தமிழ்நாடு

இந்தியாவுக்கே முன்மாதிரி மாநிலமாக தலைநிமிர்ந்து நிற்கிறது தமிழ்நாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

இந்தியாவுக்கே முன்மாதிரியான மாநிலமாக நம்முடைய தமிழ்நாடு வளர்ந்து கொண்டிருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கே முன்மாதிரி மாநிலமாக தலைநிமிர்ந்து நிற்கிறது தமிழ்நாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று(17.06.2023) சென்னை, நந்தம்பாக்கத்தில், 116 கோடி ரூபாய் மதிப்பீட்டில்நிதிநுட்ப நகரம் (FinTech City) அமைப்பதற்கும், 254 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சர்வதேச தரத்திலான நிதிநுட்ப கோபுரம் (FinTech Tower) கட்டுவதற்கும்அடிக்கல் நாட்டி ஆற்றிய உரை:-

கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு எடுத்த பல்வேறு முன்னெடுப்புகளின் காரணமாக தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கிறது.இந்தியாவுக்கே முன்மாதிரியான மாநிலமாக நம்முடைய தமிழ்நாடு வளர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, தொழில்துறையானது மிக வேகமான முன்னேற்றங்களை உருவாக்கித் தந்து வருகிறது. முன்பு நம்முடைய தங்கம் தென்னரசு அவர்கள் தொழில்துறைஅமைச்சராக செயல்பட்டார்கள். அவரது வழித்தடத்தில் இப்போது டி.ஆர்.பி. ராஜா அவர்கள், தொழில்துறை அமைச்சராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாடு அரசின் தொழில்துறை நிகழ்ச்சிகள் என்பவை நமது மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் நிகழ்ச்சிகளாக அமைந்திருக்கின்றன. தொழில்துறையில், சாதனை மேல் சாதனைகளை நாம் செய்து வருகிறோம். முதலீடுகளை ஈர்ப்பதற்கு எடுத்து வைத்திடும் ஒவ்வொரு அடியும், வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் ஒரு பெரிய இலட்சியத்தினைக் கொண்டதாக இருக்கின்றது. அனைவரையும் உள்ளடக்கிய நமது திராவிட மாடல் வளர்ச்சி பல மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

இந்தியாவுக்கே முன்மாதிரி மாநிலமாக தலைநிமிர்ந்து நிற்கிறது தமிழ்நாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

நமது கடுமையான முயற்சி, உலகளாவிய நிறுவனங்களது கவனங்களை வெகுவாக ஈர்த்திருக்கிற காரணத்தால் தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை மேற்கொள்ள தமிழ்நாட்டை நோக்கி வந்த வண்ணம் இருக்கின்றது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள இளைஞர்களும், பெண்களும் அவர்களது வசிப்பிடத்திற்கு அருகிலேயே பணிபுரிய ஏதுவாக, பரவலாக, மாநிலம் முழுவதும் இம்முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நிதிநுட்பத்துறைக்கான மின்னணுமயமாக்கப்பட்ட நிதிச்சேவைகள் அனைத்தும் ஏழை எளிய மக்கள் அனைவரையும் சென்றடையவேண்டும். ஆன்லைன் விற்பனைகள் இன்னும் பலமடங்கு அதிகரித்திருக்கிறது. கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் அதிகரிக்கத் தொடங்கிய மின்னணுமயமாக்கப்பட்ட வங்கிச் சேவைகளின் பயன்பாடு, தற்போது பன்மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த வளர்ச்சியை நன்கு பயன்படுத்திக்கொண்டு நாமும் வளர்ந்திடவேண்டியது அவசியம் என்பதை அரசின் கடமையாக நான் கருதுகிறேன்.

தற்போதுள்ள சூழ்நிலையில், ATM-இல் பணம் எடுப்பதைவிட, கைபேசி மூலமாக பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்வது அதிகமாக உள்ளது. வங்கிகள் ஏறக்குறைய முழு டிஜிட்டல் வங்கிகளாக மாறிவிட்டனவோ என்ற அளவிற்கு, தற்போது டிஜிட்டல் பணபரிவர்த்தனைகள் அதிகரித்து வருகின்றன. முற்றிலுமாக எல்லா இடங்களுக்கும் எல்லாத் தரப்பினரயும் இது இன்னும் சென்றடையவில்லை என்று சொன்னாலும், எதிர்காலத்தைக் கருதி, அதற்கு ஏற்ப நமது திட்டமிடுதல்கள் இருக்கவேண்டும்.

தற்போது அதிவேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள், மின்னணுவியல், புத்தாக்கம் மற்றும் புத்தொழில் நிறுவனங்களும் தமிழ்நாட்டில் சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுள்ளன.

பாரம்பரியமாக செயல்பட்டு வரும் வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதிநிறுவன சேவைகள் வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கும் நிதிநுட்பத்துறையும் தமிழ்நாட்டில் மிகப்பெரிய வளர்ச்சி காணும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

நிதிநுட்பத்தொழில் சூழலமைப்பைப் பொறுத்தவரையில், தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது என்பதற்கு இங்கு அமையப் பெற்றுள்ள நிறுவனங்களே சாட்சி.

படித்த திறன்மிகு இளைஞர்களின் சக்தி இங்கு கொட்டிக் கிடக்கிறது. பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வருவதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணமாக அமைந்திருக்கிறது. இதனை நாம் தக்க வைத்துக் கொள்ளவேண்டும். அடுத்த கட்டத்திற்கும் எடுத்துச் செல்லவேண்டும்.

நாளை வரப்போகும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப, நமது இளைஞர்களின் திறன்களை வளர்த்து, முன்னேறுவதில் நாங்கள் கண்ணும் கருத்துமாக இருக்கிறோம். அதன் ஒரு பகுதியாகத்தான், ‘நான் முதல்வன்’ திட்டத்தை தொடங்கி இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். நிதிநுட்பத்துறை முதலீடுகளை மதிநுட்பத்துடன் ஈர்க்க, நாங்கள் ஏராளமான முன் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

2025-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை நிதிநுட்ப நிறுவனங்களின் உலகளாவிய மையமாக மாற்றக்கூடிய வகையில் தமிழ்நாடு நிதிநுட்பக் கொள்கை 2021 என்ற சிறப்புக் கொள்கையை நான் வெளியிட்டிருக்கிறேன்.

இந்தியாவுக்கே முன்மாதிரி மாநிலமாக தலைநிமிர்ந்து நிற்கிறது தமிழ்நாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

50 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு மேற்கொள்ளும் நிதிநுட்ப நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.

தொழில்துறை வழிகாட்டி நிறுவனத்தில் தனியே ஒரு நிதிநுட்பப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

தொழில்துறை அமைச்சர் தலைமையில் ஒரு நிதிநுட்ப ஆட்சிமன்றக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வரிசையில் சென்னையில் ஒரு நிதிநுட்ப நகரம் அமைத்திடுவதற்கும், நிதிநுட்ப சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் வகையில், ஒரு நிதிநுட்ப கோபுரத்தை அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டி வைத்ததில், நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த நிதிநுட்ப நகரத்தில், இந்திய மற்றும் பன்னாட்டு நிதி நிறுவனங்களுக்கு ஏற்றவகையில் நவீன உட்கட்டமைப்பு வசதிகளை அமைத்துத்தர இருக்கின்றோம். சென்னை மாநகரத்தின் மையப்பகுதியான நந்தம்பாக்கத்தில், 56 ஏக்கர் நிலத்தை, இதற்கென ஒதுக்கி இருக்கிறோம்.

இதன்மூலம், நிதிநுட்பத் துறையில் 12 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து, 80 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.

மேலும், இங்கு 5.6 இலட்சம் சதுரஅடி பரப்பளவு கொண்ட ஒரு நிதிநுட்ப கோபுரம் (FinTech Tower) ஒன்றை அமைக்கவுள்ளோம். இதன்மூலம், ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாக முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, ஏறக்குறைய 7 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். சுருங்கச்சொன்னால், அடுத்த தலைமுறைத் தொழில்நுட்பங்களான நிதிச்சேவைகள் மற்றும் அது தொடர்பான செயல்பாடுகள் அதனுடைய மையமாக இந்த நிதிநுட்ப நகரம் செயல்படும்.

இது வெறும் தொடக்கம்தான். நாங்கள் மேற்கொண்டுள்ள இந்தப் பயணத்தில், உங்கள் அனைவரின் ஈடுபாட்டையும் நான் வரவேற்கிறேன். உங்கள் நிதிநுட்பத் தீர்வுகள்மூலம், தமிழ்நாட்டினை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்வதற்கு உங்கள் ஆதரவை இந்த நேரத்தில் நான் வேண்டுகிறேன்.

ஜனவரி மாதம் நடைபெற உள்ள, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அதிக அளவில் பங்கேற்று, சிறப்பிக்குமாறும் உங்கள் துறை சார்ந்த தொழில்களில் அதிக முதலீடுகளை மேற்கொள்ளுமாறும் உங்களுக்கு இந்தத் தருணத்தில் அன்போடு அழைப்பு விடுக்கிறேன்.

இந்த நிகழ்ச்சியை வெகுவாக மிகச் சிறப்பாக நடத்திடக் காரணமாக இருந்த தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா அவர்களுக்கும், தொழில்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலர் ச.கிருஷ்ணன் அவர்களுக்கும், தொழில்துறை அதிகாரிகளுக்கும், எனது மனமார்ந்த பாராட்டுகள்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சிறப்பித்துள்ள வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகளுக்கும், தொழிலதிபர்களுக்கும், தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் உங்கள் அத்தனை பேருக்கும் நான் இந்தத் தருணத்தில் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொண்டு இந்த அளவில் என் உரையை நிறைவு செய்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories