தமிழ்நாடு

”பா.ஜ.கவின் ஊழல் முகத்தை கிழித்தெறிய வேண்டும்”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனல் பறக்கும் பேச்சு!

இந்தியாவைக் காக்க இந்தியா கூட்டணியை வெல்ல வைக்க வேண்டியது நமது அரசியல் கடமை மட்டுமல்ல நம்முடைய கொள்கை கடமை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலிறுத்தியுள்ளார்.

”பா.ஜ.கவின் ஊழல் முகத்தை கிழித்தெறிய வேண்டும்”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனல் பறக்கும் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் தி.மு.க. பவள விழா கழகப்பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டாவில் நடைபெற்றது. இந்த முப்பெரும் விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றியரை சிறப்புரை வருமாறு:-

''நான் சாமான்யன் - மிகமிகச் சாமான்யன். எனக்கடுத்த தளநாயகர்கள் எத்தனை பேர் வேண்டும்? இதோ எண்ணிக் கொள்!" - என்று சொல்லி தனது தம்பிமார்கள் பட்டாளத்துக்கு திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் சூட்டினார் பேரறிஞர் அண்ணா அவர்கள். கொட்டும் மழையில் பிறந்ததால் -உடனே வளர்ந்தது கழகம். இன்று பவளவிழா காண்கிறது.

ஒரு அரசியல் இயக்கம் 75 ஆண்டு காலம் நின்று நிலைத்திருப்பது என்பது சாதாரணமானது அல்ல. பெரிய பெரிய தலைவர்கள் உருவாக்கிய இயக்கமெல்லாம் அவர்கள் மறைந்தபோது - அவர்களோடு சேர்ந்து மறைந்த எத்தனையோ வரலாறுகளை நாம் படித்திருக்கிறோம். ஆனால் தோன்றிய காலத்தில் எப்படி இருந்ததோ - அதே இளமையோடு - அதே வேகத்தோடு - அதே விவேகத்தோடு - அதே உழைப்போடு - அதே உணர்வோடு இன்று வரை - இந்த 75 ஆவது ஆண்டிலும் கழகம் செழிப்போடு இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் - கோடிக்கணக்கான கழகத் தொண்டர்கள் தான் இதற்குக் காரணம்.

உங்கள் அனைவரையும் தம்பிகளே என்று அழைத்தார் அண்ணா. உடன்பிறப்பே என்று விளித்தார் கலைஞர். நான் உங்களில் ஒருவன். நான் வேறு - நீங்கள் வேறல்ல. உங்களால் உருவாக்கப்பட்டவன் நான். தொண்டர்களால் தலைவனாகவும் - தொண்டர்களால் முதலமைச்சராகவும் ஆக்கப்பட்டவன் நான்.கழகத்தின் எந்தப் பொறுப்புக்கும் ஆசைப்படாமல் - அதிகாரத்தின் எந்தப் பதவியையும் அனுபவிக்காமல் - கருப்புச் சிவப்புக் கொடியைப் பிடித்திருந்தால் போதும் - கருப்பு சிவப்பு வேட்டியைக் கட்டியிருந்தால் போதும் - என்ற உணர்வோடு உயிர்வாழும் தொண்டர்கள் இருக்கும் திசை நோக்கி நான் வணங்குகிறேன்.

நீங்களும் - உங்கள் குடும்பமும் சேர்ந்து வாழ வைத்துக் கொண்டிருக்கும் உங்கள் இயக்கம் தான் இப்போது பவள விழா கொண்டாடுகிறது. நூற்றாண்டு விழாவையும் கொண்டாட இருக்கிறது. எந்தக் கட்டடமும் கட்டப்படும் முன் எடுத்து வைக்கப்படுவது செங்கல் தான். ஆனால் அது திறப்பு விழாவின் போது வெளியில் தெரியாது. மலர் மாலைகள் தான் தெரியும். மாலைகள் உதிர்ந்து விடும். ஆனால் செங்கல்கள் தான் கடைசி வரையிலும் காப்பாற்றும்.அத்தகைய அடித்தளம் தான் கழகத்தின் கோடிக்கணக்கான உடன்பிறப்புகள். அடித்தளத்தை நானும் மறக்க மாட்டேன். யாரும் மறந்து விடக் கூடாது.

அதனால் தான் மூத்தமுன்னோடிகளுக்கு அனைத்து மாவட்டங்களிலும் சிறப்புச் செய்து கொண்டே இருக்கிறோம். ஒரு குடும்பத்துக்கு தாய் - தகப்பனைப் போன்றவர்கள் தான் ஒரு இயக்கத்துக்கு மூத்த முன்னோடிகள். அவர்களை இந்த பவள விழா ஆண்டில் போற்றுங்கள் - பாராட்டுங்கள் என்று அனைத்து மாவட்டக் கழகச் செயலாளர்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன். அவர்களது கடந்த காலத் தொண்டுக்கு இணையாக நாம் எதையும் கொடுத்துவிட முடியாது. அவர்களை பாராட்டுவதன் மூலமாக நாம் நன்றிக்குரியவர்களாக ஆகிறோம். அவர்களை பாராட்டுவதன் மூலமாக நமது மதிப்பு உயரும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்ன தளநாயகர்கள் அவர்கள் தான். தலைவர் கலைஞர் அவர்கள் சொன்ன ரத்த நாளங்கள் அவர்கள் தான். இவர்களைப் பார்த்து புதிய புதிய தளநாயகர்கள் உருவாக வேண்டும். இரண்டு கோடி உறுப்பினர்கள் இன்று இயக்கத்தில் இருக்கிறார்கள். இரண்டு கோடிப் பேர் என்ற எண்ணிக்கை தேவையில்லை. இரண்டு கோடி கொள்கைவாதிகள் நிரம்பிய கோட்டை திராவிட முன்னேற்றக் கழகம். இதைவிட எனக்கு வேறு என்ன பெருமை வேண்டும்? இது கனவுகள் நிறைவேறும் காலம். அதனால் தான் நான் கம்பீரமாக நிற்கிறேன்.மகிழ்ச்சியுடன் - மனநிறைவுடன் நிற்கிறேன்.

”பா.ஜ.கவின் ஊழல் முகத்தை கிழித்தெறிய வேண்டும்”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனல் பறக்கும் பேச்சு!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முகவரியாகவும் - முகமாகவும் இருப்பவர்கள் தந்தை பெரியார். பேரறிஞர் அண்ணா. முத்தமிழறிஞர் கலைஞர். பாவேந்தர் பாரதிதாசன். இனமானப் பேராசிரியர் ஆகிய ஐவரும் ஆவார்கள். இவர்கள் தனிமனிதர்கள் அல்ல, தத்துவத்தின் அடையாளங்கள். தந்தை பெரியாரின் சமூகநீதியும் பேரறிஞர் அண்ணாவின் மாநில உரிமையும் முத்தமிழறிஞர் கலைஞரின் ஒடுக்கப்பட்டோர் உரிமையும் பாவேந்தரின் மொழிப்பற்றும் இனமானப் பேராசிரியரின் இனமானமும் தான் நம்மை வழிநடத்துகிறது.

அவர்களது கொள்கையை நாம் பின்பற்றுவதும் - அவர்கள் வழிநடக்கும் தளகர்த்தர்களைத் தேர்ந்தெடுத்து ஆண்டு தோறும் விருதுகள் வழங்குவதும் நமது இயக்கத்தின் மாபெரும் கடமையாகும். இந்த ஐம்பெரும் ஆளுமைகளின் பெயரால் ஆண்டு தோறும் விருதுகளை வழங்கி வருகிறோம். இந்த ஆண்டுக்கான பெரியார் விருது கி.சத்திய சீலன் அவர்களுக்கும் - அண்ணா விருது முன்னாள் அமைச்சர் சுந்தரம் அவர்களுக்கும் கலைஞர் விருது இன்னாள் அமைச்சர் மாண்புமிகு ஐ. பெரியசாமி அவர்களுக்கும் பாவேந்தர் விருது மிலிகா கதிரவன் அவர்களுக்கும் பேராசிரியர் விருது ந.ராமசாமி அவர்களுக்கும் வழங்கப்படுகிறது. விருதுகள் பெற்ற ஐந்து பேரையும் வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன், போற்றுகிறேன்.

* பெரியார் விருதினைப் பெற்றுள்ள கி.சத்தியசீலன் அவர்கள் 1956 ஆம் ஆண்டு முதல் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றியவர். கிளைக்கழகச் செயலாளர் முதல் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் வரை உயர்ந்தவர். இன்று அவருக்கு 85 வயது. ஆனாலும் நெஞ்சுறுதியோடு காட்சி அளிக்கிறார் என்றால் கலைஞர் அவருக்கு அளித்த பாராட்டுப் பத்திரம் தான் காரணம். “சத்தியம் தவறாத சத்தியசீலன்” என்று இவருக்கு மகுடம் சூட்டி இருக்கிறார் கலைஞர். தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளை உதட்டளவில் இல்லாமல் உள்ளார்ந்த ஈடுபாடுடன் கடைப்பிடித்த சத்திய சீலன் இந்த ஆண்டுக்கான பெரியார் விருதை பெறுகிறார்.

* முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் அவர்கள் அண்ணா பெயரிலான விருதினைப் பெற்றுள்ளார்கள். அமைதியாக பணியாற்றுபவர்களுக்கு எடுத்துக் காட்டு வேண்டுமானால் அது க.சுந்தரம் தான். எந்தப் பொறுப்பை வகித்தாலும் அதில் அமைதியாகவும் - ஆக்கபூர்வமாகவும் செயல்படக் கூடியவர் அவர்.

”பா.ஜ.கவின் ஊழல் முகத்தை கிழித்தெறிய வேண்டும்”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனல் பறக்கும் பேச்சு!

* கலைஞர் பெயரிலான விருதை இந்த ஆண்டு நம்முடைய அன்புக்குரிய அமைச்சர் திண்டுக்கல் ஐ. பெரியசாமி அவர்கள் பெறுகிறார்கள். கலைஞர் விருது பெறுவதன் மூலம் அவர் பெருமை அடைவதைப் போலவே அவருக்கு வழங்குவதன் மூலமாக கலைஞர் விருதும் பெருமை அடைகிறது. 1980 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கருப்பு மீசையுடன் கம்பீரமாக பார்த்தேன். இன்று வெள்ளை மீசையுடன் கம்பீரமாகப் பார்க்கிறேன்.

அன்று முதல் இன்று வரை உற்சாகம் குறையாமல் கழகத்துக்காக உழைத்துக் கொண்டிருப்பவர் ஐ.பி.அவர்கள். நானும் அவரும் ஒரே ஆண்டில் பிறந்தவர்கள். என்னை விட இரண்டு மாதம் மூத்தவர் அவர். கல்லூரி மாணவராக இருந்தபோதே கழகச் செயல்வீரராகச் செயல்பட்டவர். இருபது ஆண்டு காலமாக மாவட்டச் செயலாளராக இருந்து திண்டுக்கல் மாவட்டத்தை மட்டுமல்ல, தென் மாவட்டங்களையே கழகக் கோட்டையாக மாற்றி அமைத்தவர் ஐ.பி.அவர்கள். ஏழு முறை சட்டமன்ற உறுப்பினர் - மூன்றாவது முறையாக அமைச்சர் என அசைக்க முடியாத சிறப்புகளுக்குச் சொந்தக்காரர் ஐ.பி. 'லட்சியவாதி என் தம்பி ஐ.பி.' என்று தலைவர் கலைஞரால் பாராட்டப்பட்டவர்.கலைஞரின் வெறியர் என்றே சொல்லத்தக்கவருக்கு கலைஞர் பெயரிலான விருது வழங்கப்பட்டுள்ளது.

பாவேந்தர் பெயரிலான விருதை திருமதி மலிகா கதிரவன் அவர்கள் பெறுகிறார்கள்.கதிரவனும் மலிகாவும் இணைந்து கழகப் பணியாற்றியவர்கள் என்பதை தென்காசி வட்டாரத்து மக்கள் நன்கு அறிவார்கள். ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டச் செயலாளராக பணியாற்றிய கதிரவன் அவர்கள் மறைந்த பிறகும் - தனது கழகப் பணிகளை தொடர்ந்து பாவேந்தர் வழிகாட்டிய புரட்சி பெண்ணாகத் திகழ்பவர் தான் மலிகா அவர்கள்.

* பேராசிரியர் அவர்கள் பெயரிலான விருதை பெங்களூரைச் சேர்ந்த ராமசாமி அவர்களுக்கு வழங்கி இருக்கிறோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் மாநாடு 1951 ஆம் ஆண்டு சென்னையில் நடந்தபோது அதில் கலந்து கொள்வதற்காக பெங்களூரில் இருந்து வந்தவர் என்ற பெருமைக்குரியவர் இவர்.கர்நாடக மாநில திமுகவை வளர்த்தெடுத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர். தமிழ்நாட்டுத் தலைவர்கள் அனைவரையும் அழைத்து கர்நாடக மாநிலத்தில்பொதுக்கூட்டங்கள் நடத்தி, கழகப் பிரச்சாரத்தை தீவிரமாகமேற்கொண்டார். இன்னொரு மாநிலத்தில் கழகம் வளர்ப்பது எவ்வளவு சிரமம் என்பதை அனைவரும் அறிவோம். அதனைச் சிரமமாக இல்லாமல் சிறப்பாக செய்து காட்டியவர் ராமசாமி அவர்கள்.

விருதுகள் பெற்றுள்ள அனைவரையும் தலைமைக் கழகத்தின் சார்பில் மட்டுல்ல தனிப்பட்ட முறையிலும் பாராட்டக் கடமைப் பட்டுள்ளேன். உங்களது ரத்தத்தால், வியர்வையால், தியாகத்தால், தொண்டால் வளர்ந்த இயக்கம். உங்களுக்கு விருதுகள் தருவதன் மூலமாக நாங்கள் எங்களது நன்றியைக் காட்டுகிறோமே தவிர - உங்களது தொண்டுக்கு பரிசு வழங்குகிறோம் என்று பொருள் அல்ல. உங்களது உழைப்பு விலைமதிக்க முடியாதது. உங்களது தொண்டு அளவிடமுடியாதது. இத்தோடு உங்களது பொறுப்பும் கடமையும் முடிந்துவிடவில்லை. எங்களுக்கு வழிகாட்டுங்கள். இன்றைய இளைஞர்களை வழிநடத்துங்கள் என்று விருதாளர்கள் அனைவரையும் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

”பா.ஜ.கவின் ஊழல் முகத்தை கிழித்தெறிய வேண்டும்”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனல் பறக்கும் பேச்சு!

மிக மிக முக்கியமான காலக்கட்டத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்தியாவில் ஜனநாயகத்தைக் காக்கும் போர்க்களத்தை நோக்கிய பயணத்தில் இந்த முப்பெரும் விழாவை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்தியாவின் விடுதலைக்கு தொடக்கப் புள்ளியாக இருந்த இந்த வேலூரில் இந்த விழா நடைபெறுவது மிகப் பொருத்தமானது ஆகும். 1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் உதயம் ஆனது.

75 ஆண்டுகளாக தமிழ்ச் சமுதாயத்தின் காவல் அரணாக கழகம் செயல்பட்டு வருகிறது. 1967 ஆம் ஆண்டு முதன் முதலாக நாம் ஆட்சிக்கு வந்தோம். 1971, 1989, 1996, 2006, 2021 என ஆறு தேர்தலாக வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து வருகிறோம்.ஒரு பக்கம் ஆட்சி - இன்னொரு பக்கம் கட்சி இரண்டின் மூலமாக தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களை விட தலைசிறந்த மாநிலமாக மாற்றி வருகிறோம்.அனைத்துத் துறைகளிலும் தலைசிறந்த மாநிலமாக உருவாக்கி வருகிறோம்.இடையிடையே கொள்கையற்ற அதிமுக கூட்டத்தின் ஆட்சி வந்து தமிழ்நாட்டைச் சீரழித்தாலும் -அதனையும் திருத்திக் கொண்டு - தமிழ்நாட்டை வளர்த்தெடுத்து வருகிறோம்.இன்றைக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சி -தமிழ் நாட்டு மக்களின் வளர்ச்சி -தமிழினத்தின் வளர்ச்சி - பலருக்கும் பொறாமை ஏற்படுத்தும் வளர்ச்சியாக இருக்கிறது.

தமிழ்நாடு என்ற மாநிலத்தை - அதற்கான உரிமைகளை சிதைப்பதன் மூலமாக நம் மாநில மக்களின் வாழ்க்கையை அழிக்கப் பார்க்கிறார்கள். அதனைத் தான் பட்டவர்த்தனமாக பாரதிய ஜனதா கட்சி செய்து வருகிறது. ஜி.எஸ்.டி மூலமாக மாநில உரிமையைப் பறித்து விட்டார்கள். ஒரு மாநில அரசை நடத்துவதற்கு மிக முக்கியமான நிதி ஆதாரம் என்பது வரி வருவாய் தான். அந்த வரி வருவாயை கபளீகரம் செய்வதன் மூலமாக மாநில அரசைச் செயல்பட விடாமல் முடக்குகிறார்கள்.

மக்களுக்கு நேரடியாக தொடர்பு கொண்டது மாநில அரசுகள் தான். மக்களுக்கு தேவையான கல்வி - சுகாதாரம் - குடிநீர் - சாலை வசதிகள் - கடன்கள் - மானியங்கள் - பெண்கள் முன்னேற்றம் - விளிம்பு நிலை மக்களுக்கான உதவிகள் - இவை அனைத்தையும் வழங்க வேண்டிய கடமை மாநில அரசுகளுக்குத் தான் இருக்கிறது. இதனைச் செய்து தருவதற்கு நிதி வேண்டாமா?அப்படிப்பட்ட நிதிகளை கிடைக்கவிடாமல் செய்யவே ஜிஎஸ்டியை கொண்டு வந்து நிதி வருவாய் வாசல்களை அடைத்தார்கள். நிதியை வசூல் செய்கிறீர்களே.. முறையாக பிரித்துக் கொடுக்கிறீர்களா என்றால் அதுவும் இல்லை.

அதேபோல் கல்வி மிக முக்கியமான ஒரு துறை.ஒவ்வொரு மாநில அரசும் - அங்கு வாழும் பெரும்பான்மை மக்களின் பண்பாட்டு - கலாச்சாரம்- அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப கல்வியை வழங்கும்.புதிய கல்விக் கொள்கை - பொதுவான கல்வி முறை என்ற பெயரால் சமப்படுத்துகிறோம் என்ற போக்கில் நமது மாநிலத்தின் கல்வி வளர்ச்சியை தடுக்கப் பார்க்கிறார்கள்.ஒன்றிய அரசாங்கம் சொல்லும் கல்வி வளர்ச்சியை - தமிழ்நாடு மாநிலம் எப்போதோ எட்டி விட்டது.கல்வியில் சிறந்த மாநிலமான தமிழ்நாட்டை முடக்குவதற்கான முயற்சிதான் அவர்கள் கொண்டு வரும் கல்விக் கொள்கை.

நீட் தேர்வைப் பற்றி நான் சொல்லத் தேவையில்லை.மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்களின் கனவைச் சிதைப்பதற்காக கொண்டுவரப்பட்டதே நீட் தேர்வு.லட்சங்களைச் செலவு செய்து படிக்க முடிந்தவர்களால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும் என்ற நிலையை உருவாக்கி விட்டார்கள்.சில தனியார் கோச்சிங் செண்டர்கள் லாபத்துக்காகவே இந்த தேர்வு நடத்தப்படுகிறது. அனிதா முதல் யோகேஸ்வரன் வரை இது வரை 23 பேர் தமிழ்நாட்டில் தற்கொலை செய்துள்ளார்கள்.

இத்தகைய தற்கொலைகள் இப்போது வட மாநிலங்களிலும் நடக்கத் தொடங்கி இருக்கிறது.கடந்த 14 ஆம் தேதி ஜார்கண்டைச் சேர்ந்த மாணவி, ராஜஸ்தானில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் தேர்வுக்கு படிப்பதற்காக வந்தவர் அவர்.கடந்த மாதம் ராஜஸ்தானில் 2 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்.

ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் கடந்த ஆண்டில் 22 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.இப்படி உயிரைப் பறிக்கும் தேர்வாக நீட் இருக்கிறது.இத்தனை தற்கொலைகள் நடந்து வருகிறதே இதற்கான காரணத்தை ஆராய்ந்ததா ஒன்றிய பாஜக அரசு? இரக்கமற்ற அரசாக நரேந்திரமோடியின் அரசு இருக்கிறது.

”பா.ஜ.கவின் ஊழல் முகத்தை கிழித்தெறிய வேண்டும்”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனல் பறக்கும் பேச்சு!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்போம் என்று 2015 ஆம் ஆண்டு சொன்னார்கள்.இரண்டு வாரங்களுக்கு முன்னால் டெண்டர் விட்டுள்ளார்கள்.இவை அனைத்தையும் யாரும் நினைவூட்டி விடக் கூடாது என்பதற்காகத் தான் மற்ற பிரச்னைகளைக் கிளப்பி குளிர் காயப் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு வந்து பல வாக்குறுதிகளைக் கொடுத்தார்.அந்த வாக்குறுதிகளையாவது நிறைவேற்றினாரா என்றால் இல்லை.

*2014 ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வரும் போது சமையல் சிலிண்டர் விலை 420.இதனை 1100 ரூபாய்க்கு உயர்த்தியது தான் மோடியின் சாதனை. மூன்று மடங்கு உயர்த்தினார்கள்.தேர்தல் வருவதால் கண்துடைப்பு நாடகமாக 200 ரூபாயை குறைத்துள்ளார்கள்.

* 2014 ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வரும் போது பெட் ரோல் ஒரு லிட்டர் 71 ரூபாய்இப்போது ஒரு லிட்டர் 102 ரூபாய்3 மடங்கு ஒன்றிய அரசின் வரியை உயர்த்தி இருக்கிறார்கள்.

* மோடி ஆட்சிக்கு வரும் போது டீசல் ஒரு லிட்டர் 55 ரூபாய்.இப்போது ஒரு லிட்டர் 94 ரூபாய். 7 மடங்கு ஒன்றிய அரசின் வரியை உயர்த்தி இருக்கிறார்கள்.

* கடந்த ஒன்பது ஆண்டுகளில் மட்டும் 100 லட்சம் கோடி கடன் வாங்கி இருக்கிறது பாஜக அரசு.2014 ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வரும் போது இந்தியாவுக்கு இருந்த கடன் 55 லட்சம் கோடி தான். அது இந்த ஒன்பது ஆண்டு காலத்தில் 155 லட்சம் கோடியாகி விட்டது.

* பெரிய நிறுவனங்களுக்கு 14 லட்சம் கோடி பணத்தை வாராக் கடன் என்று ரத்து செய்துள்ளது பாஜக அரசு.

* பணவீக்கம் அதிகமாகி இருக்கிறது.

அண்மையில் வெளியான சிஏஜி அறிக்கைப்படி மட்டும் 7.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு முறைகேடு நடந்துள்ளது.ஊழல் குற்றச்சாட்டில் எந்த துறை அதிகாரிகள் அதிகம் சிக்கி இருக்கிறார்கள் என்றால் சிபிஐ அதிகாரிகள் தான் என்று மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையமே புள்ளிவிபரம் கொடுத்திருக்கிறது. இத்தகைய ஊழல் முகத்தை மறைக்கப் பார்க்கிறார்கள்.இந்த ஊழல் முகத்தை கிழித்தெறிய வேண்டும்.இதுதான் நம் முன் உள்ள முக்கிய கடமை ஆகும்.பாஜகவின் ஊழல் முகத்தை பொதுமக்கள் மத்தியில் அம்பலப்படுதியாக வேண்டும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நமது கூட்டணி தான் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறப் போகிறது.அதில் சந்தேகமில்லை.தமிழ்நாட்டில் மட்டும் நாம் வெற்றி பெற்றால் போதாது. இந்தியா முழுமைக்கும் வெற்றி பெற்றாக வேண்டும். அதனால் தான் இந்தியா கூட்டணியை உருவாக்கி இருக்கிறோம்.

நம்முடைய ஆட்சி ஒன்றியத்தில் அமைந்தால் 15 மாதத்தில் மதுரையில் எய்மஸ் மருத்துவமனையைக் கட்டி எழுப்ப முடியுமா?முடியாதா? நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்வோம்.தமிழ்நாட்டுக்குத் தேவையான ரயில்வே திட்டங்கள் ஏராளமாகக் கொண்டு வர நம்மால் முடியும்.

புதிய விமான நிலையங்கள் - மெட் ரோ ரயில்களை இயக்க முடியும். இவை அனைத்தும் நம்முடைய இந்தியா கூட்டணி ஆட்சி அமையுமானால் தமிழ்நாட்டுக்கு கொண்டு வர முடியும். இந்தியா முழுமைக்கும் சமூகநீதியை உருவாக்கித் தர நம்மால் முடியும். இங்கே நாம் அமல்படுத்தி வரும் திராவிட மாடல் திட்டங்களை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு சேர்க்க முடியும். இத்தகைய பொற்காலத்தை உருவாக்கித் தரவே நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகிறது.

இந்தியாவைக் காக்க இந்தியா கூட்டணியை வெல்ல வைக்க வேண்டியது நமது அரசியல் கடமை மட்டுமல்ல நம்முடைய கொள்கை கடமை ஆகும்.முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழி என்பதுநாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 இடங்களையும் வெற்றி பெற்றே தீருவோம் என்பது ஆகும்.திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவள விழா ஆண்டில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழி என்பதுஇந்திய நாடாளுமன்றத்தில் ஆட்சி அதிகாரத்தை செலுத்தும் கூட்டணிக் கட்சியாக நமது இயக்கத்தை உயர்த்துவோம் என்பதுதான். நாற்பதுக்கு நாற்பது வெல்வோம்! இந்தியாவைக் காப்போம்! இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு முழுமையாகப் பாடுபடுவோம்!

Related Stories

Related Stories