தமிழ்நாடு

பாஜகவின் பிரதமர் வேட்பாளராக தமிழரை அறிவிக்க தயாரா?: அமித்ஷாவுக்கு சவால் விட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளராக தமிழரை அறிவிக்கத் தயாரா? என அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

பாஜகவின் பிரதமர் வேட்பாளராக தமிழரை அறிவிக்க தயாரா?:  அமித்ஷாவுக்கு சவால் விட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

காவிரி டெல்டா பகுதி விவசாய பெருமக்கள் குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையிலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தண்ணீர் திறந்து வைத்தார். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி: அமித் ஷா தமிழ்நாடு வந்தார், இரண்டு முறை தமிழர் ஒருவர் பிரதமர் ஆவதை திமுக தான் தடுத்தது என்று கூறியிருக்கிறாரே.

முதலமைச்சர் பதில்: அதை வெளிப்படையாக அவர் சொன்னாரென்றால், அதற்கு உரிய விளக்கத்தை நம்மால் சொல்லமுடியும். அதனால் அதற்கு விளக்கமாக இப்போது பதில் சொல்ல முடியாது. இருந்தாலும், தமிழரை பிரதமராக ஆக்கப் போகிறேன் என்று சொன்னது உள்ளபடியே மகிழ்ச்சியாக இருக்கிறது. மோடி மேல் என்ன கோபம் என்று தெரியவில்லை. 2024-ல் பாஜக-வின் பிரதமர் வேட்பாளராக தமிழர் வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தால், தமிழிசை இருக்கிறார்கள், முருகன் இருக்கிறார், ஒருவேளை அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.

கேள்வி: கர்நாடக அரசு மேதாது அணை கட்டுவதற்கு மும்முரமாக இருக்கிறார்கள், அதற்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

முதலமைச்சர் பதில்: அதை எதிர்ப்பதில் நாங்களும் மும்முரமாக இருக்கிறோம்.

பாஜகவின் பிரதமர் வேட்பாளராக தமிழரை அறிவிக்க தயாரா?:  அமித்ஷாவுக்கு சவால் விட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கேள்வி: கடந்த 50 ஆண்டு காலமாக நிலுவையில் உள்ள சரபங்கா திட்டத்தை செயல்படுத்துவது குறித்து.

முதலமைச்சர் பதில்: அது ஆய்வில் இருக்கிறது.

கேள்வி: தமிழ்நாட்டிற்கு ஏராளமான திட்டங்களை பாஜக அரசு கொடுத்திருப்பதாக அமித்ஷா அவர்கள் ஒரு பட்டியலை வெளியிட்டிருக்கிறார்.

முதலமைச்சர் பதில்: நான் சேலத்தில் நடந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் தெளிவாக பேசியிருக்கிறேன். அதாவது, பாஜக ஆட்சி இருந்தபோது, எந்த சிறப்புத் திட்டமும் இந்த ஒன்பது வருடங்களில் தமிழ்நாட்டிற்கு வரவில்லை. ஆனால் ஏற்கனவே காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்த திமுக அப்போது ஆட்சியில் இருந்த மன்மோகன் சிங் தலைமையில் இருந்த ஆட்சியில் என்னென்ன சிறப்புத் திட்டங்கள் வந்தது என்பதை பட்டியல் போட்டு நான் காண்பித்து இருக்கிறேன். அவர் அதைப் படிக்கவில்லையா? இல்லை அதைப் படித்து அதை யாரும் எடுத்துச் சொல்லவில்லையா? என்பதுதான் எனக்கு சந்தேகம். பாஜக-வினுடைய ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் என்ன செய்திருக்கிறது என்று கேள்வி கேட்டேன். அந்தக் கேள்விக்கு எந்த பதிலும் கிடையாது.

ஆனால், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், அன்றைக்கு தமிழ்நாட்டிற்குக் கிடைத்ததை சொல்ல வேண்டுமென்றால், சென்னைக்கு புதிதாக கிடைத்த மெட்ரோ ரயில், தமிழுக்கு செம்மொழி தகுதி, தமிழ் செம்மொழி உயராய்வு நிறுவனம், சேது சமுத்திர திட்டம், ஒரகடத்தில் தேசிய மோட்டார் வாகன சோதனை ஆராய்ச்சி மையம், தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம், சேலத்தில் புதிய ரயில்வே கோட்டம், சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை, நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், ஒகேனக்கல்லில் கூட்டுக் குடிநீர்த் திட்டம், சென்னைக்கு அருகில் கடல்சார் தேசிய பல்கலைக்கழகம், திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம், கரூர், ஈரோடு, சேலம் ஆகிய மூன்று இடங்களில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப ஜவுளிப் பூங்கா. இவையெல்லாம் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தான் வந்தது.

பாஜகவின் பிரதமர் வேட்பாளராக தமிழரை அறிவிக்க தயாரா?:  அமித்ஷாவுக்கு சவால் விட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இதேபோல தமிழ்நாட்டிற்கு என்ன சிறப்புக்களை கொண்டு வந்திருக்கிறது என்பதுதான் என் கேள்வி. எனவே எந்தத் திட்டத்திற்கும் தொடர்ச்சியாக நிதி ஒதுக்கீடு செய்வதை நான் கேட்கவில்லை. அனைத்து மாநிலத்திற்கும் செய்யப்படும் பொதுவான இடத்தில் தமிழ்நாடு இணைக்கப்பட்டிருப்பதைப் பற்றி நான் கேட்கவில்லை. இன்றைக்கு ஜிஎஸ்டி-யில் ஒவ்வொரு மாநிலமும் ஒன்றிய அரசிற்கு நிதி கொடுத்துக் கொண்டிருக்கிறது. அந்த ஜிஎஸ்டி-யில் தமிழ்நாட்டிலிருந்து அதிகமாகக் கொடுத்திருக்கிறோம். ஆனால் தமிழ்நாட்டிற்குத் தான் இன்றைக்கு ஒன்றிய அரசு நிதி கொடுப்பதில் மிகவும் குறைவாக கொடுத்துக் கொண்டிருக்கிறது, மற்ற மாநிலங்களுக்கெல்லாம் அதிகமாக கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதைத்தான் அடிப்படையாக வைத்துக் கேட்டேன்.

அதேபோல, மதுரையில் 1200 கோடி ரூபாய் மதிப்பில் பிஜேபி ஆட்சிக்கு வந்தவுடன் அன்றைக்கு நிதி அமைச்சராக இருந்த திரு. அருண் ஜெட்லி அவர்கள் பாராளுமன்றத்தில் அதற்கு உறுதி கொடுத்தார், அறிவித்தார்கள். அது என்ன ஆகியது? பிரதமர் வந்து அடிக்கல் நாட்டினார். அதற்குப் பின் பலமுறை அமித் ஷா அவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார்கள். வந்தபோது, பணி 50 சதவீதம் முடிந்துவிட்டது, 75 சதவீதம் முடிந்துவிட்டது என்று சொல்லிவிட்டுச் சென்றாரே தவிர இதுவரைக்கும் எந்தப் பணியும் நடைபெறவில்லை என்பதுதான் என்னுடைய குற்றச்சாட்டு. அதையெல்லாம் மூடி மறைத்து அவர் பேசிவிட்டுச் சென்றிருக்கிறாரே தவிர, நான் கேட்ட கேள்விக்கு எதற்கும் பதில் தரவில்லை.

பாஜகவின் பிரதமர் வேட்பாளராக தமிழரை அறிவிக்க தயாரா?:  அமித்ஷாவுக்கு சவால் விட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கேள்வி: டாஸ்மாக்கில் பத்து ரூபாய் ஊழல் புகார் குறித்து...

முதலமைச்சர் பதில்: அதெல்லாம் திட்டமிட்டு செய்யக்கூடிய பிரச்சாரங்கள்.

கேள்வி: எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவராததற்கு திமுக தான் பதில் சொல்ல வேண்டும் என்று அமித் ஷா சொல்லியிருக்கிறாரே?

முதலமைச்சர் பதில்: திமுக ஆட்சியில் இருந்தபோது, எய்ம்ஸ் என்று ஒரு மருத்துவமனை தேவையே படவில்லை. ஏனென்றால் நம்முடைய மருத்துவக் கட்டமைப்புகள் அதிக அளவில் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது. இருந்தாலும், இதை அறிவித்தது யார்? திமுக-வா அறிவித்தது, அறிவித்தது ஒன்றிய அரசு. அவர்கள் தான் இதைச் செய்ய வேண்டும். இந்தக் கேள்வியைக் அவர் கேட்பதே ஒரு பொறுப்புள்ள உள்துறை அமைச்சருக்கு அழகல்ல.

கேள்வி: திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஊழல் பெரிய அளவில் நடந்தது என்று சொல்கிறார்கள்.

முதலமைச்சர் பதில்: ரஃபேல் ஊழல், அதானி ஊழல். இன்றைக்கு இந்தியாவே தலைகுனிந்து நிற்கிறது. முதலில் அதற்கு பதில் சொல்லட்டும், அதற்குப் பின் இதைப் பேசுவோம்.

கேள்வி: அத்திக்கடவு - அவினாசி திட்டம் எந்த அளவுக்கு இருக்கிறது.

முதலமைச்சர் பதில்: முடியக்கூடிய நிலையில் இருக்கிறது, விரைவில் திறக்கப்படும்.

banner

Related Stories

Related Stories