தமிழ்நாடு

”கள்ளக்கூட்டணியில் இருக்கும் அதிமுகவும் பாஜகவும் ஆயுள் மிகவும் குறைவு”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

பா.ஜ.க.வின் கடந்த காலத் தவறுகளை சமூக வலைத்தளங்களில் திரும்பத் திரும்ப நினைவூட்டி பிரச்சாரம் செய்தாலே, நாற்பதும் நமதாகும்! நாடும் நமதாகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தள்ளார்.

”கள்ளக்கூட்டணியில் இருக்கும் அதிமுகவும் பாஜகவும் ஆயுள் மிகவும் குறைவு”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், கழகத் தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைத்தளத்தில் திராவிட மாதமான செப்டம்பர் மாதத்தின் இறுதி நாளான இன்று (30-09-2023) ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்பேசஸ்-இல் சிறப்புரை வழங்கினார்.

அதன் விவரம் வருமாறு:

எல்லோருக்கும் வணக்கம்! நலமாக இருக்கிறீர்களா…

'திராவிட மாதம்' என்று சொல்லப்படும் செப்டம்பர் மாதத்தில், தினமும் ஒரு தலைப்பில், இயக்க முன்னோடிகள் கலந்துகொண்டு திராவிட இயக்கக் கருத்துகளைப் பேசி இருக்கிறார்கள். நிறைவு நாளான இன்றைக்கு, என்னைப் பேச அழைத்திருக்கிறீர்கள்… மிகவும் மகிழ்ச்சி!!!

இந்த 'ஸ்பேசஸ்' கருத்தரங்கை ஆர்கனைஸ் செய்திருக்கும் ஐ.டி. விங் செயலாளர் - தம்பி டி.ஆர்.பி.ராஜா & அணியினருக்கு, நன்றி!

எல்லாவற்றுக்கும் மேல், இயக்கம்தான் பெரிது - கொண்ட கொள்கைகள்தான் பெரிது என்று, அன்றாட வாழ்க்கையிலும், சமூக வலைத்தளங்களிலும் கழகத்திற்காகப் போராடுகிற - களமாடுகிற, தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளான உங்களுக்கு வணக்கம்!

தந்தை பெரியார் பிறந்தநாள் - பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் -கழகம் தோன்றிய நாள் என்று, இந்த மூன்று நாட்களையும் இணைத்து, முப்பெரும் விழா என்று 1985 முதல் கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். தலைமைக் கழகத்தின் சார்பில் மட்டுமல்ல, ஒவ்வொரு அணியும், மாவட்டக் கழகங்களும் கூட தனித்தனியாக, இந்த செப்டம்பர் மாதம் முழுவதும் முப்பெரும் விழாவைக் கொண்டாடுகிறார்கள். அந்த வரிசையில்தான் ஐ.டி. விங், இந்த ஸ்பேசஸ்-ற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

”கள்ளக்கூட்டணியில் இருக்கும் அதிமுகவும் பாஜகவும் ஆயுள் மிகவும் குறைவு”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

2000 ஆயிரம் ஆண்டுகள் ஒடுக்கப்பட்ட நாம் மீண்டெழுந்த வரலாறு - தந்தை பெரியார் காட்டிய பகுத்தறிவு - சமத்துவப் பாதை, பேரறிஞர் அண்ணா வகுத்துக் கொடுத்துள்ள கருத்தியல் தளம், தமிழினத் தலைவர் வடித்து கொடுத்த ஐம்பெரும் முழக்கங்கள் - 2018-ஆம் ஆண்டு நான் செயல் தலைவரான பிறகு முன்வைத்த ஐம்பெரும் முழக்கங்கள் என்று, 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற எதிர்காலத் தமிழ்நாட்டை உருவாக்குவதற்கான திட்டங்கள் என்று நாம் பேச - எழுத கொள்கைகளும் கருத்துகளும் ஏராளமாக இருக்கிறது.

ஒரு காலத்தில், நம்முடைய கொள்கைகளைப் பரப்ப, பேச்சு மேடை - நாடக மேடை - திரையுலகம் – எழுத்துலகம் என்று மக்களை ‘ரீச்’ செய்வதற்கான அனைத்து மீடியத்தையும் பயன்படுத்திக்கொண்டோம்.

பாட்டு, கவிதை, கதை, நாவல், திரைப்படம், நாடகம், நாளிதழ், வார இதழ், மாத இதழ் என்று எவ்வாறெல்லாம் மக்களிடம் பேச முடியுமோ, அவ்வாறெல்லாம் பேசினோம். 'முரசொலி பொங்கல் மலர்' எல்லாம் பாத்தீர்கள் என்றால், பொக்கிஷம் மாதிரி இருக்கும். அவ்வளவு கருத்துகள் நிறைந்திருக்கும்.

தி.மு.க.காரன் எந்தளவிற்குக் கொள்கை வெறியுள்ளவன் என்பதற்கு ஒரு சிறிய எக்ஸாம்பிள் சொல்கிறேன்…

ஒரு முறை, பேரறிஞர் அண்ணா அவர்கள், ஒரு தொண்டருக்கு ஒரு பொறுப்பைக் கொடுத்தார், ஆனால் அந்த தொண்டர், தனக்கு அந்த பொறுப்பு வேண்டாம் என்று சொல்லிவிட்டார். 'என்ன காரணம்?' என்று அண்ணா கேட்டார். "எனக்கு வசதி இல்லை... ஏழை" என்று அந்தத் தொண்டர் சொன்னார். அவருடைய தயக்கத்தைப் புரிந்துகொண்ட அண்ணா என்ன சொன்னார் தெரியுமா?

"உன் ஊரில் கரிக்கட்டை இருக்கும் அல்லவா… அதை வைத்து 'உதயசூரியன்' சின்னத்தை வரை… அதுதான் சிறந்த இயக்கப் பணி!" என்று சொன்னார்.

மிக மிக சாதரணமானவர்கள் சேர்ந்து உருவாக்கிய இயக்கம் இது. இங்கு எல்லோருக்கும் வசதி வாய்ப்பு இல்லை… ஆனால் தி.மு.க.வில் எல்லோருக்கும் அறிவார்ந்த கொள்கை இருக்கிறது! அந்தக் கொள்கையை அடைய வேண்டும் என்று இலட்சியம் இருக்கிறது! அதுதான் நம்முடைய பலம்!

அதைத்தான் பேரறிஞர் அண்ணா அந்தத் தொண்டருக்குப் புரிய வைத்தார்!

ஒரு சாதாரண கரிக்கட்டையைக் கூட கருத்தியல் ஆயுதமாகப் பயன்படுத்கொள்ளத் தெரிந்தவன் தி.மு.க.காரன்! அதனால்தான், சமூக வலைத்தளங்களை வெறும் பொழுதுபோக்கு அம்சமாக பார்க்காமல், சமூகத்தை முன்னேற்றுவதற்கான திராவிட முன்னேற்றக் கழகக் கொள்கைகளை நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். பெரிய பெரிய மாநாடெல்லாம் நடத்த வேண்டும் என்று இல்லை; நம்முடைய கருத்துகளை - கொள்கைகளை இன்னொருவரிடம் பேசுவதே, மிகப்பெரிய பரப்புரைதான்.

ஃபேஸ்புக் - யூடியூப் - வாட்ஸ்அப் - ட்விட்டர் - இன்ஸ்டாகிராம் - ஷேர்சாட் – டெலிகிராம் என்று நிறைய வசதிகள் வந்துவிட்டது. இது எல்லாவற்றையும் நம் கொள்கைகளைக் கொண்டு செல்ல – கட்சியை வளர்க்கப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்! நம்முடைய சாதனைகளை சொல்ல வேண்டும்! மக்களை திசைதிருப்ப - ஏமாற்ற அவதூறு பரப்பும் கூட்டத்தை அம்பலப்படுத்த வேண்டும்! இதையெல்லாம் நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். இதைக் கவனத்தில் வைத்து செயல்படுங்கள்.

அவ்வாறு செயல்படும் ஐ.டி. விங்-ஐ சேர்ந்தவர்களுக்கும் - தங்களின் அடையாளத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல் கட்சிக்காக உழைக்கும் பலருக்கும் நன்றி!

உங்களின் பெரும்பாலான 'ட்வீட்ஸ்-ஐ'.. மன்னிக்க வேண்டும் ட்விட்டர் இப்போது, 'எக்ஸ்' ஆகிவிட்டது அல்லவா… உங்களின் பெரும்பாலான 'எக்ஸ்' பதிவுகள் என்னுடைய கவனத்திற்கு வந்துவிடும். சிலரின் பதிவுகளை ரசித்துப் படிப்பேன். அதேசமயம், ஏதாவது குறையோ - புகாரோ சொன்னீர்கள் என்றால், உடனே அதைத் தீர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபடுகிறேன். அந்த வகையில், உங்களோடு நெருக்கமாக இருப்பதற்கான வாய்ப்பாகத்தான் சமூக வலைத்தளங்களை நான் பார்க்கிறேன்.

இதையேதான் உங்களிடமும் நான் எதிர்பார்க்கிறேன். சக மனிதர்களிடம் நெருக்கமாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அவர்களிடம் நம்முடைய கொள்கைகளை - சாதனைகளை சொல்லுங்கள். ஒரே வட்டத்திற்குள் நாம் சுருங்கிடாமல், வெவ்வேறு தளங்களை நாம் 'ரீச்'-ஆக சமூக வலைத்தளங்கள் பயன்படுகிறது.

”கள்ளக்கூட்டணியில் இருக்கும் அதிமுகவும் பாஜகவும் ஆயுள் மிகவும் குறைவு”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

அதனால்தான், நான்கூட இப்போது 'ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா' என்ற பாட்காஸ்ட் சீரிஸ்-ஐத் தொடங்கியிருக்கிறேன். ஏற்கனவே இரண்டு எபிஸோட் வந்துவிட்டது, விரைவாகவே அடுத்ததும் வரும். இந்தப் பாட்காஸ்ட் சீரிஸ், தமிழ்நாட்டை தாண்டி நம்முடைய கருத்துகளை, தெலுங்கு - மலையாளம் - கன்னடம் – இந்தி என்று வெவ்வேறு மொழிகளில் கொண்டு செல்கிறோம்.

"என்னடா இது!? இவர்கள் தமிழ்நாட்டில் முடங்கிக் கிடப்பார்கள் என்று பார்த்தால், இந்தி பேசும் மாநிலத்திற்கும் வந்துவிட்டார்கள்" என்று புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.

பார்லிமெண்ட் எலக்‌ஷனுக்கான என்னுடைய பிரச்சாரத்தை நான் தொடங்கிவிட்டேன்; நாம் சேர்ந்து முன்னெடுப்போம்! வெற்றி பெறுவோம்!

இந்திய அரசியலில் எல்லாவற்றுக்கும் முன்னோடியாக இருக்கும் நாம்தான், இந்த மாதிரி பாட்காஸ்ட் பிரச்சாரத்திலும் முன்னோடியாக இருக்கிறோம். இவ்வாறு எல்லாவற்றிலும் நாம் அப்டேட்டாகவும் இருக்க வேண்டும்; அட்வான்ஸாகவும் இருக்க வேண்டும்!

அதனால்தான், இப்போது நம்முடைய கருத்துகள் மற்ற மொழி ஊடகங்களிலும் எதிரொலிக்க தொடங்கியிருக்கிறது.

இந்தியாவுக்காகப் பேசுவோம் - எபிஸோட் 1 & 2, இதுவரை பல லட்சம் பேரால் கேட்கப்பட்டுள்ளது.

இதெல்லாம் பத்து, பதினைந்து மாநாடு நடத்தியதற்குச் சமம்.

மாநாடு என்றால் நம்முடைய ஆட்கள்தான் பெரும்பாலும் வருவார்கள். ஆனால், நம்மை எதிர்ப்பவர்கள் கூட, இதைக் கேட்கிறார்கள். இதன் மூலமாக வீண் வெறுப்பிலும் – பொய்களை நம்பி அறியாமையிலும் இருக்கும் அவர்கள், உண்மைகளைப் புரிந்துகொண்டு மனம் மாறுவார்கள். நம்முடைய கொள்கைகளையும் – சாதனைகளையும் சொல்வதற்கு மட்டுமே நாம் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோம்.

அ.தி.மு.க.வும் - பா.ஜ.க.வும் பொய்ச் செய்திகளையும் அவதூறுகளையும் பரப்புவதற்காகவே சம்பளம் கொடுத்து வேலைக்கும் – கூலிக்குத் தனியாகவும் ஆட்களை வைத்திருக்கிறார்கள். அவர்கள் என்றைக்காவது கொள்கையைப் பேசிப் பார்த்து இருக்கிறீர்களா?

சமூகத்தில் ஏற்றத்தாழ்வை ஆதரித்து – வெறுப்பை விதைக்கும் பா.ஜ.க.வால் அதன் கொள்கையை தமிழ்நாட்டில் பேச முடியாது. அ.தி.மு.க.விற்குக் கொள்கை என்ற ஒன்றே கிடையாது. எந்தப் பிரச்சினைகளிலும் கொள்கை சார்ந்த நிலைப்பாடு கிடையாது. அதனால், அவர்கள் நாள்தோறும் நம்மைப் பற்றி அவதூறு பரப்புவார்கள். அதற்கெல்லாம் யாரும் முக்கியத்துவம் தராதீர்கள். மக்கள் தங்களை அடையாளம் கண்டுபிடித்துவிட்டார்கள் என்று உணர்ந்துவிட்டாலே கூலிகளுக்குப் பதற்றம் வந்துவிடும். என்னதான் கத்தினாலும், சீண்டினாலும் தி.மு.க.காரர்கள் நம்மை கவனிக்கவில்லையே என்று அடிமைக் கும்பலுக்கு விரக்தி வந்துவிடும்.

இப்போதுகூட, பேரறிஞர் அண்ணா மன்னிப்பு கேட்டார் என்று ஒரு செய்தியைப் பரப்பினார்கள், அவ்வாறு ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று இந்து ஆங்கில நாளிதழே மறுத்துவிட்டது.

அடுத்து, மருதமலை கோயிலுக்கு, தி.மு.க. ஆட்சி மின் இணைப்பு தரவில்லை என்று பரப்பினார்கள். ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு 5 வருடத்திற்கு முன்பே மருதமலை கோயிலில் மின் இணைப்பு வந்துவிட்டது என்று கல்வெட்டு ஆதாரம் காட்டி இருக்கிறார்கள்.

”கள்ளக்கூட்டணியில் இருக்கும் அதிமுகவும் பாஜகவும் ஆயுள் மிகவும் குறைவு”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

பா.ஜ.க.விற்குப் பொய் சொல்வது எந்த அளவிற்கு பழக்கம் ஆகிவிட்டது என்றால், பிரதமர் தொடங்கி ஒன்றிய அமைச்சர்கள் பலரும் பொய்களை உண்மை என்று நினைத்து நாடாளுமன்றத்திலேயே பேசுகிறார்கள். இவ்வாறு அவர்கள் பொய் பரப்பிக்கொண்டே இருப்பார்கள். நாம் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லிக்கொண்டு இருக்க முடியுமா? நமக்கு ஆக்கப்பூர்வமான நிறைய வேலை இருக்கிறது. எதிர்காலத்தில் தமிழ்நாடு எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகள் நிறைய இருக்கிறது. அதையெல்லாம் எதிர்த்து நாம் போராடியாக வேண்டும். எவ்வாறு, நீட் தேர்வின் அபாயத்தை முன்பே உணர்ந்து, நாம் போராட ஆரம்பித்தோமோ, அவ்வாறு நிறைய வேலைகள் நமக்கு இருக்கிறது.

கள்ளக்கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் பரப்பும் பொய்களுக்கு ஆயுள் மிகவும் குறைவு. ஆனால், நம்முடைய கொள்கைகளுக்கு வலிமை அதிகம்! அதனால்தான், 75 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகம் இளமை மாறாமல் இருக்கிறது. மக்களும், ஆறு முறை தமிழ்நாட்டை ஆளும் வாய்ப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார்கள்.

அடுத்து, நாடாளுமன்றத் தேர்தல் வரப் போகிறது. ‘நாற்பதும் நமதே! நாடும் நமதே!’ என்று நம்முடைய முழக்கத்தை சொல்லி வருகிறோம். தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்துத் தொகுதியிலும் வெற்றி பெற்றால் மட்டும் போதாது. இந்தியா முழுவதும் நம்முடைய ’இந்தியா கூட்டணி’தான் வெற்றி பெற வேண்டும்.அதற்கு பா.ஜ.க.வின் பொய் முகத்திரையைக் கிழிக்க வேண்டும். கடந்த பத்து ஆண்டுகளாக, கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றாமல், பா.ஜ.க. பம்மாத்து செய்துகொண்டு இருக்கிறது என்பதை அம்பலப்படுத்த வேண்டும்.

‘டைவர்ஷன் பாலிட்டிக்ஸ்’தான் அவர்களின் ஆயுதம். உண்மையான பிரச்சினைகளைப் பற்றி எப்போதுமே பேச மாட்டார்கள். பிரச்சினையே இல்லாத ஒன்றைப் பற்றி, திரும்ப திரும்பப் பேசிப் பிரச்சினையாக ஆக்குவார்கள். அதற்கு சில ஊடகங்களும் துணை செல்லும். இதைக் கரெக்ட்டாக புரிந்துகொண்டாலே போதும்!

‘சந்திரயான் விட்டோம். ஜி-20 மாநாடு நடத்தினோம்’ என்று பிரதமர் நரேந்திர மோடி படம் காட்டிக்கொண்டு இருக்கிறார். அவர் இதற்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் என்ன ஆனது என்று நினைவூட்டி, அந்த வீடியோக்களை அதிகம் பரப்புங்கள்.

‘ஆட்சிக்கு வந்தால் கருப்புப் பணத்தை மீட்டு, ரூபாய் 15 லட்சம் கொடுப்போம்’ என்று பிரதமர் மோடி சொன்னதையும் – ‘அதெல்லாம் உங்களை ஏமாற்றுவதற்காக சொன்ன ஜூம்லா என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா சொன்னதையும் அதிகமாகப் பரப்புங்கள்.

“இந்திய மகள்களுக்காக இப்போது உருகுகிற மாதிரி நடிக்கும் பிரதமர் அவர்களே! மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டப்போது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? மணிப்பூருக்குப் போய் பாதிக்கப்பட்டவர்களைப் பாத்தீர்களா?” என்று கேள்வி எழுப்புங்கள். “மல்யுத்த வீராங்கனைகள் பா.ஜ.க. எம்.பி. மேல் சொன்ன பாலியல் புகார், பல மாத காலமாகப் பிரதமர் காதில் விழாமல் போனது ஏன்?” என்று கேள்வி எழுப்புங்கள்.

பா.ஜ.க.வின் கடந்த காலத் தவறுகளை சமூக வலைத்தளங்களில் திரும்பத் திரும்ப நினைவூட்டி பிரச்சாரம் செய்யுங்கள். இதைச் சரியாக செய்தாலே, நாற்பதும் நமதாகும்! நாடும் நமதாகும்!

இந்த ’செப்டம்பர் - திராவிட மாதம்’, தலைவர் கலைஞரின் நூற்றாண்டில் வந்திருக்கிறது. கலைஞரின் உடன்பிறப்புகளாக, அவர் விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் திராவிடவியல் கோட்பாட்டைக் கொண்டு செல்வோம். அடுத்த ’செப்டம்பர் - திராவிட மாத’த்தை, ‘வெற்றி விழாக் கொண்டாட்ட மாத’மாகக் கொண்டாடுவோம்.

banner

Related Stories

Related Stories