தமிழ்நாடு

”மோடி ஆட்சியின் செங்கோல் வளைந்து விட்டது” : உச்சநீதிமன்ற கருத்தை சுட்டிக்காட்டி கி.வீரமணி விமர்சனம்!

பா.ஜ.க.வின் மோடி ஆட்சியின் செங்கோல் எப்படி வளைந்த செங்கோலாகி ஆட்சி நடைபெறுகிறது என்பதைக் காட்டுகிறது என உச்சநீதிமன்ற கருத்தை சுட்டிகாட்டி கி.வீரமணி விமர்சித்துள்ளார்.

”மோடி ஆட்சியின் செங்கோல் வளைந்து விட்டது” : உச்சநீதிமன்ற கருத்தை சுட்டிக்காட்டி கி.வீரமணி விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனம், நீதிபதிகள் இடமாற்றம் முதலியவற்றில் ஒன்றிய பா.ஜ க அரசு விருப்பு வெறுப்பு அடிப்படையில் செயல்படுகிறது என்று உச்சநீதிமன்றமே பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியுள்ளது. ஒன்றிய அரசு தான்தோன்றித்தனமாக நடப்பதைச் சுட்டிக்காட்டி, வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ. ஆட்சிக்கு முடிவு கட்டுவதுதான் இதற்கு ஒரே பரிகாரம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

நாடு ‘சுதந்திரம்‘ அடைந்து, நமது அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து 73 ஆண்டுகள் ஆகும் நிலையில், இதற்குமுன் எப்போதும் இல்லாத வகையில், நம் நாட்டின் உச்சநீதிமன்றத்திற்கும், உயர்நீதிமன்றங்களுக்கும் நீதிபதிகளைப் பரிந்துரைக்கும் ‘‘கொலிஜியம்‘’ (Collegium) என்ற மூத்த நீதிபதிகள் அமைப்பில் (5 பேர் அதில் உள்ளவர்கள்) இரண்டாவதுதான் மூத்த நீதிபதி ஜஸ்டிஸ் சஞ்சய் கிஷன் கவுல் அவர்கள். (இவர் வருகிற டிசம்பர் 24, 2023 இல் ஓய்வு பெறவிருக்கிறார்). திங்களன்று உச்சநீதிமன்றத்தில், ஒன்றியத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். ஆட்சியான - பா.ஜ.க. ஆட்சியில் நீதியும், நீதித்துறையும் என்ன பாடுபடுகிறது என்பதைப் பகிரங்கமாகவே வேதனையோடு வெளிப்படுத்தியுள்ளார்.

உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம், இடமாற்றங்களில் ஒன்றிய அரசின் அத்துமீறல்!

உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றங்களுக்கு ‘கொலிஜியம்‘ நீதிபதிகளை நியமிக்கச் செய்யப்படும் நீதிபதிகள் பட்டியலில் உள்ள பெயர்களில் சிலவற்றை மாத்திரம் ‘‘Pick and Choose’’ என்ற முறையில் - அது நியமனங்களானாலும் அல்லது மற்ற மாநில உயர்நீதிமன்றங்களுக்கு மாற்றல்கள் (Transfers) ஆனாலும் செய்வது, மூத்தவர்களை விட்டுவிட்டு, குறிப்பிட்ட சில பெயர்களை மட்டும் நியமனம் செய்வது என்பது நீதி பரிபாலனக் கட்டமைப்பையும், அனுபவமும், பணி மூப்பும் உடைய சிறந்தவர்கள் நீதிபதிகளாகும் வாய்ப்பை மறுப்பதாகவும் அமைந்துவிடுகிறது!

நீதிபதிகள் நியமனம் சம்பந்தமான ‘‘The Second Judges Case’’ தீர்ப்பின்படி, ‘கொலிஜியம்‘ பரிந்துரைத்ததை ஏற்கவேண்டியது நிர்வாகத்தின் கடமை. அதற்கு மாறாக நடப்பது ஏற்கத்தக்கதல்ல; நீதிபதிகளை இப்படி குறிப்பிட்டு சிலரை பட்டியலில் விடுவது, கீழே இருக்கிறவர்களை நியமிப்பது என்பது நியாயமானதல்ல என்று வெகுமனக் கசப்புடன் சுட்டிக்காட்டியுள்ளது உச்சநீதிமன்றம்.

நிர்வாகத் துறையை - நீதித் துறையின் உச்சம் இதற்கு முன்னால் இப்படி பகிரங்கமாய் விமர்சித்து ‘‘கண்டித்து’’ என்ற சொல்லைத் தவிர்த்துவிட்டு - கூறிய நிலை உண்டா?

”மோடி ஆட்சியின் செங்கோல் வளைந்து விட்டது” : உச்சநீதிமன்ற கருத்தை சுட்டிக்காட்டி கி.வீரமணி விமர்சனம்!

கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

கடந்த 9 ஆண்டுகளாகத்தான் இப்படிப்பட்ட விரும்பத்தகாத நிலை தொடர்ந்து ஏற்படும் அவலம் நீடித்து வருகிறது!

சில வாரங்களுக்கு முன்பு மூன்று மாநில உயர்நீதிமன்ற மூத்த நீதிபதிகள் நியமனம், மாறுதல் எல்லாம் ‘கொலிஜியம்‘ பரிந்துரை செய்தபோது, கிடப்பில் போட்டு, பிறகு மூத்த நீதிபதி கொலிஜியம் பரிந்துரை என்னவாயிற்று என்று அட்டர்னி ஜெனரலிடம் கேட்டது - ஏடுகளில் செய்தியானது அரசுக்கோ, நீதிபரிபாலனத்திற்கோ பெருமை அளிக்கக் கூடியதா? பிறகு அந்த மூன்று நீதிபதிகள் குறிப்பிடப்பட்ட மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களுக்குத் தலைமை நீதிபதிகளாகப் பதவியேற்றனர்.

அடுத்து சில நாள்களுக்கு ‘கொலிஜியம்‘ பரிந்துரைத்திராத பின்னால் இருந்த ஒருவரை நியமனம் தந்து, அவர் பதவியேற்க கவுகாத்தி உயர்நீதிமன்றத்திற்குச் சென்ற நிலையில், பதவியேற்க அவரை அங்கே இருந்த நீதிமன்றம் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்திவிட்டது!

காரணம், அவரைவிட மூத்தவரும், அனுபவம் வாய்ந்தவருமான மற்றொரு நீதிபதியின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், நியமனம் முன்பே நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. அவர் பெயர் வழக்குரைஞர் என்.உன்னிக்கிருஷ்ணன் (கேரளாவைச் சேர்ந்தவர்). அக்டோபரில் இவர் பெயரை கொலிஜியம் பரிந்துரைத்ததும் கிடப்பில் போடப்பட்டதால் ஒரு சங்கடமான (Embarrassing Outcomes) நிலை ஏற்பட்டது.

மோடி ஆட்சியில் செங்கோல் வளைந்தது!

இதை மூத்த நீதிபதி பளிச்சென்று அனைவருக்கும் புரியும்படி கூறியுள்ளதானது, பா.ஜ.க.வின் மோடி ஆட்சியின் செங்கோல் எப்படி வளைந்த செங்கோலாகி ஆட்சி நடைபெறுகிறது என்பதைக் காட்டுகிறது!

The Court had said the Government’s pick-and choose policy both in appointment and transfers of Judges was a matter of ‘‘great concern.’’

இதன் தமிழாக்கம்:

‘‘நீதிபதிகளின் நியமனத்திலும், பணியிட மாறுதலிலும், ஒன்றிய அரசு பொறுக்கியெடுத்து - விருப்பத்திற்கேற்ப கடைப்பிடித்துவரும் நடைமுறைப்படுத்தி வரும் போக்கு பெரிதும் கவலைக்குரியதாக உள்ளது’’ என உச்சநீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் அண்மைக்கால இப்படிப்பட்ட கேள்விகள் இந்திய ஜனநாயகத்தை எந்த அளவுக்கு உலகம் மதிக்கும் நிலையை ஏற்படுத்தும்.

2024 மக்களவைத் தேர்தல்தான் பாடம் கற்பிக்கும்!

அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள நீதித் துறையின் முழு சுதந்திரம் பாதுகாக்கப்படுகிறதா? அல்லது பறிக்கப்படுகிறதா? என்ற கேள்வியை தான் நாளும் ஏற்படுத்தி வருகிறது!

இந்நிலைக்கு சரியான ஒரே பதில், மக்கள் - வரவிருக்கும் 2024 பொதுத் தேர்தல்தான். ஜனநாயகமும், இந்திய அரசமைப்புச் சட்டமும் அவற்றிற்குரிய தனிப் பெருமைகளைப் பெற முடியும் - மக்கள்தான் அதிகாரம் படைத்த மன்னர்கள், ஜனநாயகத்தில்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories