தமிழ்நாடு

சர்வாதிகார ஆட்சி மீண்டும் ஏற்பட்டால் என்னாகும்? : எச்சரிக்கை விடுக்கும் ஆசிரியர் கி.வீரமணி!

‘‘பிரதமர் மோடி ஊழல் ஒழிப்பு குறித்து உணர்ச்சிகரமாகப் பேசுவார். ஆனால், அதில் பெருமளவு ஆர்வம் கிடையாது’’ என ஆசிரியர் கி.வீரமணி விமர்சித்துள்ளார்.

சர்வாதிகார ஆட்சி மீண்டும் ஏற்பட்டால் என்னாகும்? : எச்சரிக்கை விடுக்கும் ஆசிரியர் கி.வீரமணி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வெளிப்படையற்ற தன்மையில் தேர்தல் நிதி வசூல், உச்சநீதிமன்றம் கொடுத்த சாட்டையடி! ‘‘பிரதமர் மோடி ஊழல் ஒழிப்பு குறித்து உணர்ச்சிகரமாகப் பேசுவார் - ஆனால், அதில் பெருமளவு ஆர்வம் கிடையாது!’’ ஜம்மு காஷ்மீர் மாநில மேனாள் ஆளுநர் பகிரங்கக் குற்றம்சாட்டியிருக்கிறார் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

2014 இல் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி - பா.ஜ.க. முதல் முறை வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையிலேயே - தேர்தல் நன்கொடைகளைத் தனி நபர்களிடமிருந்தும், கார்ப்பரேட் கம்பெனிகளிடமிருந்தும் அரசியல் கட்சிகள் வசூலிக்கும் பழைய சட்ட முறையை மாற்றியது; அதன்மூலம் ஆளுங்கட்சியாக உள்ள நிலையில், மற்ற எந்தக் கட்சியும் எட்ட முடியாத அளவுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய தேர்தல் பத்திரங்களைச் சட்டத் திருத்தம்மூலம் பெற்றுள்ளது. மற்ற சில அரசியல் கட்சிகளைவிட 6 மடங்கு கூடுதலாக நன்கொடை பெற்றுள்ளது ஆளும் பா.ஜ.க. கட்சி!

வெளிப்படைத்தன்மை இல்லாத நிதி வசூல்

1. அம்முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை.

2. தனி நபர் தரத்தக்க நன்கொடை ரூ. 20 ஆயிரம் என்ற உச்சவரம்பு - பிறகு கம்பெனி நிகர லாபத்தில் ஏழரை சதவிகிதம் மட்டுமே அதிகபட்சமாக அளிக்கலாம்.

3. வெளிநாட்டுக் கம்பெனிகள் நன்கொடை கொடுக்க முடியாது என்பது போன்றவற்றை அறவே நீக்கி, உச்சவரம்பின்றித் தரலாம். கோடி கோடி ரூபாய் மதிப்புடைய தேர்தல் பத்திரத்தை யார் வேண்டுமானாலும் தரலாம்; பிறருக்கு அதை அளித்து, அளித்தவர் அடையாளத்தைக் கண்டுபிடிக்காமல் ஆக்கிக் கொள்ளலாம் என்பன போன்றவற்றை தலைமை நீதிபதி தலைமையில் அமைந்த உச்சநீதிமன்ற 5 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு செல்லாது என்று தீர்ப்பளித்ததோடு, முழு விவரங்களை அளிக்க ஸ்டேட் பேங்க், தேர்தல் ஆணையம் ஆகியவற்றிற்கு ஆணையிட்டுள்ளது. ‘‘ஊழலை ஒழிக்கும் உத்தமர் அவதாரம்‘’ ஏற்ற மோடி ஆட்சிக்கு இது பின்னடைவு என்று அவர்களது ஊதுகுழல் ஏடுகூட தலையங்கம் எழுதும் நிலைக்கு, நிலைமை பட்டாங்கமாய் ஆகிவிட்டது!

உச்சநீதிமன்றம் கொடுத்த சாட்டையடி!

அதே உச்சநீதிமன்றம் ஜனநாயகத்தை எப்படி காணாமற் போகச் செய்வதில் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. ஆட்சியான பிரதமர் மோடி ஆட்சியில், அண்மையில் சண்டிகரில் மாநகராட்சி மேயர் தேர்தலில் அதிகாரியைப் பயன்படுத்தி, அதிக பெரும்பான்மை பெற்ற ஆம்ஆத்மி கட்சி உறுப்பினர்களின் வாக்குகளை செல்லாததாக்கி, பா.ஜ.க. எவ்வாறு வெற்றி பெற்றது என்பதைப் பகிரங்கப் பிரகடனம் செய்து ஜனநாயகத்தைப் படுகொலை செய்ததை நாடே அறியும். உச்சநீதிமன்றம் இதனை அவசர வழக்காக விசாரித்து, ஊழல் செய்த அதிகாரியைத் தண்டித்தாகவேண்டும் என்றும், திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்ட ஆம்ஆத்மி கட்சி வேட்பாளர் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று மேயர் தேர்தலில் வென்றார் என்றும் அறிவித்து பா.ஜ.க.வின் முகத்தில் அறைந்துள்ளது!

இதில் ஓர் உச்சக்கட்ட அரசியல் கேவலம், பா.ஜ.க. தலைவர் நட்டா உடனே அங்கே பித்தலாட்டமாக மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ‘அந்த மேயரை’ பாராட்டி மனங்குளிர்ந்த கொடுமை! எய்தவர் யாரோ - அவர்களைத் தண்டிப்பதுதான் சரியான நியாயம்; கொல்லைப்புற வழியில் பா.ஜ.க. வெற்றியை அளித்த தேர்தல் நடத்திய அதிகாரி வெறும் அம்புதானே!

காஷ்மீர் மேனாள் ஆளுநர் தெரிவித்த திடுக்கிடும் தகவல்!

பொதுமக்களாகிய வாக்காளர்கள் - இந்தியா முழுவதும் உள்ளவர்கள் இதனை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தில்லுமுல்லு தேர்தல் திருகுதாளங்கள் எந்த எல்லைக்கும் செல்லும் என்பதற்கு சண்டிகர் மேயர் தேர்தல் சமீபத்திய உதாரணம்.

மூன்றாவதாக, காஷ்மீரில் 2018-2019 இல் ஆளுநராகப் பதவியேற்ற சத்தியபால் மாலிக் அவர்களது வீட்டில் அப்போது அவர் ஒரு பிரச்சினையில் அனுமதிக்க, தன்னிடமே 300 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முன்வந்ததுபற்றி பேசிய பழையப் பேச்சு - விசாரணை என்ற பெயரில் சி.பி.அய். அவரது வீட்டில் நேற்று முன்தினம் (22-2-2024) சோதனை!

இவர்மீது இப்படி ஒரு திடீர்ப் பாய்ச்சல் ஏன்?

இவர்களால் நியமிக்கப்பட்டவரிடம் - அதுவும் காஷ்மீர் மாநிலத்தில் இப்படி நடப்பதற்கு என்ன பின்னணி? நேற்றைய (23-2-2024) ‘தினமலர்’ ஏட்டில் உள்ளதை அப்படியே தருகிறோம் - அவ்வேடு பா.ஜ.க.வின் ஊதுகுழல் அல்லவா, அதனால்).

சர்வாதிகார ஆட்சி மீண்டும் ஏற்பட்டால் என்னாகும்? : எச்சரிக்கை விடுக்கும் ஆசிரியர் கி.வீரமணி!

‘தினமலர்’ ஏடே கூறுகிறது!

மாஜி கவர்னர் சத்யபால் மாலிக்கிடம் சி.பி.ஐ., 5 மணி நேரம் விசாரணை

புதுடில்லி : அரசு ஊழியர்களுக்கான இன்சூரன்ஸ் முறைகேடு வழக்கில், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக்கிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் ஐந்து மணி நேரம் விசாரணை நடத்தினர்.

ஜம்மு - காஷ்மீர் கவர்னராக 2018, ஆக., முதல் 2019 அக்., மாதம் வரை சத்யபால் மாலிக் பதவி வகித்தார். அந்த காலகட்டத்தில், அரசு ஊழியர்களுக்கான இன்சூரன்ஸ் திட்டம் அறிவிக்கப் பட்டது. மேலும், 2,200 கோடி ரூபாய் செலவில் கிரு நீர்மின் நிலைய திட்ட கட்டுமான பணியும் துவங்கியது.இந்த இரு திட்டங்கள் தொடர்பான கோப்புகளில் கையொப்பமிட, 300 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க அந்நிறுவனங்கள் தயாராக இருந்ததாக சத்யபால் மாலிக் குற்றஞ்சாட்டினார். இதையடுத்து இன்சூரன்ஸ் திட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., இரண்டு வழக்குகள் பதிவு செய்தது. இந்த வழக்கில், சத்யபால் மாலிக் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்.அவரிடம் கடந்த அக்டோபர் மாதம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.இந்நிலையில், இன்று புதுடில்லியில் உள்ள சத்யபால் மாலிக் வீட்டுக்கு, சி.பி.ஐ., அதிகாரிகள் வந்தனர். வழக்கு தொடர்பாக அவரிடம் ஐந்து மணி நேரம் விசாரணை நடத்தினர். - இவ்வாறு ‘தினமலர்’ ஏடு செய்தி வெளியிட்டு இருந்தது.

புல்வாமா தாக்குதல் நடந்த விதம்!

பேட்டியில் ஆளுநர் தெரிவித்த விவகாரம்; காஷ்மீரிலும், டில்லியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படி சோதனைமூலம் அவர் ஒன்றிய பா.ஜ.க. மோடி அரசால் குறி வைக்கப்படுகிறார். ‘‘ஊழல் ஒழிப்பு குறித்து மோடி உணர்ச்சிகரமாகப் பேசுவாரே தவிர, அதில் அவருக்குப் பெரிய அளவில் ஆர்வம் கிடையாது’’ என்று முன்பு மாலிக் பேசியிருந்தார்.

‘‘ஊழல் குறித்து நான் பேசிய ஒவ்வொரு கட்டத்திலும் எனக்கு டிரான்ஸ்பர்தான் பரிகாரமாகத் தரப்பட்டது! பீகார், அங்கிருந்து கோவா, பின் காஷ்மீர், அடுத்து மேகாலயா என குறுகிய காலத்தில் நான்கு மாநிலங்களில் பணியாற்ற அனுப்பப்பட்டதை’’ அவர் ஆதாரமாகக் காட்டினார். காஷ்மீரில் புல்வாமா தாக்குதல்தான் - இரண்டாம் முறை வெற்றியை குறி வைத்துப் பிரச்சாரம் செய்யப்பட்ட ஒன்று என்பது நாடறிந்த உண்மை.

‘‘உளவு தகவல் அடிப்படையில் உடனே செயல்பட்டிருந்தால், 40 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட புல்வாமா தாக்குதலை தவிர்த்திருக்க முடியும்‘’ என்றும், அதே பேட்டியில் (300 கோடி ரூபாய் லஞ்ச பேரம்பேசப்பட்டது என்று கூறிய பேட்டியின்போது) - காஷ்மீர் ஆளுநராக இருந்தபோது கூறியுள்ளார்.

அதாவது சாலை மார்க்கமாகச் செல்லும் ஜவான்களைத் தாக்க, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருந்ததால், இராணுவ விமானங்கள் வாயிலாக ஜவான்களை அழைத்துச் செல்லலாம் என்று ஆளுநர் சத்தியபால் மாலிக் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் சொன்னாராம். வாக்காளர்களே யோசியுங்கள்! இறுதியில், அவர் பேட்டியில் குறிப்பிடுகிறார்:

‘‘நான்கு நாட்களாக எனக்கு உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் உள்ளேன். சர்வாதிகாரியின் விசாரணை அமைப்பு என் வீட்டை சோதனையிடுகிறது. நான் ஒரு விவசாயியின் மகன்; இதற்கெல்லாம் பயப்படமாட்டேன்’’ என்றார். இவை மூன்றும் கடந்த சில நாள்களில் நடந்தவை. ஜனநாயகத்திற்கு எதிராக ஒரு மக்கள் விரோத அரசு இயந்திரம், தேர்தல் முறைகளைக்கூட இப்படி கறைபடுத்திய ஆட்சி மீண்டும் ஏற்பட்டால் என்னாகும்? வாக்காளர்களே, யோசியுங்கள்!ஏமாறாதீர்கள்!!

banner

Related Stories

Related Stories