தந்தை பெரியார் சொல்லியிருப்பதைத் தான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன். யார் என்ன சொன்னாலும், எதையும் பகுத்தறிவுக்கு உட்படுத்தி சிந்தித்து முடிவெடுங்கள் - உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்.
சென்னை பாரிமுனையில் உள்ள மெட்ராஸ் மருத்துவ கல்லூரி வளாகத்தில் தமிழ்நாட்டில் உள்ள 50 மருத்துவக் கல்லூரிகளை உள்ளடக்கிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த 6 தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. இதில் 24 அரசு மருத்துவக் கல்லூரிகள், 26 தனியார் மருத்துவக் கல்லூரிகளை சேர்ந்த 1537 மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
ENCIRRO என்னும் பெயரில் நடைபெற்ற இந்த விளையாட்டுப் போட்டியின் இறுதி நாளான இன்று வெற்றியாளர்களுக்கு கோப்பைகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒட்டுமொத்த சாம்பியன்ஸ் பட்டத்தை பெற்ற மெட்ராஸ் மருத்துவக் கல்லூரிக்கு கோப்பையினை வழங்கி கௌரவித்தார்.
மேலும் இதர போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரிகளுக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோப்பையினை வழங்கினார். மேலும் இந்த நான்கு நாட்கள் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூபாய் 8 லட்சம் நிதியாக வழங்கப்பட்டமைக்கு கல்லூரி முதல்வர் நன்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பாக நூற்றாண்டு கண்ட மருத்துவ கல்லூரி, தற்போது 200 ஆண்டை நெருங்கி கொண்டு இருக்கிறது. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார் பயின்ற மருத்துவ கல்லூரி இந்த மெட்ராஸ் மருத்துவ கல்லூரி.
முன்பு எல்லாம் 50 வயதை கடந்தவர்கள் தான் நடை பயிற்சி மேற்கொள்ளவர்கள், ஆனால் தற்போது இளம் வயதினரும் உடற்பயிற்சியின் ஆரம்ப அறிந்து நடைபயிற்சியில் ஈடுபடுகிறார்கள்.விளையாட்டுப் போட்டியில் உங்களுக்கு எத்தனை ஆர்வம் இருக்கிறதோ, அதே போல தான் முதலமைச்சருக்கும் ஆர்வம் உள்ளது.
அதனால் தான் முதலமைச்சர் விளையாட்டுத்துறை சார்பாக எந்த கோரிக்கை வைத்தாலும் உடனடியாக நிறைவேற்றி கொடுக்கிறார். தேசிய அளவில் பன்னாட்டு அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு உக்க தொகை கொடுத்து வருகிறோம்.
உங்களிடம் நான் அரசியல் பேச விரும்பவில்லை. உங்களுக்கே தெரியும் 6 நாட்களாக நம் நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று, நான் என்ன பேசினேன் என்பதை உங்கள் கருத்துக்கே விட்டுவிடுகிறேன். நீங்களே நான் பேசியதை பார்த்து விட்டு ஒரு முடிவுக்கு வாருங்கள்.
திராவிட இயக்கம் தான் இன்று இங்கு இத்தனை பெண் மருத்துவ மாணவர்கள் உருவாகக் காரணம். அதைத் தான் பேசினேன். தந்தை பெரியார் சொல்லியிருப்பதைத் தான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன். யார் என்ன சொன்னாலும். எதையும் பகுத்தறிவுக்கு உட்படுத்தி சிந்தித்து முடிவெடுங்கள்” என தெரிவித்தார்.