தமிழ்நாடு

“சுதந்திர போராட்ட வரலாற்றில் தவிர்க்க முடியாத தமிழர் வ.உ.சிதம்பரனார்” : சிறப்புக் கட்டுரை !

வ.உ.சி இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவர். ஆதிக்க ஆங்கிலேயர்களுக்கு எதிராக கப்பலோட்டி அந்நியர்களை அதிரச் செய்தவர்.

“சுதந்திர போராட்ட வரலாற்றில் தவிர்க்க முடியாத தமிழர் வ.உ.சிதம்பரனார்” : சிறப்புக் கட்டுரை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

வ.உ.சி என்று போற்றப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை, இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவர். ஆதிக்க ஆங்கிலேயர்களுக்கு எதிராக கப்பலோட்டி அந்நியர்களை அதிரச் செய்தவர்.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் 1872-ல் வ.உ.சி பிறந்தார். தந்தை உலகநாதன், அவரது காலத்தில் மிகவும் பிரபலமான வழக்கறிஞர். ஒட்டப்பிடாரத்திலும், அருகிலுள்ள திருநெல்வேலியிலும் பள்ளிப்படிப்பை முடித்த வ.உ.சி சட்டப் படிப்பை நிறைவு செய்து வழக்கறிஞரானார். ஏழை மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் வழக்குகளில் ஆஜரானதால், மக்கள் விரும்பும் வழக்கறிஞரானார்.

வெள்ளையர் ஆட்சியில் நடந்த கொடுமைகளை கண்டு மனம் கொதித்து, விடுதலை உணர்வு பீறிட, வ.உ.சி 1905-ல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரானார். பாரதியாரை சென்னையில் சந்தித்து உரையாடினார். கடல் வழியாக வந்து நம்மை அடிமைப்படுத்திய வெள்ளையரை விரட்ட, நம்மவர்களுக்குக் கடல் ஆதிக்கம் வேண்டும் என்று வ.உ.சி உறுதி பூண்டார்.

“சுதந்திர போராட்ட வரலாற்றில் தவிர்க்க முடியாத தமிழர் வ.உ.சிதம்பரனார்” : சிறப்புக் கட்டுரை !

”நமது சுதேசம் ஷேமத்தையடைந்து முன்னாளின் மேலான நிலைமைக்கு வருவதற்கு சகல தொழில்களிலும் வியாபரங்களிலும் மிக்க லாபத்தைக் கொடுப்பதான கப்பல் நடத்தும் தொழிலை நாம் கைக்கொள்வதே முக்கிய சாதனமாகும்” என்று கூறி கப்பல் நிறுவனம் தொடங்குவது குறித்த அறைகூவலை விடுத்தார் வ.உ.சி.

1906-ல், சுதேசி கப்பல் நிறுவனத்தை நிறுவினார் வ.உ.சி. இதற்காக நிதி தந்து உதவுமாறு ‘இந்தியா’ பத்திரிகையில் தலையங்கம் எழுதினார் மகாகவி பாரதி. வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாளான அக்டோபர் 16-ம் நாள் 1906-ம் ஆண்டு சுதேசி கப்பல் நிறுவனம் பதிவு செய்யப்பட்டது. 25 ரூபாய் விலை வைத்து 40,000 பங்குகள் வழியாக பத்து லட்சம் ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டனர். சென்னையில் அலுவலகம் எடுத்து கப்பல் நிறுவனம் இயங்கியது. பாலவநத்தம் ஜமீன்தார் வள்ளல் பாண்டித்துரை இரண்டாயிரம் பங்குகளை வாங்கினார். கே.வி.ராகவாச்சாரி, கந்தசாமி கவிராயர் என்று பலரும் தீவிரமாக பங்குகளைத் திரட்டினர். பம்பாயிலும் கல்கத்தாவிலும் பங்குகள் திரட்டப்பட்டன. பம்பாய் பெரும் வணிகர் கே.ஜெ.முகம்மது பக்கீர் சேட், கப்பல் நிறுவனத்தின் 8000 பங்குகளை வாங்கினார்.

பாண்டித்துரை தேவரை தலைவராகக் கொண்டு கப்பல் நிறுவனம் இயங்கத் தொடங்கியது. பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பை முதல் நோக்கமாகக் கொண்டு கூட்டுறவு முறையில் உருவாக்கப்பட்ட முதல் கப்பல் நிறுவனமான இது வ.உ.சி-யின் அரும்பெரும் முயற்சியில் விளைந்துதான்.

பல இடையூறுகளுக்குப் பின்னர், ‘எஸ்.எஸ். காலியா’, ‘எஸ்.எஸ். லாவோ’ எனும் இரண்டு கப்பல்கள் மூலம் தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு பயணிகள் போக்குவரத்து சேவைகளைத் தொடங்கப்பட்டன.

“எனது சுதேசிக் கப்பல் கம்பெனி, வெறும் வியாபாரக் கம்பெனி அல்ல; நம் தாய்த்திரு நாட்டை விட்டு வெள்ளையர்களை மூட்டை முடிச்சுகளுடன் வெளியேற்றுவதுதான் இந்தக்கப்பல்கள் இயக்கப்படுவதன் நோக்கம்” என்று வ.உ.சி முழங்கினார். கப்பல் நிறுவனம் மட்டுமல்ல பின்னாளில் சுதேசி நூல் ஆலைகள் உருவாக்கும் எண்ணமும் அவருக்கு இருந்தது. இவை அனைத்தும் பிரிட்டிஷாரை வெளியேற்றுவதற்கான வழிகள் என்றும் வ.உ.சி திட்டமிட்டிருந்தார்.

“சுதந்திர போராட்ட வரலாற்றில் தவிர்க்க முடியாத தமிழர் வ.உ.சிதம்பரனார்” : சிறப்புக் கட்டுரை !

சுயசார்பு பொருளாதாரம் எனும் புதிய சிந்தனையை வ.உ.சி, தமிழர்கள் மத்தியில் உருவாக்கினார். இதனால் வெள்ளையர்கள் கொந்தளித்தார்கள். “இந்திய மக்கள் எல்லோரும் நம்மைப் பார்த்து பயந்து கும்பிடும் நிலையில், நமது வியாபாரத்தையே முடக்கும் அளவுக்குப் போட்டி கப்பல் கம்பெனி தொடங்கியுள்ள சிதம்பரம்பிள்ளைதான், இந்திய சுதந்திரப் போராட்டக்காரர்களிலேயே மிகவும் ஆபத்தானவர்” என்று பிரிட்டிஷ் ராணிக்கு ஆங்கிலேய அதிகாரிகள் குறிப்பு எழுதினர்.

இதன்காரணமாக பிரிட்டிஷ் அரசால் தேசத்துரோகியாகக் குற்றம்சாட்டப்பட்டு, இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப் பட்டார். அவருக்கு விலங்குபூட்டி செக்கிழுக்கவைத்து கொடுமைப்படுத்தினர்.

விடுதலைப் போராட்டத்தில் மிதவாதிகள், தீவிரவாதிகள் என இரு பிரிவுகள் உருவாயின. அப்போது காங்கிரஸ் கட்சியின் சில கருத்துக்களில் உடன்படாத, பார்ப்பனரல்லாதோர் தனி பிரிவாக செயல்படத் தொடங்கினர். தந்தை பெரியார், வ.உ.சி உள்ளிட்ட தலைவர்கள் சென்னை மகாஜன சங்கத்தை அமைத்தனர். திரு.வி.க., சிங்காரவேலர், சக்கரைச் செட்டியார், வரதராஜுலு நாயுடு போன்ற தலைவர்களுடன் சேர்ந்து தொழிற்சங்க இயக்கத்தில் ஈடுபடுபட்டார். பல தொழிலாளர் போராட்டங்களில் பங்கேற்றார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர் முன்னேற்றத்தில் அக்கறை காட்டியபோதும், சாதிய அடிப்படையில் அரசியல் கட்சிகள் தோன்றுவதை வ.உ.சி ஏற்கவில்லை. அவரது பல்வேறு கொள்கைகள் நீதிக்கட்சியின் கொள்கைகளை ஒத்திருந்தன அல்லது நீதிக்கட்சியின் செம்மாந்த கருத்துக்களும், வ.உ.சி.,யின் கருத்துக்களும் ஒத்துப்போயின.

பட்டியலினத்தவர் மீதான சாதி கொடுமைகளை எதிர்த்தவர் வ.உ.சி. இதைபோன்று பெண்ணடிமைத் தனத்தையும் எதிர்த்தவர், ஆணுக்கு பெண் சமம் என்பதை தன் வாழ்விலும் நிரூபித்துக்காட்டினார். அந்நியத் துணி எதிர்ப்பு, அந்நியக் கப்பல் எதிர்ப்பு, தொழிலாளர் போராட்டம் என அனைத்து போராட்டங்களையும் தேச விடுதலை எனும் ஒரு இலக்கை நோக்கிய பயணமாக ஒருங்கிணைத்த வ.உ.சி., இலக்கியவாதியாகவும், எழுத்தாளராகவும், பதிப்பாளராகவும் திகழ்ந்தார்.

மட்டுமல்ல இந்திய விடுதலை போராட்டத்தில் வ.உ.சி ஒரு சுயமரியாதைக்காரராக திகழ்ந்தார். வ.உ.சி ஒரு தீவிரவாதி என்று முத்திரை குத்தியது வெள்ளையர் அரசு. அவர் கைது செய்யப்பட்ட போது, ஆவணங்களில் இப்படித்தான் இருந்தது. ஆனால், அந்த ஆவணம் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு மாற்றப்பட்டது. ஆம், வ.உ.சி தீவிரவாதியல்ல ஒரு தேசபக்தர் என்று மாற்றப்பட்டது. இதற்கு முழுமுதற் காரணம் திராவிட முன்னேற்றக் கழகம்.

“சுதந்திர போராட்ட வரலாற்றில் தவிர்க்க முடியாத தமிழர் வ.உ.சிதம்பரனார்” : சிறப்புக் கட்டுரை !

1908 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் நடந்த சுதந்திரப் போராட்டம் நெல்லைக் கலவரம் என்றும், வ.உ.சி ஒரு தீவிரவாதி என்றும் திருநெல்வேலி நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், நூறாண்டுகள் கழித்து, அதாவது 19.06.2008 அன்று திருநெல்வேலி மாநகராட்சியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேயராக வீற்றிருந்த ஏ.எல். சுப்ரமணியன், நெல்லையில் நடந்தது கலவரம் அல்ல எழுச்சி என்றும், வ.உ.சி. தீவிரவாதியல்ல அவர் ஒரு தேச பக்தர் என்றும் அறிவித்து புதிய தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றினார். இதன்மூலம் வ.உ.சி தீவிரவாதி என்ற கறையைப் போக்கி வ.உ.சி ஒரு தேச பக்தர் என்ற புதிய தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றியது திராவிட முன்னேற்றக் கழகம்.

வ.உ.சி., க்கும் திராவிட இயக்கத்திற்கும் நீண்ட நெடிய வரலாற்றுத் தொடர்பு இருக்கிறது. வகுப்புவாரி பிரதிநிதித்துவம் எனப்படும் சமூகநீதியை 1920 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாநாட்டில் தீர்மானமாகக் கொண்டு வந்தது வ.உ.சி.,யும், தந்தை பெரியாரும்தான்.

வ.உ.சி.,க்கு சென்னையில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தின் முன்பாக நிலை அமைக்க சிலம்புச் செல்வர் ம.பொ.சி., முயற்சி செய்தபோது, முட்டுக்கட்டை விழுந்தது.

ஆனால், 1968 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவின் ஆட்சியில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டபோது, சென்னையில் வ.உ.சியின் நிலை அமைக்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டு வ.உ.சி.,யின் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாக கொண்டாடி, தூத்துக்குடியில் அவரது சிலையை அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி அம்மையாரை வைத்து திறந்து வைத்தவர், தமிழ்நாட்டின் அப்போதைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர்.

தற்போது, செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சி.,யின் 150 ஆவது பிறந்தநாளினை அரசு விழாவாக கொண்டாட, முதலமைச்சராக பதவியேற்று கோட்டையில் சுதந்திர தினத்தன்று மூவர்ண கொடியை ஏற்றிவிட்டு அறிவிப்பு வெளியிட்டார் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் 3ந் தேதி தமிழ்நாடு சட்டசபையில் வரலாற்றில் எந்நாளும் அழியாத அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு தமிழ்கூறும் நல்லுலகத்தின் அத்தனை பாராட்டுகளையும் பெற்றுவிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஒன்றல்ல... இரண்டல்ல 14 அறிவிப்புகள். அத்தனையும் வ.உ.சி என்ற சுயமரியாதைக்காரருக்காக. கப்பலோட்டிய தமிழனின் அருமை,பெருமைகளை ஒவ்வொரு தமிழர்களின் நெஞ்சிலும் நிலைநிறுத்தும் அறிவிப்புகள் அவை.

“சுதந்திர போராட்ட வரலாற்றில் தவிர்க்க முடியாத தமிழர் வ.உ.சிதம்பரனார்” : சிறப்புக் கட்டுரை !

வ.உ.சி நினைவுநாள் தியாகத் திருநாளாக கொண்டாடப்படும்,

வ.உ.சி நூல்கள் மலிவுவிலையில் தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் வெளியிடப்படும்.

வ.உ.சி நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படும்,

ஒட்டப்பிடாரத்தில் வ.உசி., இல்லம் புனரமைக்கப்படும்,

வ.உ.சி பெயரில் 5 லட்சரூபாய் பரிசுத் தொகை கொண்ட விருது,

சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் வ.உ.சிக்கு மார்பளவு சிலை,

கோவை வ.உ.சி பூங்காவில் முழு திருவுருவச் சிலை,

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வ.உ.சி பெயரில் புதிய ஆய்வகம் மற்றும் இருக்கை அமைக்கப்படும் என்ற அறிவிப்புகள் வெளியிட்டு சாதனை படைத்துள்ளார் தமிழ்நாட்டின் முதலமைச்சர்.

தேச விடுதலைக்காக போராடி சிறைசென்று, சித்திரவதைக் கொடுமைகளை அனுபவித்த வ.உ.சிதம்பரனார் எனும் கப்பலோட்டிய சுயமரியாதைத் தமிழரின் வீரத்தையும், தியாகத்தையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் அற்புத பணியை செய்திருக்கும் பெரியாரின் பேரனாம், தமிழ்நாட்டின் முதலமைச்சரை தமிழுலகம் என்றென்றும் இதயத்தில் தாங்கும்.

ஓங்குக வ.உ.சி புகழ். வாழ்க தமிழ்நாட்டின் தன்னிகரில்லா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

- பி.என்.எஸ்.பாண்டியன்

Related Stories

Related Stories