தமிழ்நாடு

தேர்தல் பத்திர வழக்கு: உச்சநீதிமன்றத்தில் CPM தொடுத்த வழக்கில் கிடைத்த மகத்தான தீர்ப்பு- கே.பாலகிருஷ்ணன்!

தேர்தல் பத்திர நடைமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவித்த உச்சநீதிமன்றத்தின் அறிவிப்பை வரவேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அறிக்கை வெளியிட்டுள்ளது.

தேர்தல் பத்திர வழக்கு: உச்சநீதிமன்றத்தில் CPM தொடுத்த வழக்கில் கிடைத்த மகத்தான தீர்ப்பு- கே.பாலகிருஷ்ணன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரம் திட்டதில் வெளிப்படைத் தன்மை இல்லை, எனவே இதை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் மீதான விசாரணை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நடந்து வந்தது.

இந்த வழக்கின் மீதான விசாரணை முழுவதும் நிறைவடைந்து இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில் 5 நீதிபதிகளும் தேர்தல் பத்திர நடைமுறை ரத்து செய்யப்படுவதாக ஒருமித்த தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த அறிவிப்பை வரவேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், "தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஒத்த கருத்துடன் அளித்திருக்கக்கூடிய தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது. ஆரம்பத்திலிருந்து இத்திட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) எதிர்த்து வந்ததுடன், உச்சநீதிமன்றத்தில் சிபிஐ(எம்) தொடுத்த வழக்கில் கிடைத்துள்ள மகத்தான தீர்ப்பு என பெருமை கொள்கிறோம்.

2017ல் நிதிநிலை அறிக்கையில் அறிவித்து பின்னர் 2018ல் அரசாணை மூலம் ஒன்றிய அரசு இத்திட்டத்தை வெளியிட்டது. இது தங்கு தடையின்றி நிறைவேற பல்வேறு சட்டங்களைத் திருத்தி பல கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பதில் ரொக்க பரிவர்த்தனையை தவிர்ப்பது, வெளிப்படை தன்மையை ஊக்குவிக்கும், கருப்பு பண பரிமாற்றத்தை தடுக்கும் என விந்தையான காரணங்கள் முன்மொழியப்பட்டன. கடந்த 6 ஆண்டுகளில், தேர்தல் பத்திரம் மூலமான நிதியில் 80 சதவிகிதத்திற்கும் மேல் பத்திரங்கள் பெற்றது பாஜக.

தேர்தல் பத்திர வழக்கு: உச்சநீதிமன்றத்தில் CPM தொடுத்த வழக்கில் கிடைத்த மகத்தான தீர்ப்பு- கே.பாலகிருஷ்ணன்!

அரசியல் ஊழலை சட்டபூர்வமாக்கவே தேர்தல் பத்திரம் பயன்படும் என துவக்கத்திலேயே சிபிஐ (எம்) உறுதிபடக் கூறியதோடு, திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தது. தேர்தல் பத்திரத்தின் மூலமாக நன்கொடை பெற மாட்டோம் என்கிற கொள்கை முடிவை எடுத்த ஒரே அரசியல் கட்சி சிபிஐ (எம்) தான், இது நீதிமன்ற வாதங்களின் போதும் குறிப்பிடப்பட்டது என்பதை பெருமிதத்தோடு இங்கு முன் வைக்கிறோம்.

உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில், தேர்தல் பத்திரம் நன்கொடை கொடுத்தவர்கள் பிரதிபலன் எதிர்பார்க்காமலா கொடுத்திருப்பார்கள் என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது. ஆளும் கட்சி என்ற அடிப்படையில் மட்டுமின்றி கார்ப்பரேட் கம்பெனியின் அடிவருடி என்ற முறையில் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களை பெற்று குவித்தது பாஜக. கார்ப்பரேட்டுகள் இந்தப் பணத்தைக் கொண்டு தேர்தல் ஜனநாயகத்தை பண நாயகமாக மாற்றியதுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சி மாற்றங்களை நிகழ்த்தியதுடன் நாடாளுமன்ற ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கியது பாஜக. ஆளும் கட்சிக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் இடையிலான கள்ளக்கூட்டணி குறித்து தொடர்ந்து சிபிஐ(எம்) பேசி வருவதற்கு இத்தீர்ப்பு வலு சேர்த்துள்ளது.

கருப்பு பணத்தைத் தடுப்பதற்காகவே இத்திட்டம் கொண்டுவரப்பட்டது என்கிற ஒன்றிய அரசின் சொத்தை வாதங்களை நீதிமன்றத் தீர்ப்பு தவிடுபொடி ஆக்கியுள்ளது. அரசியல் கட்சிகள் நிதி பெறும் நடைமுறையில் ஒளிவு மறைவு இருப்பதும், மக்களின் தகவல் பெறும் உரிமையை மறுதலிப்பதும் தவறானது என நீதிமன்றம் சாடியுள்ளது. தேர்தல் பத்திர வெளியிடு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்; தேர்தல் பத்திரம் குறித்த அனைத்து விவரங்களையும் பாரத வங்கி தேர்தல் ஆணையத்திடம் அளித்திட வேண்டும், வாங்கிய பத்திரம் நிதி கொடுப்பவர் கையிலோ அல்லது அரசியல் கட்சியின் கையிலோ இருக்கும் பட்சத்தில் அவை திருப்பித் தரப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

தேர்தல் நேரத்தில் வந்துள்ள இத்தீர்ப்பு, ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற போலியான பிம்பத்தை ஊதி பெரிதாக்கும் பாஜகவின் கோட்டையில் விழுந்த பலத்த அடி. நீலச்சாயம் வெளுத்து நரியின் வேஷம் கலைந்து நிற்கிறது பாஜக" என்று கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories