தஞ்சாவூரிலிருந்து மதுரை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தைத் திருவையாறு பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் வீரமணி என்பவர் ஒட்டிச் சென்றுள்ளார். இப்பேருந்தில் 70 பயணிகள் இருந்துள்ளனர்.
இதையடுத்து கந்தர்வக்கோட்டை அருகே பேருந்து வந்தபோது வீரமணிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே அவர் பேருந்தை ஒரு மருந்துக்கடை அருகே நிறுத்தி மாத்திரை வாங்கி சாப்பிட்டுள்ளார். பிறகு மீண்டும் பேருந்தை இயக்கி சென்றுள்ளார்.
பின்னர் சிறிது தூரம் சென்ற பிறகு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இது குறித்து நடத்துநரிடம் தெரிவித்துள்ளார். பயணிகளுக்கு எதுவும் ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடாது என நினைத்து பேருந்தை அப்படியே ஓரமாக நிறுத்தி, அந்த வழியாக வந்த மாற்றொரு பேருந்தில் ஏற்றி அவர்களை அனுப்பிவைத்துள்ளார்.
பிறகு நடத்துநரின் உதவியோடு அங்கிருந்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். இதையடுத்து அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். தஞ்சாவூரிலிருந்து புதுக்கோட்டை வருவதற்குள் இரு முறை நெஞ்சுவலி ஏற்பட்டும் அதனுடன் முறையாகப் பேருந்தை ஓட்டி விபத்தில்லாமல் பயணிகளின் உயிரைப் பாதுகாத்த ஓட்டுநர் வீரமணிக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.