தமிழ்நாடு

”டெபாசிட் வாங்கக் கூட தகுதியில்லாத கட்சி பாஜக; மூன்றாவது முறை ஆட்சிக்கு வரமுடியாது” : முதலமைச்சர் உறுதி!

ஒரே நாடு - ஒரே தேர்தலை குப்புற விழுந்து ஆதரிக்கிறார் பல்லக்குத் தூக்கி பழனிசாமி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

”டெபாசிட் வாங்கக் கூட தகுதியில்லாத கட்சி பாஜக; மூன்றாவது முறை ஆட்சிக்கு வரமுடியாது” : முதலமைச்சர்  உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், இன்று (24-09-2023) திருப்பூரில் (காங்கேயம் - படியூர் அருகே) நடைபெற்ற மேற்கு மண்டல கழக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆற்றிய உரையின் விவரம் வருமாறு.

மேற்கு மண்டலத்தைச் சார்ந்திருக்கும் பாக முகவர்கள் கூட்டத்தைத்தான் நான், அமைச்சராக இருக்கும் சாமிநாதனிடத்திலும், இந்த மண்டலத்தைச் சார்ந்திருக்கும் மாவட்டக் கழகச் செயலாளர்களிடமும் கூட்டும்படி கூறியிருந்தேன். ஆனால், அவர்கள் பாக முகவர்கள் கூட்டத்தை மட்டுமல்ல, பாக முகவர்களின் மண்டல மாநாட்டையே இங்கே கூட்டியிருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு எல்லாம் நான் முதலில் என்னுடைய நன்றியைத் தலைமைக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

நம்முடைய கழகத்தின் பொதுச் செயலாளர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் எடுத்துச் சொன்னதுபோல, நாம் இந்திய நாடாளுமன்றத்தின் தேர்தலை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். நாம் - தேர்தல் பணியின் தொடக்கப் புள்ளியான பாக முகவர்கள் கூட்டத்தை தொடர்ந்து நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

மத்திய மண்டல மாவட்டங்களுக்கான பாக முகவர்கள் கூட்டம் திருச்சியிலும் - தென் மண்டல மாவட்டங்களுக்கான பாக முகவர்கள் கூட்டம் இராமநாதபுரத்திலும் - நடந்து முடிந்திருக்கிறது. மூன்றாவதாக மேற்கு மண்டல மாவட்டங்களுக்கான கூட்டம் இந்த திருப்பூரில் காங்கேயம் பகுதியில் நடந்து கொண்டிருக்கிறது.

உங்கள் திருமுகங்களைப் பார்ப்பதற்காகத்தான் நான் திருப்பூர் வந்திருக்கிறேன். என்னை பார்ப்பதில் நீங்கள் அடையும் உற்சாகம் - ஆர்வத்தை விட உங்களைப் பார்ப்பதில் நான் அடையும் மகிழ்ச்சி என்பது மிக மிக அதிகம். அதற்கு அளவே இல்லை. “ஏன் இவ்வளவு அலைகிறீர்கள்? பயணத்தைக் குறைத்துக் கொள்ளக் கூடாதா?” என்று என் மேல் அக்கறையும் பாசமும் கொண்டவர்கள் சொல்லும்போதெல்லாம் நான் சொல்வது – “கழக உடன்பிறப்புகளையும் - தொண்டர்களையும் பார்க்கும்போது நான் அடையும் உற்சாகத்திற்கு ஈடு இணை எதுவும் கிடையாது. என்னுடைய களைப்பு எல்லாம் காற்றாக பறந்து விடுகிறது” என்று சொல்வேன். அப்படியான உற்சாகமான மனநிலையோடு தான் உங்கள் முன்னால் கம்பீரமாக தெம்போடு நிற்கிறேன்.

இது திருப்பூர். திராவிட இயக்கம் கருவான ஊர். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களும், காஞ்சி தந்த வள்ளுவன் பேரறிஞர் அண்ணா அவர்களும் முதன் முதலில் சந்தித்த ஊர் இந்த திருப்பூர். அந்த வகையில் பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு அடித்தளமிட்ட ஊர்தான் இந்த திருப்பூர்! தியாகத்தின் திருவுருவமாகப் போற்றப்படும் கொடி காத்த குமரன் வாழ்ந்த ஊர் இந்த திருப்பூர்.

இந்தியை எதிர்த்தும் - தமிழைக் காக்கவும் 1965-ஆம் ஆண்டு போராட்டம் நடந்தபோது கல்லூரி மாணவர்கள் மட்டுமல்ல - பள்ளி மாணவர்களும் அதிகம் பங்கெடுத்த ஊர் இந்த திருப்பூர். இப்படிப்பட்ட பெருமைமிகு திருப்பூரை மாநகராட்சியாக உயர்த்தியது மட்டுமல்ல, இந்தத் திருப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கியவரும் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்தான். இப்படிப்பட்ட பெருமைக்குரிய இந்தத் திருப்பூரில் இன்று பாக முகவர்கள் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

இதை மிகச் சிறப்போடும் எழுச்சியோடும் ஏற்பாடு செய்திருக்கிற மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களை பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.

மு.பெ. என்பது அவரது முன்னெழுத்தாக இருந்தாலும், உண்மையில் அவர் மூப்பே அடையாத சாமிநாதன் என்று சொல்லத்தக்க வகையில் இளமையாவே காட்சி அளிப்பார். இளைஞரணியில் என்னுடன் தொடக்க காலத்தில் இருந்தே பயணித்தவர் சாமிநாதன். வெள்ளக்கோவில் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்து மாநில இளைஞரணிச் செயலாளர் என்ற தகுதிக்கு உயர்ந்தவர் அவர். இளைஞரணிச் செயலாளர் பொறுப்பு என்னிடம் இருந்து அவருக்குத்தான் போனது. அதில் இருந்தே அவரின் உழைப்பையும் திறமையையும் தெரிந்து கொள்ளலாம். தலைவர் கலைஞர் அவர்களது அமைச்சரவையில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகச் சிறப்பாகப் பணியாற்றினார். இப்போது, நம்முடைய அமைச்சரவையில் செய்தித்துறை அமைச்சராகப் பணியாற்றி வருகிறார். நிறைகுடம் தளும்பாது என்பதற்கு ஏற்ப, அடக்கமாவும் – அமைதியாவும் – அதே நேரத்தில் பொறுப்பை உணர்ந்தும் பணியாற்றக் கூடியவர்தான் சாமிநாதன்.

அவருக்கு தோளாடு தோள் நின்ற மாவட்டக் கழகச் செயலாளர்கள் - நிர்வாகிகள் எல்லாருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை மீண்டும் ஒருமுறை தலைமைக் கழகத்தின் சார்பிலும், என்னுடைய சார்பிலும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

என்னுடைய தலைமையில், கடந்த 22.03.2023 அன்றைக்கு சென்னை, அண்ணா அறிவாலயத்தில் கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் இருந்தே, நாம் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டோம். தமிழ்நாடு முழுவதும் பூத் கமிட்டிகளை அமைத்திருக்கிறோம். ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA-2) நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கோடிக்கணக்கான உறுப்பினர்கள் கொண்ட இயக்கத்திற்காக, தேர்தல் பணிகளை செய்யப் போகிறவர்கள் நீங்கள். பல கட்ட ஆய்வுகளுக்குப் பின்புதான் ‘வாக்குச்சாவடி பொறுப்பாளர்’ என்ற அடையாள அட்டை உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த அட்டையை பெற்ற மேற்கு மாவட்டங்களின் பொறுப்பாளர்கள் மட்டும் இங்கு முதல்கட்டமாக அழைக்கப்பட்டு இருக்கிறீர்கள். உங்களுக்கான வகுப்புகள் காலை முதலே நடந்துகொண்டு வருகிறது.

* ‘வாக்குச் சாவடிப் பொறுப்பாளர்களின் கடமைகளும் பணிகளும்’ என்ற தலைப்பில் தலைசிறந்த வழக்கறிஞரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர். இளங்கோ அவர்களும் -

* ‘வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகள் மற்றும் அதன் முக்கியத்துவம்’ குறித்து செயல் வீரர் மாவட்டச் செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி. அவர்களும் -

* ‘சமூக வலைத்தளங்களின் பயன்பாடும், செயல்படுத்த வேண்டிய முறையும்’ என்பது குறித்து கழகத் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சேலம் தரணிதரன் அவர்களும் உங்களுக்கு எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள்.

* கழகத்தின் வரலாறு - அடிப்படைக் கொள்கைகள் - திராவிட இயக்கத்தின் கோட்பாடுகள் - நவீன தமிழ்நாட்டை உருவாக்க நாம் எடுத்திருக்கும் முயற்சிகள் - திராவிட மாடல் ஆட்சி ஆகியவை குறித்த அடிப்படைத் தகவல்களை கழக கொள்கை பரப்பு செயலாளரும், கழக மாநிலங்களவைக் குழுத் தலைவருமான என்னுடைய அருமை சகோதரர் திருச்சி சிவா எம்.பி. அவர்களும் – மாநிலத் திட்டக் குழுத் துணைத் தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன் அவர்களும் உங்களுக்கு எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். இதன் மூலமாக கொள்கை வழிகாட்டுதலும் - தேர்தல் பயிற்சியும் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இவை எல்லாவற்றையும் மனதில் வைத்து நீங்கள் செயல்பட வேண்டும். இவை இந்தத் தேர்தலுக்கு மட்டுமல்ல, எந்தத் தேர்தலுக்கும் பயன்படுத்த வேண்டிய பணி. நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி நாம் காத்திருக்கிறோம். இந்த முக்கியமான தேர்தலுக்குத்தான் நீங்கள் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் ஆகியிருக்கிறீர்கள்.

”டெபாசிட் வாங்கக் கூட தகுதியில்லாத கட்சி பாஜக; மூன்றாவது முறை ஆட்சிக்கு வரமுடியாது” : முதலமைச்சர்  உறுதி!

கழகத்தின் வாக்குச்சாவடி பொறுப்பாளர் என்ற நிலையை அடைந்திருக்கும் உங்கள் எல்லோருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் நான் மீண்டும் மீண்டும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

* நாமக்கல் கிழக்கு

* நாமக்கல் மேற்கு

* ஈரோடு தெற்கு

* ஈரோடு வடக்கு

* திருப்பூர் வடக்கு

* திருப்பூர் தெற்கு

* கோவை வடக்கு

* கோவை மாநகர்

* கோவை தெற்கு

* கரூர்

* நீலகிரி

* சேலம் மேற்கு

* சேலம் மத்தி

* சேலம் கிழக்கு ஆகிய மாவட்டக் கழகங்களை சேர்ந்த பொறுப்பாளர்கள் இங்கு கூடியிருக்கிறீர்கள்.

மாவட்டக் கழகச் செயலாளர்களான,

* அமைச்சர் முத்துசாமி

* டி.எம். செல்வகணபதி

* பா.மு.முபாரக்

* ஆர். ராஜேந்திரன் எம்.எல்.ஏ.

* கே.ஆர்.என். ராஜேஸ்குமார் எம்.பி.

* க. செல்வராஜ் எம்.எல்.ஏ.

* எஸ்.ஆர். சிவலிங்கம்

* என். நல்லசிவம்

* என். கார்த்திக்

* தளபதி முருகேசன்

* இல. பத்மநாபன்

* மதுரா செந்தில்

* தொண்டாமுத்தூர் ரவி ஆகியோருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வாக்குச்சாவடி பொறுப்பாளர்களான நீங்கள்தான் உங்கள் வாக்குச்சாவடியில் உள்ள வாக்காளர்களுக்கு முழு பொறுப்பாளர். வாக்குச் சாவடிப் பொறுப்பாளர் என்றால் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கு நீங்கள்தான் பொறுப்பாளர் என்பதை மறந்துவிடாதீர்கள். “நாற்பதும் நமதே! நாடும் நமதே” என்று நான் முழங்கி இருக்கிறேன் என்றால் அது உங்கள் மேல் நான் வைத்திருக்கும் அளவுகடந்த நம்பிக்கை காரணமாகத்தான்.

இன்றையில் இருந்து, கழகத்தின் தேர்தல் பொறுப்பாளர்கள் என்ற கம்பீரத்தோடு நீங்கள் கடமையாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். வெற்றி மட்டுமே உங்கள் இலக்காக இருக்க வேண்டும். அந்த வெற்றியை அடைவதற்கான வழிமுறைகளில் மிகச் சரியாக நீங்கள் பயணிக்க வேண்டும்.

வாக்குச்சாவடி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் உங்களுக்கு நிறைய கடமைகள் இருக்கிறது.

*வாக்காளர் பட்டியலைச் சரி பார்ப்பது தான் உங்களின் முக்கியமான முதல் கடமை. வாக்காளர் பட்டியலில் உங்கள் வாக்குச்சாவடிக்குரிய வாக்காளர்களின் விவரங்கள் சரியாக இருக்கிறதா, போலி வாக்காளர்கள் யாராவது இருக்கிறார்களா, இறந்து போனவர்கள் பெயர்கள் எல்லாம் நீக்கப்பட்டிருக்கிறதா என்று முழுமையாக நீங்கள் சரிபார்க்க வேண்டும்.

* முறையான வாக்காளர்களை நம்மை நோக்கி ஈர்ப்பதுதான் உங்கள் இரண்டாவது கடமை. வாக்காளர்களை சந்தித்து பரப்புரை செய்ய வேண்டும், நம்முடைய சாதனைகளை அவர்களிடம் தொடர்ந்து நீங்கள் எடுத்துச் சொல்ல வேண்டும்.

* வாக்குப்பதிவு நாட்களில் வாக்காளர்களை வாக்குப்பதிவு மையங்களுக்கு வர வைப்பது உங்கள் மூன்றாவது முக்கியக் கடமை. உங்கள் வாக்குச்சாவடியில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்திலும் நீங்கள் அங்கமாக மாற வேண்டும். அதற்கு, முதலில் உங்கள் வாக்குச்சாவடியில் இருக்கும் ஒவ்வொரு வாக்காளரைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அதற்கான மாதிரிப் படிவம் இப்போது உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தொகுதிவாரியாக அச்சிடப்பட்டு விரைவாக உங்கள் கை-க்கு வந்து சேரும்.

வாக்காளரின் பெயர், அவரின் வயது, அவரின் குடும்பத்தினர் யார், என்ன படித்திருக்கிறார்கள், என்ன தொழில் செய்கிறார்கள், எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்ற முழு விவரமும் உங்களிடம் இருக்க வேண்டும். உங்கள் வாக்குச்சாவடியில், 250 குடும்பங்கள் இருந்தால், அந்தக் குடும்பங்களில் ஒருவரா நீங்கள் மாற வேண்டும்.

தினமும் ஒரு மணி நேரத்தைக் கழகத்திற்காக ஒதுக்குங்கள்? ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம், உங்களால் ஒதுக்க முடியுமா? ஒதுக்குவீர்களா? அந்த ஒரு மணி நேரத்தை பூத் வேலைக்காக ஒதுக்குங்கள்.

அடுத்ததாக, அரசின் திட்டங்களையும் முழுவதும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் இன்றைக்கு ஒரு புத்தகம் கொடுத்திருக்கிறோம். அதைப் படித்துப் பார்த்தாலே எல்லாவற்றையும் தெரிந்துக் கொள்ளலாம்.

யாருக்கு என்ன தேவையோ அதைத் தெரிந்துகொண்டு ஏற்பாடு செய்து கொடுங்கள். ஒருவருக்கு முதியோர் உதவித்தொகையில் உதவிகள் தேவைப்படலாம். இன்னொருவருக்கு பட்டா மாறுதலில் உதவி தேவைப்படலாம். இவ்வாறு அவரவர் தேவையை கண்டறிந்து, அதை நிறைவேற்றித் தாருங்கள்.

ஒவ்வொரு நாளும் பத்து வீடுகளுக்குச் சென்று பேசுங்கள். ஒரு மாதத்தில் உங்கள் வாக்குச்சாவடியில் இருக்கும் அத்தனை வீடுகளுக்கும் நீங்கள் சென்று பேசியிருப்பீர்கள். சில வீடுகளில் மகிழ்ச்சியாக வரவேற்பார்கள். சில வீடுகளில் அதை எதிர்பார்க்க முடியாது. அதற்காக நாம் விட்டுவிடக் கூடாது. மீண்டும் அடுத்த மாதம் புன்னகை மாறாமல் அவர்களைத் தேடிச் செல்லுங்கள். என்னைப் பொறுத்தவரை நம்மை நிராகரிப்பவர்களே இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

”டெபாசிட் வாங்கக் கூட தகுதியில்லாத கட்சி பாஜக; மூன்றாவது முறை ஆட்சிக்கு வரமுடியாது” : முதலமைச்சர்  உறுதி!

அனைவருக்கும் பொதுவான மக்களாட்சியை நாம் நடத்திக்கொண்டு வருகிறோம். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் ஏதோ ஒரு விதத்தில் பயனடையும் திட்டங்களாக பார்த்துப் பார்த்து நாம் செயல்படுத்திக் கொண்டு வருகிறோம். மக்களுக்கு நம்மீது, நம்முடைய ஆட்சி மீது நம்பிக்கை இருக்கிறது.

கடந்த 15-ஆம் தேதியில் இருந்து, சிறப்பான முறையில் சரியான பயனாளிகளைத் தேர்ந்தெடுத்து, ஒரு கோடிக்கும் அதிகமான மகளிருக்கு மாதாமாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தைத் தொடங்கி வைத்திருக்கிறோம். நம்முடைய தேர்தல் வாக்குறுதியிலேயே மிகப் பெரிய வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டோம். நீங்கள் வாக்களர்களை தேடிப் போகும்போது இந்தத் திட்டத்தின் வரவேற்பை பார்க்கலாம். நாம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து நான் எல்லா மாவட்டங்களுக்கும் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறேன். கடந்த 15-ஆம் தேதிக்கு இருந்த வரவேற்பைவிட இப்போது பல மடங்கு அதிகமாகியிருக்கிறது. இதுதான் காரணம். என்ன மகிழ்ச்சி… நாமே கேட்கவில்லை, “ஐயா, வந்துவிட்டது.” - ”என்ன வந்துவிட்டது?” – ”1000 ரூபாய் வந்துவிட்டது” என்று சொல்கிறார்கள்.

அதேபோல், கோடிக்கணக்கான மகளிருக்குப் பயனளிக்கும் திட்டம்தான் பேருந்தில் கட்டணமில்லா ‘விடியல் பயணம்’! இதனால் மாத வருமானத்தில் 800 ரூபாயில் இருந்து 1200 ரூபாய் வரை பெண்களுக்கு மிச்சம் ஆகிறது.

13 லட்சம் குடும்பங்களின் நகைக்கடனைத் தள்ளுபடி செய்திருக்கிறோம். நீங்கள் தேடிச் செல்லும் ஒவ்வொரு வீட்டிலும் இவ்வாறு நம்முடைய அரசால் பயனடைகிறவர்கள் நிச்சயம் இருப்பார்கள்.

ஒரு வீட்டில் முதியோர் இருக்கிறாரா? அவர்கள் பயனடையும் வகையில், 42 லட்சத்துக்கும் மேற்பட்ட பல்வேறு திட்டப் பயனாளிகள் பெற்றுவரும் 1000 ரூபாய் உதவித் தொகையை 1200-ஆக ஆக்கி இருக்கிறோம்.

ஒரு வீட்டில் பள்ளிக் குழந்தைகள் இருக்கிறார்களா? லட்சக்கணக்கான பள்ளி மாணவர்கள் காலை உணவுத் திட்டத்தால் பசியில்லாமல் படிக்கிறார்கள்.

இளைஞர்கள் இருக்கும் வீடா? ‘நான் முதல்வன்’ திறன் மேம்பாட்டுத் திட்டத்தால் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஒரு வீட்டில் கல்லூரிக்குப் போகும் மாணவிகள் இருக்கிறார்களா? புதுமைப்பெண் திட்டத்தின் மூலமாக அவர்களுக்கு மாதாமாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை கொடுக்கிறோம்.

இவ்வாறு, ஒவ்வொரு திட்டத்தாலும் ஒவ்வொரு குடும்பத்திலும் பலர் பயனடைந்து வருகிறார்கள். தமிழ்நாட்டின் பெரும்பாலான குடும்பங்களுக்கு மாதாமாதம் இவ்வாறு மூன்றாயிரத்தில் இருந்து நான்காயிரம் ரூபாயை நேரடியாக பல திட்டங்கள் மூலமாக கொடுத்து வருகிறோம்.

ஆனால், ஒன்றியத்தில் ஒரு ஆட்சி இருக்கிறது. அதுவும் இரண்டாவது முறையாக ஆட்சியில் இருக்கிறது. மூன்றாவது முறை வரப்போவதில்லை. வரக் கூடாது. அதுதான் முக்கியம். பத்து ஆண்டு ஆகப்போகிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. சொன்னதற்கு மாறாக, ரிவர்ஸ் கியரில் போய்க்கொண்டிருக்கிறது.

”டெபாசிட் வாங்கக் கூட தகுதியில்லாத கட்சி பாஜக; மூன்றாவது முறை ஆட்சிக்கு வரமுடியாது” : முதலமைச்சர்  உறுதி!

* வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணத்தை முழுமையாக மீட்பேன் என்று ஒருவர் சொன்னாரே. மீட்டாரா? இல்லை!

* அவ்வாறு மீட்கப்பட்ட கருப்புப் பணத்தை இந்திய மக்கள் எல்லோருக்கும் ஆளுக்கு 15 லட்சமாக தருவேன் என்று ஆசை காண்பித்தாரே. தந்தாரா? அவர்கள் தரவில்லை என்றாலும் பரவாயில்லை, நம்முடைய கழக ஆட்சியில் பெண்களுக்கு உரிமைத் தொகையாக மாதாமாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம். அதையும் மினிமம் பேலன்ஸ் இல்லை என்று சொல்லி, பிடுங்கிக் கொள்கிற கொள்ளைக்கார ஆட்சியாக ஒன்றிய பா.ஜ.க ஆட்சி இருக்கிறது. தாய்மார்களின் இந்தக் கோபம் எல்லாம் நிச்சயம் தேர்தலில் எதிரொலிக்கத்தான் போகிறது.

* உழவர்களின் வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்குவோம் என்று இதே மோடி 2014-இல் சொன்னார். அவ்வாறு எதுவும் நடந்திருக்கிறதா சொல்லுங்கள்?

* ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவேன் என்று வாக்குறுதி அளித்தார் பிரதமர் மோடி. ஆனால் எந்த வேலைவாய்ப்பும் ஏற்படுத்தித் தரவில்லை. சொல்லப் போனால், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, இந்தியாயில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து இருக்கிறது என்பதுதான் யதார்த்தமாக இருக்கிறது. இதை நாம் கேட்டால்… “நம்முடைய படித்த இளைஞர்களை எல்லோரையும் பகோடா விற்கச் செல்லுங்கள்” என்று சொல்கிறார்.

* 2022-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் எல்லாக் குடும்பங்களுக்கும் சொந்த வீடு கட்டித் தருவேன் என்று பிரதமர் மோடி சொன்னார். சொந்த வீடு இல்லாதவர்களே இந்தியாவில் இப்போது இல்லால் ஆகிவிட்டார்களா? நீங்களே சொல்லுங்கள்.

* 2024-25-ஆம் ஆண்டுக்குள் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாறும் என்று சொன்னார்கள். ஆனால் நடந்தது என்ன? பணமதிப்பு இழப்பு என்று சொல்லி நன்றாக இருந்த இந்திய பொருளாதாரத்தையே படுகுழிக்குத் தள்ளிவிட்டார்கள். இந்த மேற்கு மண்டலத்தில் திருப்பூரும், கோவையும் தொழில்கள் நிறைந்த மாநகரங்கள். ஆனால் பணமதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி. என்று ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக இந்த இரண்டு நகரமும் நொடிந்து போயிருக்கிறது.

பிரதமர் அவர்களே, இங்கு வந்து தொழில்துறையினரிடம் ஒன்றிய அரசால் அவர்கள் படும் கஷ்டங்களை கொஞ்சம் கேட்டுப் பாருங்கள். டாலர் சிட்டியாக இருந்த திருப்பூர் இப்போது ‘டல் சிட்டி’ ஆகிவிட்டது. தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவையின் தொழில்துறையானது திறனற்ற பா.ஜ.க அரசால் தேய்பிறை ஆகிக் கொண்டிருக்கிறது.

மாநில அரசுதான் தொழில்துறையினரைச் சந்தித்து அவர்கள் கோரிக்கைகளைக் கேட்டு அவர்கள் சரிவில் இருந்து மீண்டு வருவதற்கான உதவிகளை, திட்டங்களைச் செய்துகொண்டு வருகிறோம். கொஞ்சம் கொஞ்சமாக இந்தப் பகுதியை பழையபடி முன்னேற்ற முயற்சிகளையும் எடுத்துக்கொண்டு வருகிறோம். ஒன்றிய அரசு இப்போது வரைக்கும் இவர்களுக்காக எதையும் செய்ய முன்வரவில்லை.

இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு இணையாக உயரும் என்று வாய்ப்பந்தல் போட்டார்கள். ஆனால் இன்றைக்கு இந்திய ரூபாயின் மதிப்பு அதலபாதாளத்தில் இருக்கிறது. இதுதான் பா.ஜ.க அரசு இந்திய பொருளாதாரத்தை உயர்த்திய இலட்சணம்.

பிரதமர் அவர்களே! உங்களிடம் நாங்கள் புதிதாக எதுவும் கேக்கவில்லை. நீங்கள் மேடைக்கு மேடை ஏறிக் கொடுத்த வாக்குறுதிகளில் எதையாவது ஒன்றையாவது நிறைவேற்றிக் காட்டி இருக்கிறீர்களா என்றுதான் கேட்கிறோம்.

தமிழ்நாட்டுக்கு வந்து பல வாக்குறுதிகளை கொடுத்தார் பிரதமர் மோடி அவர்கள். அதையாவது நிறைவேற்றினாரா என்று பார்த்தேன். அதுவும் இல்லை. குறிப்பாக இந்த மேற்குப் பகுதிகளை பொறுத்தவரை,

* சேலம் உருக்காலை உற்பத்தியை நவீனப்படுத்துவோம் என்று சொன்னார்கள். சேலத்தில் இருந்து வந்திருப்பவர்கள் சொல்லுங்கள். இதைச் செய்துவிட்டார்களா?

* ஜவுளிகளின் சொர்க்கமான ஈரோட்டில் ஜவுளித் தொழிலுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும் என்று சொன்னார்கள். ஈரோட்டில் அவ்வாறு வசதிகள் எதையாவது செய்து கொடுத்திருக்கிறார்களா?

* ஈரோடு மஞ்சளை இந்தியாவே நேசிக்கிறது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் மஞ்சளை ஆயுர்வேதம் மட்டுமின்றி, அழகு சாதனப் பொருளாகவும் மாற்ற நடவடிக்கை எடுப்போம் என்று சொன்னார்களா? ஒன்பது ஆண்டில் அது தொடர்பாக ஏதாவது ஒரு அங்குலம் அளவிற்கு நடந்திருக்கிறதா?

* புதிதாக நான்கு நகரங்களில் விமானநிலையம் அமைப்போம் என்று சொன்னார்கள். பல ஊர்களில் இருந்து வந்திருக்கிறீர்கள். எந்த ஊரிலாவது அவ்வாறு விமான நிலையம் வந்திருக்கிறதா?

இவ்வாறு டிசைன் டிசைனாக கொடுத்த வாக்குறுதி எல்லாம் என்னானது? ஒன்னும் ஆகவில்லை, எல்லாம் பத்திரமாக இன்னும் வெறும் வாக்குறுதியாகவேதான் இருக்கிறது.

நாடாளுமன்றத்தில் சமீபத்தில் பேசிய பிரதமர் அவர்கள் தன்னுடைய ஆட்சியின் சாதனையாக, எதைச் சொல்கிறார்? ஏதாவது பெரிய பட்டியலாக போட்டிருப்பார் என்று பார்த்தேன். எதுவும் இல்லை.

”டெபாசிட் வாங்கக் கூட தகுதியில்லாத கட்சி பாஜக; மூன்றாவது முறை ஆட்சிக்கு வரமுடியாது” : முதலமைச்சர்  உறுதி!

* சந்திராயன் விட்டோம் என்று சொல்கிறார்.

* ஜி-20 மாநாடு நடத்தினோம் என்று சொல்கிறார்.

இது இரண்டையும்தான் பெரிய சாதனையாக சொல்கிறார். ஆனால், ஊடகங்களே என்ன சொல்கிறார்கள்? ஆண்டுக்கு ஒரு முறை ஒவ்வொரு நாட்டுக்கும் வரும் தலைமைப் பதவிதான் ஜி20 மாநாட்டுத் தலைமை. இதற்கும் பா.ஜ.க. ஆட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆகவே ஜி20-க்கு அவர்கள் உரிமை கோர முடியாது.

அதேபோல், 2008-ஆம் ஆண்டு நிலவை நோக்கிய பயணத்தை இந்தியா தொடங்கி, 2023-இல் அந்தச் சாதனையின் எல்லையை நெருங்கி இருக்கிறது. இதுவும் தனிப்பட்ட பா.ஜ.க ஆட்சியின் சாதனை இல்லை. விண்வெளி ஆராய்ச்சிக்காக இந்தியா விடுதலை அடைந்த காலம் முதல் தூவப்பட்ட விதைகளின் விளைச்சல்தான் சந்திரயான் விண்கலம். இது இரவும் பகலும் உழைத்த நம்முடைய இஸ்ரோ அறிவியலாளர்களின் சாதனை. பண்டிதர் நேரு தொடங்கி மதிப்புக்குரிய மன்மோகன் சிங் அவர்கள் வரை பல பிரதமர்களின் பங்கு இதில் இருக்கிறது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறப்புக் கூட்டத்தொடரில் இதை எல்லாம் சுட்டிக்காட்டிப் ஆதாரத்தோடு பேசியிருக்கிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடியிடம் அவருடைய ஆட்சியின் சாதனை என்று சொல்லிக் கொள்வதற்கு எதுவும் இல்லை. அதனால்தான் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைக் கொண்டு வந்து கணக்கு காட்டப் பார்க்கிறார். இதையாவது சொல்லி வாக்கு கேக்கலாம் என்று நினைக்கிறார்.

நாடாளுமன்ற - சட்டமன்றங்களில் 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை பெண்களுக்குக் கொடுப்பதாக இருந்தால், உண்மையிலேயே அதில் அக்கறை இருந்தால், அதை உடனடியாக வழங்க வேண்டாமா? 2029-ஆம் ஆண்டுதான் வழங்குவார்களாம். இவர்கள் நிறைவேற்றியிருக்கும் மசோதா படி, அதையும் உறுதியாக சொல்ல முடியாது.

அதுமட்டுமில்லாமல், மகளிர் இட ஒதுக்கீட்டை தேவையே இல்லாமல் மக்களவை தொகுதி மறுவரையறை கூட இணைத்து இந்த மசோதாவை நிறைவேற்றியிருக்கிறார்கள். இதனால் தென் மாநிலங்களின் வலிமை. தொகுதி எண்ணிக்கை மிகவும் குறையும். இந்த வஞ்சகத் திட்டத்தை எதிர்த்து கழகம்தான் முதலில் எதிர்ப்பு குரல் கொடுத்திருக்கிறது. தொடர்ந்து இதை எதிர்த்துப் போராடுவோம்!

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திறனற்ற பா.ஜ.க தமிழ்நாட்டில் டெபாசிட் வாங்கக் கூட தகுதியில்லாத கட்சி என்று நம்மை விட அவர்களுக்கே நன்றாக தெரியும். அதனால்தான் அடிமை அ.தி.மு.க.வை பயமுறுத்தி - அச்சுறுத்தி தன்னுடைய கூட்டணியில் வைத்திருக்கிறார்கள்.

அவர்கள் சண்டை போடுவதாக வெளியில் நடிக்கிறார்கள். உள்ளே நட்பாக இருக்கிறார்கள். எதற்காக இந்த நடிப்பு? அ.தி.மு.க.வை ஆதரித்தால், அவர்களின் ஊழல்களுக்கு பா.ஜ.க.வும் பொறுப்பேற்க வேண்டி வரும். பா.ஜ.க.வை ஆதரித்தால், பா.ஜ.க.வின் மதவாதத்திற்கு அ.தி.மு.க.வும் துணைபோக வேண்டி வரும். அதனால் நடிக்கிறார்கள்.

'போடு தோப்புக்கரணம்' என்று பா.ஜ.க சொன்னால், 'இந்தா எண்ணிக்கொள்ளுங்கள்' என்று சொல்லிக்கொண்டிருக்கும் கட்சிதான் அ.தி.மு.க. இங்கு இவ்வளவு சண்டை நடந்தபோது, உள்துறை அமைச்சரைப் பார்க்க பழனிசாமி சென்றாரே... என்ன காரணம்? ஊழல் வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு வருகிறது, காப்பாற்றுங்கள் என்று காலில் விழ சென்றாரா? கொடநாடு வழக்கில் இருந்து நழுவிடப் சென்றாரா? எதற்காக தனியாக சென்று உள்துறை அமைச்சரை சந்தித்தார்? இரண்டு நாட்களுக்கு முன்னர்கூட அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் ஒன்றிய அமைச்சர்களை திடீர் என்று சந்தித்தார்களே? சென்னையில் இருந்து சென்றால் தெரிந்துவிடும் என்று, கொச்சியில் இருந்து சென்ற மர்ம சந்திப்புகளுக்கு பின்னால் இருக்கும் அரசியல் என்ன? ஆட்சியில் இருந்தபோது மாநிலத்தின் நன்மைக்காக ஒன்றிய பா.ஜ.க. அரசு மூலமாக, தமிழ்நாட்டுக்கு அ.தி.மு.க கொண்டு வந்த நன்மை என்ன? எதுவும் இல்லை.

இந்த லட்சணத்தில் ஒரே நாடு - ஒரே தேர்தலை குப்புற விழுந்து ஆதரிக்கிறார் பல்லக்குத் தூக்கி பழனிசாமி. நன்றாக இருக்கிறதல்லவா இந்தப் ’பல்லக்குத் தூக்கி பழனிசாமி’ பட்டம்? என்ன அருகதையில் தமிழ்நாட்டு மக்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று பழனிசாமி பகல் கனவு காண்கிறார்? பழனிசாமி அவர்களே! சட்டமன்றத்துக்கும் சேர்த்து தேர்தல் வந்தால், உங்கள் கட்சி இப்போது இருக்கும் நிலைமைக்கு உள்ளதும் போய்விடும், ஜாக்கிரதை!

”டெபாசிட் வாங்கக் கூட தகுதியில்லாத கட்சி பாஜக; மூன்றாவது முறை ஆட்சிக்கு வரமுடியாது” : முதலமைச்சர்  உறுதி!

பா.ஜ.க.வின் பாசிச திட்டங்கள் எல்லாவற்றிகும் ஆட்சியில் இருந்தபோது தலையாட்டிவிட்டு, இன்றைக்கு பா.ஜ.க.வை எதிர்க்கின்ற மாதிரி மக்களிடம் காட்டிக்கொண்டு, மறைமுகமாக பா.ஜ.க தலைவர்களை சந்தித்துக்கொண்டு இருக்கும் கொத்தடிமைக் கூட்டத்திற்குக் கடந்த நாடாளுமன்றத் தேர்தலை போலவே இந்தத் தேர்தலிலும் படுதோல்வியை பரிசாகத் தர வேண்டும்.

இதுவரை மக்களை ஏமாற்றிய பா.ஜ.க. – அ.தி.மு.க. இந்தத் தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட இருக்கிறது. மக்களின் இந்தக் கோபத்தை நமக்கான வாக்குகளாக மாற்ற வேண்டிய கடமை வாக்குச் சாவடி பொறுப்பாளர்களான உங்களுக்கு இருக்கிறது.

கட்சிக்காக உழையுங்கள்! மக்களுக்காக உழையுங்கள். அதற்கான உரிய பலன் உங்களைத் தேடி வரும். இயக்கத்திற்காக இரவு பகல் பாராமல் உழைத்தவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. அவர்களை கழகம் எப்போதும் கைவிடாது.

இயக்கத்திற்காக ரத்த நாளங்களாக உழைக்கும் வாக்குச்சாவடி முகவர்களே! உங்களில் ஒருவனான இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உங்களிடம் வேண்டுகோள் வைத்து உரையாற்றி இருக்கிறேன்.

அடுத்த முறை உங்களைச் சந்திக்கும்போது, நான் வெற்றி செய்தியைத்தான் கேட்க வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம்! உழைப்போம்! உழைப்போம்!

நாற்பதும் நமதே! நாடும் நமதே!

நன்றி! வணக்கம்!

இவ்வாறு அவர் உரையாற்றினார்.

Related Stories

Related Stories