தமிழ்நாடு

"தமிழ்நாடு அரசுக்குத் தொல்லை தரவே ஓர் ஆளுநரா?".. ஆர்.என்.ரவிக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு தி.க தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

"தமிழ்நாடு அரசுக்குத் தொல்லை தரவே ஓர் ஆளுநரா?"..  ஆர்.என்.ரவிக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு அரசுக்குத் தொல்லை தரவே ஓர் ஆளுநரா? வதந்திகளும், பொய்யுரைகளும் இங்கு எடுபடாது. 2024 இல் ஒன்றிய அரசுக்குப் பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டார்கள். தமிழ்நாடு இதற்கான திருப்பத்தை இந்திய அளவில் அளிக்கும் என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கை வருமாறு:-

திராவிட தமிழ் மக்களின் பேராதரவினைப் பெற்று அமையப் பெற்ற தி.மு.க. ஆட்சி கடந்த 22 மாதங்களில் நிகழ்த்திய சாதனைகள் காரணமாக, அனைத்து இந்திய மாநிலங்களின் முதலமைச்சர்களில் நமது முதலமைச்சர் அவர்கள், இந்தியாவின் நம்பர் ஒன் முதலமைச்சர் என்ற பெருமையைப் பெற்று, அடக்கத்தோடும், ஆர்வத்தோடும், எவரும் அதிசயிக்கும் வண்ணம் உள்ள ஆளுமையோடு, ‘அனைவருக்கும் அனைத்தும்‘ அளிக்கும் ‘திராவிட மாடல்’ ஆட்சியை - மாட்சியுடன் நடத்தி வருகிறார்.

பரம்பரை இன எதிரிகளின் சதித் திட்டம்!

இது நம் பரம்பரை எதிரிகளுக்குப் பிடிக்காதது மட்டுமல்ல; சகித்துக் கொள்ள முடியாத நிலையில், இதைக் குறுக்கு வழியில் ஏதாவது செய்து இவ்வாட்சியைத் தடுக்கலாமா? அகற்றலாமா? என்று ‘‘பல்முனை சதித்திட்டம்‘’ ஒன்றைத் தீட்டி, அதனை செயல்படுத்திட முனைந்து - அவ்வப்போது மூக்குடைபட்டாலும்கூட, தங்களுக்கு இருக்கும் ஒன்றிய ஆட்சியின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, ஓரவஞ்சனையுடன் நடந்துகொள்ளும் முறை, மற்றொருபுறம்.

"தமிழ்நாடு அரசுக்குத் தொல்லை தரவே ஓர் ஆளுநரா?"..  ஆர்.என்.ரவிக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!

ஆளுநர்மூலம் அன்றாடத் தொல்லைகள்!

ஆளுநர்மூலம் அன்றாடம் ஆட்சியைச் செயல்படுத்தவிடாமல், தேவையற்ற வீண் சர்ச்சைகளைப் பேசியும், சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஒப்புதலுக்கு அனுப்பும் மசோதாக்களை பல மாதங்கள் கிடப்பில் போட்டு, தேர்வு செய்யப்பட்ட மக்களாட்சியை செயல்படவிடாமல், தேக்கத்தை செயற்கையாக உருவாக்கி, மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவிடாமல் தடுத்து, ஒரு விஷமப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிடும் ஆளுநர் தமிழ்நாடு அரசின் ஓர் அங்கம் என்பதை அவரே மறந்துவிட்டு, அவரே எதிர்க்கட்சித் தலைவர் போன்று நாளும் போட்டி அரசினை நடத்திடும் அரசமைப்புச் சட்ட விரோதப் போக்கு ஒருபக்கம்.

ஊடகங்களை வளைத்துப் போடும் யுக்தி!

இன்னொரு பக்கம் சமூக வலைத்தளங்கள்மூலம் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸினர் தமிழ்நாட்டு ஆட்சிக்கு எதிராக, உண்மை கலப்பற்ற வடிகட்டிய பொய்களைப் பரப்பி, மாநில மக்களிடையே அய்யுறவு ஏற்படுத்துதல்; ‘மீடியா’ என்ற ஊடகங்களைப் பலமுறைகளில் ‘தன்வயப்படுத்தி’, தினமும் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக அவதூறுகளை அள்ளித் தெளித்து வருகின்றனர்.

நீதிமன்றத்தின் செயல்பாடுகள்

ஒன்றிய அரசு தரவேண்டிய நிதியைக்கூட உரிய காலத்தில் தராமல் தாமதப்படுத்துதல்; அதைவிட, நீதிமன்றங்களில் நீதிபதிகளாக சிலர் ஆர்.எஸ்.எஸ்.காரர்களாகவே பதவியேற்ற பின்பும், அந்தக் கொள்கை உணர்வோடு, தி.மு.க. ஆட்சியின் கொள்கை முடிவுகளுக்கு எதிரான வழக்குகளில் ஆட்சிக்கு எதிராகத் தீர்ப்பு எழுதுதல். (ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி ஆறு, ஏழு தீர்ப்புகளைத் தொடர்ச்சியாக இதே பாணியைக் கையாண்டு எழுதியது கடுங் கண்டனத்திற்கு உரியவை என்ற பொதுக் கருத்து நிலவுகிறது).

"தமிழ்நாடு அரசுக்குத் தொல்லை தரவே ஓர் ஆளுநரா?"..  ஆர்.என்.ரவிக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!

2024 பி.ஜே.பி.,க்கான B,C,D டீம்களும் - விபீடணர்களும்!

இப்படி பலமுனை அவதூறுகள், சோதனைகள் - அதற்குத் துணைபோகும் விபீடண அனுமார் கும்பல், சில அரசியல் கட்சிகளைத் தங்களது B,C,D டீம்களாக்கிடும் வித்தை, வியூகங்களை அமைத்தல், இவற்றை தி.மு.க.வும், அதன் முதலமைச்சரும் நித்தம் நித்தம் தாண்டித்தாண்டி இலக்கு நோக்கிய தமது பயணத்தை - இடையூறுகள் ஆயிரம் என்றாலும், நடத்தி சாதனை சரித்திரம் படைத்து வருகின்றனர்.

2024 ஆம் ஆண்டு வரவிருக்கும் பொதுத் தேர்தலிலும் தமக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று ஜோடனைச் செய்திகளை உலவவிட்டாலும், உண்மை வேறு மாதிரி இருக்கும் என்பதை நடைபெற்ற வடகிழக்கு மாநிலத் தேர்தல்களும் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், அதனை மறைத்திடும் வகையில், முன்பைவிட செல்வாக்கு சரிந்துள்ளது என்பதை மறைக்கவே ஆட்சி அதிகாரம், நிதி உதவி, கார்ப்பரேட் கனவான்களின் ‘கடாட்சத்துடன்’ நாளும் புதுப்புது வித்தைகள்! எதிர்க்கட்சிகள்மீது ஏவுகணைகள், வழக்குகள் - சிறைவாசங்கள் என்ற அச்சுறுத்தலும் அஸ்திரங்களாகி வருகின்றன.

தமிழ்நாட்டில் உள்ள கொள்கைப் பலம் பொருந்திய கூட்டணிக்கு எதிராக அன்றாடம் அவதூறு, அவநம்பிக்கை நிலவுவது போன்ற ‘விஷமத்தன’ வேக்காட்டு வித்தைகளைக் கட்டவிழ்த்துவிடும் கயமைத்தனத்தில் ஈடுபட்டு வருகிறது காவிக் கும்பல்!

ஆனால், எதிர்ப்பு நெருப்பில் புடம்போடப்படும் பொன் இந்த மண் தமிழ்நாடு - அதன் ‘திராவிட மாடல்’ அரசும், அதற்கு ஆதரவாகக் கொள்கை லட்சியக் கூட்டணியும் என்பது புரியாமல் மின்மினிப் பூச்சுகள் மின்சாரத்தைத் தாக்கி வெற்றி பெற நினைக்கும் அவலத்தில் ஈடுபட்டுள்ளதைக் கண்டு அஞ்சாத கூட்டணியாம் - லட்சியக்கோட்டை - எதிர்ப்புகளும், அவதூறுகளும் அவை வளருவதற்கான உரங்கள்! ஊதப்பட்ட பிரச்சார பலூன்கள் வெறும் ஊசிகளால் வெடித்து வெத்துவேட்டாகி விடும், எச்சரிக்கை.

"தமிழ்நாடு அரசுக்குத் தொல்லை தரவே ஓர் ஆளுநரா?"..  ஆர்.என்.ரவிக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!

உத்தரப்பிரதேசம் போன்றோ, வடபுலம் போன்றோ அல்ல தமிழ்நாடு என்பது நினைவில் இருக்கட்டும்!நீங்கள் கற்பனையாகத் தயாரிக்கும் விஷமச் செய்திகள் உங்களுக்கே ‘பூமராங்’ போல திரும்பிடும் என்பதை நீங்களே உணருவீர்கள்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சினையில், பா.ஜ.க., சங் பரிவார்களின் முகமூடி கழன்று வீழ்ந்துவிட்டதைக் கண்டு உலகம கைகொட்டி சிரிக்கிறது! கண்ணாடி மாளிகையோரே, கற்கோட்டைகள்மீது கல்லெறியாதீர் - விளைவறியாமல்.

தமிழ்நாடு திருப்பம் தரும்!

தமிழ்நாட்டு மக்களுக்குள்ள தெளிவும், திறனும் முழு இந்தியாவினையே மாற்றிக் காட்டும்!ஏவுகணையாம் பாசறைக் கூடம் இது என்பதை வருகிற 2024 தேர்தல் உணர்த்தும்!மக்கள் தயாராகிவிட்டார்கள் - எதிர்க்கட்சித் தலைவர்களைத் தாண்டி! இதன் விளைவு போகப் போகத் தெரியும்; தமிழ்நாடுதான் ஒரு திருப்பம் தரும் என்பது வரலாற்றின் பாடங்களாகும், அறிவீர்! அறிவீர்!!.

இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories