தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் விடுமுறைக்கு பிறகு நேற்று மீண்டும் சட்டப்பேரவை கூடியது. நேற்று சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர் எஸ்.ரகுபதி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
1. திருநெல்வேலியில் கூடுதலாக ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும்.
2. செய்யாறில் ஒரு கூடுதல் சார்பு நீதிமன்றம் அமைக்கப்படும்.
3. வானூரில் செயல்பட்டு வரும் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தைப் பிரித்து தனியாக ஒரு மாவட்ட உரிமையியல் நீதிமன்றமும், ஒரு குற்றவியல் நடுவர் நீதிமன்றமும் அமைக்கப்படும்.
4. வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் ஒரு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைக்கப்படும்.
5. நீதிபதிகளின் பயன்பாட்டிற்காக 818 மடிக்கணினிகள் மற்றும் அச்சுப்பொறிகள் வாங்கப்படும்.
6. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் பயன்பாட்டிற்குப் புதிதாக 11 தொடு திரை கியோஸ்க் கருவிகள் வாங்கப்படும்.
7. மாநிலத்தில் உள்ள 1008 சார்நிலை நீதிமன்றங்களுக்குக் கணினி மற்றும் உபகரணங்கள் ரூ.80 கோடியில் வாங்க நிர்வாக ஒப்புதல் 2023 - 2024 மற்றும் 2024- 2025 ஆகிய நிதியாண்டுகளில் இரண்டு கட்டடங்களாக நிதி ஒப்புதல் வழங்கப்படும்.
8. அனைத்து சிறைகளிலும் நூலக வசதி ரூ.208.74 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும்.
9. அனைத்து மத்திய சிறைகள் மற்றும் தனிக் கிளைச்சிறை பூந்தமல்லி ஆகிய சிறைகளுக்கு Non Linear Junctin Detecter ரூ.325 லட்சம் செலவில் கொள்முதல் செய்யப்படும்.
10. சிறைவாசிகளுக்கு உணவு முறை மற்றும் உணவின் அளவினை மாற்றி வழங்கிட ரூ.2600.00 லட்சம் கூடுதல் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
11. சிறைவாசிகள் தயாரிக்கப்படும் சிறைச் சந்தை பொருட்களை FreeDom என்ற குறியீட்டுப் பெயரில் தமிழ்நாடு காவலர் அங்காடியில் விற்பனை செய்யப்படும்.
12. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக நூலகத்திற்குச் சட்டப் புத்தகங்கள் வாங்கிட ரூ.65 லட்சம் நிதி வழங்கப்படும்.
13. அரசு சட்டக் கல்லூரிகள் மற்றும் சீர்மிகு சட்டப்பள்ளியில் இளநிலை சட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு வழக்காடுதல் கலை என்ற தலைப்பில் பயிலரங்கம் நடத்தப்படும்.