கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், இன்று (24-09-2023) திருப்பூரில் (காங்கேயம் - படியூர் அருகே) நடைபெற்ற மேற்கு மண்டல கழக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:-
ஒன்றியத்தில் ஒரு ஆட்சி இருக்கிறது. அதுவும் இரண்டாவது முறையாக ஆட்சியில் இருக்கிறது. மூன்றாவது முறை வரப்போவதில்லை. வரக் கூடாது. அதுதான் முக்கியம். பத்து ஆண்டு ஆகப்போகிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. சொன்னதற்கு மாறாக, ரிவர்ஸ் கியரில் போய்க்கொண்டிருக்கிறது.
* வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணத்தை முழுமையாக மீட்பேன் என்று ஒருவர் சொன்னாரே. மீட்டாரா? இல்லை!
* அவ்வாறு மீட்கப்பட்ட கருப்புப் பணத்தை இந்திய மக்கள் எல்லோருக்கும் ஆளுக்கு 15 லட்சமாக தருவேன் என்று ஆசை காண்பித்தாரே. தந்தாரா? அவர்கள் தரவில்லை என்றாலும் பரவாயில்லை, நம்முடைய கழக ஆட்சியில் பெண்களுக்கு உரிமைத் தொகையாக மாதாமாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம். அதையும் மினிமம் பேலன்ஸ் இல்லை என்று சொல்லி, பிடுங்கிக் கொள்கிற கொள்ளைக்கார ஆட்சியாக ஒன்றிய பா.ஜ.க ஆட்சி இருக்கிறது. தாய்மார்களின் இந்தக் கோபம் எல்லாம் நிச்சயம் தேர்தலில் எதிரொலிக்கத்தான் போகிறது.
* உழவர்களின் வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்குவோம் என்று இதே மோடி 2014-இல் சொன்னார். அவ்வாறு எதுவும் நடந்திருக்கிறதா சொல்லுங்கள்?
* ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவேன் என்று வாக்குறுதி அளித்தார் பிரதமர் மோடி. ஆனால் எந்த வேலைவாய்ப்பும் ஏற்படுத்தித் தரவில்லை. சொல்லப் போனால், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, இந்தியாயில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து இருக்கிறது என்பதுதான் யதார்த்தமாக இருக்கிறது. இதை நாம் கேட்டால்… “நம்முடைய படித்த இளைஞர்களை எல்லோரையும் பகோடா விற்கச் செல்லுங்கள்” என்று சொல்கிறார்.
* 2022-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் எல்லாக் குடும்பங்களுக்கும் சொந்த வீடு கட்டித் தருவேன் என்று பிரதமர் மோடி சொன்னார். சொந்த வீடு இல்லாதவர்களே இந்தியாவில் இப்போது இல்லால் ஆகிவிட்டார்களா? நீங்களே சொல்லுங்கள்.
* 2024-25-ஆம் ஆண்டுக்குள் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாறும் என்று சொன்னார்கள். ஆனால் நடந்தது என்ன? பணமதிப்பு இழப்பு என்று சொல்லி நன்றாக இருந்த இந்திய பொருளாதாரத்தையே படுகுழிக்குத் தள்ளிவிட்டார்கள். இந்த மேற்கு மண்டலத்தில் திருப்பூரும், கோவையும் தொழில்கள் நிறைந்த மாநகரங்கள். ஆனால் பணமதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி. என்று ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக இந்த இரண்டு நகரமும் நொடிந்து போயிருக்கிறது.
பிரதமர் அவர்களே, இங்கு வந்து தொழில்துறையினரிடம் ஒன்றிய அரசால் அவர்கள் படும் கஷ்டங்களை கொஞ்சம் கேட்டுப் பாருங்கள். டாலர் சிட்டியாக இருந்த திருப்பூர் இப்போது ‘டல் சிட்டி’ ஆகிவிட்டது. தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவையின் தொழில்துறையானது திறனற்ற பா.ஜ.க அரசால் தேய்பிறை ஆகிக் கொண்டிருக்கிறது.
மாநில அரசுதான் தொழில்துறையினரைச் சந்தித்து அவர்கள் கோரிக்கைகளைக் கேட்டு அவர்கள் சரிவில் இருந்து மீண்டு வருவதற்கான உதவிகளை, திட்டங்களைச் செய்துகொண்டு வருகிறோம். கொஞ்சம் கொஞ்சமாக இந்தப் பகுதியை பழையபடி முன்னேற்ற முயற்சிகளையும் எடுத்துக்கொண்டு வருகிறோம். ஒன்றிய அரசு இப்போது வரைக்கும் இவர்களுக்காக எதையும் செய்ய முன்வரவில்லை.
இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு இணையாக உயரும் என்று வாய்ப்பந்தல் போட்டார்கள். ஆனால் இன்றைக்கு இந்திய ரூபாயின் மதிப்பு அதலபாதாளத்தில் இருக்கிறது. இதுதான் பா.ஜ.க அரசு இந்திய பொருளாதாரத்தை உயர்த்திய இலட்சணம்.
பிரதமர் அவர்களே! உங்களிடம் நாங்கள் புதிதாக எதுவும் கேக்கவில்லை. நீங்கள் மேடைக்கு மேடை ஏறிக் கொடுத்த வாக்குறுதிகளில் எதையாவது ஒன்றையாவது நிறைவேற்றிக் காட்டி இருக்கிறீர்களா என்றுதான் கேட்கிறோம்.
தமிழ்நாட்டுக்கு வந்து பல வாக்குறுதிகளை கொடுத்தார் பிரதமர் மோடி அவர்கள். அதையாவது நிறைவேற்றினாரா என்று பார்த்தேன். அதுவும் இல்லை. குறிப்பாக இந்த மேற்குப் பகுதிகளை பொறுத்தவரை,
* சேலம் உருக்காலை உற்பத்தியை நவீனப்படுத்துவோம் என்று சொன்னார்கள். சேலத்தில் இருந்து வந்திருப்பவர்கள் சொல்லுங்கள். இதைச் செய்துவிட்டார்களா?
* ஜவுளிகளின் சொர்க்கமான ஈரோட்டில் ஜவுளித் தொழிலுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும் என்று சொன்னார்கள். ஈரோட்டில் அவ்வாறு வசதிகள் எதையாவது செய்து கொடுத்திருக்கிறார்களா?
* ஈரோடு மஞ்சளை இந்தியாவே நேசிக்கிறது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் மஞ்சளை ஆயுர்வேதம் மட்டுமின்றி, அழகு சாதனப் பொருளாகவும் மாற்ற நடவடிக்கை எடுப்போம் என்று சொன்னார்களா? ஒன்பது ஆண்டில் அது தொடர்பாக ஏதாவது ஒரு அங்குலம் அளவிற்கு நடந்திருக்கிறதா?
* புதிதாக நான்கு நகரங்களில் விமானநிலையம் அமைப்போம் என்று சொன்னார்கள். பல ஊர்களில் இருந்து வந்திருக்கிறீர்கள். எந்த ஊரிலாவது அவ்வாறு விமான நிலையம் வந்திருக்கிறதா?
இவ்வாறு டிசைன் டிசைனாக கொடுத்த வாக்குறுதி எல்லாம் என்னானது? ஒன்னும் ஆகவில்லை, எல்லாம் பத்திரமாக இன்னும் வெறும் வாக்குறுதியாகவேதான் இருக்கிறது.
இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.