தமிழ்நாடு

கல்பாக்கம் ஈனுலை : “தமிழ்நாடு குப்பைத் தொட்டியா? தமிழர்கள் சோதனை எலிகளா?” - கி.வீரமணி கண்டனம் !

கல்பாக்கம் ஈனுலை : “தமிழ்நாடு குப்பைத் தொட்டியா? தமிழர்கள் சோதனை எலிகளா?” - கி.வீரமணி கண்டனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கல்பாக்கத்தில் பிரதமரால் கடந்த 4ஆம் தேதி திறந்து வைக்கப்பட்ட ஈனுலை - அதன் அணுக் கழிவுகளால் பேராபத்து தமிழ்நாட்டின் தலைக்கு மேல் தொங்கக்கூடிய பேரபாயம் என்றும், இந்தியாவில் பல மாநிலங்களிலும் ஏற்பட்ட எதிர்ப்பால் கைவிடப்பட்ட இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் திணிக்கப்படுகிறது என்றும், ஏதாவது பேரிடர் ஏற்பட்டு அணுக் கழிவுகளின் கதிர்வீச்சு ஏற்படுமேயானால் தமிழ்நாடு மீட்கப்படவே முடியாத பேராபத்தைச் சந்திக்கும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார்.

அவரின் அறிக்கை வருமாறு:

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் `திரவ சோடியத்தைக் குளிர்விப்பானாகக் கொண்ட ஈனுலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார் (4.3.2024). உலக நாடுகளால் கைவிடப்பட்ட மிக ஆபத்தான இந்தத் திட்டத்தை முதன்முறையாக தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்து, தமிழ்நாட்டின்மீது சூழலியல் போரைத் தொடுக்கிறார் பிரதமர் மோடி என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சுற்றுச்சூழல் அமைப்பினர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

`தமிழ்நாடு குப்பைத் தொட்டியா? தமிழர்கள் சோதனை எலிகளா?’ :

இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, “அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈனுலை தொழில்நுட்பம் பாதுகாப்பற்றது; தேவையற்றது; அதிக பொருளாதாரச் சுமையை ஏற்படுத்துவது உள்ளிட்ட காரணங்களால் அதைக் கைவிட்டுவிட்டன. இந்த வகை உலைகளில் குளிர்விப்பானாக பயன்படுத்தப்படும் திரவ சோடியம் கசிந்த காரணத்தால் ஜப்பானில் மாஞ்சூ ஈனுலையில் தீ விபத்து ஏற்பட்டு அந்த உலை மூடப்பட்டது.

கல்பாக்கம் ஈனுலை : “தமிழ்நாடு குப்பைத் தொட்டியா? தமிழர்கள் சோதனை எலிகளா?” - கி.வீரமணி கண்டனம் !

பிரான்சில் செயல்பட்டு வந்த சூப்பர்பீனிக்ஸ் ஈனுலையும் அதிக பொருளாதாராச் சுமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பின்மை, பொதுமக்கள் போராட்டம் உள்ளிட்ட காரணங்களால் மூடப்பட்டது; பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இருந்து அணுவுலைகளுக்கும், அணுக்கழிவு மய்யங்களுக்கும் எதிர்ப்பு வந்ததால் அத்திட்டங்களைக் கைவிடும் ஒன்றிய பா.ஜ.க அரசு தமிழ்நாட்டைக் குப்பைத் தொட்டியாகவும், தமிழர்களை சோதனை எலிகளாகவும் கருதுவதை ஏற்றுக்கொள்ள முடியாது!” எனக் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

தமிழ்நாட்டின் நலனுக்கு எவ்விதப் பங்களிப்பும் தராத - உலக நாடுகள் அனைத்தும் எதிர்க்கும் ஓர் ஆபத்தான தொழில்நுட்பத்தை கல்பாக்கத்தில் தொடங்கும் மோடி அரசின் சூழ்ச்சியைத் தமிழ்நாட்டு மக்கள் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் - அனைத்து மக்களுக்கும் புரியவைக்கவும் வேண்டும்.

ஈனுலை பாதிப்புகள் :

1,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் ஓர் அணு உலையில் சாராசரியாக வெளியாகும் 27,000 கிலோ எடையுள்ள அணுக்கழிவுகள் அணு உலைக்குள்ளேயே சேமித்து வைக்கப்படுகின்றன. ஆனால் அவற்றினை 7 ஆண்டுகளுக்கு மட்டுமே அங்கு வைத்திருக்க முடியும். அதன்பிறகு, அங்கிருந்து வெளியேற்றி தற்காலிக அணுக்கழிவு மய்யத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். இத்தகைய அணுக்கழிவுகள் ஏறத்தாழ 48,000 ஆண்டுகள் கதிர்வீச்சுத் தன்மையுடன் இருக்கக்கூடியவை. இக்காலகட்டத்திற்குள் ஏதாவது ஒரு பேரிடர் ஏற்பட்டு அணுக்கழிவுகளின் கதிர்வீச்சுகள் வெளிப்பட்டால் தமிழ்நாடு மிகப்பெரிய பேரழிவைச் சந்திக்க நேரிடும், உயிர்கள் வாழவே தகுதியற்ற நிலமாக மாறிவிடும்.

கல்பாக்கம் ஈனுலை : “தமிழ்நாடு குப்பைத் தொட்டியா? தமிழர்கள் சோதனை எலிகளா?” - கி.வீரமணி கண்டனம் !

இந்திய ஒன்றிய அரசு. நிரந்தர அணுக்கழிவு மய்யம் அமைத்திட எந்த இந்திய மாநிலமும் ஒத்துக் கொள்ளாத நிலையில், ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் பேரழிவு அணுவுலைகளையே மூட வேண்டுமென்று கோரிக்கை வலுத்துவரும் நிலையில், தற்போது அதைவிடப் பன்மடங்கு பாதிப்பை ஏற்படுத்தும் 500 மெகாவாட் ஈனுலையை கல்பாக்கத்தில் தொடங்கியுள்ளது.

அறிவியலில் வளர்ந்த நாடுகளே அணுக்கழிவுகளை எவ்வாறு கையாள்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கும்போது, நிரந்தர அணுக்கழிவு மய்யம் வைப்பதற்கான தொழில்நுட்பத்தை இதுவரை பெற்றிடாத இந்தியா, தமிழ்நாட்டில் அடுத்தடுத்து அணுவுலைகளை அமைத்து வருவது, நேரடியாக இந்திய ஒன்றிய அரசு தொடுக்கின்ற சூழலியல் போர்!

நல்லது செய்யாவிடினும் கேடாவது செய்யாமல் இருக்கக் கூடாதா? :

ஸ்டெர்லைட் ஆலை, நியூட்ரினோ மய்யம், அணு உலை, ஈனுலை, அணுக்கழிவு மய்யம் எனப் பேராபத்து நிறைந்த அழிவுத் திட்டங்களையெல்லாம் தமிழ்நாட்டின் மீது திணிப்பதன் மூலம் பாஜக அரசு இந்தியாவின் குப்பைத்தொட்டியாகவே தமிழ்நாட்டை மாற்றியுள்ளது. ஏதோ தமிழ்நாட்டுக்கு ஒரு திட்டம் தருகிறது ஒன்றிய அரசு என்று பார்த்தால், அதற்குள்ளும் தமிழ்நாட்டை நாசப்படுத்தும் பூகம்பம் புதைந்திருக்கிறது என்பதை அறியும் போது இந்த மக்கள் விரோத அரசு நீடிக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்தானதே! வரும் மக்களவைத் தேர்தலில் பிஜேபி ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிட தமிழ்நாட்டு மக்களே தயாராவீர்!

banner

Related Stories

Related Stories