தமிழ்நாடு

“ஏழையின் சிரிப்பில் அண்ணாவையும், கலைஞரையும் காண்போம்” - திருச்சி அரசு விழாவில் முதல்வர் எழுச்சி உரை!

ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய திட்டங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றித்தரும் ஆட்சியாக நம்முடைய கழக ஆட்சி செயல்பட்டு வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“ஏழையின் சிரிப்பில் அண்ணாவையும், கலைஞரையும் காண்போம்” - திருச்சி அரசு விழாவில் முதல்வர் எழுச்சி உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (29.12.2022) திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :-

திருச்சியில் எது நடந்தாலும், அது பிரமாண்டமாகத்தான் நடக்கும்.

சிறிய விழாவாக இருந்தாலும், அது பெரிய அரசு விழாவாகத்தான் நடக்கும்! பெரிய பொதுக்கூட்டமாக இருந்தாலும், அதனை மாபெரும் மாநாடாகத்தான் திருச்சியில் காணலாம்! மாநாடு என்று அறிவித்தால், பிரமாண்டமான மாநாடாகத்தான் நடக்கும். அப்படி நடந்தால்தான் அது திருச்சி. அப்படி நடத்தினால்தான் அது கே.என்.நேரு!

“ஏழையின் சிரிப்பில் அண்ணாவையும், கலைஞரையும் காண்போம்” - திருச்சி அரசு விழாவில் முதல்வர் எழுச்சி உரை!

அந்தப் புகழை, இந்த நிகழ்ச்சியின் மூலமாகவும் அவர் நிரூபித்துக் காட்டி இருக்கிறார். நகராட்சி நிர்வாகத் துறையின் மூலமாக தமிழ்நாட்டினுடைய உள்கட்டமைப்பு வசதிகள் இன்றைக்கு ஏராளமாகச் செய்து வருபவர் தான் அமைச்சர் நேரு அவர்கள்!

அரசு நிகழ்ச்சி என்று தேதி வாங்கி, அரசு சார்பிலான மாநாடாக இதனை ஏற்பாடு செய்து மிக எழுச்சியோடு நடத்திக் கொண்டிருக்கக்கூடிய நேரு அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுதலை, வாழ்த்துதலை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிகழ்ச்சிக்கு அடுத்ததாக, தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் இரண்டாவது அலகினைத் திறந்து வைக்க இருக்கிறேன். அதோடு, மணப்பாறையில் சிப்காட் வளாகத்தினையும் நான் திறந்து வைக்க இருக்கிறேன். இவை இரண்டும் திருச்சிக்கு மிக முக்கியமான சாதனைகள்!

“ஏழையின் சிரிப்பில் அண்ணாவையும், கலைஞரையும் காண்போம்” - திருச்சி அரசு விழாவில் முதல்வர் எழுச்சி உரை!

தமிழ்நாட்டின் தொழில்துறை என்பது மிக வேகமாக முன்னேற்றத்தை நோக்கி போய்க் கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டை நோக்கி புதிய தொழிற்சாலைகள் வரத் தொடங்கியிருக்கிறது. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து மட்டுமல்ல, உலக நிறுவனங்களும் தமிழ்நாட்டை நோக்கி இன்றைக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள். புதிய புதிய துறைகளில் முதலீடுகளை இன்றைக்கு நாம் ஈர்த்து வருகிறோம். இதை, கடமையே கண்ணாக நினைத்துச் செயல்படுத்தி வரக்கூடியவர் தான் இங்கு வந்திருக்கக்கூடிய நம்முடைய தொழில் துறை அமைச்சராக இருக்கும் தங்கம் தென்னரசு அவர்கள். எனவே, அவரையும் நான் பாராட்டுகிறேன்.

சிப்காட் திறப்பு விழா நிகழ்ச்சியைத் தொடர்ந்து, மக்களைத் தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டத்தினை அதாவது ஒரு கோடியே ஒன்றாவது பயனாளியைச் சந்திக்க சன்னாசிப்பட்டி என்ற கிராமத்திற்கு நான் செல்ல இருக்கிறேன்.

நம்முடைய கழக ஆட்சி அமைந்ததும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்டு 5-ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம், சாமனப்பள்ளி கிராமத்தில் வசிக்கும் சரோஜா என்பவர்தான் இந்தத் திட்டத்தில் சிகிச்சை பெற்ற முதலாவது நபர். இன்று நான் சந்திக்க இருப்பவர் ஒரு கோடியாவது நபர்!

“ஏழையின் சிரிப்பில் அண்ணாவையும், கலைஞரையும் காண்போம்” - திருச்சி அரசு விழாவில் முதல்வர் எழுச்சி உரை!

ஏழை - எளிய மக்கள் உடல்நலம் பாதிக்கப்படும்போது வெளியூருக்கு வந்து சிகிச்சை பெற வாய்ப்பு வசதி இல்லாமல் இருந்தால் அவர்களுக்கு, அவர்களது வீட்டுக்கே சென்று சிகிச்சை அளிக்கக்கூடிய மகத்தான திட்டம்தான், இந்தத் திட்டம்!

இந்த ஓராண்டு காலத்தில் ஒரு கோடிப் பேருக்கு நமது அரசாங்கம் இத்தகைய சிகிச்சையை அளித்துள்ளது. இது சாதாரண சாதனை அல்ல; மாரத்தான் போல் நெடிய தொடர் ஓட்டத்தால் நிகழ்ந்துள்ள சாதனை!

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருக்கும் அருமை நண்பர் மா.சுப்பிரமணியன், ஒரு மாரத்தான் ஓட்ட வீரர் என்பது அனைவரும் அறிந்த உண்மை. சாலையில் மட்டுமல்ல, துறையின் செயல்பாடுகளிலும் மாரத்தான் போல் நெடுந்தூரம் களைப்பின்றி பயணித்து இலக்குகளை அடைந்து காட்டக்கூடியவர்தான் என்பதை இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

“ஏழையின் சிரிப்பில் அண்ணாவையும், கலைஞரையும் காண்போம்” - திருச்சி அரசு விழாவில் முதல்வர் எழுச்சி உரை!

ஒரு கோடிப் பேருக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டில், தேவைப்படும் அனைத்து மக்களுக்கும் உரிய சிகிச்சை அளிக்கும் திட்டமாக அதனை நிகழ்த்திக் காட்ட இருக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களை உங்கள் அனைவரின் சார்பில் நான் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.

இந்த நிகழ்ச்சியை இவ்வளவு சிறப்பாக, எழுச்சியோடு ஏற்பாடு செய்திருக்கக்கூடிய அமைச்சர் நேரு அவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களையும் பாராட்டுகிறேன்.

எனது அருமை நண்பர், உயிர் நண்பர் அன்பில் பொய்யாமொழியை நினைவூட்டக்கூடிய வகையில், அவரது பெயரை நிலைநாட்டக்கூடிய வகையில் அன்பில் மகேஸ் செயல்பட்டு வருகிறார். பள்ளிக்கல்வித் துறையை, இந்தியாவிலேயே மிகச் சிறந்த துறையாக ஆக்க நித்தமும் உழைத்துக் கொண்டு இருக்கிறார் தம்பி அன்பில் மகேஸ் அவர்கள்.

“ஏழையின் சிரிப்பில் அண்ணாவையும், கலைஞரையும் காண்போம்” - திருச்சி அரசு விழாவில் முதல்வர் எழுச்சி உரை!

அதேபோல், இந்த மேடைக்குப் புதியவராக, அமைச்சரவைக்கு புதியவராக வருகை தந்துள்ள தம்பி உதயநிதி. அமைச்சரவைக்குத்தான் புதியவரே தவிர, உங்களுக்கு நன்கு அறிமுகமானவர், உங்களுக்கு பழைய முகம்தான். அவர் அமைச்சராகப் பொறுப்பேற்றபோது விமர்சனம் வந்தது. விமர்சனம் வரத்தான் செய்யும். இப்படி விமர்சனங்கள் வந்தபோது, 'என்னுடைய செயல்பாட்டைப் பாருங்கள், அதன்பிறகு விமர்சியுங்கள்' என்றார்.

அவர் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றபோதும் விமர்சனங்கள் வந்தது. ஆனால் அதற்கெல்லாம் தன்னுடைய செயல்பாடுகளால் பதில் சொல்லி, அனைவரது பாராட்டையும் பெற்றார், தன்னை நிரூபித்துக் காட்டினார்.

உதயநிதிக்கு ஏராளமான பொறுப்புகள் இருக்கிறது. இளைஞர் நலன், விளையாட்டு, மகளிர் மேம்பாடு, சிறப்புத் திட்டச் செயலாக்கம், வறுமை ஒழிப்பு, கிராமப்புறக் கடன்கள் ஆகிய முக்கியமான துறைகள் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தமிழ்நாட்டின் ஏழை எளிய, விளிம்புநிலை மக்களை மேம்படுத்தக்கூடிய துறைகள்! இவைதான் அவரிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

“ஏழையின் சிரிப்பில் அண்ணாவையும், கலைஞரையும் காண்போம்” - திருச்சி அரசு விழாவில் முதல்வர் எழுச்சி உரை!

அமைச்சர் பொறுப்பில் சிறப்பாகப் பணியாற்றி இந்தத் துறைகளை மேம்படுத்துவார் என்ற நம்பிக்கை எனக்கு அதிகமாக இருக்கிறது. மேம்படுத்த வேண்டும் என்பதை முதலமைச்சராக நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறேன்.

இந்த அரசு விழா மக்கள் நல விழாவாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இதனை ஒருங்கிணைத்து சிறப்போடு ஏற்பாடு செய்திருக்கக்கூடிய நம்முடைய முதன்மைச் செயலாளர் அமுதா அவர்களுக்கும், அதேபோல் மேலாண்மை இயக்குநராக இருக்கக்கூடிய திவ்யதர்சினி அவர்களுக்கும், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும், மாவட்ட உயர் அதிகாரிகள், அலுவலர்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தை, நன்றியை, வாழ்த்துதலை நான் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய பாராட்டுகளையும் நான் தெரிவிக்கிறேன்.

* மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு

* மணிமேகலை விருது

* மாநில அளவிலான வங்கியாளர் விருது

* முடிவுற்ற பணிகளைத் துவக்கி வைத்தல்

* புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல்

* நலத்திட்ட உதவிகள் வழங்குதல் - என

ஆறு நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய விழா இது!

இந்த விழாவில், 22 ஆயிரத்து 716 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. இதன் மொத்த மதிப்பு 79 கோடியே 6 லட்சம் ரூபாய். இன்று மட்டும் 5,635 முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைக்க இருக்கிறேன். இவற்றின் மொத்த மதிப்பு 238 கோடியே 40 லட்சம் ரூபாய். இன்று மட்டும் 5951 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறேன். இதன் மொத்த மதிப்பு 308 கோடியே 29 லட்சம் ரூபாய்.

“ஏழையின் சிரிப்பில் அண்ணாவையும், கலைஞரையும் காண்போம்” - திருச்சி அரசு விழாவில் முதல்வர் எழுச்சி உரை!

மொத்தமாகச் சொல்வதாக இருந்தால், 625 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பிலான பயன்கள் திருச்சி மாவட்டத்திற்கு அளிக்கும் மாபெரும் விழாதான் இந்த விழா. அதனால்தான் நான் தொடக்கத்திலே சொன்னேன், திருச்சியில் எது நடந்தாலும் அது பிரமாண்டமான வகையில்தான் நடைபெறும் என்று சொன்னேன்.

இன்னும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஒலிம்பிக் போன்ற பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் வாய்ப்பை ஏற்படுத்த, நம் மாநில இளைஞர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த பயிற்சிகளை வழங்கக்கூடிய வகையில், தமிழ்நாட்டின் நான்கு மண்டலங்களில் தலா ஒன்று வீதம் நான்கு ஒலிம்பிக் அகாடமிகள் உருவாக்கப்படும் என்று கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில், அதாவது 21-4-2022 அன்று சட்டமன்றப் பேரவையில் நான் அறிவித்திருந்தேன்.

அந்த அறிவிப்பினை நடைமுறைப்படுத்தும் வகையில் திருச்சியில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் அகாடமி ஒன்று உருவாக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

“ஏழையின் சிரிப்பில் அண்ணாவையும், கலைஞரையும் காண்போம்” - திருச்சி அரசு விழாவில் முதல்வர் எழுச்சி உரை!

கல்வியில், வேலைவாய்ப்பில், அறிவுத்திறனில், தொழில் வளர்ச்சியில் மட்டுமல்ல நமது தமிழ்நாடு உலகத்தோடு போட்டியிட வேண்டும். அதற்கான விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும். அதற்காக இந்த ஒலிம்பிக் அகாடமி பெரும் துணையாக இருக்கும்.

இது ஏதோ அமைச்சர் உதயநிதிக்கு மட்டுமல்ல, இந்த மாவட்டத்து அமைச்சர்களாகன இருக்கக்கூடிய நேரு, அன்பில் மகேஸ் ஆகியோருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய அறிவிப்புகள்தான்.

அரசு விழாக்கள் என்றால் நாம் மக்கள் விழாக்களாகவே நடத்தி வருகிறோம். மக்களுக்கு பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளைச் செய்து வரும் விழாவாக நடத்தி வருகிறோம். ஒவ்வொரு விழாவின் மூலமாக, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நேரடியாகப் பயன் அடையக்கூடிய வகையில் நாம் அந்த விழாக்களை ஏற்பாடு செய்கிறோம். புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறோம். அறிவித்து முடிக்கப்பட்ட பணிகளை திறந்து வைக்கிறோம்.

“ஏழையின் சிரிப்பில் அண்ணாவையும், கலைஞரையும் காண்போம்” - திருச்சி அரசு விழாவில் முதல்வர் எழுச்சி உரை!

இந்த திராவிட மாடல் அரசாங்கமானது, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தரப்பு மக்களுக்கும் எந்த வகையிலும் எல்லா உதவிகளையும் செய்து வரக்கூடியது என்பதன் அடையாளம்தான் இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய இந்த அரசு விழா.

ஏழை எளிய, அடித்தட்டு விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய திட்டங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றித்தரும் ஆட்சியாக நம்முடைய கழக ஆட்சி செயல்பட்டு வருகிறது. இதில் சமூகத்தின் சரிபாதியான மகளிர் சமுதாயத்திற்காக தனியாக சிறப்புத் திட்டங்களை வகுப்பதில் கழக அரசு அமையும் போதெல்லாம் முனைப்பாக இருந்து வந்திருக்கிறது.

* மகளிருக்கு சொத்தில் சம உரிமை வழங்கியது

* மகளிருக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கியது

* மகளிருக்கு உள்ளாட்சி மன்றங்களில் இடஒதுக்கீடு தந்தது

* பொருளாதாரத்தில் மேம்பட மகளிர் சுய உதவிக்குழுக்கள் என -

மகளிர் நலன் காத்தவர் தான் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்.

அவர் வழியில் நடைபோடக்கூடிய அரசும் நம்முடைய அரசு. அதைத்தான் இங்கு பேசுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னார்களே,

* மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம்

* மாணவியருக்கு உயர்கல்வி கற்க ’புதுமைப்பெண் திட்டம்’ மூலம் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் என பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

பெண்களுக்கு பேருந்து கட்டணம் இல்லை என்று சொன்னதன் மூலமாக, சமூக, பொருளாதார வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது. வீட்டை விட்டு வெளியில் வந்து சிறுதொழில்கள் தொடங்க ஆர்வமாக இருக்கிறார்கள். இதன் மூலமாக பெண்களின் ஆளுமை, அவர்களுடைய வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல, அரசுப் பள்ளியில் படித்து உயர் கல்வி கற்க கல்லூரிக்கு வரக்கூடிய பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதன் மூலமாக பெண்கள் உயர்கல்வி கற்பது உயர்ந்துள்ளது.

“ஏழையின் சிரிப்பில் அண்ணாவையும், கலைஞரையும் காண்போம்” - திருச்சி அரசு விழாவில் முதல்வர் எழுச்சி உரை!

இந்த வரிசையில், மகளிர் சுய உதவிக்களுக்கான கடன்கள் வழங்கும் விழா இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மகளிர் சுய உதவிக்குழுக்களை, இங்கே தம்பி உதயநிதி பேசுகிறபோது சொன்னாரே, 1989-ஆம் ஆண்டு முதன்முதலில் தருமபுரி மாவட்டத்தில் அப்போது முதலமைச்சராக இருந்த நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இந்தியாவிலேயே முதன்முதலாக மகளிர் சுய உதவிக்குழுக்களை அமைத்தவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்தான்.

நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோதுதான், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அதிகமான கடன்கள் வழங்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மகளிருக்கு பல மணி நேரம் நின்று கொண்டே கடனுதவிகளை நான் வழங்கி இருக்கிறேன். கடன்களைப் பெறும் மகளிர் அதனை வாங்க வரும்போது, என்னிடத்தில் கேட்பார்கள், “இத்தனை மணி நேரமாக நிக்குறியேப்பா! நீ உட்காரக் கூடாதா?”என்று கேட்பார்கள். நான் சொல்வேன், “கடனுதவியைப் பெறும்போது உங்க முகத்தில் பார்க்குற சிரிப்பில் என்னோட கால் வலி மறந்து போய்விடுகிறது” என்று நான் சொல்வேன்.

அப்படி கடன் பெற்ற மகளிரின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. அவர்களுடைய குடும்பம் முன்னேறியது. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்குப் பிறகு, கடந்தகால ஆட்சியாளர்கள் அதனை முறையாகச் செயல்படுத்தவில்லை.

“ஏழையின் சிரிப்பில் அண்ணாவையும், கலைஞரையும் காண்போம்” - திருச்சி அரசு விழாவில் முதல்வர் எழுச்சி உரை!

சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் நான் பிரச்சாரத்திற்கு சென்றபோது, என்னைச் சந்திக்கும் மகளிர், மீண்டும் மீண்டும் என்னிடத்தில் சொன்னது, வலியுறுத்தியது, நீங்கள் ஆட்சிக்கு வந்து இதனை சரிசெய்து தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். ஆட்சிக்கு வந்ததும், அதனை இப்போது சரி செய்து கொடுத்திருக்கிறோம். அதனுடைய அடையாளம்தான் இந்த விழா.

தமிழ்நாட்டில் ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தில், மொத்தம் 4 லட்சத்து 38 ஆயிரம் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் குழுக்களில், 50 லட்சத்து 24 ஆயிரம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது இந்த அமைப்பு எவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்பதை நாம் அறியலாம்.

மகளிர் சுயஉதவிக் குழுக்கள் என்பவை மக்களின் நிறுவனமாக ஜனநாயக முறையில் செயல்பட்டு வருகின்றன.

* கூட்டம் நடத்துதல்,

* சேமித்தல்,

* உள்கடன் வழங்குதல்,

* கடன் திரும்ப செலுத்துதல்

* கணக்குப் பதிவேடுகளை பராமரித்தல்

- ஆகிய ஐந்து நடவடிக்கைகளையும் முறையாகச் செயல்படுத்த வேண்டும்.

மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்திடவும், வாழ்வாதார மேம்பாட்டிற்காகவும் வங்கிக் கடன் இணைப்புத் திட்டத்தின்கீழ் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக கடன் வழங்க முதன்முதலில் முனைப்பு காட்டியது திராவிட முன்னேற்றக் கழக அரசுதான்.

“ஏழையின் சிரிப்பில் அண்ணாவையும், கலைஞரையும் காண்போம்” - திருச்சி அரசு விழாவில் முதல்வர் எழுச்சி உரை!

சுய உதவிக் குழுக்களுக்கு 2021-22-ஆம் ஆண்டு 20 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கலாம் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த இலக்கை விட அதிகமாகக் கடன் வழங்கப்பட்டுள்ளது. அதாவது 21 ஆயிரத்து

392 கோடியே 52 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனை 4 லட்சத்து 8 ஆயிரத்து 740 சுய உதவிக்குழுக்கள் பெற்றிருக்கிறார்கள். 2022-23 நடப்பு நிதியாண்டில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் கடன் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

16.12.2022 வரை, 2 லட்சத்து 60 ஆயிரத்து 589 குழுக்களுக்கு 14 ஆயிரத்து 120 கோடியே 44 லட்சம் ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதையும் இங்கே தெரிவிப்பதில் நான் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன். மீதமுள்ள இலக்கை நிறைவு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அந்த இலக்கையும் அடைந்து சாதனை படைப்போம் என்பதை நான் இங்கே கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

“ஏழையின் சிரிப்பில் அண்ணாவையும், கலைஞரையும் காண்போம்” - திருச்சி அரசு விழாவில் முதல்வர் எழுச்சி உரை!

மகளிரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை அரசாங்கத்தின் கடமையாகவும் பொறுப்பாகவும் நாங்கள் நினைக்கிறோம். அதேபோல், மிகச்சிறப்பாகச் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 'மணிமேகலை விருது' தரப்படும் என்று முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் 2007-ஆம் ஆண்டு அறிவித்தார்கள். மகளிர் அமைப்புகளுக்கு மணிமேகலை விருதானது மிகப் பெரிய ஊக்கத்தையும் ஆக்கத்தையும் அளித்தது.

2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த விருதை கடந்தகால ஆட்சியில் என்ன செய்தார்கள்? அதை நிறுத்தி வைத்து விட்டார்கள், அதைப் பற்றி கவலைப்படவில்லை. அதனால் தான், நாம் ஆட்சிப் பொறுப்பேற்றதும் மணிமேகலை விருது மீண்டும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, இன்றைக்கு 33 சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கு மணிமேகலை விருதுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் 55 இலட்சம் ரூபாய் விருதுத் தொகையும் வழங்கப்பட்டிருக்கிறது என்பதை நான் உள்ளார்ந்த மகிழ்ச்சியோடு தெரிவிக்க விரும்புகிறேன்.

சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு அதிக வங்கிக்கடன்களை வழங்குவதற்காக வங்கியாளர்களை ஊக்குவிப்பதோடு, சிறப்பாக செயல்படும் வங்கிகள் மற்றும் கிளைகளுக்கான வங்கியாளர் விருதுகள் 2008-2009-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன.

“ஏழையின் சிரிப்பில் அண்ணாவையும், கலைஞரையும் காண்போம்” - திருச்சி அரசு விழாவில் முதல்வர் எழுச்சி உரை!

கடந்த மூன்றாண்டு காலமாக, கொரோனா பெருந்தொற்று காரணமாக வழங்கப்படாமல் இருந்த மாநில அளவிலான வங்கியாளர்களுக்கான விருதினை 2021-22-ஆம் ஆண்டு முதல் மீண்டும் வழங்கப்படவுள்ளது. அவற்றையும் 8 வங்கிகளுக்கு இன்றைக்கு நாம் வழங்குகிறோம்.

தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமத்தில் வசிக்கும் பெண்கள் கூட இன்று பொருளாதாரத் தன்னிறைவைப் பெற்று, வளமாக வாழ்ந்து வருகின்றனர் என்பதை உங்கள் அனைவரின் முகங்களையும் காணும்போது நான் இங்கே உணருகிறேன்.

“எவ்வளவு அலட்சியப்படுத்தப்பட்டு, அவமானங்களுக்கு ஆளாக்கப்பட்டாலும் எடுத்த காரியத்தை முடித்தே தீருவது என்ற திடமான கொள்கையும் விடாமுயற்சியும் இருந்தால் வெற்றி கிடைத்தே தீரும்” என்ற சொன்னவர் யார் தெரியுமா? நம்மை ஆளாக்கிய நம்முடைய பேரறிஞர் அண்ணா அவர்கள். எனவே, அண்ணா அவர்களின் கூற்றுப்படி சுய உதவிக்குழு மகளிர் சிறிதும் தளர்வின்றி தங்களின் முயற்சிகளை செய்து வந்தால், நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும், நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

ஒரு நாட்டினுடைய முன்னேற்றம் என்பதை அந்த நாட்டில் வசிக்கும் பெண்களின் நிலையைப் பார்த்தாலே தெரிந்துகொள்ளலாம். “ஒளியில்தான் நமது நிழலின் வடிவம் நமக்கு தெரிகிறது. சோதனையின் போதுதான் நமது நெஞ்சின் வலிமை நமக்கு புரிகிறது…!” - என்று சொன்னவர் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். நமது அரசானது பெண்களின் முன்னேற்றத்திற்கும், அவர்களது நல வாழ்விற்கும் எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

“ஏழையின் சிரிப்பில் அண்ணாவையும், கலைஞரையும் காண்போம்” - திருச்சி அரசு விழாவில் முதல்வர் எழுச்சி உரை!

இன்றைய நாள் இங்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு கடன்கள் வழங்கப்பட்டதைப் போல தமிழகத்தில் இருக்கக்கூடிய பிற மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் எல்லோரும் பங்கேற்கக்கூடிய வகையில், சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு வங்கிக்கடன் இணைப்புகள் வழங்கப்படுகின்றன என்பதையும் நான் இங்கே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இவை தொடக்கம்தான்!

இதுபோன்ற நலத்திட்ட உதவிகள் தொடந்து கொண்டே இருக்கும்!தமிழர்களையும் தமிழ்நாட்டையும் செழிக்க வைப்பதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம்!

அதனை தொய்வில்லாமல் செய்து வருகிறோம். அதனைத் தடங்கல் இல்லாமல் இன்றைக்கு நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். யார், எத்தகைய விமர்சனம் வைத்தாலும் திராவிட மாடல் கொள்கையில் இருந்து வழுவாத ஆட்சியை நாம் இன்றைக்கு நடத்திக் கொண்டிருக்கிறோம்.

எல்லார்க்கும் எல்லாம் என்ற கருத்தியலை அடிப்படையாக வைத்து, இந்த ஆட்சியின் கொள்கைகளையும் திட்டங்களையும் இன்றைக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் பின்பற்றக்கூடிய வகையில் நாம் இன்றைக்கு செயலாற்றிக் கொண்டிருக்கிறோம். திராவிட மாடல் ஆட்சியின் வேகத்தை நீங்கள் அறியலாம்.

தொழில் நிறுவனங்களை ஈர்ப்பதில் இந்தியாவில் முதன்மை மாநிலமாக வளர்ந்து நிற்கிறது தமிழ்நாடு. காலநிலை மாற்றம் குறித்த கொள்கையை உருவாக்குவதில் இந்தியாவுக்கு முன்மாதிரி மாநிலமாக நம்முடைய தமிழ்நாடு விளங்கிக் கொண்டு இருக்கிறது.

“ஏழையின் சிரிப்பில் அண்ணாவையும், கலைஞரையும் காண்போம்” - திருச்சி அரசு விழாவில் முதல்வர் எழுச்சி உரை!

செஸ் ஒலிம்பியாட் போட்டியைப் பொறுத்தவரைக்கும், உலகப் புகழோடு நாம் அதை நடத்திக் காட்டி இருக்கிறோம். எவ்வளவு மழை வந்தாலும் சரி, வெள்ளம் வந்தாலும் சரி, அதனைத் தாங்கும் அளவுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கித் தந்திருப்பதும் நம்முடைய அரசுதான்! புயல் வந்தது, அதிகப்படியான மழையும் பெய்தது. அது வந்ததா, வரவில்லையா என்று தெரியாத அளவிற்கு அரசு பணியாற்றி இருக்கிறது. யாரும் பாராட்ட வேண்டும் என்பதற்காக நாங்கள் பணியாற்றவில்லை. மக்களைக் காக்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் இன்றைக்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.

இதனை நான் சொல்ல காரணம், நேற்றைய தினம் நான் மாலையில் என் இல்லத்தில் அமர்ந்திருந்த நேரத்தில், என்னுடைய உதவியாளர்கள் ஒரு தாளை கொண்டுவந்து என்னிடம் கொடுத்தார்கள். என்ன என்று படித்துப் பார்த்தேன்; கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் நான் தமிழகத்தில் இருக்கக்கூடிய மாவட்டங்களில் பயணம் செய்தது, 8 ஆயிரத்து 549 கிலோ மீட்டர் தூரம்! அந்தப் பயணத்தில் நான் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள்- 647. இதில் 551 நிகழ்ச்சிகள் அரசு நிகழ்ச்சிகள்! கட்சி நிகழ்ச்சிகள்- 96. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட காரணத்தால், அதில் பயனடைந்தவர்கள் எவ்வளவு தெரியுமா? ஒரு கோடியே 3 லட்சத்து, 74 ஆயிரத்து 355 நபர்கள்!

ஓராண்டு காலத்தில் ஒரு கோடிப் பேருக்கு நேரடியாக நலத்திட்ட உதவிகள் சென்று சேர்ந்திருக்கிறது. இதெல்லாம் ஒரு வருடத்தில். இதற்கு மத்தியில், எனக்கு கொரோனா பாதிப்பு வந்தது, சிறிது உடல் நலிவுற்றேன் - கால் வலி வந்தது, சிகிச்சை எடுத்துக் கொண்டேன். அந்த சூழ்நிலையில் கூட என்னுடைய பயணம் தடைபடவில்லை, மக்கள் பணி நிற்கவில்லை, நிற்கவில்லை என்பதல்ல நிற்கவே நிற்காது. அதுதான் உண்மை. நம்பர் ஒன் முதலமைச்சர் என்பதாக இருந்தாலும் - நம்பர் ஒன் தமிழ்நாடு என்பதாக இருந்தாலும் - அதனுடைய உண்மையான அளவுகோல் என்ன?

“ஏழையின் சிரிப்பில் அண்ணாவையும், கலைஞரையும் காண்போம்” - திருச்சி அரசு விழாவில் முதல்வர் எழுச்சி உரை!

ஏழைகளின் சிரிப்பும்- இங்குள்ள நான் காணக்கூடிய மகளிரின் மகிழ்ச்சியும்தான் அதற்கு உண்மையான அளவுகோல்! மக்கள் மகிழ்ச்சி அடைந்தால் - அவர்களது மனது நிறைந்தால் போதும். இதனைத்தான் ”ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்றார் பேரறிஞர் அண்ணா. நான் சொல்வது, “ஏழையின் சிரிப்பில் பேரறிஞர் அண்ணாவையும் முத்தமிழறிஞர் கலைஞரையும் காண்போம்” என்பது தான் என்னுடைய கொள்கை.

மக்களின் அரசு இது! மக்களுக்கான அரசு இது! இந்த சாதனைகள் தொடரும்! தொடரும்! தொடரும்! எனச்சொல்லி, நிறைவாக, நான் கூற விரும்புவது, நான் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் இருந்தபோது, இந்த மகளிர் சுய உதவிக்குழுவினுடைய துறையை என் கைவசம் வைத்திருந்தேன்.

இன்றைக்கு தம்பி உதயநிதி கையில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. எனவே, அதற்காக தம்பி உதயநிதியை நான் உங்கள் அனைவரின் சார்பில் கேட்டுக் கொள்ள விரும்புவது, இந்த சுய உதவிக் குழுக்களை மேம்படுத்தக்கூடிய வகையில் நீங்கள் அதற்காக பாடுபட வேண்டும், பணியாற்ற வேண்டும், அதற்குரிய நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் நீங்கள் தொடர்ந்து நடத்திட வேண்டும் என்று என்னுடைய அன்பான வேண்டுகோளை மாத்திரம் இந்த நேரத்தில் எடுத்துவைத்து, வாய்ப்பிற்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

Related Stories