக்கூடியது, தமிழ்நாட்டில் நாற்பதுக்கு நாற்பதை வென்றோம்! ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சியை அமைத்தோம் என்பதுதான் அந்தப் பரிசு! அந்த பரிசை ஜூன் 4-ஆம் தேதி, தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளான நாங்கள் கொடுப்போமா? தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் அனைவரிமும் உங்களில் ஒருவனாக இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கேட்டுக் கொள்வது, “இந்தியாவின் வரலாறு தெற்கில் இருந்துதான் எழுதப்பட வேண்டுமென்று நான் அடிக்கடி சொல்வதுண்டு. இம்முறை இந்தியாவின் வெற்றிக்கணக்கைத் தமிழ்நாட்டில் தொடங்கி எழுத, இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்று உங்கள் அனைவரையும் இருகரம் கூப்பி வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் வாக்கு பாசிசத்தை வீழ்த்தட்டும்! இந்தியாவைக் காக்கட்டும்! உங்கள் வாக்கு தமிழ்நாட்டைக் காக்கட்டும்! உங்கள் வாக்கு எதிர்காலத் தலைமுறையை காக்கட்டும்! வாழ்க தமிழ்நாடு! வெல்க இந்தியா! நாற்பதும் நமதே! நாடும் நமதே! நாற்பதும் நமதே! நாடும் நமதே!

நன்றி! வணக்கம்!

இவ்வாறு அவர் உரையாற்றினார்.

Related Stories

Related Stories