தமிழ்நாடு

”ஹிட்லர்களின் தோல்வி ஸ்டாலினிடம்தான்” : பா.ஜ.கவை கண்டித்து இளைஞர் அணி மாநாட்டில் தீர்மானம்!

தி.மு.க இளைஞர் அணி மாநாட்டில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

”ஹிட்லர்களின் தோல்வி ஸ்டாலினிடம்தான்” :  பா.ஜ.கவை கண்டித்து இளைஞர் அணி மாநாட்டில் தீர்மானம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தி.மு.க இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு சேலத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டு திடல் முன்பு மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பத்தில் கழக கொடியை ஏற்றிவைத்து மாநாட்டை தொடங்கி வைத்தார் கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி. பின்னர் மாநாட்டு திடலை மாணவர் அணி செயலாளர் எழிலரசன் திறந்து வைத்தார்.

இதையடுத்து மாநாட்டிற்கு தலைமையேற்க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முன்மொழியப்பட்டார். பின்னர் 25 தீர்மானங்களை உதயநிதி ஸ்டாலின் முன்மொழித்தார். இதையடுத்து அனைவரது கரகோஷங்களுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒன்றிய அரசை கண்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை பார்ப்போம்:-

உயிர்பலி நீட் நுழைவுத் தேர்வை ஒழிக்கும் வரை போராட்டம் ஓயாது!

2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க அளித்த வாக்குறுதியின்படி, நீட் தேர்வை ரத்து செய்யும் சட்ட முன்வடிவை தமிழ்நாடு சட்டமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களின் பேராதரவுடன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு இரண்டு முறை நிறைவேற்றியும், ஜனநாயக மாண்புகளை மதிக்காமல் செயல்பட்ட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை இந்த மாநாடு வன்மையாகக் கண்டிப்பதுடன், நீட் விலக்கு கோரி தமிழ்நாடு முழுவதும் 2023 ஆகஸ்ட் 20 அன்று உண்ணாநிலை அறப்போரை முன்னெடுத்த இளைஞர் அணி, அதனைத் தொடர்ந்து நீட் விலக்கு-நம் இலக்கு என்ற முழக்கத்துடன் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் முதல் கையெழுத்துடன் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை நேரடியாகவும் ஆன்லைனிலும் நடத்தி, நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 50 இலட்சம் கையெழுத்துகளுக்கும் அதிகமாகப் பெற்று மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றிக் காட்டியுள்ள நிலையில், நீட் ஒழிக்கப்படும்வரை ஜனநாயக முறையிலான போராட்டங்களையும், சட்ட வழியிலான போராட்டங்களையும் தொடர்ந்து முன்னெடுத்து, மாணவர்களின் எதிர்காலத்தைப் பலி கொடுக்க நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் கொடூர மனப்பான்மையை இந்திய அளவில் அம்பலப்படுத்தி, நீட் தேர்வு ஒழிப்பில் இறுதி வெற்றியை முழுமையாகப் பெற்றே தீரும் என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது.

குலக்கல்வி முறையைப் புகுத்தும் தேசியக் கல்விக் கொள்கையை எதிர்த்துப் போராட்டம்

தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்பு என்பது தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கல்வி வரை சிறந்து விளங்குவதுடன், தர வரிசையில் இந்தியாவின் முதல் 100 உயர்கல்வி நிறுவனங்களில் 18 தமிழ்நாட்டைச் சேர்ந்தவையாக இருப்பதை ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன. உயர்கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் (ஜி.இ.ஆர்.) 51.4 விழுக்காடாக உள்ளது. இது இந்திய சராசரி அளவைவிட மிக அதிகமாகும். இத்தகைய கல்விப்புலம் தமிழ்நாட்டில் அமைந்துள்ள நிலையில், தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரால் தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்பைச் சிதைப்பது, இந்தி-சமஸ்கிருத மொழிகளைத் திணிப்பது, தொழிற்கல்வி என்ற பெயரிலும் விஸ்வகர்ம யோஜனா என்ற பெயரில் குலக்கல்வி முறையைக் கொண்டு வருவதும் சமூக நீதிக்கு முற்றிலும் எதிரானது என்பதால், தேசிய கல்விக் கொள்கையைக் கழக இளைஞர் அணி முழுமையாக எதிர்ப்பதுடன், தமிழ்நாட்டில் மட்டுமின்றிப் பிற மாநிலங்களிலும் தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் போக்கை எதிர்த்து மாணவர்-இளைஞர் அமைப்புகளுடன் இணைந்து நாடு தழுவிய அளவிலான போராட்டங்களை இளைஞர் அணி முன்னெடுக்கும் என இந்த மாநாடு தீர்மானிக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு வேலைகளில் தமிழர்களை நியமித்திடு

இந்திய ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள்-ஒன்றிய அரசு அலுவலகங்கள் ஆகியவற்றில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையை, முற்றிலுமாக மாற்றிய 10 ஆண்டுகால ஒன்றிய பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டில் அமைந்துள்ள தென்னக ரயில்வே, என்.எல்.சி, பி.ஹெச்.இ.எல்., ஆவடி கன ரக வாகனத் தொழிற்சாலை, ராணுவ ஆடைத் தயாரிப்பு நிறுவனம், ரயில் பெட்டித் தொழிற்சாலை மற்றும் தமிழ்நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தேசிய வங்கிகளான இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பு முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டு, பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களைத் திட்டமிட்டுத் திணிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருவதன் மூலம், தமிழ்நாட்டு இளைஞர்களை வஞ்சிப்பதுடன், பிற மாநிலத்தவருடன் பகையுணர்வை வளர்க்கும் போக்கையும் மேற்கொண்டு வருவதை வன்மையாகக் கண்டிப்பதுடன், தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு சார்ந்த நிறுவனங்கள், அலுவலகங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியான ஆண்-பெண் விண்ணப்பதாரர்களுக்கே முன்னுரிமை அளித்துப் பணியிடங்களில் நியமித்திட வேண்டும் என்றும், ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் என இந்த மாநாடு தீர்மானிக்கிறது.

”ஹிட்லர்களின் தோல்வி ஸ்டாலினிடம்தான்” :  பா.ஜ.கவை கண்டித்து இளைஞர் அணி மாநாட்டில் தீர்மானம்!
”ஹிட்லர்களின் தோல்வி ஸ்டாலினிடம்தான்” :  பா.ஜ.கவை கண்டித்து இளைஞர் அணி மாநாட்டில் தீர்மானம்!

அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளைக் கைப்பாவையாக்கிய ஒன்றிய பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம்!

ஜனநாயக நாட்டில் மக்களின் கடைசி நம்பிக்கை சட்டமும் நீதியும்தான். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் அடையாளத்துக்காக ஒரு செங்கோலை வைத்துவிட்டு, சட்டம் நீதியின் ஆட்சி எனும் உண்மையான செங்கோலை, வில்லாக வளைத்து, அதில் தனது கைப்பாவையாக மாற்றி வைத்துள்ள அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை, வருமானவரித்துறை போன்ற அம்புகளைத் தொடுத்து, பா.ஜ.க. அல்லாத ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் உள்ள ஆளுங்கட்சியினர் மீதும், பா.ஜ.க.வை எதிர்க்கின்ற கட்சிகள் மீதும் வன்மத்துடன் பாய்ச்சுகின்ற ஒன்றிய பா.ஜ.க. அரசின் பழிவாங்கும் அரசியல் போக்கிற்கும், ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளானவர் பா.ஜ.க.வுக்கு ஆதரவான நிலை எடுத்தால், அவர் மீதான வழக்குகளில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ‘தூய்மைப் பட்டம்’ அளிக்கும் ‘வாஷிங் மெஷின் பா.ஜ.க.’ அரசின் இரட்டை வேட செயல்பாடுகளுக்கும் இந்த மாநாடு வன்மையானக் கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றுகிறது.

இந்துக்களின் உண்மையான எதிரி பா.ஜ.க.தான் என்பதை அம்பலப்படுத்துவோம்.

மதவாத அரசியலை முன்னெடுத்து, அயோத்தி இராமர் கோவிலை வைத்து வாக்குகள் பெற்றுவிடலாம் என நினைப்பது ஆன்மிகவாதிகளையும் ஏமாற்றும் செயலாகும். நாட்டில் உள்ள இந்துக்களில் பெரும்பான்மையான மக்களை 10 ஆண்டுகாலமாக ஏமாற்றிவிட்டு, இராமர் கோவிலைக் காட்டி, இந்துக்கள் ஓட்டுகளை வாங்கிவிடலாம் என அரசியல் கணக்குடன், கடவுளையும் ஏமாற்ற நினைக்கும் இந்து மக்களின் உண்மையான எதிரியான பா.ஜ.க.வின் மதவாத அரசியலை வீடு வீடாக அம்பலப்படுத்தும் பரப்புரையை இளைஞர் அணி மேற்கொள்ளும் என இந்த மாநாடு தீர்மானிக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான சூளுரை

பாசிசத்தை வீழ்த்திக் காட்ட முடியும் என 2019 நாடாளுமன்றத் தேர்தலிலேயே தமிழ்நாட்டில் வெற்றிகரமாக நிரூபித்துக் காட்டியவருமான திராவிட மாடல் முதலமைச்சர்-கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலில், இயங்கும் கழக இளைஞர் அணி, கழகத் தலைவரின் கட்டளைக்கேற்ப 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் முன்னின்று செயலாற்றி, தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்து, ‘ஹிட்லர்களின் தோல்வி ஸ்டாலினிடம்தான்’ என்ற வரலாற்று மரபின் தொடர்ச்சியை நிரூபிக்கும் வகையில், இந்திய ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திக் காட்டும் எனச் சூளுரைக்கிறது.

banner

Related Stories

Related Stories