தமிழ்நாடு

“அவன் எந்தக் கொம்பனாக இருந்தாலும் இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்..” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

நாட்டின் விடுதலைக்கு முன்பும் பின்பும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பலமுறை தடை செய்யப்பட்டுள்ளது. இயக்கத்தினுடைய புரட்சிகரமான கொள்கைகளுக்காகத் தடை செய்யப்பட்டது.

“அவன் எந்தக் கொம்பனாக இருந்தாலும்  இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்..” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (4.3.2023) சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தோழர் ப. மாணிக்கம் அவர்களது நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை பின்வருமாறு : -

உலகில் தலைசிறந்த மனிதர்களை 'மாணிக்கம்' என்பார்கள். 'மனிதகுல மாணிக்கம்' என்றுகூட பண்பு நிறைந்த மனிதர்களை அழைத்துப் போற்றுவார்கள். அந்த வகையில் பிறக்கும்போதே மாணிக்கமாக பிறந்தவர்தான் தோழர் ப.மாணிக்கம் அவர்கள்.

மாமனிதர் மாணிக்கம் அவர்களுடைய நூற்றாண்டு விழா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாமெல்லாம் பெருமைப்படத்தக்க வகையில் எழுச்சியோடு, ஏற்றத்தோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விழாவில் பங்கெடுக்கக்கூடிய ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தமைக்கு நான் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன், பூரிப்படைகிறேன்.

“அவன் எந்தக் கொம்பனாக இருந்தாலும்  இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்..” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

அதிலும், இன்னொரு மனிதகுல மாணிக்கமான தோழர் அய்யா நல்லகண்ணு அவர்கள் இந்த மேடையில் நம்மோடு இருக்கிறார்கள். தியாகத்தின் திருவுருவாக இருக்கின்ற தோழர் அவர்கள் வாழும் காலத்தில் நாமெல்லாம் வாழ்கிறோம் என்பதே நமக்குக் கிடைத்திருக்கக்கூடிய பெருமை! இத்தகைய தீரமிக்க தியாகிகளின் இயக்கம்தான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி!

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி வளரக் காரணம் அதனுடைய கொள்கைகள் மட்டுமல்ல, இதுபோன்ற தன்னலமற்ற தலைவர்களினால்தான்!

அரசியல் வெற்றி - தோல்விகளுக்கு அப்பாற்பட்டு பாட்டாளித் தோழர்களுக்காகத் தன்னுடைய வாழ்நாளின் இறுதிவரை உழைக்கும் தலைவர்களாக இந்தத் தலைவர்கள் அமைந்திருப்பார்கள். அத்தகைய மாபெரும் தலைவர்களில் ஒருவர்தான் மாமனிதர் மாணிக்கம் அவர்கள்.

கம்யூனிஸ்ட் இயக்கத்தில் அவர் வளர்ந்தாலும், அவருடைய தந்தை பக்கிரிசாமி அவர்கள் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர். அந்தக் கொள்கையில் அழுத்தமான பற்றுக் கொண்டவர். எனவே, தோழர் மாணிக்கம் அவர்களுக்கும் எங்களுக்கும் பூர்வகாலத் தொடர்பு என்பது அமைந்திருக்கிறது.

மிக இளமைக் காலத்திலேயே, போராளியாகத் தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர் மாணிக்கம் அவர்கள். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்குப் படிக்கச் சென்றபோதும் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டதன் காரணமாக, பல்கலைக்கழகத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

பின்னர் தீவிரமான அரசியலில் அவர் ஈடுபட்டார். மாநிலம் முழுவதும் மாணவர்களைத் திரட்டத் தொடங்கினார். அவருடைய செயல்பாடுகளைப் பார்த்து நெல்லை மாவட்டத்தில் இயக்கத்தை வளர்ப்பதற்காக கட்சித் தலைமை அவரை அனுப்வி வைத்தது.

* தஞ்சை மாவட்டம் வலங்கைமானில் பிறந்து -

* கடலூரில் வளர்ந்து -

* சிதம்பரத்தில் பயிற்சி பெற்று -

* திருநெல்வேலியில் கட்சி வளர்த்து -

* தமிழ்நாடு முழுமைக்குமான 15 ஆண்டு காலம் செயலாளராக இருந்து பணியாற்றியவர்தான் தோழர் மாணிக்கம் அவர்கள்.

77 ஆண்டுகாலம் வாழ்ந்தார் என்றால், அதில் ஐம்பது ஆண்டு காலம் பொதுவுடைமை இயக்கத்துக்காக - பொதுவுடைமைக் கொள்கைக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு என்பது, தியாக வரலாறு! தியாகிகளுடைய வரலாறு!

அந்தத் தியாக வரலாற்றில் முக்கியமான அத்தியாயம்தான் மறைந்த மாணிக்கம் அவர்களும் - இந்த மேடையில் அமர்ந்திருக்கக்கூடிய அய்யா நல்லகண்ணு அவர்களும்!

“அவன் எந்தக் கொம்பனாக இருந்தாலும்  இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்..” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் எத்தனையோ சதி வழக்குகள் போடப்பட்டன. இந்தியாவின் விடுதலைக்காக - மக்களுக்காக - புரட்சிகரக் கொள்கைகளுக்காகப் போராடுபவர்கள் மீது அந்த வழக்குகள் போடப்பட்டன. அப்படி கைது செய்யப்பட்ட பல பேர் ஆயுள் தண்டனையையும் - தூக்குத் தண்டனையையும் - சிறைசாலை சித்திரவதைகளையும் அனுபவித்திருக்கிறார்கள்.

நம்முடைய அய்யா நல்லகண்ணு அவர்கள் எட்டாண்டுகாலம் சிறையில் இருந்தவர் என்றால், தோழர் மாணிக்கம் அவர்கள் ஐந்தரை ஆண்டு காலம் சிறையில் இருந்திருக்கிறார்.

நாட்டின் விடுதலைக்கு முன்பும் பின்பும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பலமுறை தடை செய்யப்பட்டுள்ளது. இயக்கத்தினுடைய புரட்சிகரமான கொள்கைகளுக்காகத் தடை செய்யப்பட்டது. அப்போதெல்லாம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர்கள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள்.

கம்யூனிஸ்ட் தலைவர்கள் சிலரை மறைத்து வைத்து அடைக்கலம் கொடுத்தது திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தோழர்கள் பலருக்கும் நினைவு இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

மூத்த தோழர்கள், இளையவர்களுக்கு இந்த வரலாற்றைச் சொல்லித்தர வேண்டும்!

அப்படி தலைமறைவாக இருந்த காலக்கட்டம் குறித்து அய்யா நல்லகண்ணு அவர்கள் விவரித்திருக்கும் காட்சிகள் உணர்ச்சிகரமாக இருக்கும்.

“அவன் எந்தக் கொம்பனாக இருந்தாலும்  இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்..” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

ஒரு முறை மாணிக்கம், நல்லகண்ணு, பாலதண்டாயுதம் ஆகியோர் நெல்லை மாவட்டத்தில் தலைமறைவாக இருக்கிறார்கள். மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய தலைவர், அதனுடைய செயலாளராக இருந்தவர் தோழர் நல்லசிவன் அவர்களது உறவினர் வீட்டில் தங்கி இருக்கிறார்கள். இந்த தகவல் போலீசுக்கு தெரிந்து, போலீஸ் வருவதற்குள்ளாக இவர்கள் இடத்தை மாற்றி ஒரு காட்டுக்குள் புகுந்துவிடுகிறார்கள். வேலிக் கருவை முட்களுக்கிடையே நள்ளிரவில் நடந்து போய் ஒரு காட்டு பங்களாவை கண்டுபிடித்து அங்கு தங்க நினைக்கிறார்கள். ஆனால் அங்கு படுக்க வசதியில்லை. மலைக்குகை போன்ற இடத்தில் தங்குகிறார்கள். எல்லோருக்கும் டீ போட்டுத் தருகிறார் மாணிக்கம் அவர்கள். அப்பொழுது புகை வெளியிலே வருகிறது. அந்தப் புகையானது வெளியில் தெரிந்து ஆடு மேய்க்கும் ஆட்கள் பார்த்து போலீசுக்கு சொல்லி விடுகிறார்கள். போலீஸ் வருவதற்குள் இவர்கள் தலைமறைவாகி விடுகிறார்கள். ஆனால் இவர்கள் உள்ளேதான் இருக்கிறார்கள் என்று நினைத்து அந்த குகைக்குள் வெடிகுண்டு வீசுகிறது போலீஸ்காரர்களால். இவர்கள் முன்கூட்டியே சென்று விட்ட காரணத்தால் அங்கிருந்து தப்புகிறார்கள். சினிமாவைப் போன்ற திகில் காட்சிகள் இவை.

இப்படி, தங்களது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் போராட்ட வாழ்க்கை வாழ்ந்தவர்தான் நம்முடைய மாணிக்கம் அவர்கள். அவருடைய நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறோம். அத்தகைய உணர்வை இன்றைய இளையசமுதாயம் பெற வேண்டும்.

தலைவர் கலைஞர் அவர்களோடு மிக மிக நெருக்கமான நட்பைப் பேணி பாதுகாத்தவர் தோழர் மாணிக்கம் அவர்கள். உடல்நலம் பாதிக்கப்பட்டு தோழர் மாணிக்கம் அவர்கள் 1999-ஆம் ஆண்டு ஜூன் 22-ஆம் நாள் மறைந்தார் என்று கேள்விப்பட்டதும் உடனடியாக அவரது குரோம்பேட்டை வீட்டுக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார் முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள். அன்றைய தினம் அண்ணா அறிவாலயத்தில் சொற்பொழிவாளர் கூட்டம் நடந்து கொண்டு இருந்தது. தலைவர் அவர்கள் அதில் பங்கெடுத்து இருந்தார்கள். கூட்டத்தின் இடையில் அவருக்கு அந்தத் தகவல் தரப்பட்டது. அவசர அவசரமாக அதை முடித்துவிட்டு தோழர் மாணிக்கம் அவர்களது உடலுக்கு அஞ்சலி செலுத்தச் சென்றார்கள்.

“அவன் எந்தக் கொம்பனாக இருந்தாலும்  இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்..” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

அப்போது வெளியிட்ட அறிக்கையில் தலைவர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்ட சொற்களை இங்கு நான் நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்....

'' எந்தச் சூழலிலும் அமைதி இழக்காமல் அரசியல் நாகரிகத்தைப் பேணிப் பாதுகாத்தவர்.

தனிப்பட்ட முறையில் என்னுடைய நீண்ட நாளைய நண்பர்.

அவருடைய மறைவு எனக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் பேரழிப்பாகும்" - என்று சொல்லி இருந்தார் தலைவர் கலைஞர் அவர்கள்.

மாணிக்கம் அவர்களது மறைவு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்குப் பேரிழப்பு என்று மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் பேரிழப்பு என்று சொல்லி இருந்தார் தலைவர் கலைஞர் அவர்கள். இதனை அனைவரும் கவனிக்க வேண்டும்.

அந்தளவுக்குப் பொதுவுடமை இயக்கத்திற்கும் திராவிட இயக்கத்திற்கும் நட்பு இருக்கிறது. இது கொள்கைப்பூர்வமான நட்பு என்பதை மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.

கடந்த பிப்ரவரி மாதம் 21-ஆம் நாள் மார்க்ஸும் எங்கெல்சும் வெளியிட்ட "கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை"யின் 175-ஆவது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது உங்களுக்கெல்லாம் நினைவிருக்கும். அந்தக் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய அறிக்கையை முதன்முதலாகத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர் யார் தெரியுமா? தந்தை பெரியார் அவர்கள்.

தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்துக்கு கருத்தியல்ரீதியான ஆசானாக இருந்தவர் பொதுவுடைமைக் கருத்தியலாளர் 'புரட்சிப் புலி' ம.வெ.சிங்காரவேலர் அவர்கள். அந்த நட்பின் தொடர்ச்சியாகத்தான் நாம் இப்போது ஒரு அணியாக, ஒரே அணியாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இந்த அணியானது ஜனநாயகம் காக்க - சமத்துவத்தை நிலைநாட்ட - சமதர்மத்தைக் காக்க - சுயமரியாதை உணர்வை ஊட்டுவதற்காக - இப்போது போல எப்போதும் நாம் இணைந்து செயல்பட வேண்டும் என்று மாணிக்கம் அவர்களுடைய நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிற நேரத்தில் நான் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

“அவன் எந்தக் கொம்பனாக இருந்தாலும்  இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்..” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

பேசிய அத்தனை பேரும் குறிப்பிட்டுச் சொன்னார்கள், நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதியினுடைய இடைத்தேர்தலைப் பற்றி. மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது.

இது நம்முடைய ஒற்றுமைக்குக் கிடைத்திருக்கக்கூடிய மாபெரும் வெற்றி! இந்த அரசினுடைய இரண்டாண்டு காலச் சாதனைகளுக்குக் கிடைத்திருக்கக்கூடிய வெற்றி இந்த இடைத்தேர்தல்!

ஆனால், அதே நேரத்தில் நமக்கான பெரிய களம் காத்திருக்கிறது.

அதுதான் நாடாளுமன்றக் களம்! நாடாளுமன்றத்தின் தேர்தல் களம்!

தமிழ்நாட்டைச் சேர்த்து புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளில் நாம் வெற்றி பெற வேண்டும். அய்யா ஆசிரியரும் நம்முடைய முத்தரசன் அவர்களும் குறிப்பிட்டுச் சொன்னார்களே,

நாற்பதும் நமதே

நாடும் நமதே - என்று சொல்லி இருக்கிறேன்.

தமிழ்நாட்டில் மட்டும் வெற்றி பெற்றால் போதாது. இந்தியா முழுமைக்கும் நம்முடைய கூட்டணி வெற்றி பெற்றாக வேண்டும். மதவாத - வகுப்புவாத - எதேச்சதிகார சக்திகள் வீழ்த்தப்படவேண்டும். இதனை என்னுடைய பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டத்தில் அகில இந்திய தலைவர்களையெல்லாம் வைத்துக் கொண்டு நான் குறிப்பிட்டுச் சொன்னேன்.

தமிழ்நாட்டைப் போன்ற ஒற்றுமை அனைத்து மாநிலங்களிலும் உருவானால்தான் வெற்றி பெற முடியும். வெறும் கையிலே முழம் போடக் கூடாது - என்பார்கள். எனவே, ஒற்றுமைக் கரங்கள் சேராமல் வெற்றிக் கனியை நாம் பறிக்க முடியாது.

2024 தேர்தல் என்பது வெறும் தேர்தல் அல்ல. அது ஒரு கொள்கை யுத்தம்!

அந்த கொள்கை யுத்தத்திற்கு வியூகம் வகுப்பது ஒருபக்கம் என்றால், - அதற்கான படைவீரர்களை உருவாக்குவது இன்னொரு பக்கம். இன்று நம்முடைய இயக்கங்களை நோக்கி ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் வந்துகொண்டு இருக்கிறார்கள். இந்த இளைஞர்களுக்கு கொள்கைப் பயிற்சி அளிக்க வேண்டும்.

திராவிட மாடல் பயிற்சிப் பாசறைக் கூட்டங்களை திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி நடத்தி வருகிறது. இதுபோல் மார்க்சிய கொள்கை வகுப்புகளையும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்ந்து நடத்த வேண்டும். இத்தகைய வகுப்புகளை அதிகமாக நடத்தியவர் தோழர் மாணிக்கம் அவர்கள்.

'மார்க்சின் கொள்கைகள் பிளவுபடுத்தும் கொள்கை' என்றெல்லாம் இந்தக் காலத்தில் சிலரால் சொல்ல முடிகிறது என்றால் அதற்குத் தக்க பதில் சொல்லக்கூடிய கடமை நமக்கு இருக்கிறது.

“அவன் எந்தக் கொம்பனாக இருந்தாலும்  இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்..” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

சாதி, மதம், இனம், பணம், பால் - என எந்த வேறுபாடும் பார்க்காமல் அழைக்கும் 'தோழர்' என்ற ஒற்றைச் சொல்லை விட ஒற்றுமை மருந்து உண்டா?

'உலகப் பாட்டாளிகளே ஒன்று சேருங்கள்' என்பதை விட ஒற்றுமை முழக்கம் வேறு இருக்க முடியுமா?

ஆந்திராவில் இருந்து வந்து தஞ்சை மாவட்ட உழவர்களுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் சீனிவாசராவ் அவர்கள்.

இவர்கள் எல்லாம் ஒற்றுமையின் சின்னங்கள் அல்லவா?

ஆனால், சாதியின் பேரால் மக்களைப் பிரித்த சனாதனத்தின் ஆதரவாளர்கள், மார்க்ஸை பிளவுவாதி என்கிறார்கள் என்றால், மார்க்சிய கருத்தியலை நாடு முழுவதும் விதைக்கும் கடமை மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்கள் அனைத்திற்கும் இருக்கிறது.

நமது இயக்கங்களை நோக்கி வரக்கூடிய இளைஞர்களைக் கொள்கையில் உரம் பெற்றவர்களாக மாற்றுவதுதான் தோழர் ப.மாணிக்கம் போன்ற தியாகிகளுக்கு நாம் செலுத்தக்கூடிய உண்மையான வீரவணக்கமாக இருக்க முடியும் என்று கூறி, அதே நேரத்தில் பீகார் மாநிலத்திலிருந்து வந்து இங்கு தொழில் செய்து கொண்டிருக்கக்கூடிய, பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய, தங்களுடைய குடும்பத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக தமிழ்நாட்டை நோக்கி வந்துகொண்டிருக்கக்கூடிய சிலரை எப்படியாவது கலவரத்தை ஏற்படுத்தி அதன் மூலமாக அரசியல் லாபம் தேட நினைக்கக்கூடியவர்களுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லுகிறேன்.

இன்று காலையில்கூட பீகார் மாநிலத்தினுடைய முதலமைச்சர்

திரு. நிதீஷ்குமார் அவர்களிடத்தில் நான் தொலைபேசியில் பேசிவிட்டுத்தான் வந்திருக்கிறேன். எனவே, எந்தக் காரணத்தைக் கொண்டும் எவ்வளவு பிளவை ஏற்படுத்த நினைத்தாலும் ஒருக்காலும் இந்தக் கூட்டணியை நீங்கள் பிளவுபடுத்திட முடியாது என்பதை மாத்திரம் அழுத்தந்திருத்தமாக எடுத்துச் சொல்லி, யார் சட்டம்-ஒழுங்கை கெடுக்கின்ற சூழ்நிலையில் ஈடுபட்டாலும் அவன் எந்தக் கொம்பனாக இருந்தாலும் அவனை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்! அடக்குவோம்! என்பதை மாத்திரம் இந்த நேரத்தில் உறுதிசொல்லி, தோழர் ப.மாணிக்கம் அவர்களுடைய புகழ் என்றைக்கும் நிலைத்து நிற்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

Related Stories