தமிழ்நாடு

”RSSன் பிரச்சார பீரங்கியாக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார்” : ஆர்.எஸ்.பாரதி கொடுத்த விரிவான பேட்டி!

RSS-ன் பிரச்சார பீரங்கியக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் என ஆர்.எஸ்.பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார்.

”RSSன் பிரச்சார பீரங்கியாக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார்” : ஆர்.எஸ்.பாரதி கொடுத்த விரிவான பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி முறையாக செயல்படாமல், திராவிடம் பற்றியும் ஆரியம் பற்றியும் இட்டுக்கட்டி பேசி வருவதோடு, ஆர்.எஸ்.எஸ்.ஸின் பிரச்சார பீரங்கியாகவும் செயல்படுகிறார் என்று கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி ஒன்றில் தெரிவித் துள்ளார்.

‘நியூஸ் 7’ தொலைக்காட்சி- ‘வியூகம்’ நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டி வருமாறு:-

நெறியாளர் : தமிழ்நாட்டில் சமீபகாலமாக பேசும் பொருளாக ஆகியிருப்பது, பிறருடைய கவனத்தை ஈர்த்து இருக்கக் கூடியது ஆளுநர் மாளிகை பாதுகாப்பு . அரசு அதில் என்ன செய்திருக்கிறது.?

கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி: ஒரு அரசு என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்திருக்கிறது. அதில் தனி கவனம் செலுத்தி, ஏற்கனவே ஆளுநருக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பை தற்போது அதிகமான பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வழியாக போகின்றவர்களுக்கு தெரியும். ராஜ்பவன் கேட்என்பது பப்ளிக் அதிகமாக வரும் ஒரு இடம். ஒருநாளைக்கு பல்லாயிரக்கணக்கானோர் வாகனத்தில் சென்று வந்து கொண்டிருக்கிறார்கள்.

அங்கே எவ்வளவோ பேர் நிற்கிறார்கள் என்பதை நாம் எல்லோரும் பார்த்து இருப்போம். ஆளுநர் உள்ளே இருக்கிறார். வெளியே பாதுகாப்பு இருக்கிறது. எல்லா விதமான பாதுகாப்பும் இது வரையில் ஆளுநர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை விட இவருக்கு தனியாகத்தான் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

நெறியாளர்: தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் தொடர்ந்து என் மீது கடுமையான விமர்சனத்தை வைக்கிறார்கள். அவதூறுசெய்கிறார்கள். தொடர்ந்து என்னை ஒருமையில் பேசுகிறார்கள். இப்படியான வார்த்தைகளை பயன்படுத்தி ஆளுநருடைய அறிக்கையில் தி.மு.க.வும், தி.மு.க. கூட்டணி கட்சியி னரும் பற்றி ஆளுநர் கூறியதை எப்படி பார்க்கிறீர்கள்?

ஆர்.எஸ்.பாரதி : எங்களுக்கு ஆளுநர் ஒரு பொருட்டே கிடையாது. முதலில் ஆளுநர் தமிழ்நாட்டின் வாக்காளரே கிடையாது. அவரைப்பற்றி எங்களுக்கு கவலையே கிடையாது. அவர் ஒன்றிய அரசால் அனுப்பி வைக்கப்பட்ட ஒரு ஆளுநர் அவ்வளவுதான் என்று நாங்கள் நினைக்கிறோம்.

அவர் தன்னை ஒரு அரசியல்வாதியாக நினைத்துக் கொண்டு, அரசியல்வாதி போல் பேசுகிறார். எங்கள் தலைவர் தெளிவாக சொல்லிவிட்டார். அவர் ‘இக்னோர்’ செய்ய வேண்டியதுதான். காரணம். ‘அவர், தொடர்ந்து இருந்தால் தான் எங்களுக்கு நல்லது’ என எங்கள் தலைவர் சொல்லி விட்டார்.

நெறியாளர்: ஆளுநராக அரசியலமைப்புச் சட்டத்திற்குட்பட்டு இருப்பதால் தான் நீங்கள் மசோதாவை அவருக்கு அனுப்புகிறீர்கள். அவர் நிலுவையில் வைத்து இருக்கிறாரோ இல்லையோ, ஆனால் அவர் ஒரு தலைமையில் இருக்கின்றவர் . தொடர்ந்து நியமன உறுப்பினர் ஆளுநர் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என்று பேசுவது, ஏதோ ஒரு வகையில் அவரைத் துன்பப்படுத்தத்தானே செய்யும்.?

ஆர்.எஸ்.பாரதி: அவர் எங்களை துன்பப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார். சட்ட மன்றத்தில் அவர் நடந்து கொண்ட முறை, ஆனால் ஒன்று அவருடைய அஜெண்டா எல்லாம் இங்கே எடுபடாது. மிகப்பெரிய தலைவர்களாலேயே தமிழ் நாட்டில் எங்களுடைய சித்தாந்தத்திற்கு எதிர்ப்பான கருத்தை சொல்லி அவர்களால் வெற்றி பெற முடியாது.

இந்த ஆளுநர், இவரும் டெம்பரவரியாக கேசியல் லேபர் மாதிரி ஒரு பீரியட் இருந்துவிட்டுப் போவார். அது கூட வருகின்ற மே மாதம் வரைக்கும்தான். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அவர் சென்று விடுவார்.

நெறியாளர்:அமைதிப்பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. ஆளுநர் மாளிகை முன்பு இப்படியான ஒரு சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டு இருக்கிறாரே?

ஆர்.எஸ்.பாரதி: தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை அகிலஇந்திய அளவில் கணக்கெடுத்து சொல்லி இருக்கிறார்­ள். இதனை அகில இந்திய அளவில் இருக்கின்ற குற்றப் புலனாய்வு அமைப்பு சொல்லி இருக்கிறது. அதாவது வாழ்வதற்கு தகுதியான மாநிலம் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் என்று சொல்லி இருக்கிறார்கள்.

இதனைக் கண்டு எடப்பாடி பெருமைப் பட வேண்டும். அதனை குறைசொல்கிறார் என்றால் அவர் குறை சொல்லி தானே ஆக வேண்டும். ஏதாவது ஒன்றினை அவர் பேசிதானே ஆக வேண்டும்.

”RSSன் பிரச்சார பீரங்கியாக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார்” : ஆர்.எஸ்.பாரதி கொடுத்த விரிவான பேட்டி!

நெறியாளர்: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் பாட்டில் வீச்சில் ஒரு நபரோடு அந்தக் கேஸை முடிக்கப்பார்க்கிறார்கள். இதனை தூண்டி விட்டவர்கள் யார்? என்று முறையான விசாரணை நடத்தவில்லை என்று ஆளுநர் அறிக்கையில் இருக்கிறது. இது அவரது மற்றொரு குற்றச்சாட்டு?

ஆர்.எஸ்.பாரதி: ஒரு குற்றம் நடக்கிறது என்றால் அந்த சம்பவம் நடக்கும் போதே குற்றவாளியை பிடித்து விடுகிறார்கள். தேடி பிடித்தோ, ஓடிப்போயோ பிடிக்கவில்லை. காவல்துறை எந்த அளவிற்கு கவனத்தோடு இருந்தார்கள் என்பதற்கான எடுத்துக்காட்டு , வெடிகுண்டு போடுவதற்கு முன்பே பிடித்து விடுகிறார்கள். இதனை இந்த தமிழ்நாட்டின் ‘ஆளுநராக’ இருக்கின்றவர் பாராட்டி இருக்க வேண்டும். அவரை பிடித்தவர் ஒரு சாதாரண கான்ஸ்டபிள்தான். சென்ட்ரி நின்றவர், இப்படி கடமை உணர்ச்சியோடு கடமை ஆற்றியவர் இருக்கிற தமிழ்நாட்டில் தான் கவர்னராக இருப்பதில் பெருமைப்படுகிறேன் என்று சொல்லி இருக்க வேண்டும்.

அதனைவிட்டுவிட்டு இந்த நிகழ்வை கவர்னரை பார்த்தது இல்லை. அவர் உள்ளே இருக்கிறார். இந்நிகழ்வை அப்படியே டி.ஜி.பி. போட்டு பொதுமக்களுக்கு எல்லாம் இதனை காண்பித்து விட்டார். இந்தச் சம்பவம் நடந்த உடனே அவரை கைது செய்து எப்.ஐ.ஆர்.போடவேண்டும். இதுதான் நடைமுறை. எப்.ஐ.ஆர்.போட்டு பின் செக்சன் போடுவார்கள்.

அதன் பிறகு விசாரணை தொடங்கும். விசாரணை தொடங்கி அவை முடிவடைந்த போது சார்ஜ் ஷீட் போடும் போது செக்சன் கூட அப்போது தான் முடிவு செய்வார்கள். சார்ஜ் ஷீட் போடுவதற்கு டிரையல் நடத்திய பிறகு தான் முடிவு செய்வார்கள்.

இவரை ஒரே நாளில் போலீசார் பிடித்தவுடனே கைது செய்துவிடுறார்கள். 24 மணி நேரத்திற்குள் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்த வேண்டும் என்பது விதி. அதனால் 24 மணிநேரத்திற்குள் ஆஜர் செய்திருக்கிறார்கள். இதில் என்ன நடைமுறை கடைபிடிக்கவில்லை. இதில் என்ன தவறு?

இதற்குப் பின்னால் மிகப் பெரிய ஒரு சதி பி.ஜே.பி.யால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இவ்வளவு நாள் சிறையில் இருந்தவனை யாருமே ஜாமீன் எடுக்க வில்லை. திடீர் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் ஜாமீன் எடுக்கப்படுகிறார். எடுத்தவர் ஒரு முன்னாள் பி.ஜே.பி. அதாவது பி.ஜே.பி. அட்வகேட்.

இவ்வளவு நாள் யாருமே கேட்பாரற்று கிடந்த இந்தக் குற்றவாளியை திடீரென்று ஜாமீனில் எடுத்த இரண்டாவது நாள் இப்படி ஒரு சம்பவம் என்றால், ஒரு அசைன்மெண்டோடு தான் அவரை ஜாமீனில் எடுத்து இருக்கிறார்கள் என்பது என்னுடைய சந்தேகம். இந்தச் சந்தேகத்தை தீர்க்க வேண்டியது விசாரணை செய்பவர்களின் பொறுப்பு . இவை எல்லாம் வெளியேவரும்.

நெறியாளர்: பா.ஜ.க. தரப்பில் தி.மு.க. வழக்கறிஞரும் ஜாமீனில் எடுக்கும் போது இருந்தார்கள் என்றுதானே சொல்கிறார்கள்.

ஆர்.எஸ்.பாரதி: கோர்ட்டில் நிற்பவர்கள் எல்லாம் ஆஜர் ஆனார்கள் என்று சொல்லமுடியுமா? யார் மெமோ போடுகிறார்களோ அவர்களைத்தானே சொல்ல முடியும். நான் என்ன சொல்கிறேன், இப்படி ஒரு சந்தேகம் எனக்கு ஏற்பட்டு இருக்கிறது. இந்தச் சந்தேகத்தைப் போக்க வேண்டியது காவல் துறையின் பொறுப்பு. இந்த சந்தேகத்தை போலீசார்தான் போக்க வேண்டும். காரணம் , திட்டமிட்டு ஏதோ ஒரு சதி நடக்கிறது.

தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு இல்லை. இது கவர்னருடைய பேச்சு. இதற்கு முன்பு இருந்த கவர்னர்கள் இப்படி பேசியது கிடையாது. அவர் ஒவ்வொரு இடமும் சென்று அரசியல்தான் பேசுகிறார். தமிழ்நாட்டைப் பற்றி பேசுகிறாரா? தமிழ்நாட்டின் வளர்ச்சி இவ்வளவுஅடைந்து இருக்கே, இதனைப் பற்றி பேசுகிறாரா?

இந்தியாவிலேயே இருக்கின்ற மாநிலத்தில் ஒன்றிய சர்க்காரே ஏற்றுக் கொண்டு தமிழ் நாடு பல துறைகளில் முதலில் இருக்கின்றது என்று சொல்லி இருக்கிறது. அவர் இந்த ஸ்டேட்டின் ஹெட்டாக இருந்துகிட்டு, எங்கள் வரிப்பணத்தை வாங்கிக் கொண்டு, தமிழ் நாட்டு மக்களின் வரிப்பணத்தை வாங்கிக் கொண்டு, ஆளுநராக உட்கார்ந்து கொண்டு, எங்களுக்கு எதிர்ப்பாக பேசுகிறார் என்றால் இதனை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.? ஜனநாயகத்தில் இதனை எப்படி ஜீரணிக்க முடியும்.?

நாகாலாந்தில் இவரை ஏன் விரட்டி அடித்தார்கள்.? இவரை மாற்றிய அன்றைக்கு அங்கே என்ன நடந்தது? பண்டிகை மாதிரி விழா எடுத்தார்கள், அம் மாநில மக்கள். இந்த கவர்னர் மாறுதல் வந்தவுடன் விழா நடத்தினார்கள் என்று எல்லா பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டன.

நாகாலாந்தில் இருந்து இவர் மாற்றப்பட்டவுடன், நாகாலாந்து மக்களும் அரசியல் வாதிகளும் அங்கே விழாவாக நடத்தினார்கள். அப்படிப்பட்டவர் இங்கே வந்திருக்கிறார். இவரைப் போன்று பத்து பேர் வந்தாலும் அவர்களை சந்திக்கின்ற ஆற்றலும் திறமையும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு. இந்தக் கட்சி தோன்றியதில் இருந்து எதிர்ப்பிலே வளர்ந்த இயக்கம். எந்தப் பத்திரிகையும் ஆதரவு கிடையாது. மைக்கையும் நாக்கையும் வைத்து வளர்ந்த ஒரே கட்சி தி.மு.க.

நெறியாளர்: ஆளுநர் சனாதனம் பற்றி பல இடங்களில் பேசுகிறார். நீங்களும் அதற்கு சித்தாந்த ரீதியில் பதில் சொல்கிறீர்கள், அவர் திராவிடம் குப்பை என்று பேசுகிறார். நீங்கள் அதற்கு பதிலடி கொடுக்கிறீர்கள். இந்த சித்தாந்த முரண் இந்த அளவிற்கு முற்றுவதற்கு, எங்கேயாவது இதனை யாராவது ஒருவர் சுமூகத் தீர்வினை நோக்கி நகர்ந்து இருக்கலாம் இல்லையா? தமிழ்நாடு அரசோ, அல்லது ஆளுநர் தரப்போ அதற்கான முயற்சிகள் ஏதாவது நடந்துள்ளதா?

ஆர்.எஸ்.பாரதி: இதற்கு முழு முதற் காரணம் ஆளுநர்தான். ஆளுநர்தான் இதனை ஆரம்பித்து வைத்தார். அவர்தான் ஒவ்வொரு காலேஜ்க்கு போய் பேசினார். முதலில் ஆன்மிகத்தைப் பற்றிப் பேசினார். அதற்கு அடுத்து திராவிடம் – ஆரியம் பற்றி பேசினார். ஆரியம் – திராவிடம் என்று பேச ஆரம்பித்தார் என்றால் எங்களுடைய 100 ஆண்டு கால வரலாறு சொல்ல ஆரம்பித்தால், ஒரு வகையில் ஆளுநர் எங்களுக்கு மறைமுகமாக உதவி செய்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த சமுதாயத்திற்கு திராவிடம் செய்தவைகள் எல்லாவற்றையும் மறந்து விட்டது. அவர்களுக்கு ஞாபகப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறார். திராவிடம் என்றால் என்ன, ஆரியம் என்றால் என்ன என்று இட்டுக்கட்டி பேசுகிறார். இது ஆளுநருடைய வேலையா .அவர் என்ன ஆர்.எஸ்.எஸின் பிரச்சார பீரங்கியா? அல்லது சங்கரமடத்தில் போய் காவி சட்டை போட்டுக் கொண்டு பேச வேண்டியதுதானே. எதற்காக போலீஸ் எஸ்காட்டோடு போய், கவர்ன்மெண்டோட வரிப்பணத்தில் உட்கார்ந்து கொண்டு இந்தப் பிரச்சாரத்தை பேசுகிறார்.

நெறியாளர்: நான் கொடுத்த புகார் அடிப்படையில் நான் சொல்கின்ற வழக்கின் அடிப்படையில் எல்லாம் கைது செய்யவில்லை. அவசர அவசரமாக ஏதோ ஒரு வழக்கில் கைதுசெய்துவிட்டார்கள் என்று சொல்கிறாரே ஆளுநர்.

ஆர்.எஸ்.பாரதி: இவர் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லையே. போலீஸ்காரர் முன்பு எதிரில் நடந்தது. உள்ளபடியே அந்த கான்ஸ்டபிள்தான் புகார் கொடுக்க வேண்டும். இந்தச் சம்பவம் உள்ளே போய் நடந்து அவர் அடிப்பட்டு இருந்தால் புகார் கொடுப்பதில் நியாயம் இருந்திருக்கும். உள்ளேயே போகவில்லை. ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் எதிரில் தான் நடந்து இருக்கிறது. அதனால்தான் சொல்கிறேன். விசாரணையில் இவையெல்லாம் தெரிய வரும்.

நெறியாளர்: தருமபுரம் ஆதீனம் விவகாரத்திலும் நான் புகார் கொடுத்தேன். அதன் மீதும் நடவடிக்கை எடுக்க வில்லை. டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நேற்றைக்கு ஒரு விளக்கம் அளிக்கிறார். இருந்தாலும் மீண்டும் ஆளுநர் தன் அறிக்கையில் புகாராக சொல்லி இருக்கிறாரே.?

ஆர்.எஸ்.பாரதி: நான் முதலிலே சொன்ன மாதிரி தூங்குகிறவனை எழுப்பி விடலாம். ஆளுநர் தூங்குகிற மாதிரி நடிக்கிறார். இந்த அரசாங்கத்தின் மீது எந்தக் குற்றச்சாட்டும் சொல்ல முடியவில்லை. அது மட்டுமல்ல, இந்த மகளிர் உரிமைத் தொகை கொடுத்தப் பிறகு தமிழ் நாடு முழுவதும் எங்கள் தலைவருக்கு, தமிழ்நாட்டு அரசுக்கு கிடைத்து இருக்கின்ற செல்வாக்கைப் பார்த்து அவர்களுக்கு ஐ.பி. மூலமாக தகவல் போய் இருக்குமே.

நெறியாளர்: ஒரு பக்கம் பிரதமர் மற்ற மாநிலங்களில் நடக்கின்ற விழாக்களில் கூட தி.மு.க. பற்றியும், தி.மு.க. ஊழல் கட்சி என்றும் தொடர்ந்து பேசி வருகிறார். வாரிசு அரசியல் குறித்து பேசுகிறாரே?

ஆர்.எஸ்.பாரதி: அதற்கு காரணம் என்னவென்றால், ‘இந்தியா’ கூட்டணியை ஆரம்பிக்க காரணமாக இருந்தவரே எங்கள் தலைவர்தான். அவருடைய பிறந்த நாள் விழாவின் மேடையால் யார் பிரதமராக வர வேண்டும் என்பதல்ல, யார் பிரதமராக வரக் கூடாது என்பதுதான் என்று அவர் கூறிய அந்த ஒற்றைச் சுலோகம் தான் இந்தியா முழுவதும் ஒர்க்அவுட்டாகி இன்றைக்கு எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. அதனால்தான் இன்றைக்கு எல்லா கட்சிகளும் ஒன்றாக வந்து சேர்ந்திருக்கிறது. இது மிகப்பெரிய வயிற்றெரிச்சலாக மோடிக்கு ஏற்பட்டு இருக்கின்ற காரணத்தால் சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தான் என்பதை மாதிரி சும்மா இருந்த எல்லா கட்சிகளையும் ஒரே அணியில் சேர்த்தது, மு.க.ஸ்டாலின் அவர்கள்தான். எனவே பர்ஷனலாக அட்டாக் செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள். வாரிசு அரசியல் என்பதற்கு பல முறை நாங்கள் பதில் சொல்லிவிட்டோம்.

பி.ஜே.பி.யில் இருக்கின்ற 50, 60 பிள்ளைகள் மந்திரியின் வீட்டுப் பிள்ளைகள் தானே இருக்கிறார்கள். மோடிக்கு மட்டும் வாரிசு இல்லை என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும். பக்கத்தில் இருக்கின்ற அமித்ஷாவினுடைய பிள்ளை இப்போது என்னவாக இருக்கிறார்.அவருடைய வாரிசுதானே. கிரிக்கெட்டுக்கும் அவருடைய வாரிசுக்கும் என்ன சம்பந்தம். ராஜ்நாத் பிள்ளை எங்கே இருக்கிறார். இவையெல்லாம் கேள்வி கேட்க கேட்க இப்படி பதில் சொல்ல வேண்டி வரும்.

அதுமட்டுமல்ல இந்தியா முழுவதுமே தமிழ்நாட்டில் இருந்து இவர் தான் செய்கின்றார் என்ற நிலை தற்போது ஏற்பட்டு இருக்கிறது. அதனால் பிரதமர் அவர் மீது கோபப்படுகிறார். அதுவும் ஒரு வகையில் நல்லதுதான்.

நெறியாளர்: ‘இந்தியா’ என்று கூட்டணிக்குநீங்கள் பெயர் வைத்தது. இப்போது இந்தியா என்கின்ற பெயர் இருக்கின்ற இடத்தில் எல்லாம் பாரத் என்று மாற்றுவதற்கான முயற்சிகள் நடந்து கொண்டு இருக்கின்றதே?

ஆர்.எஸ்.பாரதி: இதுவே எங்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்று நான் நினைக்கிறேன். எங்கள் பெயரைக் கேட்டே பயப்படுகிறார்கள் என்றால் அடுத்து நாங்கள் தான் வரப்போகிறோம். வந்த உடனே பாரத் என்ற பெயர்கள் எங்கே எல்லாம் இருக்கிறதோ அங்கே எல்லாம் இந்தியா என்ற பெயரை மாற்றுவோம்.

நெறியாளர்: நீட் தேர்வுக்கு ஒரு கையெழுத்து இயக்கம் நடத்துறீர்கள். தொடர்ந்து நீங்கள் வைத்த முக்கியமான வாக்க­றுதி. ஆனால் உங்களால் போராட மட்டும் தான் முடிகின்றது. வாங்கித் தர முடியவில்லை என்று அ.தி.மு.க.மேடைக்கு மேடை சொல்கிறார்களே?

ஆர்.எஸ்.பாரதி: முறையாகத்தான் போக முடியும். இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். அது குடியரசுத் தலைவருக்கு போய் இருக்கிறது. அதற்குரிய எல்லா நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டு இருக்கிறோம். குடியரசுத் தலைவரை நேற்று கூட வழி அனுப்புகிற போது முதலமைச்சர் மனு கொடுத்து இருக்கிறார். இந்த கையெழுத்து இயக்கத்தில் நாங்கள் கையெழுத்து வாங்கி வைத்து இருப்பதற்கு காரணம் என்னவென்றால் நிச்சயமாக ஆட்சி மாற்றம் வரப்போகிறது. வந்த உடனே முதலிலே ‘நீட்’ விலக்கில் தான் கையெழுத்துப் போடுவார்கள். அடுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும். இன்றைக்கு தமிழ் நாட்டில் மட்டுமல்ல, நாங்கள் இங்கே குரல் எழுப்பிய பிறகு தான் ராஜஸ்தானில் குரல் எழுப்புகிறார்கள். கர்நாடகாவில் குரல் எழுப்புகிறார்கள். நீட்டுக்கு ப.சிதம்பரமே தெளிவாக ட்விட்டரில் போட்டு சொல்லி இருக்கிறார். தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கு அளிப்பதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறது. கொடுக்கலாம் என்று சொல்கிறார். காங்கிரஸ் தான் நீட் கொண்டு வந்ததாகச் சொல்கிறார்கள். அந்த காங்கிரஸ் மூத்த தலைவரே ப..சிதம்பரமே இன்றைக்கு தமிழ்நாட்டுக்குக் கொடுக்கலாம் என்று சொல்லி இருக்கிறார். ஆகையினால் ஒரு வருடம், இரண்டு வருடம் ஆகி விட்டது. நிச்சயமாக இந்த பாராளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் மத்தியில்அமைகின்ற ஆட்சி, முதல் கையெழுத்து தலைவர் கொடுத்து இருக்கிற இந்த மனு மீது தான் போடுவார்கள்.

நெறியாளர்: மம்தா வேறு கேல்விகேஷன் போடுவாங்க, அரவிந்த் கெஜ்ரிவால் வேறு கேல்விகேஷன் போடுவார், சமாஜ்வாதி, அகிலேஷ் யாதவ் வேறு கேல்விகேஷன் போடுவாங்க. இவர்களை எல்லாம் எப்படி சமாளிப்பார்கள் என்று ஒரு கேள்வி கேட்கிறார்களே?.

ஆர்.எஸ்.பாரதி: சமாளித்து காட்டுகின்ற திறமை எங்கள் கூட்டணிக்கு உண்டு. அதாவது பொது எதிரி என்று ஒருவரை முறியடிக்கும் போது, ஏன் பா.ஜ.க.வில் கருத்து வேறு பாடு இல்லையா , பி.ஜே.பி. சீட் கொடுத்ததில் இன்றைக்கு டி.வி.யில் பார்த்தோம் அடித்துக் கொள்கிறார்கள். செருப்பாலேயே அடித்துக் கொள்கிறார்கள். ஒரு கட்சிக்குள்ளே அடித்துக் கொள்ளும் போது இது பல கட்சிகள் இருக்கிற போது அமர்ந்து தான் டிஸ்கஷ் செய்ய வேண்டும். அண்ணா அடிக்கடி சொல்வதைப்போல டிசிசன் பை டிஸ்கஷன் . டிஸ்கஷன் செய்து முடிவெடுப்போம்.

நெறியாளர்: தமிழ்நாட்டில் தி.மு.க.வுக்கு எதிர்க்கட்சி அ.தி.மு.க..வா., பா.ஜ.க.வா. ?

ஆர்.எஸ்.பாரதி: அவர்களே முடிவு செய்து கொள்ளட்டும். அந்தப் போட்டியில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. அவர்களுக்குள் போட்டி நடைபெறுகிறது. அந்தப் போட்டியில் தி.மு.க. தலையிட விரும்பவில்லை.

இவ்வாறு கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டியளித்தார்.

Related Stories

Related Stories