தமிழ்நாடு

#TNBUDGET2023 : அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி.. எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? முழு விவரம்!

தமிழ்நாடு அரசின் 2023-2024 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளவை அடங்கிய முழு விவரம் இங்கே.

#TNBUDGET2023 : அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி.. எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? முழு விவரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு அரசின் நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,2023-24 ஆம் ஆண்டிற்கான வரவு- செலவுத் திட்ட மதிப்பீடுகளை இன்று சட்டமன்றப் பேரவை முன்வைத்து ஆற்றிய உரை:-

2023-24 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளை இந்த பெருமைமிகு பேரவையில் முன்வைக்கிறேன். தமிழ்நாட்டு மக்களின் நலனையும், நல்வாழ்வையும் இரு கண்களாகக் கருதி, பல இடர்பாடுகளுக்கு இடையே நம் மாநிலத்தை பொறுப்புணர்வுடன் வழிநடத்தி வரும் நம் முதலமைச்சர் தலைமைப்பண்பை எடுத்துக்கூறும், காலத்தால் அழியாத அய்யன் திருவள்ளுவரின் குறளை நினைவு கூர்ந்து எனது உரையைத் தொடங்குகிறேன். 

கொடையளி    செங்கோல்     குடியோம்பல்    நான்கும் 

உடையானாம்    வேந்தர்க்    கொளி 

(குறள் – 390)

நல்வாழ்வுக்குவேண்டியவற்றைவழங்கியும், நிலையுணர்ந்துகருணைகாட்டியும், நடுநிலைதவறாமல்ஆட்சிநடத்தியும், மக்களைப்பேணிக்காப்பதேஓர்அரசுக்குப்புகழொளிசேர்ப்பதாகம்.

கடந்த ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில், நிதி மற்றும் நிருவாக நலனைக் கருத்திற்கொண்டு, பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு, சமூகநலனையும், அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியையும், இலக்குகளாகக் கொண்டு, பல நலத்திட்டங்களும் வகுக்கப்பட்டன. இத்திட்டங்களின் அடிப்படையில், இந்த ஆண்டு நாங்கள் எய்த விரும்பிய இலக்குகளில், குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளோம் என்ற உளமார்ந்த மனநிறைவுடன், இந்த வரவு-செலவுத் திட்ட உரையை, இன்று, இந்த அவையின் முன்வைக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக, அனைத்து தளங்களிலும் சமூகநீதியை உறுதி செய்வதற்கான தொலைநோக்குப்பார்வையைக் கொண்ட இந்த திராவிட மாடல் ஆட்சிமுறை, நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் முன்னோடிகள் காட்டிய வழியில் வெற்றிநடை போட்டு வருகிறது. இம்முன்னேற்றப் பாதையில் அன்றும் இன்றும் என்றும் எங்களுக்கு வழிகாட்டும் அந்த முன்னோடிகளுக்கு எனது வணக்கத்தையும் மரியாதையையும் இவ்வேளையில் உரித்தாக்கிடக் கடமைப்பட்டுள்ளேன்.

சமூகநீதி, பெண்களுக்கு சமஉரிமை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, பகுத்தறிவு ஆகிய
நான்கு அடிப்படைத் தத்துவங்களை கொண்டு, நம் நாட்டிற்கே ஒரு கலங்கரை விளக்கமாக நமது மாநிலம் திகழ்ந்து வருகிறது. ஒரு நூற்றாண்டிற்கு முன்னரே, சமூக மாற்றத்திற்கு வித்திட்ட நீதிக்கட்சியின் அடிச்சுவடிகளைப் பின்பற்றி, நாம் இன்றும் நடந்து வருவதே இதற்கு காரணமாகும். முப்பெரும் தலைவர்களான தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரால் வழிநடத்தப்பட்ட திராவிட இயக்கம், சுயமரியாதைச் சிந்தனையை தமிழ்ச்சமூகத்தின் வாழ்வியல் அங்கமாக  பதித்துள்ளது. இந்த சுயமரியாதைச் சிந்தனைதான், மாநில சுயாட்சி, மொழி உரிமைகள், உண்மையான கூட்டாட்சி ஆகிய மாநில உரிமைக் கொள்கைகளுக்குக் குரல் கொடுக்கும் ஒரு முன்னோடியாக நம்மைத் திகழச்செய்துள்ளது. இச்சிந்தனை வழிவந்த நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தமிழ்ச் சமுதாயத்தின் ஆணிவேரான இந்தக் கொள்கைகளின் அரணாகவும் உயிர் மூச்சாகவும் திகழ்கிறார்.

முதலமைச்சர் அவர்களின் தொடர் வழிகாட்டுதலுக்கும் கனிவான ஆதரவிற்கும் முதற்கண் நன்றி கூறுகிறேன். அவர் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையும், அவர் தொடர்ந்து எங்களுக்கு அளித்து வரும் ஊக்கத்தின் காரணமாகவே நிருவாகத்தில் சிறப்பான சீர்திருத்தங்களை மேற்கொண்டு, மக்களின் நலன் காத்திட இயன்றது. இந்த அடிப்படையில், கடந்த வரவு-செலவுத் திட்டத்தில், கீழ்வரும் பொருண்மைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. 

  1. பொருளாதார வளர்ச்சியை உயர்த்துதல்; 

  2. சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துதல்; 

  3. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்; 

  4. கல்வியின் மூலம் பெண்களின்  வாழ்வாதார மேம்பாடு; 

  5. விளிம்பு நிலை மக்களின் சமூகப் பொருளாதார வளர்ச்சி; 

  6. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் மூலமாக வறுமை ஒழிப்பு;  

  7. தரவுகள் அடிப்படையிலான நிருவாகத்தின் மூலம் அரசின் திட்டங்கள் பொதுமக்களை முழுமையாகச் சென்றடைவதை உறுதி செய்தல்; 

  8. சுற்றுச்சூழலில் நீடித்த நிலைத்த தன்மையையும், தலைமுறைகளுக்கு இடையேயான சமத்துவத்தையும் உறுதி செய்தல்; 

இவை அனைத்திலும் நடப்பாண்டில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைக் கண்டுள்ளோம். இந்த சாதனைகளை நாம் கொண்டாடும் அதேவேளையில், வரலாறு காணாத பணவீக்கம்,
உக்ரைனில் தொடரும் போர், உலகப் பொருளாதாரத்திலும்
நிதிச் சந்தைகளிலும் நிலவும் நிச்சயமற்ற சூழல் போன்ற பல சவால்களையும் வரும் நிதியாண்டில் நாம் எதிர்நோக்கியுள்ளோம். தேசிய அளவோடு ஒப்பிட்டு பார்க்கையில், நம் மாநிலத்தில்
கடந்த ஆண்டு அதிகப் பொருளாதார வளர்ச்சியை எய்தியுள்ளதோடு, வருவாய் மற்றும் நிதிப்பற்றாக்குறையையும் ஒன்றிய அரசைவிடக் கணிசமாகக் குறைத்துள்ளோம்.  இது நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமைப்பண்பிற்கும் திறன்மிக்க நிதிமேலாண்மைக்கும் சான்றாகும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகச் செலவுள்ள பல நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வரும்போதிலும், முன்னெப்போதுமில்லாத அளவில் பல கடினமான சீர்திருத்தங்களை மேற்கொண்டு, நாங்கள் பதவியேற்கும் போது சுமார் 62,000 கோடி ரூபாயாக இருந்த வருவாய் பற்றாக்குறையை,  நடப்பு ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் சுமார் 30,000 கோடி ரூபாய் அளவிற்கு குறைத்துள்ளோம். இது, கோவிட் பெருந்தொற்றிற்கு முந்தைய 2019-20 ஆம் ஆண்டின் பற்றாக்குறையை ஒப்பிட்டாலும், ஏறத்தாழ 5,000 கோடி ரூபாய் குறைவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. வருவாய் பற்றாக்குறையை அறவே அகற்ற வேண்டுமென்ற நிதிப் பொறுப்புடைமைச் சட்டத்தின் இலக்கை எட்டிட,  அரசின் சமூக நலத்திட்டங்களுக்கும் வளர்ச்சி முன்னுரிமைகளுக்கும் எவ்வித பாதிப்புமின்றி, வரும் ஆண்டுகளில் வருவாய்ப் பற்றாக்குறை படிப்படியாகக் குறைக்கப்படும்.

இந்த அரசு பதவியேற்றபோது சந்தித்த நிதி நெருக்கடிக்கு முக்கியக் காரணம், அதற்கு முந்தைய ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வரி வருவாயில் ஏற்பட்ட வீழ்ச்சியே ஆகும். 2006 முதல் 2011 வரையுள்ள ஆண்டுகளில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் சராசரி எட்டு சதவீதமாக இருந்த மாநிலத்தின் சொந்த வரி வருவாய், கடந்த பத்து ஆண்டுகளில் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு, 2020-21 ஆம் ஆண்டு 5.58 சதவீதமாகக்  குறைந்தது.  மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மற்ற பெரிய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் இந்த விகிதம் குறைவாகவே உள்ளது.  கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த அரசு எடுத்த முயற்சிகளின் பலனாக இந்த விகிதம் 6.11 சதவீதமாக தற்போது உயர்ந்துள்ள போதிலும், இதனை மேலும் உயர்த்தி நலத்திட்டங்களுக்கான வருவாய் ஆதாரங்களை ஈட்டிட முனைப்போடு செயல்படுவோம்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் கோவிட் பெருந்தொற்றின் இரண்டாவது அலையையும், சென்னைப் பெருவெள்ளத்தையும், கடுமையான நிதி நெருக்கடியையும் சிறப்பாகக் கையாண்டு, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிக்காட்டி, சாதனைகள் பல புரிந்துள்ள முதலமைச்சர் அவர்கள் வரும் ஆண்டுகளிலும், நாம் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அந்த அறிவுரைகளை மனத்தில் நிறுத்தியே இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்ற இந்த அறிமுக உரையுடன், 2023-24 ஆம் ஆண்டிற்கான துறைவாரியான வரவு-செலவுத் திட்ட உரையைத் தொடங்குகிறேன்.

#TNBUDGET2023 : அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி.. எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? முழு விவரம்!

தமிழ் வளர்ச்சி, பண்பாடு:

தாய் தமிழைக் காக்க, இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இன்னுயிர் நீத்த  மொழிப்போர் தியாகிகளான திருவாளர்கள் தாளமுத்து, நடராசன் ஆகியோரின் பங்களிப்பைப் போற்றும் வகையில், சென்னையில் நினைவிடம்  ஒன்று அமைக்கப்படும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தையும், முற்போக்கு சமத்துவ இந்தியாவின் சிற்பியுமான அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளைப் பரப்புவதற்காக, அவரது படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும். இதற்காக அரசால் ஐந்து கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படும்.

தொழில்நுட்பத் துறையில், தமிழ் மொழியின் பயன்பாட்டினை அதிகரிப்பதன் மூலம், தமிழ் மொழி உலக மொழியாக வளர்வதற்கு, புகழ்பெற்ற வல்லுநர்களைக் கொண்டு, ‘தமிழ்க் கணினி பன்னாட்டு மாநாடு’ நடத்தப்படும். தமிழ்மொழியில் பெருமளவில் மென்பொருட்கள் உருவாக்கப்படுவதை இது ஊக்குவிக்கும்.

கடல் தாண்டி கொடி நாட்டிய தமிழர் பெருமை கூறும் பண்பாட்டு விழுமியங்களை எடுத்தியம்பும் வகையில், தமிழர் பண்பாட்டுத் தலங்களை இணைக்க தமிழ்ப் பண்பாட்டுக் கடல்வழிப் பயணங்கள் ஊக்குவிக்கப்படும். இந்தப் பயணங்கள்,
நம் இனத்தின் செம்மையான வரலாறு, இலக்கியம்,
கலை, பண்பாடு, கைவினைப்பொருட்கள், உணவு வகைகளை வெளிக்கொணர்வதோடு, தமிழ்நாட்டின்  புகழை எட்டுத்திக்கும் பரப்பும். 

நமது தாய்மொழிக்கு ஆற்றிய அளப்பரிய பங்களிப்பினை கருத்திற்கொண்டு அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு கட்டணமில்லா பேருந்துப் பயண அட்டையை அரசு வழங்கி வருகிறது. வரும் ஆண்டில், மேலும், 591 அகவை முதிர்ந்த  தமிழ் அறிஞர்களுக்கு இச்சலுகையை அரசு வழங்கும்.

பார் போற்றும் நம் கலைப் பண்பாட்டினை இளைய தலைமுறையினர் அறிந்து, மகிழும் வகையில், சென்னையில் அனைத்துத் தரப்பு மக்களின் வரவேற்பினைப் பெற்றுள்ள
சங்கமம் கலை விழா, வரும் ஆண்டில் மேலும் எட்டு
முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
நாட்டுப்புறக் கலைகளையும், கலைஞர்களையும் பேணி வளர்ப்பதற்கும்,
தமிழ் மக்களின் பண்பாட்டு விழுமியங்களின் பகிர்வினைக் கொண்டாடுவதற்கும் நல்வாய்ப்புகளை இவ்விழாக்கள் ஏற்படுத்தும். இதற்காக இந்த வரவு-செலவுத் திட்டத்தில்
11 கோடி ரூபாய் சேர்க்கப்பட்டுள்ளது.

நாட்டுப்புறக் கலைகளைப் பாதுகாக்கவும், இப்பண்பாடு தொடர்ந்து வருங்காலங்களிலும் செழித்தோங்கவும், மாநிலம் முழுவதும் 25 பகுதி நேர நாட்டுப்புறக் கலைப் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.

கடல் பல கடந்து, சமர் பல வென்று, இந்தியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் பெரும் நிலப்பரப்பை பல நூற்றாண்டுகள் ஆட்சி செய்த பெருமைக்குரியது சோழப் பேரரசு. தமிழரின் கலை, இசை, கட்டடக்கலை, சிற்பக்கலை, கைவினை, நடனம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் சோழர் காலத்தில் புகழின் உச்சத்தை அடைந்து பாரெங்கும் பரவின. உலகாண்ட சோழர்களின் பங்களிப்பைப் போற்றவும், அக்கால கலைப்பொருட்கள், நினைவுச்சின்னங்களைப் பாதுகாக்கவும், தஞ்சாவூரில் "மாபெரும் சோழர் அருங்காட்சியகம்" ஒன்று அமைக்கப்படும்.

#TNBUDGET2023 : அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி.. எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? முழு விவரம்!

இலங்கைத் தமிழர் நலன்:

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில், அத்தியாவசிய பொருட்களை அளித்து உதவி செய்வதற்கான ஒப்புதலை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஒன்றிய அரசிடம் பெற்று, மூன்று கப்பல்களில், 40,000 டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் 102 டன் மருந்துப் பொருட்கள் ஆகியன, 197 கோடி ரூபாய் செலவில் இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று
தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகின்றோம். இந்த கோரிக்கை நிறைவேறும் வரையிலும் அவர்களுக்கு, பாதுகாப்பான, தரமான தங்குமிடங்களை வழங்கும் நோக்கத்துடன்
மறுவாழ்வு முகாம்களில் 7,469 புதிய வீடுகள் கட்டப்படும்
என இந்த அரசு அறிவித்திருந்தது. இதன் முதற்கட்டமாக,
3,510 வீடுகளுக்கான பணிகள் 176 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. இரண்டாம் கட்டமாக மீதமுள்ள
3,959 வீடுகளைக் கட்ட, வரும் நிதியாண்டில் 223 கோடி ரூபாயை அரசு வழங்கும்.

முன்னாள் படை வீரர்கள் நலன்:

தம் இன்னுயிர் ஈந்து நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கும் படை வீரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றும் வகையில், போர் மற்றும் போரையொத்த நடவடிக்கைகளின் போது உயிர்த் தியாகம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த படை வீரர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசால் வழங்கப்படும் கருணைத் தொகை 20 இலட்சம் ரூபாயிலிருந்து, இருமடங்காக உயர்த்தி 40 இலட்சம் ரூபாயாக வழங்கப்படும். மேலும், வீரதீரச் செயல்களுக்கான உயர் விருதுகளைப்
பெறும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினருக்கு தற்போது வழங்கப்படும் பரிசுத்தொகையும் நான்கு மடங்காக உயர்த்தி வழங்கப்படும்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு :

தரமான கல்வியும், மருத்துவ வசதிகளும் அனைத்து மக்களுக்கும் கிடைத்திடச் செய்வதே இந்த அரசின் அடிப்படை நோக்கம். இதனைக் கருத்தில் கொண்டே, மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் போன்ற பல முன்னோடித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதோடு, தமிழ்நாட்டின்
பொதுச் சுகாதாரக் கட்டமைப்பையும் மேலும் வலுப்படுத்துவதற்கான பல்வேறு பணிகளையும் இந்த அரசு மேற்கொண்டு வருகின்றது. இந்த அரசின் முன்னோடித் திட்டமான ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில்,
தொற்றா நோய்களை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து, குணப்படுத்த சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் தொழிலாளர்களின் நலனில் தனி அக்கறை கொண்டுள்ள இந்த அரசு, தொழிற்சாலைகளிலும், கட்டுமானம் உள்ளிட்ட அமைப்புசாரா தொழில்களிலும் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தொற்றா நோய்களால் பாதிக்கப்படுவதைத் தடுக்க ஒரு சிறப்பு முயற்சியைத் தொடங்க உள்ளது. இதன்படி,  முதற்கட்டமாக
711 தொழிற்சாலைகளிலுள்ள 8.35 இலட்சம் தொழிலாளர்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் விரிவுபடுத்தப்படும். உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற தொற்றா நோய்களுக்கு முக்கியத்துவம் அளித்து, இந்த மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். இத்திட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்களும் பயனடைவார்கள்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், குடும்பம் ஒன்றிற்கு ஆண்டுக்கு ஐந்து இலட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில்,
இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 11.82 இலட்சம் நோயாளிகளுக்கு 993 கோடி ரூபாய் மதிப்பிலான உயிர்காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. 

கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் 1,000 படுக்கைவசதி கொண்ட ‘கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை’ இந்த ஆண்டு திறந்து வைக்கப்படும். 1,020 கோடி ரூபாய் செலவில் மதுரை, கோயம்புத்தூர், கீழ்ப்பாக்கம் ஆகிய இடங்களிலுள்ள மூன்று
அரசு மருத்துவக் கல்லூரி வளாகங்களில் கட்டப்பட்டு வரும்
புதிய உயர்மருத்துவக் கட்டடங்களும் விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும்.

திருச்சிராப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களின் உயர்மருத்துவ சிகிச்சைத் தேவைகளை நிறைவு செய்து வரும் மகாத்மா காந்தி நினைவு அரசினர் மருத்துவமனையில், 110 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்படும். வடசென்னை பகுதி மக்களின் மருத்துவத் தேவையை நிறைவு செய்யும் வகையில், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பன்னோக்கு மருத்துவப் பிரிவும், செவிலியர் பயிற்சி பள்ளி மற்றும் விடுதிக்கு புதிய கட்டடங்களும் 147 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.

 மாநிலத்தின் முதல் அரசு சித்த மருத்துவக் கல்லூரி பாளையங்கோட்டையில் 1964 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.  இக்கல்லூரியில் தற்போது 100 இளங்கலை பட்டதாரிகளும்,
60 முதுகலை பட்டதாரிகளும் பயின்று வருகின்றனர்.  நாள்தோறும் ஏறத்தாழ 1,000 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பணிகள் 40 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.
வரவு-செலவுத் திட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு 18,661 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

#TNBUDGET2023 : அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி.. எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? முழு விவரம்!

பள்ளிக் கல்வி:

இந்த அரசு மேற்கொண்ட பல்வேறு முன்னெடுப்புகளால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது. எனவே,
அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும், புதிய கட்டடங்கள் கட்டிடவும் 7,000 கோடி ரூபாய் செலவில்,
‘பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தை’
அரசு தொடங்கியுள்ளது. நடப்பாண்டில், 2,000 கோடி ரூபாய்  செலவில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் நிதியாண்டில், புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் என மொத்தம் 1,500 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

‘எண்ணும் எழுத்தும் திட்டமானது’ 2025 ஆம் ஆண்டுக்குள் ஒன்று முதல் மூன்றாம் வகுப்புகளில்
பயிலும் மாணவர்கள் அனைவரும் அடிப்படை கல்வியறிவும் எண்கணிதத் திறனும் அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பின் அடிப்படையில், வரும் நிதியாண்டில் 110 கோடி ரூபாய் செலவில் நான்காம் ஐந்தாம் வகுப்புகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

அறிவைப் பரவலாக்கிக் கடைக்கோடி மனிதருக்கும் கொண்டு சேர்ப்பதன் மூலமே சமூக நீதித் தத்துவம் முழுமை அடைகிறது. அந்த அடிப்படையில் தலைநகர் சென்னை மட்டுமன்றி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழாக்களும் ஐந்து இலக்கியத் திருவிழாக்களும் வெற்றிகரமாக, இவ்வாண்டு நடத்தப்பட்டன. மகத்தான இம்முயற்சியை வரும் ஆண்டில் 10 கோடி ரூபாய் நிதியுடன் தொடர உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். முதல் சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சியினை 24 நாடுகளின் பங்கேற்புடன்
2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அரசு வெற்றிகரமாக நடத்தியது. தமிழ்நாடு மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளியீட்டாளர்களிடையே அறிவு பரிமாற்றம் மற்றும் பதிப்புரிமை பரிமாற்றத்திற்கு வழி வகுக்கும் 355 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளன. இந்த சர்வதேச புத்தகக் கண்காட்சி வரும் ஆண்டிலும் நடத்தப்படும்.  

பொது வாழ்வில் அனைத்துத் தளங்களிலும் சமூகநீதியையும் சமத்துவத்தையும் சமஉரிமையையும் நிலைநாட்டிட கல்வி நிலையங்களின் பங்கு மிகவும் இன்றியமையாதது. இதன் அடிப்படையில் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் எண்ணும் எழுத்தும், மாதிரிப் பள்ளிகள், திறன்மிகு பள்ளிகள், உயர்தர ஆய்வகங்கள், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் போன்ற பல்வேறு முன்னோடி முயற்சிகளை கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த அரசு மேற்கொண்டு வருகிறது.  இத்திட்டங்களின் பயன்கள் அனைத்து மாணவர்களையும் சென்றடைய வேண்டியது அவசியமாகும். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் 19-08-2021 மற்றும் 12-04-2022 ஆகிய நாட்களில் நடைபெற்ற மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டங்களில் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறை மூலம் நடத்தவும், பராமரிக்கவும், கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. கல்விப் பெருவழியில் நமது இலட்சியமான சமூகநீதியை அடைந்திட, பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்தவும், அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி வழங்கப்படுவதை உறுதி செய்யவும் வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை, இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை, வனத்துறை போன்ற பல்வேறு துறைகளின் கீழ்
செயல்படும் அனைத்து பள்ளிகளும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டு வரப்படும். 
இப்பள்ளிகளில் தற்போது பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் அனைத்து பணிப் பயன்களும் பாதுகாக்கப்படும்.

தரவுகள் அடிப்படையிலான ஆளுகை மூலம், திட்டங்களைச் செயல்படுத்துவதில் உள்ள குறைபாடுகளைக் களைய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு அரசுத் துறைகள் மூலம் வழங்கப்படும் கல்வி உதவித்தொகையில் உள்ள தேவையற்ற தாமதங்களைக் குறைக்கவும், தகுதிவாய்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உரிய நேரத்தில் நேரடிப் பணப்பரிமாற்ற முறையில், அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில் ஒருங்கிணைந்த கல்வி உதவித்தொகை இணையதளம் ஒன்று உருவாக்கப்படும்.

சங்கத்தமிழ் வளர்த்த மதுரையில் இரண்டு இலட்சம் சதுர அடி பரப்பளவில் எட்டு தளங்களுடன் நவீன வசதிகளைக் கொண்ட மாபெரும் நூலகம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.  குழந்தைகள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், போட்டித் தேர்வு எழுதும் இளைஞர்கள். இல்லத்தரசிகள், மூத்த குடிமக்கள்,
மாற்றுத் திறனாளிகள் என அனைத்துத் தரப்பினரும்
பயன்பெறும் வகையில், இந்த நூலகம் அமைக்கப்பட்டு
வருகிறது.  குழந்தைகளைக் கவரும் வண்ணமயமான
நூலகச் சூழல், போட்டித் தேர்வு மாணவர்களுக்கான இணையவசதியுடன் கூடிய சிறப்புப் பிரிவு, பார்வைத் திறன் குறைந்த வாசகர்களுக்காக பிரெய்லி வகை நூல்கள்,  குளிர்சாதன வசதி கொண்ட கூட்ட அரங்குகள், தென்தமிழகத்தின் பண்பாட்டைப் பறைசாற்றும் வகையில் கலை அரங்கம்
மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் படைப்புகள், பேச்சுகள் இடம் பெறும் வகையில் எழிலார்ந்த கூடம்
உள்ளிட்ட சிறப்பம்சங்கள் இம்மாபெரும் நூலகத்தில் இடம் பெற்றிருக்கும்.

முதற்கட்டமாக, இந்த நூலகத்தில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இலக்கியம், பண்பாடு, அறிவியல், பொறியியல், சட்டம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 3 இலட்சத்து 50 ஆயிரம் நூல்கள் இடம்பெறும். தென்தமிழ்நாட்டின் அறிவாலயமாகத் திகழப்போகும்
இந்நூலகம், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின்
நூற்றாண்டுத் தொடக்க நிகழ்வாக, தமிழ்ச் சமுதாயத்திற்கு
அவர் ஆற்றிய பணிகளைப் போற்றும் வகையில், “கலைஞர் நூற்றாண்டு நூலகம்” என்ற பெயரைத் தாங்கி, வரும்
ஜூன் மாதம் முதல் வாசகர்களை வரவேற்கும்.
வரவு-செலவுத் திட்டத்தில் பள்ளிக்கல்வித் துறைக்காக
40,299 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உயர்கல்வியும் திறன்மேம்பாடும்:

 மனிதவளமே மாநிலத்தின் மாபெரும்
செல்வம் என்பதை உணர்ந்துள்ள இந்த அரசு, அதனை மேம்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள, திறன்மிக்க பணியாளர்களே பன்னாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஒரு முக்கியக் காரணி என்பதை நன்கு அறிந்துள்ளோம். ஆகவே, மின்னல் வேகத்தில் மாறி வரும் தொழில் சூழலுக்கு தேவைப்படும் மனிதவளத்தை உருவாக்குவதற்கு, 2,877 கோடி ரூபாய் செலவில்,
71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தலைசிறந்த திறன் மையங்களாக மாற்றும் திட்டம் நடைபெற்று வருகிறது. வரும் கல்வி ஆண்டிலேயே, இப்பணிகள் முடிக்கப்பட்டு, புதிய
பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

இதன் அடுத்த கட்டமாக, தொழில்துறையினருடன் இணைந்து தொழில்துறை 4.0- தரத்திற்கு ஏற்ப அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளை ‘திறன்மிகு மையங்களாக’ மாற்றும் திட்டத்தை வரும் ஆண்டில் அரசு தொடங்கும். 
இக்கல்வி நிறுவனங்களில், கட்டமைப்பை  மேம்படுத்துவது, தொழில்சார்  பாடத்திட்டங்களை உருவாக்குவது,
ஆசிரியர்களின் திறன் மேம்பாடு, மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவை இத்திட்டத்தின் குறிக்கோள்களாகும்.  இத்திட்டத்தில், 54 அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் 2,783 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘திறன்மிகு மையங்களாக’ தரம் உயர்த்தப்படும்.

தொழிற் பயிற்சி நிறுவனங்களிலும் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த திறன் பயிற்சியை வழங்குதல், திறமையான பணியாளர்களை உருவாக்குதல் போன்ற நோக்கங்களுடன்,
120 கோடி ரூபாய் செலவில் சென்னை அம்பத்தூரில் 'தமிழ்நாடு உலகளாவிய புதுமை முயற்சிகள் மற்றும் திறன் பயிற்சி மையம்' (TN-WISH) அமைக்கப்படும்.  இந்த மையத்தில்,
இயந்திர மின்னணுவியல் (Mechatronics), இணைய வழிச் செயல்பாடு (Internet of things), அதிநவீன வாகனத் தொழில்நுட்பம் (Advanced Automobile Technology),
துல்லியப் பொறியியல் (Precision Engineering) மற்றும் உயர்தர வெல்டிங் (Advanced Welding) போன்ற தொழில்நுட்பங்களுக்கான பயிற்சிகள் அளிக்கப்படும்.

10 இலட்சம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்குத் தொழில் சார்ந்த திறன்களில் பயிற்சி அளித்து நல்ல வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்காக "நான் முதல்வன்" என்ற தொலைநோக்கு திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கடந்த ஆண்டு தொடங்கினார்கள். நான் முதல்வன் திட்டம் அனைத்து பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளிலும் முன்னணித் தொழில் நிறுவனங்களின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகிறது. வேலை வாய்ப்புகளை மேம்படுத்த தொழில்துறைக்குத் தேவையான பயிற்சித் திட்டங்களை உள்ளடக்கி கல்விப் பாடத்திட்டங்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் மொத்தமாக
சுமார் 12.7 இலட்சம் மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். 12,582 பொறியியல் ஆசிரியர்களுக்கும், 7,797 கலை மற்றும் அறிவியல் ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கு வரவு-செலவுத் திட்டத்தில் 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திறன் பயிற்சி கட்டமைப்பைப் பெருமளவில் அதிகரிக்க, தற்போதுள்ள தொழிற்சாலைகள் தொழிற்பயிற்சிக் கூடங்களாகப் பயன்படுத்தப்படும். இளைஞர்களுக்கு தொழிற்சாலைகளிலேயே பயிற்சி அளித்திட தொழில் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும். தொழிற்சாலைகளில் திறன் பள்ளிகள் (Factory Skill Schools) என்ற இத்திட்டத்திற்கு
இந்த ஆண்டில், 25 கோடி ரூபாய்  வழங்கப்பட்டுள்ளது
. தமிழ்நாட்டின் மூன்றாவது பெரும் தொழில் தொகுப்பாக உருவெடுத்து வரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி
சிப்காட் தொழில் பூங்காவில் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன திறன் மேம்பாட்டு மையம் நிறுவப்படும்.  

பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் அரசு கல்லூரிகளில் கட்டமைப்பு, அடிப்படை வசதிகள் 1,000 கோடி ரூபாய் செலவில் ஐந்தாண்டுகளில் மேம்படுத்தப்படவுள்ளன.  நடப்பாண்டில் 26 பல்தொழில்நுட்பக் கல்லூரிகள், 55 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிய வகுப்பறைகள், கூடுதல் ஆய்வகங்கள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பணிகள் வரும் நிதியாண்டிலும் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

கடந்த சில ஆண்டுகளாக ஒன்றிய குடிமைப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டிலிருந்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்தப் போக்கை மாற்றியமைக்க, குடிமைப் பணிகள் தேர்வு மாணவர்களுக்கு மேம்பட்டப் பயிற்சி மற்றும் பயிற்சிப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை அண்ணா நிருவாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் செயல்படுத்தும்.  ஒவ்வோராண்டும் மதிப்பீட்டுத் தேர்வு மூலம் 1,000 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் முதல்நிலை தேர்விற்குத் தயாராகுவதற்காக மாதத்திற்கு
7,500 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 25,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்
. இந்த திட்டத்திற்காக, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கு 2023-24 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக, உயர்கல்வித் துறைக்கு 6,967 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

#TNBUDGET2023 : அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி.. எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? முழு விவரம்!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு:

நாளைய சமுதாயம் இன்றைய இளைஞர்களின் பொறுப்பு என்பதை உணரும் இந்த அரசு அவர்களை வலிமையும் துடிப்பும் மிக்கவர்களாக மாற்றிட முனைந்துள்ளது. இந்த வகையில், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை சென்னையில் வெற்றிகரமாக நடத்தியும், மாநிலமெங்கும் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளை நடத்தியும் விளையாட்டுத் துறைக்கு புது உத்வேகம் அளித்துள்ளது. இதன் அடுத்த கட்டமாக, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் மூலம் சென்னையில் ஓர் உலகளாவிய அதிநவீன விளையாட்டு நகரத்தை இந்த அரசு அமைக்கும். இது விளையாட்டுகளின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிப்பதுடன், முன்னணி விளையாட்டுப் போட்டிகளின் முனையமாக அமையும்.  இதற்கு, பன்னாட்டு வல்லுநர்களைக் கொண்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன விளையாட்டு வசதிகளுடன் சென்னை ஜவஹர்லால் நேரு திறந்தவெளி விளையாட்டு அரங்கத்தை விரிவாக சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். 

ஆதி திராவிடர், பழங்குடியினர் நலன்:

சமூக நீதியையும், சமத்துவம் நோக்கிய வளர்ச்சியையும் அடிப்படைக் கொள்கைகளாகக் கொண்டுள்ள  இந்த அரசு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் வளர்ச்சிக்கு உயர் முன்னுரிமை அளித்து வருகின்றது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் மொத்த உயர்கல்விச் சேர்க்கையை அதிகரிக்கவும், அவர்களுக்குப் பாதுகாப்பான, தரமான தங்குமிட வசதிகளை வழங்கவும், மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரியில் அம்மாணவர்கள் பயன்பெறும் வகையில் நான்கு புதிய விடுதிகள் நவீன வசதிகளுடன் 100 கோடி ரூபாய் மொத்த மதிப்பீட்டில் கட்டப்படும். இந்த விடுதிகளின் பராமரிப்புப் பணிகள் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்படும். 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான துணைத் திட்டம் செவ்வனே செயல்படுத்தப்படுவதை
உறுதி செய்ய
தனிச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதனை
ஏற்று, இத்துணைத் திட்டத்தின் செயல்பாட்டிற்கு வலுசேர்க்கும் விதமாக ஒரு சிறப்புச் சட்டத்தை இந்த அரசு இயற்றும். உரிய ஆலோசனைக்குப் பின்னர், அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடரில் இதற்கான சட்ட முன்வடிவு அறிமுகப்படுத்தப்படும்.

பாதாளச் சாக்கடைகளையும், கழிவுநீர் தொட்டிகளையும் மனிதர்களே சுத்தம் செய்யும் நடைமுறை, மானுடத்திற்கே களங்கமாய் விளங்குகிறது. இதனால் ஏற்படும் உயிரிழப்புகளை முற்றிலும் தடுப்பதற்காக, ஒரு புதிய திட்டத்தை அண்மையில் இந்த அரசு தொடங்கியுள்ளது. தூய்மைப் பணியாளர்களை தொழில்முனைவோர்களாக மாற்றி, நவீன இயந்திரங்கள் வாங்க வழிவகை செய்து, இத்திட்டம் தூய்மைப் பணிகளை பாதுகாப்பாக மேற்கொள்வதுடன், அவர்கள் வருவாய் ஈட்டிடவும் வழிவகுக்கும். முதற்கட்டமாக, இப்பணிபுரியும்போது இறக்க நேரிட்ட இப்பணியாளர்களின் குடும்பங்களுக்கும், இப்பணியில் தற்போது ஈடுபட்டுள்ள நபர்களுக்கும் அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து பெருநகரச் சென்னை பகுதியில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். தேவையான திறன் பயிற்சியுடன் இயந்திரங்களையும், பாதுகாப்புக் கருவிகளையும் கொள்முதல் செய்திடவும் சிறப்பு மானியம் வழங்கப்படும். இந்த முன்னோடி முயற்சியின் அடிப்படையில், இத்திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்.

அரசு வழங்கும் சுயதொழில் ஊக்குவிப்பு மானியங்கள் மூலம் பயன் பெறும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் எண்ணிக்கை, மிகவும் குறைவாகவே உள்ளது. ஆகவே, ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின தொழில்முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வண்ணம், வரும் நிதியாண்டிலிருந்து
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்’ என்னும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் இயந்திரங்களையும், கருவிகளையும் கொள்முதல் செய்வதற்காக, 35 சதவீதம் மூலதன மானியமும் 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். 2023-24 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்ட மதிப்பீடுகளில் இத்திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

புதிரை வண்ணார்கள் நல வாரியத்திற்குப் புத்துயிர் அளித்து, வாழ்வாதார மேம்பாட்டு நடவடிக்கைகள், நலப் பணிகளை மேற்கொள்ள 10 கோடி ரூபாய் வழங்கப்படும்.

நகர்ப்புரப் பகுதிகளிலும் ஊரகப்பகுதிகளிலும் ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்து, முழுமையான சமூக-பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த ‘அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம்’ நடைமுறைப்படுத்தப்படும். இத்திட்டம் வரும் ஐந்தாண்டுகளில் 1,000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படவுள்ளது.

இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு 3,513 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் நலன்:

மாற்றுத்திறனாளிகள் என்ற பெயரையே முத்தமிழறிஞர் கலைஞர்தான் சூட்டினார் என்பதை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். இந்தத் துறை மிக முக்கியமானது என்பதால், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வைத்து, பணிகளை உன்னிப்பாக கண்காணித்து வருகிறார். உலக வங்கி நிதியுதவியுடன்
1,763 கோடி ரூபாய் மதிப்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைத் திட்டம் (RIGHTS Project) செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகக்கூடிய தடையற்ற கட்டமைப்புகளை அமைத்து, தொழில் பயிற்சி மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி,  அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயம் ஒன்றை உருவாக்குவதே இத்திட்டத்தின்
முக்கிய நோக்கமாகும். இத்திட்டம், 2023-24 ஆம் ஆண்டில்
15 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். உடல் குறைபாடு மதிப்பீட்டுச் சான்றளித்தல், ஆரம்ப நிலை சிகிச்சை போன்ற சேவைகளை கோட்ட அளவிலேயே வழங்க 39 ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்கப்படும். மேலும், வீட்டிலேயே சிகிச்சை அளிப்பதற்காகவும் பல்வேறு நலத்திட்டங்களில் சலுகைகளைப் பெற உதவுவதற்காகவும் தன்னார்வலர்களைக் கொண்ட 150 அண்மை மையங்கள் உருவாக்கப்படும். 

மாநிலம் முழுவதும் 6.84 இலட்சம் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் அவர்களின் ஓய்வூதியத்தை 1,000 ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாகவும், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகையை 1,500 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாகவும் உயர்த்திட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஏற்கெனவே ஆணையிட்டுள்ளார்கள்.  இதற்கென, வரவு-செலவுத் திட்டத்தில் 1,444 கோடி ரூபாய்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளின் தொழில் முன்னேற்றத்திற்காக கடன் உத்தரவாதம், வட்டி மானியம் ஆகியவற்றை மாநில அரசு வழங்கி வருகிறது. இதன் பயனாக, 11,155 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய மாற்றுத்திறனாளிகள்
நிதி மேம்பாட்டுக் கழகத்தின் வாயிலாக 50 கோடி ரூபாய்கடனுதவியை இந்த ஆண்டில் வழங்கி, நாட்டிலேயே
முதல் இடத்தில் தமிழ்நாடு விளங்குகிறது.

அரசுத் திட்டங்களின் பலன்கள் முழுமையாக மாற்றுத்திறனாளிகளைச் சென்றடைய, மாற்றுத்திறனாளிகள் பற்றிய ஒரு விரிவான தரவுத்தளத்தை அரசு உருவாக்கி வருகிறது. இதன் முதற்கட்டமாக, பல்வேறு அரசு நலத்திட்டங்களில் பயன்பெறும் 9,08,000 பேர்களின் விவரங்கள் கொண்ட தரவுத்தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்  நலன்:

கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, தரமான உணவினை வழங்கி பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளின் செயல்பாட்டை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், 36.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில்
ஒன்பது விடுதிகளின் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மாணவர்களின் தேவைக்கேற்ப
பதினைந்து பள்ளி விடுதிகள் கல்லூரி விடுதிகளாகத்
தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

இம்மதிப்பீடுகளில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக 252 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்குவதற்காக 305 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரவு-செலவுத் திட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைக்கு 1,580 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

#TNBUDGET2023 : அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி.. எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? முழு விவரம்!

பெண்கள் மற்றும் குழந்தைகள்:

பண்டைத் தமிழ் மரபின் தொடர்ச்சியாக,
தமிழ்ச் சமுதாயத்தை வழிநடத்திய தலைவர்கள் பலரும், வறுமையை அகற்றிடவும், மாணவர்களின் கல்வி நலனைப் பாதுகாத்திடவும் பல முன்னோடித் திட்டங்களை அறிமுகப்படுத்தி வந்துள்ளனர். அந்த வகையில், 1920 ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சி மன்றத் தலைவராக இருந்த சர். பிட்டி தியாகராயர் அவர்களால் இந்தியாவிலேயே முதன்முறையாக மதிய உணவுத் திட்டம் சென்னையில் கொண்டு வரப்பட்டது. பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது மாநில அளவில் கொண்டுவரப்பட்ட மதிய உணவுத் திட்டம், தமிழ்நாட்டின் கல்வி வரலாற்றில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.  அதைத் தொடர்ந்து புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டம், முத்தமிழறிஞர் கலைஞரின் சத்துணவில் முட்டைகள் வழங்கும் திட்டம் என, தொடர்ந்து பசிப்பிணி அகற்றும் முயற்சிகள் தொடர்ந்தன.

இந்தச் சூழ்நிலையில், தற்போது தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் பயிலும் சில குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படுவதும், அவர்களின் வளர்ச்சித் தடைபடுவதும் தெரியவந்தது. பல குழந்தைகள் காலை உணவு அருந்தாமல் பள்ளிக்கு வருவதால், அவர்கள் கல்வியில் கவனம் செலுத்த இயலாமல் போய்விடும் வாய்ப்பு இருப்பதை அறிந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சமூகநீதியை உள்ளடக்கிய திராவிட மாடல் அரசின் மகத்தான கனவுத் திட்டமான ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை’ கடந்த ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் நாளன்று மதுரையில் தொடங்கி வைத்து, வரலாற்றில் முத்திரை பதித்திருக்கிறார். 

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்
1,937 பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 1,48,315 மாணவர்கள்  பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்ட 1,543 தொடக்கப் பள்ளிகளில் 1,319  பள்ளிகளில்  மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதில், 624 பள்ளிகளில் 10 சதவீதமும்,
462 பள்ளிகளில் 20 சதவீதமும்,193 பள்ளிகளில் 30 சதவீதமும் என மாணவர் வருகை அதிகரித்துள்ளது. திருப்பத்தூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்ட அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது.  ‘பள்ளிக்கல்வியை மேலும் பரவலாக்கவும், கற்றலை இனிமையாக்கவும், எல்லாக் குழந்தைகளும் பசியின்றி கல்வியறிவு பெற்றிடவும் எந்தத் தியாகத்தையும் செய்திடுவோம்’ என்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உன்னத நோக்கத்தை செயல்படுத்திட,
வரும் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள 30 ஆயிரத்து
122 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை பயிலும் 18 இலட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இந்த நல்ல நோக்கத்திற்கு வரும் நிதியாண்டில் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
.

ஒரு சமுதாயம் செழித்து தன்னிறைவுடன் திகழ வேண்டுமென்றால் அச்சமுதாயத்திலுள்ள பெண்கள் கல்வியறிவு பெற்றவர்களாய் இருப்பது மிகவும் அவசியம். இதனை நன்குணர்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு 1989ஆம் ஆண்டு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித்தொகை திட்டத்தினை அறிமுகப்படுத்தினார். தமிழ்நாட்டில் பல ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவியர் 12ஆம் வகுப்பு முடித்தவுடன் உயர்கல்வியைத் தொடர முடியாமல் போகிறது என்பதை உணர்ந்த தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை மாற்றியமைத்தது, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேர்ந்த அனைத்து மாணவிகளுக்கும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. தற்போது, ஒவ்வொரு மாதமும் 2.20 இலட்சம் மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். 2021-22 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, உயர்கல்வியில்
முதலாம் ஆண்டில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை நடப்பு ஆண்டில் 29 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது, கூடுதலாக 20,477 மாணவியர்கள் சேர்ந்துள்ளனர். பள்ளிப்படிப்பு முடித்த பின் உயர்கல்வியை தொடராத பல மாணவிகள் கூட தற்போது கல்லூரிகளில் சேர்ந்திருப்பது இத்திட்டத்தின் வெற்றிக்குச் சான்றாகும். 

1989 ஆம் ஆண்டில் நாட்டுக்கே முன்னோடியாக,  தர்மபுரியில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட சுய உதவி குழு இயக்கம் ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரோடி  ,  இன்று ஒரு மகத்தான  மக்கள் இயக்கமாகத் திகழ்கிறது. மகளிர் சுயஉதவிக் குழுக்களின் திறன் மேம்பாட்டிற்கும் வாழ்வாதார வளர்ச்சிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்து வருகிறது. இவ்வாண்டு, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு, இதுவரை, சுமார்
24,712 கோடி ரூபாய்க்கு வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில், 30,000 கோடி ரூபாய் அளவிற்கு வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெண் தொழில்முனைவோர்கள், தேவையான கடன்களை உரிய நேரத்தில் பெறுவதிலும்,
பொருட்களை சந்தைப்படுத்துவதிலும், தொடர்ந்து
இடர்பாடுகளை சந்திக்கின்றனர். இச்சவால்களை எதிர்கொள்ள, பெண்களுக்கென சிறப்பு ‘புத்தொழில் இயக்கம்’ ஒன்றை அரசு தொடங்கும். பெண் தொழில்முனைவோர், புத்தொழில்களை தொடங்குவதற்கு அனைத்து வகையிலும் இந்த இயக்கம் உதவும்.

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு:

தானிய சேமிப்புக் கொள்ளளவை அதிகரித்து, இழப்பினை குறைப்பதற்காக,  2021-22 ஆம் ஆண்டு முதல்
238 கோடி ரூபாய் செலவில் 2.86 இலட்சம் மெட்ரிக் டன்
சேமிப்புக் கொள்ளளவுடன் 213 கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. மேலும், 28,000 மெட்ரிக் டன் சேமிப்புக் கொள்ளளவு கொண்ட
12 கிடங்குகள் 54 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகின்றன.

இந்த அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள முக்கிய வாக்குறுதிகளான விவசாயக் கடன் தள்ளுபடிக்கு
2,393 கோடி ரூபாயும், நகைக்கடன் தள்ளுபடிக்கு
1,000 கோடி ரூபாயும், சுய உதவிக்குழு கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கு 600 கோடி ரூபாயும் என மொத்தம் 3,993 கோடி ரூபாய் வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் செயல்திறனையும் நிதி நிலையையும் மேம்படுத்த அடிப்படைச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கான, நீண்டகாலத் திட்டமொன்றை அரசு வகுக்கும். பொது விநியோகத் திட்டத்தில் உணவு மானியத்திற்காக, இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 10,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இம்மதிப்பீடுகளில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு 16,262 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நீர் வளங்கள்:

நீர்நிலைகளை மீட்டெடுத்து, புத்துயிர் அளிக்க பல முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தில் 462 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 341 ஏரிகள், 67 அணைக்கட்டுகள், 11 கால்வாய்களை புனரமைப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும்,
259 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 309 ஏரிகளில் பழுதுபார்த்தல், புனரமைத்தல், மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் 184 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நீண்டகால வெள்ளத் தணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஒன்பது பணிகள் முடிக்கப்பட்டுள்ளன, இரண்டு பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. நடப்பாண்டில் காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 12 வெள்ளத் தணிப்புப் பணிகள்
434 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு, முடியும் தருவாயில் உள்ளன.

கால்நடைப் பராமரிப்பு:

முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம், மாநிலத்தில் விலங்குகளின் நலனைப் பேணிக் காக்க மறுசீரமைக்கப்பட்டுள்ளது. பெருகிவரும் தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த விலங்குகள் இனவிருத்தி கட்டுப்பாட்டு  மையங்கள் அமைப்பது அவசியமாகும். விலங்குகள் நல வாரியத்தை வலுப்படுத்தி செம்மையாக செயல்படுத்தும் பொருட்டு, இம்மதிப்பீட்டில் 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. விலங்குகள் இனவிருத்தி கட்டுப்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளவும், உள்ளாட்சிகளின் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கவும், விலங்குகள் நலப்பணிகளைச் செயல்படுத்தவும் இந்நிதி பயன்படுத்தப்படும்.

மீனவர் நலன்:

மீனவர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள இந்த அரசு அவர்களது சிறப்புத் தேவைகளை நன்கு உணர்ந்து பல்வேறு நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. மீன்பிடி குறைவு காலத்தில் மீனவர்கள் பயன்பெறும் பொருட்டு 5,000 ரூபாய் என வழங்கி வந்த சிறப்பு நிவாரணத் தொகையினை 6,000 ரூபாயாக கடந்த ஆண்டு முதல் இவ்வரசு உயர்த்தி வழங்கி வருகிறது. வரும் நிதியாண்டில் மீன்பிடி குறைவு கால சிறப்பு நிவாரணம், மீன்பிடித் தடைக்கால நிவாரணம்,  மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டங்கள் என 4.3 இலட்சம் மீனவர்கள் பயன்பெறும் வகையில் 389 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பவளப்பாறைகள் மீன்களுக்கு புகலிடம், உணவு அளித்து மீன்குஞ்சுகள் பிழைக்கும் வாய்ப்புகளை அதிகரித்து மீன்வளத்தைப் பாதுகாக்கின்றன. நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திட, பாக் வளைகுடா பகுதியில்
3 மாவட்டங்களில் கடற்பகுதியில் 217 செயற்கை பவளப்பாறை அலகுகள் 79 கோடி ரூபாயிலும், பாக் வளைகுடா தவிர
ஏனைய மாவட்டங்களில் 200 செயற்கை பவளப்பாறை
அலகுகள் 64 கோடி ரூபாயிலும் ஒன்றிய மாநில நிதியுதவியுடன் அமைக்கப்படும்.

#TNBUDGET2023 : அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி.. எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? முழு விவரம்!

சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம்:

பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தாலும், மக்கள்தொகைப் பெருக்கத்தாலும் கடலோர சுற்றுச்சூழலும், கடலோர மக்களின் வாழ்வாதாரமும் வருங்காலங்களில் கடுமையாக பாதிக்கப்படக்கூடும். கடல் அரிப்பைத் தடுக்கவும்,
கடல் மாசுபாட்டைக் குறைக்கவும், கடல்சார் உயிரியல் பன்முகத்தன்மையை பாதுகாக்கவும், ‘தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம்’ என்ற திட்டத்தை 2,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில்
உலக வங்கி நிதியுதவியுடன் அடுத்த ஐந்து ஆண்டுகளில்,
இந்த அரசு செயல்படுத்த உள்ளது
.

அழிந்து வரும் வன உயிரினங்களைக் காக்க ஒரு தொடர்ச்சியான பாதுகாக்கப்பட்ட வனப்பரப்பு அவசியம். எனவே, நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தை, தென்காவிரி வனவிலங்கு சரணாலயத்துடன் இணைக்கும் வகையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர், கோபிசெட்டிபாளையம் வட்டங்களில் உள்ள 80,567 ஹெக்டேர் வனப்பரப்பில் “தந்தை பெரியார்
வனவிலங்கு சரணாலயம்
” என்னும் புதிய சரணாலயத்தை
இந்த அரசு ஏற்படுத்தும். இது மாநிலத்தின் 18வது வனவிலங்கு சரணாலயமாகும்.

மத்திய ஆசியாவின் பறவைகள் வலசைப் பாதையில் தமிழ்நாடு அமைந்துள்ளதால், ஒவ்வொரு ஆண்டும் பெரும் எண்ணிக்கையில் பறவைகள் நமது மாநிலத்திற்கு வருகை தருகின்றன. பறவைகளின் பாதுகாப்பைப் பேணவும், பறவையியல் ஆராய்ச்சியை ஊக்குவிக்கவும், இயற்கையில் பறவைகளின் பங்கைப் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும், மரக்காணத்தில் 25 கோடி ரூபாய் செலவில் “பன்னாட்டுப் பறவைகள் மையத்தை” அரசு அமைக்கவுள்ளது.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் மகளிரின் முக்கியப் பங்கை உணர்ந்துள்ள இந்த அரசு,   மகளிர் சுயஉதவிக் குழுக்களின் மூலம் "காலநிலை மாற்ற வீராங்கனைகள் என்ற காலநிலை விழிப்புணர்வு திட்டத்தை தொடங்கும். சுற்றுச்சூழல், காலநிலைமாற்றம் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்காக முதற்கட்டமாக 500 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் இந்த சுற்றுச்சூழல் பற்றிய பரப்புரையை முன்னெடுப்பார்கள். இதற்காக, அவர்களுக்கு 20 கோடி ரூபாய் செலவில் மின் ஆட்டோக்கள் வழங்கப்படும். இந்த வரவு-செலவுத் திட்டத்தில் சுற்றுச்சூழல்,
வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறைக்கு 1,248 கோடி ரூபாய்  ஒதுக்கப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சித்துறை:

அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10,000 கி.மீ.  சாலைகளின் தரத்தை மேம்படுத்தி, ஊரகப்பகுதிகளில் சிறப்பான சாலை வசதிகளையும், பொருளாதார மேம்பாட்டையும் உறுதிசெய்திட, முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத்  திட்டத்தை அரசு இவ்வாண்டு தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், முக்கியமான இணைப்புச் சாலைகள், பேருந்துகள்
இயங்கும் சாலைகள்  தரம் உயர்த்தப்படும். வரும் நிதியாண்டில், 2,000 கோடி ரூபாய்  மதிப்பீட்டில் 5,145 கி.மீ. சாலைகளுக்கான பணிகள் மேற்கொள்ளப்படும்

கிராமப்புரங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளில், 6,618 நீர்நிலைகளில் மொத்தம் 638 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  அடுத்த இரண்டு ஆண்டுகளில், மேலும், 10,000 சிறிய நீர் நிலைகள்,  குளங்கள், ஊரணிகள் 800 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படும்.

வீட்டுவரி, தொழில் வரி, குடிநீர் வரியை ஊராட்சிகளுக்கு இணையவழியில் எளிதில் செலுத்துவதற்கு ஒரு வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில், கட்டட வரைபடம், மனை வரைபட அனுமதிகளையும் இணைய வழியில் பெற வழிவகை செய்யப்படும். 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், இவ்வாண்டு இதுவரை, 10,914 கோடி ரூபாய் செலவில்‘ 30.87 கோடி வேலை நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 2023-24 ஆம் ஆண்டில், இத்திட்டத்தின் கீழ், 35 கோடி வேலை நாட்கள் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இம்மதிப்பீடுகளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு 22,562 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நகர்ப்புர மேம்பாடு:

அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ், குடிநீர் வழங்கலை சீரமைத்தல், கழிவுநீர் கட்டமைப்பை மேம்படுத்துதல், நீர்நிலைகளை புதுப்பித்தல், பசுமையான நகர்ப்புரங்களை உருவாக்குதல் போன்ற திட்டங்களை அரசு மேற்கொண்டு வருகிறது. இதுவரை, இத்திட்டத்தின் கீழ், 9,378 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களுக்கு  ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது, அவற்றில் 5,960 கோடி ரூபாய் மாநில அரசாலும் உள்ளாட்சி அமைப்புகளாலும் செலவிடப்படும். இந்த திட்டத்திற்காக,
வரவு-செலவுத் திட்டத்தில்  612 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

மக்களுக்குக் குடிநீர் வசதிகளை மேம்படுத்துவதற்காக, உயிர் நீர் (ஜல் ஜீவன்) இயக்கத்தின் கீழ், 103 கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்கு, 15,734 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அவற்றில் 54 சதவீத செலவினத்தை மாநில அரசு ஏற்கும். மேலும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் 7,145 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்த பன்னாட்டு நிறுவனங்களில் நிதியுதவிக்காக முன்மொழியப்படும். வரும் நிதியாண்டில் உயிர் நீர் இயக்கத்தைச் செயல்படுத்த 6,600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு, உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் போது, கோவையில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும் என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அறிவித்தார்கள். கிடப்பில் போடப்பட்ட இத்திட்டத்தை மீட்டெடுத்து, கோவையில் உலகத் தரம் வாய்ந்த ‘செம்மொழிப்பூங்கா’ இரண்டு கட்டங்களாக அமைக்கப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருந்தார்கள். இதன் முதற்கட்டமாக, 45 ஏக்கர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா அமைக்கவும் இதர வசதிகளை மேம்படுத்துவதற்கும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மொத்தம் 172 கோடி ரூபாய் செலவில் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதற்காக, வரவு-செலவுத் திட்டத்தில் 43 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிங்காரச் சென்னையை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, அடையாறு, கூவம் உள்ளிட்ட நீர்வழிகளை சுத்தப்படுத்தி, மறுசீரமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த முயற்சிகளின் முதற்கட்டமாக, 44 கி.மீ. நீளமுள்ள அடையாறு ஆற்றில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.  இத்திட்டத்தில் கழிவுநீர் ஆற்றில் கலப்பதைத் தடுத்தல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (STPs) அமைத்தல் போன்ற ஆற்றைத் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், எழில் கொஞ்சும் பூங்காக்கள், பசுமை நடைபாதைகள், திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடங்கள், தரமான அருந்தகங்கள் போன்ற கண்கவர் பொழுதுபோக்கு அம்சங்கள் அடையாறு ஆற்றங்கரையை அலங்கரிக்கும். இத்திட்டம் அரசு-தனியார் பங்களிப்புடன் ஏறத்தாழ 1,500 கோடி ரூபாய் செலவில்  செயல்படுத்தப்படும்.

நகர்ப்புர உள்ளாட்சிகளைத் தரம் உயர்த்தியதன் காரணமாக, அருகிலிருக்கும் புறநகர்ப் பகுதிகளும் அவற்றோடு இணைக்கப்பட்டுள்ளன. அவற்றிலுள்ள மண்சாலைகளைத் தரம் உயர்த்துவது அவசியமாகும். இப்பகுதிகளில், 4,540 கி.மீ. நீளமுள்ள மண் சாலைகளில், 1,633 கி.மீ. மண் சாலைகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்கெனவே உள்ளாட்சி அமைப்புகளால் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. வரும் ஆண்டில், 1,424 கி.மீ.
மண் சாலைகள், மொத்தம் 1,211 கோடி ரூபாய் செலவில் தரமான சாலைகளாக மேம்படுத்தப்படும். 

நகர்ப்புர உள்ளாட்சிகளில் பொதுக் கழிப்பறைகளின் செயல்பாட்டையும் பராமரிப்பையும் மேம்படுத்த அரசு முயற்சிகளை எடுத்து வருகின்றது.  பெருநகர சென்னை மாநகராட்சியில் புதிய பொதுக் கழிப்பறைகள், சமுதாயக் கழிப்பறைகள் கட்டுதல், இயங்கி வரும் கழிப்பறைகளைச் சீரமைத்தல், அவற்றின் பராமரிப்பு ஆகிய பணிகள் 430 கோடி ரூபாய் செலவில் அரசு - தனியார் பங்களிப்பு மூலம் ஒரு முன்னோடித் திட்டமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் வெற்றியின் அடிப்படையில், மாநிலத்தில் உள்ள
பிற மாநகராட்சிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

ஒளிர்மிகு உயிரோட்டமுள்ள பொது இடங்களை நகரங்களில் உருவாக்க அரசு பல முன்னெடுப்புகளைச் செய்து வருகின்றது.  சென்னைத் தீவுத்திடலில் 30 ஏக்கர் நிலப்பரப்பில், இயற்கை வனப்புடன் நகர்ப்புர பொதுச் சதுக்கம், கண்காட்சி அரங்குகள், திறந்தவெளி திரையரங்கம், உணவகங்கள் போன்ற நவீன நகர்ப்புர வசதிகளை 50 கோடி ரூபாய் செலவில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஏற்படுத்தும்

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டுள்ள மறுகுடியிருப்புகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில், விளையாட்டு, பொழுதுபோக்கு மையங்கள் உருவாக்கப்படும். இந்த மையங்களில் விளையாட்டு வசதிகள், நவீன உடற்பயிற்சிக் கூடம், தொழிற்பயிற்சி வழங்க பல்நோக்கு சமுதாயக்கூடம், நூலகம் போன்ற வசதிகள் அமைக்கப்படும். வரும் ஆண்டில்,
20 கோடி ரூபாய் செலவில் கண்ணகி நகர், பெரும்பாக்கம்,
நாவலூர், அத்திப்பட்டு ஆகிய நான்கு இடங்களில்

இந்த மையங்கள் உருவாக்கப்படும். 

சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய நகரங்களான கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் திட்டமிட்ட வளர்ச்சியை மேற்கொள்வது இன்றியமையாததாகும்.  ஆகவே இவ்விரண்டு நகரங்களையும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் உள்ளடக்கி, அனைத்து மக்களின் பங்களிப்புடன் எழில்மிகு கோவை மற்றும் மாமதுரை என்ற ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டங்கள் தயாரிக்கப்படும். பசுமையான பூங்காக்கள், தூய்மையான தெருக்கள், அனைவருக்கும் சுத்தமான குடிநீர், பாதுகாப்பான போக்குவரத்து அமைப்புகள், தொழிற்பூங்காக்கள், தரமான வீட்டுவசதி போன்ற பொருண்மைகள் இத்திட்டங்களில் இடம்பெறும்.  தலா ஒரு கோடி ரூபாய் செலவில் இத்திட்ட அறிக்கைகள் தயார் செய்யப்படும்.

இம்மதிப்பீடுகளில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 24,476 கோடி ரூபாயும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறைக்கு 13,969 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

#TNBUDGET2023 : அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி.. எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? முழு விவரம்!

வெள்ள மேலாண்மை:

அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது அரசால் முன்கூட்டியே திட்டமிட்டு, நிறைவேற்றப்பட்ட வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் அனைவராலும் பாராட்டப்பட்டன.  1,355 கோடி ரூபாய் மதிப்பிலான வெள்ளத் தடுப்புப் பணிகள், போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டு, சென்னைப் பெருநகரில் வெள்ள பாதிப்பு பெருமளவு குறைக்கப்பட்டது. வருங்காலங்களில் வெள்ளம், கனமழையை எதிர்கொள்ளும் வகையில், கட்டமைப்புகளை மேலும் வலுப்படுத்த, வரும் ஆண்டில் வெள்ளத் தடுப்புப் பணிகளும், நீர் வழிகளைத் தூர்வாரும் பணிகளும் 320 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

சமச்சீர் வளர்ச்சி:

தமிழ்நாடு ஒரு வளர்ச்சி பெற்ற மாநிலமாகத் திகழ்ந்தாலும் சமூக, பொருளாதாரக் குறியீடுகளின் அடிப்படையில், சில வட்டாரங்கள் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளன. இப்பகுதிகளும் வளர்ச்சியடையும் வகையில், பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் இலக்குகளை எட்டுவதற்காக ‘வளமிகு வட்டாரங்கள் திட்டம்’ என்ற புதிய திட்டத்தை அரசு தொடங்கும். இத்திட்டத்தின் கீழ், மலைப்பகுதிகள் உட்பட மாநிலத்தில் மிகவும் பின்தங்கிய 50 வட்டாரங்கள் கண்டறியப்பட்டு, ஒவ்வொன்றிலும் தலா ஐந்து கோடி ரூபாய்  மதிப்பிலான திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

நாட்டிலேயே வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான, சென்னை, பல்வேறு நிறுவனங்களால் வெளியிடப்பட்ட ‘வாழ உகந்த நகரங்கள் பட்டியலில்’  முன்வரிசையில் உள்ளது. இருப்பினும், நகரத்தின் சில பகுதிகளில், குறிப்பாக வடசென்னையில், போதிய அளவில் அடிப்படை வசதிகளும்  கட்டமைப்புகளும் இல்லா நிலை உள்ளது. சென்னையில் சீரான, சமமான வளர்ச்சியை உறுதி செய்ய “வடசென்னை வளர்ச்சி திட்டம்” என்ற திட்டத்தை 1,000 கோடி ரூபாய் செலவில் அடுத்த மூன்று ஆண்டுகளில் அரசு செயல்படுத்தும். இத்திட்டத்தில், கட்டமைப்பு பற்றாக்குறைகளையும் வளர்ச்சிக் குறியீடுகளின் குறைபாடுகளையும் கண்டறிந்து, அவற்றைக் களைய நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டம் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நிதியையும் நடைமுறையிலுள்ள திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படும்.

நெடுஞ்சாலைகள் :

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியைப் பெருக்க, சாலைக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு அரசு அதிக முன்னுரிமை அளிக்கின்றது. முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 1,407 கோடி ரூபாய் செலவில்  148 கி.மீ., சாலைகளை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகளும்,  524 கி.மீ., சாலைகளை 803 கோடி ரூபாய் மதிப்பில் இருவழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வரும் ஆண்டில், 621 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணாசாலையில் நான்கு வழி மேம்பாலம் கட்டப்படும். பன்னாட்டுப் பொறியியல் நிபுணர்களின் ஆலோசனைகள் பெற்று சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைகளுக்கு மேல் கட்டப்பட உள்ள இந்த மேம்பாலம் ஒரு நவீன பொறியியல் சாதனையாக அமையும். இப்பணிகள் நிறைவுற்றவுடன், பல முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்து, சாலைப் பாதுகாப்பும் மேம்படும்.

பருவமழை மற்றும் வெள்ளக் காலங்களின்போது, போக்குவரத்து துண்டிக்கப்படாமல் இருக்க, 996 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 215 தரைப்பாலங்களுக்கு பதிலாக உயர்மட்டப் பாலங்கள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை புறவட்டச் சாலை திட்டத்திற்காக
1,847 கோடி ரூபாயும், சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டத்திற்கு 1,500 கோடி ரூபாயும்,  தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம்-II க்கு 645 கோடி ரூபாயும் வரவு-செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இம்மதிப்பீடுகளில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு 19,465 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து:

நகரங்களில் தற்போதுள்ள பேருந்து பணிமனைகள் முக்கிய இடங்களில் அமைந்திருந்தாலும், அவற்றின் முழுப் பயன்பாடு வெளிக்கொணரப்படவில்லை. பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தவும், பேருந்து பணிமனைகளை
உயர்தர போக்குவரத்து மையங்களாக தரம் உயர்த்தவும் அரசால் திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக,  1,600 கோடி ரூபாய் முதலீட்டில் வடபழனி, திருவான்மியூர், வியாசர்பாடியில்
உள்ள பேருந்து பணிமனைகள் மேம்படுத்தப்படும்
. இரண்டாம் கட்டமாக, தாம்பரம், திருவொற்றியூர், சைதாப்பேட்டையில்
உள்ள 3 பணிமனைகள் 1,347 கோடி ரூபாய் முதலீட்டில் மேம்படுத்தப்படும். 

தரமான, வசதியான போக்குவரத்து சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்காக பேருந்துகளை தொடர்ந்து புதுப்பிப்பதற்கான தேவை எழுந்துள்ளது. 1,000 புதிய பேருந்துகளைக் கொள்முதல் செய்யவும். 500 பழைய பேருந்துகளைப் புதுப்பிக்கவும், இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 500 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.   

இம்மதிப்பீடுகளில் மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து பயணத்திற்கு 2,800 கோடி ரூபாயும், மாணவர்களுக்கான பேருந்து கட்டண மானியத்திற்கு 1,500 கோடி ரூபாயும், டீசல் மானியத்திற்கு 2,000 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, நம் மாநிலத்தின் போக்குவரத்து அமைப்பில் இரயில்வே துறையின் பங்கு மிகவும் குறைவாகவே உள்ளது.  இந்நிலையைச் சரிசெய்ய, இந்திய இரயில்வே துறையுடன் ஒருங்கிணைந்து, மாநிலத்தில் புதிய இரயில் திட்டங்களைக் கண்டறிந்து செயல்படுத்திட, தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்துடன் (TIDCO) இணைந்து ஒரு சிறப்பு நிறுவனத்தை அரசு உருவாக்கும்.  

இம்மதிப்பீடுகளில் போக்குவரத்துத் துறைக்கு 8,056 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மெட்ரோ இரயில்: 

சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின்
இரண்டாம் கட்டப்பணிகள்  63,246 கோடி ரூபாய் செலவில்
119 கி.மீ. தூரத்திற்கு மூன்று வழித்தடங்களில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் முதல் வழித்தடமாக,
பூந்தமல்லி பணிமனை முதல் கோடம்பாக்கம் மின் நிலையப்
பிரிவு வரையிலான உயர் வழித்தடம் 2025 ஆம் ஆண்டு
டிசம்பர் மாதத்தில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரவு-செலவுத் திட்டத்தில்,
சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கு 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூர் மாநகரம், இந்தியாவிலேயே வேகமாக வளர்ந்து வரும் இரண்டாம் நிலை நகரங்களில் முதன்மையானது. ஜவுளி, தொழில், வர்த்தகம், தொழில்நுட்பம், மருத்துவ வசதிகள், உற்பத்தித் துறை என பல்தொழில்களின் இருப்பிடமாகவும் தொழில்முனைவுக்கு எடுத்துக்காட்டாகவும் திகழும் கோயம்புத்தூரின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, இந்நகரில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டம் அவிநாசி சாலை, சத்தியமங்கலம் சாலைகளை உள்ளடக்கி 9,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்

தூங்காநகரமான மதுரை மாநகரம், தென்னகத்தின் வளர்ச்சிக்கு மையமாக விளங்கும் வகையில் மெட்ரோ இரயில் திட்டம் 8,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். மதுரை நகரின் மையப் பகுதிகளில் நிலத்திற்கு அடியில் அமைக்கப்படும் மெட்ரோ இரயில் திருமங்கலத்தையும் ஒத்தக்கடையையும் இணைக்கும்.  இந்த இரண்டு நகரங்களில் ஒன்றிய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு, பன்னாட்டு நிதி நிறுவனங்களின் நிதியுதவி மூலம் மெட்ரோ இரயில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

#TNBUDGET2023 : அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி.. எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? முழு விவரம்!

எரிசக்தி:

மாநிலத்தில் அதிகரித்து வரும் மின் தேவையை நிறைவு செய்திட பசுமை ஆற்றல் வளங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து,  2030 ஆம் ஆண்டிற்குள் 33,000 மெகாவாட் அளவிற்கு மாநிலத்தின் உற்பத்தித் திறனை உயர்த்தி மாநிலத்தில் மின்உற்பத்தியினை இரட்டிப்பாக்க அரசு முடிவு செய்துள்ளது. மாநில  மின்உற்பத்தியில் தற்போது 20.88 சதவீதமாக இருக்கும் பசுமை ஆற்றலின் பங்களிப்பை 2030 ஆம் ஆண்டிற்குள் 50 சதவீதமாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

சூரிய ஆற்றல் திறன் 20 GW,  நிலப்பரப்பில் காற்றாலைகள் திறன் 70 GW, கடல் பரப்பில் காற்றாலைகள் திறன் 30 GW என மிகுதியான பசுமை ஆற்றல் வளங்களையும் வாய்ப்புகளையும்  தமிழ்நாடு தன்னகத்தே கொண்டுள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் மொத்த மின் உற்பத்தியில் 50 சதவீதத்துக்கும் மேல் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்களிப்பு இருக்கும் வகையில் பசுமை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்கு சிறப்பு  நிறுவனம் ஒன்றை அரசு உருவாக்கும். மேலும், மாநிலத்தில் நிறுவப்பட்டுள்ள காற்றாலைகளின் செயல்திறனை மறுசீரமைக்க புதிய கொள்கை ஒன்றும் வகுக்கப்படும்.

மாநிலத்தின் உச்சநேர மின் தேவையை நிறைவு செய்வதற்காக  அரசு - தனியார் பங்களிப்புடன் (PPP) நீரேற்று
மின் திட்டங்கள் நிறுவப்படும்.  குந்தாவில் கட்டப்பட்டு வரும்
500 மெகாவாட்  திறன்கொண்ட புனல் மின் திட்டம் 2024-25 ஆம் ஆண்டிற்குள் செயல்பாட்டிற்கு வரும். மேலும், 2030ஆம் ஆண்டுக்குள், 77,000 கோடி ரூபாய் செலவில் 14,500 மெகாவாட் திறன்கொண்ட 15 புதிய நீரேற்று மின் திட்டங்கள் அரசு-தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். மாநிலத்தில் நீரேற்று மின் திட்டங்களில் முதலீடுகளை ஊக்குவிக்க ஒரு விரிவான கொள்கையை அரசு வகுக்கும். மேலும், தற்போது நடைபெற்று வரும் 4,100 மெகாவாட் அனல் மின் திட்டப் பணிகள் விரைந்து முடிக்கப்படும்.

மின் பயன்பாட்டுத் தரவுகளை தானியங்கி முறையில் பெறுவதற்கு, முழு சீரமைக்கப்பட்ட மின் பகிர்மானத் திட்டத்தின் (RDSS) கீழ், கட்டணம் செலுத்தும் அனைத்து நுகர்வோர் இணைப்புகளுக்கும் முன்கூட்டியே கட்டணம் செலுத்தும் வசதியுடன் ‘திறன்மிகு மின் அளவிகள்’ (Smart meter) நிறுவப்படும்.

அரசால் மேற்கொள்ளப்பட்ட அடிப்படைச் சீர்திருத்தங்களின் விளைவாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் நிதிநிலை சற்று மேம்பட்டுள்ளது. இதனால், இக்கழகத்தின் இழப்பு 2021-22 ஆம் ஆண்டில்
11,955 கோடி ரூபாயிலிருந்து நடப்பாண்டில் 7,825 கோடி ரூபாயாக் குறைய வாய்ப்புள்ளது. இந்த வரவு-செலவுத் திட்டத்தில்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு
அரசால் வழங்கப்படும் மானியங்களுக்காக 14,063 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 

கைத்தறி, துணி நூல்:

கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களின் நலனில் இந்த அரசு தனிக் கவனம் செலுத்தி வருகின்றது. 
76,356 கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறும் வகையில், அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சார அலகுகள்
200 இல் இருந்து 300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல்,
1.64 இலட்சம் விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சார அலகுகள் 750 இல் இருந்து 1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அண்மையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மேற்கு மண்டலத்தில் புதிய ஜவுளிப் பூங்கா ஒன்று அமைக்கப்படும் என அறிவித்தார்கள்.  அதனடிப்படையில் சேலத்தில் சுமார் 880 கோடி ரூபாய் செலவில் 119 ஏக்கர் நிலப்பரப்பில் ஒன்றிய மாநில அரசுகளின் நிதியுதவியுடனும் தனியார் தொழில் முனைவோர்களின் பங்களிப்புடனும்
இந்தப் பூங்கா அமைக்கப்படவுள்ளது.

தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின்  மூலம் விருதுநகர் மாவட்டத்தில் ஏறத்தாழ 1,800 கோடி ரூபாய் செலவில் கட்டமைப்பு வசதிகளுடன்  ஜவுளிப் பூங்கா அமைத்திட 1,052 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்து, ஒன்றிய அரசின் பங்களிப்புடன் இந்தப் பூங்காவின் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த ஜவுளிப் பூங்காவின் மூலம் இரண்டு இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கைத்தறிப் பொருட்களின் தரத்தை உயர்த்தவும், நவீனத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தவும், சந்தைப்படுத்தும் வாய்ப்புகளை ஏற்படுத்தவும் 20 கோடி ரூபாய் செலவில்
10 சிறிய கைத்தறிப் பூங்காக்கள் அரசால் நிறுவப்படும்

மேலும், கைத்தறி மற்றும் துணி நூல் துறையில் மதிப்பு தொடரின் முழுமையான வளர்ச்சி, நவீன வடிவமைப்பு, துணிநூல் தயாரிப்பு இயந்திர உற்பத்தியை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் புதிய துணிநூல் கொள்கை ஒன்று வெளியிடப்படும். 

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் :

அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் பயன்களைப் பெறுவதற்காக, குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களைப் பதிவு செய்வது இன்றியமையாததாகும். இத்தொழில் நிறுவனங்களைக் கண்டறிந்து பதிவு செய்வதற்கான ஒரு சிறப்பு முயற்சியை அரசு மேற்கொள்ளும். பெரிய தொழிற்சாலைகள் உட்பட அனைத்து தொழில் நிறுவனங்களையும் இணைத்து, ஒருங்கிணைந்த தரவுதளம் ஒன்றை ஏற்படுத்த இந்த முயற்சி வழிகோலும். இந்தக் கணக்கெடுப்பை மேற்கொள்ள ஐந்து கோடி ரூபாய் வழங்கப்படும்.

நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான தொழில் வளர்காப்பகங்கள் (Business incubators) உள்ள மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்கிறது. காலநிலைத் தொழில்நுட்பம், ஊரகத் தொழில்நுட்பம், வேளாண் தொழில்நுட்பம், கடல்சார் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற விழையும் தொழில் வளர்காப்பகங்களை ஆதரிக்கும் நோக்கில், உயர்நுட்ப மையங்களை அமைக்க புத்தொழில் தமிழ்நாடு இயக்கம்  உதவும்.  தொழில் வளர்காப்பகங்கள் நிதி திரட்டிட உதவுவதுடன், 
40 சதவீத மானியமும் வழங்கப்படும். மாநிலத்தில் தொழில் வளர்காப்பகங்களின் கட்டமைப்பை வலுப்படுத்த புத்தொழில் தமிழ்நாடு இயக்கத்தில் ஒரு தனிப் பிரிவு உருவாக்கப்படும்.

இவ்வாண்டு, முதல் - தலைமுறை தொழில்முனைவோர் தொழில் மேம்பாட்டுத் திட்டத்தில் (NEEDS), 144 கோடி ரூபாய் அளவிலான மானியத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டச் செயல்பாட்டில் இது ஒரு புதிய மைல்கல் என்பதை மகிழ்ச்சியுடன் இந்த அவையில் தெரிவித்துக்கொள்கிறேன்.  குறு, சிறு நடுத்தர நிறுவனங்களுக்கு, உரிய நேரத்தில் பணம் அளிக்கப்படுவதை உறுதிசெய்ய ‘மின்னணு வர்த்தக வரவு தள்ளுபடி’ (TReDS) தளத்தில் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் இணைவதைக் கட்டாயமாக்கியுள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடாகும்.

இம்மதிப்பீடுகளில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைக்கு 1,509 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

#TNBUDGET2023 : அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி.. எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? முழு விவரம்!

தொழில்துறை:

தமிழ்நாடு, கடந்த இரண்டு ஆண்டுகளாக, தொழில்துறையில் அதிக அளவிலான முதலீடுகளை ஈர்த்து வருகிறது. 2021 ஆம் ஆண்டு மே மாதம் முதல் இதுவரை
3,89,651 பேர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய
221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகி உள்ளன. இவற்றின் மூலம்,  2,70,020 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் பெறப்படும்.

இந்த முதலீடுகளின் பலன்களை ஒருங்கிணைத்து, 2030 ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கி பயணிக்க, உலக முதலீட்டாளர்கள் மாநாடு
2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10, 11  நாட்களில் சென்னையில் நடத்தப்படவுள்ளது
. தொழில்கள் செழிக்கும் தமிழ்நாட்டின் தனிச் சிறப்புகளையும், முதலீட்டை ஈர்ப்பதற்கு உகந்த சூழலையும் எடுத்துக்காட்டும் தளமாக இம்மாநாடு அமையும். மேலும், மாநிலத்தில் உள்ள பெருந்தொழில்கள்,
சிறு தொழில் நிறுவனங்கள், புத்தொழில்கள் ஆகியவற்றை முதலீட்டாளர்களுடனும் உலகச் சந்தையுடனும் இணைக்க ஒரு வாய்ப்பாகவும் இது அமையும். இதற்கென, வரவு-செலவுத் திட்டத்தில் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொழில் வளர்ச்சியை மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பரவலாக்க வேண்டும் என்பது இந்த அரசின் குறிக்கோளாகும். அண்மையில் கையொப்பமிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 85 தொழில் திட்டங்கள் தொழில் வளர்ச்சியில்  பின்தங்கிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளன. இத்திட்டங்களின் மூலம் 1,44,028 கோடி ரூபாய் முதலீட்டில்
2,14,478 பேர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். 

இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து
திட்டமிட்ட தொழில் வளர்ச்சியை எய்த, துறை சார்ந்த புதிய
பத்து கொள்கைகளை வெளியிட்டுள்ளது. 

  1. நிதிநுட்பக் கொள்கை

  2. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக் கொள்கை

  3. உயிரியல் கொள்கை

  4. ஏற்றுமதிக் கொள்கை

  5. வான்வெளி மற்றும் பாதுகாப்புக் கொள்கை

  6. காலணி மற்றும் தோல் கொள்கை

  7. மின்சார வாகனங்கள் கொள்கை

  8. தளவாடக் கொள்கை

  9. நகர எரிவாயு வழங்கல் கொள்கை

  10. எத்தனால் கொள்கை

தமிழ்நாடு, குறிப்பாக சென்னை-திருப்பெரும்புதூர் தடம், வாகன உற்பத்தியில் நாட்டிலேயே முதன்மை இடத்தைப் பெற்றுள்ளது. வழக்கமான புதைபடிம எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக, தற்போது பிரபலமாகி வரும் பசுமை மின் வாகனங்கள் உற்பத்தியிலும், தமிழ்நாடு முதன்மை இடத்தை வகித்து வருகிறது. கடந்த ஆண்டில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட இருசக்கர மின்வாகனங்களில் 46 சதவீத வாகனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை என்பதை பெருமிதத்துடன் இந்த அவைக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். உலகிலேயே மிகப்பெரிய இரு சக்கர மின்வாகனம் தயாரிக்கும் தொழிற்சாலை தமிழ்நாட்டில் நிறுவப்பட்டுள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட மின்வாகனக் கொள்கை தமிழ்நாடு தொடர்ந்து அனைத்து வகை வாகன உற்பத்தியிலும் முன்னணி மாநிலமாக திகழும் என்பதை உறுதி செய்யும்.

தொழில்துறையில் அதிக முதலீடுகளை ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில், குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் இந்த அரசு முனைப்பாக உள்ளது. பெண்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தோல் அல்லாத காலணிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அரசு சிறப்பு முன்னுரிமை அளித்து வருகிறது. இத்தொழிற்சாலைகள் ஏற்கனவே செய்யாறு, பர்கூர் ஆகிய இடங்களில் செயல்பாட்டில் உள்ளன. திண்டிவனத்தில் 5,400 பெண்களுக்கும், பெரம்பலூரில்
31,600 பெண்களுக்கும்  வேலைவாய்ப்புகள் தரக்கூடிய 
இரண்டு தொழிற்சாலைகளுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நேரில் சென்று அடிக்கல் நாட்டியுள்ளார்.
மேலும், இரண்டு புதிய தொழிற்சாலைகள் இராணிப்பேட்டையிலும், கள்ளக்குறிச்சியிலும் அமைக்கப்படவுள்ளன. இவற்றில்
32,000 பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்
.
தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி துறையில் மேலும் முதலீடுகளை ஊக்குவிக்க இதற்கென தனிக்கொள்கை வெளியிட்டுள்ளதுடன், தைவான் காலணி உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் ‘தமிழ்நாடு வழிகாட்டி’ நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் கையொப்பமிட்டுள்ளது.

மாநிலத்தில் எத்தனால் உற்பத்தியை ஊக்குவிக்க எத்தனால் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. உழவர்களின் வருவாயை உயர்த்துவதுடன், சர்க்கரை ஆலைகளின் நிதிநிலையை மேம்படுத்துவது இக்கொள்கையின் நோக்கங்களாகும். எத்தனால் உற்பத்திக்காக 5,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க இக்கொள்கை வழிவகுக்கும்.  

விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள்
410 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்
.  இதனால்,
ஏறத்தாழ 22,000 பேர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். மேலும், கங்கைகொண்டானில் உள்ள
சிப்காட் தொழிற்பேட்டையில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 
1,500 பணியாளர்கள் தங்கும் வசதிகளுடன் தொழிலாளர் குடியிருப்புகள் ஏற்படுத்தப்படும்.

இம்மதிப்பீடுகளில் தொழில் துறைக்கு
3,268 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பம்:

மின்னணு முறையில், நேரடியாக, எளிதான, வெளிப்படையான முறையில் அனைத்து சேவைகளையும் மக்களுக்கு வழங்க இந்த அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த நோக்கத்தை எய்த, ‘Simple Gov’ என்ற ஒரு புது முயற்சியை அரசு தொடங்கும். இம்முயற்சியின் ஒரு பகுதியாக, பல்வேறு அரசுத்துறைகளின் நடைமுறைகளையும் சேவைகளையும் கணினிமயமாக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. மென்பொருட்களை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் உரிய தரநிலைகளுடன் உருவாக்குவதற்காக, 100 கோடி ரூபாய் மதிப்பில் ‘மின்-ஆளுகை நிதி’  ஏற்படுத்தப்படும். இந்த நிதி,
அரசுத் துறைகளால் மேற்கொள்ளப்படும் மின்-ஆளுகை முயற்சிகளுக்கு பயன்படுத்தப்படும்.

உயர்தர இணைய இணைப்பை ஏற்படுத்தவும், குறைந்த விலையில் பல்வேறு மின் சேவைகளை வழங்கவும், "ஒருங்கிணைந்த மின்னணு கட்டமைப்பு" (Unified Digital Infrastructure) அரசால் அமைக்கப்படும். இதன் மூலம், மாநில தலைமையகத்தில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் அதிவேக கண்ணாடி இழைக்கற்றை வலையமைப்பு (Optical Fibre Network) உருவாக்கப்படும். இத்திட்டம் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். இணையவழி மருத்துவம், கல்வி, வேளாண் விரிவாக்க சேவைகள் ஆகியவற்றை மாநிலத்தில் குக்கிராமங்கள் வரை கொண்டு செல்வதற்கு மட்டுமன்றி அனைத்து பகுதிகளுக்கும் தங்குதடையின்றி இணையவசதி ஏற்படுத்துவதற்கும், இத்திட்டம் வழிகோலும்.

இன்றைய இணைய உலகத்தில், தகவலே ஆற்றலுக்கும்  அதிகாரத்திற்கும் அடித்தளம். இந்த அரசின் சமூகநீதிக் கொள்கையை நிலைநாட்ட, தகவல்களையும், வாய்ப்புகளையும் பரவலாக்கி, அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்குவது மிக அவசியமாகும். எனவே, முதற்கட்டமாக சென்னை, தாம்பரம், ஆவடி, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம் மாநகராட்சிகளின் முக்கிய பொது இடங்களில் இலவச வைஃபை சேவைகள் வழங்கப்படும்

உலகளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாட்டை ஒரு முக்கிய மையமாக நிலைநாட்டுவதற்கும், பெருகி வரும் அலுவலகக் கட்டமைப்புத் தேவைகளை நிறைவு செய்வதற்கும், சென்னை, கோயம்புத்தூர் மற்றும் ஓசூரில்,“தமிழ்நாடு தொழில்நுட்ப நகரங்களை (TNTech city)” இந்த அரசு அமைக்கும். தகவல் தொழில்நுட்பம், உலகளாவிய திறன் மையங்கள் (Global Capability Centres), நிதிநுட்பம் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் செயல்பட, திறன்மிகு மையங்கள், புத்தொழில் காப்பகங்கள், வர்த்தக மையங்கள், பொழுதுபோக்கு வசதிகள் போன்ற அனைத்துக் கட்டமைப்புகளும் இந்தத் தொழில்நுட்ப நகரங்களில் ஏற்படுத்தப்படும்.

சென்னையில் முதன்முறையாக 2000 ஆம் ஆண்டில், TIDEL பூங்காவை நிறுவி, தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்கு வித்திட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். இத்துறையின் வளர்ச்சி தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் பயனளித்திட வேண்டும் என்ற நோக்கில்,
ஏழு மாவட்டங்களில் நியோ-டைடல் பூங்காக்கள் (Neo-Tidel Parks) அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் நீட்சியாக, ஈரோடு, திருநெல்வேலி, செங்கல்பட்டில் தலா ஒரு இலட்சம் சதுரடி கட்டடப் பரப்பளவில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்படும். இதன் மூலம், சுமார் 4,000 பேர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

#TNBUDGET2023 : அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி.. எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? முழு விவரம்!

சுற்றுலா:

தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறையானது, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பை நல்குகிறது. நடப்பாண்டில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாட்டிலேயே முதலிடத்தை தமிழ்நாடு வகிக்கிறது. ‘சுற்றுலாத்தல மேம்பாட்டுத் திட்டத்தின்’ கீழ், பல்வேறு சுற்றுலாத்தலங்களில் கட்டமைப்பு மேம்பாட்டிற்காக நடப்பாண்டில் 75 கோடி ரூபாய் மதிப்பிலுள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பிச்சாவரம், பூம்புகார் மற்றும் ஒகேனக்கல் ஆகிய சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்களுக்கு 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில், அனைத்துத் துறையினருடன் கலந்தாலோசித்து, சுற்றுலாக் கொள்கை ஒன்று வகுக்கப்பட்டுள்ளது. இது  விரைவில் வெளியிடப்படும்.

சிறுபான்மையினர் நலன்:

பள்ளிவாசல்களையும் தர்காக்களையும் பழுதுபார்ப்பதற்கும் சீரமைப்பதற்கும் வழங்கப்படும் ஆண்டு மானியம் நடப்பு ஆண்டில் ஆறு கோடி ரூபாயிலிருந்து
10 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. புகழ்பெற்ற
நாகூர் தர்காவை சீரமைக்க இவ்வாண்டில் இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதே போன்று, தேவாலயங்களைப் பழுதுபார்ப்பதற்கும், புதுப்பிப்பதற்கும் வழங்கப்படும் மானியமும், ஆறு கோடி ரூபாயிலிருந்து 10 கோடி ரூபாயாக உயர்த்தப்படும்.  தொன்மையான மதுரை புனித ஜார்ஜ் தேவாலயம்,
தஞ்சாவூர் ஸ்வார்ட்ஸ் தேவாலயம், சேலம் கிறிஸ்து தேவாலயம் உள்ளிட்டவை புதுப்பிக்கப்படும்.

வக்ஃப் உடைமைகளை பாதுகாப்பதற்கான சீரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டு வருகிறது.  இம்முயற்சிகளால் கடந்த ஆண்டில், 52 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. இம்முயற்சிகளின் தொடர்ச்சியாக, வக்ஃப் வாரிய சொத்துக்களின் தரவுத்தளம் உருவாக்கப்படும். 

இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள்:

கோயில் சொத்துகளைப் பாதுகாப்பதற்கு அரசு தீவிர முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, 4,491 ஏக்கர் பரப்பளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 4,236 கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் சொத்துக்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. கோயில் நிலங்களின் புவிசார் ஒருங்கிணைப்புகளை பதிவு செய்யவும், நில வளங்கள் பற்றிய தரவுத்தளத்தை தயாரிப்பதற்கும் திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, 1,08,000 ஏக்கரில் இப்பணிகள் நிறைவடைந்துள்ளன.

நடப்பாண்டில், 574 கோயில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு, குடமுழுக்குகள் நடத்தப்பட்டன. திருச்செந்தூர் கோயிலில் 305 கோடி ரூபாயிலும், பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் 166 கோடி ரூபாயிலும் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில் 146 கோடி ரூபாய் செலவிலும் பெருந்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வரும் நிதியாண்டில், 400 கோயில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு, குடமுழுக்கு நடத்தப்படும். வரும் ஆண்டில், பழனி, திருத்தணி, சமயபுரம் ஆகிய கோயில்களில் பெருந்திட்டப் பணிகள் 485 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.

மக்கள் குறைதீர்ப்பு:

பொது மக்களின் குறைகளை விரைவாகவும், நிறைவாகவும் தீர்ப்பதற்கு இந்த அரசு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது. இந்த ஆண்டு முதல்வரின் முகவரித் திட்டத்தில், பெறப்பட்ட 17.7 இலட்சம்  மனுக்களில், 17.3 இலட்சம்
மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. தீர்வு காணப்பட்ட மனுக்களின் மீது மனுதாரர்களிடமிருந்து பின்னூட்டங்கள் பெறப்பட்டு தரக்கண்காணிப்புப் பிரிவால் மேல்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

அரசு அலுவலகங்களை மக்கள் தேடி வரும் நிலையை மாற்றி, அவர்கள் இருப்பிடத்திற்கே நிருவாகத்தை கொண்டு செல்வதே இந்த அரசின் குறிக்கோளாகும்.
கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற இந்த அரசின் புதிய திட்டத்தில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று, களஆய்வு மேற்கொள்கின்றார். இதன் அடுத்தகட்டமாக, அரசின் திட்டங்களையும் சேவைகளையும் கடைக்கோடி மக்களும் பெற்றுப் பயனடையும் வகையில் அனைத்து ஊராட்சிகளிலும், நகர்ப்புரப் பகுதிகளிலும் ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தில், அனைத்து அரசுத்துறைகளையும் ஒருங்கிணைத்து அரசு சேவை முகாம்கள் நடத்தப்படும். ஒட்டுமொத்த அரசு நிருவாக இயந்திரமும், மக்களை தேடிச் சென்று, அவர்களுக்குத் தேவையான சேவைகளை அளிப்பதற்கு இத்திட்டம் வழிவகை செய்யும்.

நில நிருவாகம்:

நில உரிமையாளர்கள் பயன்பெறும் வகையில்,
ஒரு நம்பகமான, எளிய நிலப்பதிவேட்டு முறையைக் கொண்டு வர அரசு உறுதியாக உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட நிலங்கள் விற்பனை பதிவு செய்யப்பட்டவுடன், அவற்றிற்கான பட்டாவை தடையின்றி மாற்றம் செய்வதற்காக, வருவாய், பத்திரப்பதிவு, நகர் ஊரமைப்புத் துறை, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து, புதிய மென்பொருள் உருவாக்கப்படும். இந்நிதியாண்டில், கிராம நத்தப் பதிவேடுகள் கணினிமயமாக்கப்பட்டு, நத்தம் நிலங்களுக்கான பட்டா மாற்றும் முறை, இணையவழியில் மேற்கொள்ளப்படும். 

சமூகப் பாதுகாப்பு:

விளிம்புநிலையில் உள்ள மக்களுக்கும், நலிவுற்ற பிரிவினருக்கும் தக்க சமூகப் பாதுகாப்பை உறுதிசெய்ய, பல்வேறு நடவடிக்கைகளை இந்த அரசு  மேற்கொண்டு வருகிறது. 
இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர், மே, 2021 முதல் புதிதாக
5,76,725 பேர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை தவிர, பெறப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியான ஒரு இலட்சம் பேர்களுக்கு சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கப்படும்.  இதன் மூலம், சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் பெறும் பயனாளிகளின் மொத்த எண்ணிக்கை 35.8 இலட்சமாக உயரும். சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்காக இம்மதிப்பீடுகளில் 5,346 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காவல்:

சட்டம் ஒழுங்கை இந்த அரசு திறம்பட நிலைநாட்டியதன் காரணமாக, தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகவும், சமுதாய நல்லிணக்கத்தின் எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்து வருகிறது. போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலைத் தடுப்பதற்கு, அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நடவடிக்கைகளால், 13,491 போதைப் பொருள் விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுடைய வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

நிருவாகத்தில் வெளிப்படைத் தன்மையை
மேலும் அதிகரிக்க, மாநிலம் முழுவதிலுமுள்ள அனைத்து
காவல் நிலையங்களிலும் 38.25 கோடி ரூபாய் மொத்தச் செலவில் கண்காணிப்புக் கேமரா அமைப்பு மேம்படுத்தப்படும்.

சமூக ஊடகங்கள் வாயிலாக தவறான காணொலிகளைப் பரப்பி புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடையே அச்சத்தை உருவாக்க, அண்மையில் சமூக விரோதிகள் சிலரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அரசின் விரைவான, கடுமையான நடவடிக்கைகளால் ஒடுக்கப்பட்டுள்ளன. இச்செயல்களில் ஈடுபட்ட சமூகவிரோதிகள் மீது 11 வழக்குகள் பதியப்பட்டு,
கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசின்
இந்த உறுதியான நடவடிக்கை அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. சுமார் 4 இலட்சம் புலம்பெயர் தொழிலாளர்களை மாவட்ட நிருவாகமும், காவல்துறை அலுவலர்களும்
நேரில் சந்தித்து உண்மையை விளக்கினர். வெளி மாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிவதற்கான பாதுகாப்பான பணிச்சூழலை எடுத்துரைத்து அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் அனைத்து முயற்சிகளையும் பீகார், ஜார்கண்ட் மாநில அரசுகளுடன் இணைந்து அரசு மேற்கொண்டு வருகிறது. 

அரசுப் பணியாளர் நலன்:

அரசுப் பணியாளர்கள், ஓய்வூதியதாரர்களின் நலனைப் பாதுகாப்பதில் இந்த அரசு கண்ணும் கருத்துமாக உள்ளது.  பழைய அரசு அலுவலர் குடியிருப்புகள் படிப்படியாக புதிதாகக் கட்டப்படும். வரும் நிதியாண்டில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்படும். உயர்ந்து வரும் கட்டுமானச் செலவுகளைக் கருத்திற்கொண்டு, அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் வீடுகட்டும் முன்பணம்
40 இலட்சம் ரூபாயிலிருந்து 50 இலட்சம் ரூபாயாக வரும் நிதியாண்டிலிருந்து உயர்த்தப்படும்.

ஓய்வூதியதாரர் இறக்க நேரிட்டால், குடும்ப உறுப்பினர்களுக்கு ‘தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்களின் குடும்பப் பாதுகாப்பு நிதித் திட்டத்தில்’ நிதியுதவியாக 50,000 ரூபாய் வழங்கப்படுகிறது.  கோவிட் பெருந்தொற்றுக் காலத்திற்குப் பின்னர், இந்நிதியுதவிக்கான கோரிக்கைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ஓய்வூதியர்களின் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு 2021-22 ஆம் ஆண்டில் 25 கோடி ரூபாயும், 2022-23 ஆம் ஆண்டில் 50 கோடி ரூபாயும் சிறப்பு நிதியாக இந்த அரசு வழங்கியுள்ளது.  நிலுவையிலுள்ள விண்ணப்பங்களை தீர்வு செய்ய  மேலும் 25 கோடி ரூபாய் சிறப்பு ஒதுக்கீடாக வழங்கப்படுகிறது. கொரோனா பெருந்தொற்றின்போது உயிரிழந்த 401 முன்களப் பணியாளர்கள் குடும்பத்தினருக்கு, தலா 25 இலட்சம் ரூபாய் வீதம் 100 கோடி ரூபாய் கருணைத்தொகை மாண்புமிகு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. 

பதிவுத்துறை:

01.04.2012 அன்று உயர்த்தப்பட்ட நிலத்தின் வழிகாட்டி மதிப்பு, 09.06.2017 அன்று முதல் ஒரே சீராக 33 சதவீதம் குறைக்கப்பட்டது. மேலும்,  விற்பனை, நன்கொடை, பரிமாற்றம் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அல்லாத ஏற்பாடு ஆவணங்களுக்கான பதிவுக் கட்டணம் ஒரு சதவீதத்திலிருந்து நான்கு சதவீதமாக உயர்த்தப்பட்டது.  சந்தை மதிப்பிற்கு ஏற்ப வழிகாட்டி மதிப்பை உயர்த்தவும், பதிவுக் கட்டணத்தைக் குறைக்கவும் பல்வேறு தரப்பினரிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த கோரிக்கைகளை ஏற்று, வழிகாட்டி மதிப்பில் திருத்தத்தைப் பரிந்துரைக்க ஒரு குழுவை அரசு அமைத்துள்ளது.  இக்குழு நிலஅளவை எண் வாரியாக திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் தேவைப்படும். ஆகவே, வெளிச்சந்தையில் சொத்துகளின் மதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளதால், இக்குழுவின் அறிக்கை பெறும்வரை, வழிகாட்டி மதிப்பை 08.06.2017 வரை கடைபிடிக்கப்பட்டு வந்த  வழிகாட்டி மதிப்பிற்கு ஈடாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. நிலம் வாங்குபவர்களின் சுமையைக் குறைக்க, பதிவு கட்டணத்தை 4 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.  இனி சொத்து விற்பனை, நன்கொடை, பரிமாற்றம் ஆகிய ஆவணங்களுக்கு, 8-6-2017 வரை கடைப்பிடிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பில் 5 சதவீதம்  முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் சொத்து மாற்று வரி மற்றும் 2 சதவீதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அல்லாத ஏற்பாடு ஆவணத்திற்கு  7 சதவீதம்  முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த நடவடிக்கைகள் எளிய, நடுத்தர மக்களுக்கு, குறிப்பாக வங்கிக் கடன் மூலம் வீடு வாங்குபவர்களுக்கு பெரிதும் பயனளிக்கும்.

#TNBUDGET2023 : அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி.. எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? முழு விவரம்!

மகளிர் உரிமைத் தொகை:

சமூகத்தின் சரிபாதியான பெண்ணினத்தை - சரிநிகர் சமமாக உயர்த்த திட்டமிட்டுச் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது திராவிட மாடல் அரசு. கல்வியில், நிருவாகத்தில், அதிகாரம் மிக்க பொறுப்புகளில், பொருளாதாரத்தில், சமூகத்தில் பெண்களை உயர்த்தும் திட்டங்களைத் திராவிட முன்னேற்றக் கழக அரசு அமையும் போதெல்லாம் தீட்டி செயல்படுத்தி வருகிறோம். மகளிருக்குச் சொத்துரிமையும், உள்ளாட்சி அமைப்புகளில் தனி இடஒதுக்கீடும் அளித்தது முதல், இன்று அவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் வழங்கியது வரை, மகளிரின் நலன் காத்து அவர்களது உரிமைகளை நிலைநாட்டுவதில் எப்போதும் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறோம்.

அந்த வரிசையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று நாங்கள் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளோம். சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம் என்ற இலக்கின்படி செயல்பட்டு வருபவர்கள் மட்டுமல்ல, சொல்லாத நல்ல பல திட்டங்களையும் நாங்கள் செயல்படுத்தி வருகிறோம் என்பதை மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அறிவீர்கள். மக்களை தேடி மருத்துவம், புதுமைப் பெண், நான் முதல்வன் போன்றவை தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாதவை. இத்தகைய  புதுமையான திட்டங்களை செயல்படுத்தியுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மகளிருக்கு உரிமைத் தொகை தரப்படும் என்ற இந்த வாக்குறுதியையும் உறுதியாக நிறைவேற்றிட வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள். அதன் அடிப்படையில், தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்பட இருக்கிறது என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.

ஒன்றிய அரசால் பெருமளவு உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு விலை, விலைவாசி உயர்வால் அதிகரிக்கும் குடும்பச் செலவுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும்
1,000 ரூபாய் என்பது அவர்களது அன்றாட வாழ்க்கைக்குப் பேருதவியாக இருக்கும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் திட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டான
இந்த ஆண்டில், திராவிட இயக்க மாதம் என சொல்லத்தக்க செப்டம்பர் மாதத்தில், தாய் தமிழ்நாட்டின் தலைமகன் - பேரறிஞர் பெருமகன் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் முதல் இத்திட்டம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் மகளிர் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும். தமிழ்நாட்டு மகளிரின் சமூக பொருளாதார வாழ்வில் ஒரு புரட்சியை ஏற்படுத்தக்கூடிய இத்திட்டத்திற்காக, இந்த வரவு-செலவுத் திட்டத்தில்
7,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
.

Related Stories

Related Stories