முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (12.12.2022) புதுச்சேரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சிவக்குமார் அவர்களின் இல்ல மணவிழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நம்முடைய அருமை சகோதரர் திரு.சிவக்குமார், டாக்டர் சித்ரா ஆகியோருடைய அருமை மகன் ஆனந்தராஜ் அவர்களுக்கும், திருவாளர் ஜி.ஆர். சாமிரெட்டி, திருமதி சித்ரா ஆகியோருடைய அன்பு மகள் மீனாட்சி அவர்களுக்கு என்னுடைய அன்பான வாழ்த்துகளோடு மணவிழா நிகழ்ச்சி நிறைவேறி இருக்கிறது.
இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு தலைமை பொறுப்பு ஏற்று மணவிழாவை நடத்தி வைத்து அதே நேரத்தில் மணமக்களை வாழ்த்தக்கூடிய ஒரு சிறப்பான வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. வாய்ப்பை பெற்றமைக்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு உருவாக்கி தந்திருக்கக்கூடிய நம்முடைய சகோதரர் சிவக்குமார் அவர்களுக்கு என்னுடைய இதயபூர்வமான நன்றியை, வணக்கத்தை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
சிவக்குமார் அவர்கள் இந்த புதுவை மாநிலத்திலே இயக்கப்பணியை எப்படி ஆற்றிக் கொண்டிருக்கிறார், இயக்கத்தில் இருக்கக்கூடிய தோழர்களுக்கு எப்படி பக்கபலமாக இருக்கிறார், அவருடைய ஆற்றலை, பெருமைகளை, சிறப்புக்களைப் பற்றியெல்லாம் இங்கு எனக்கு முன்னால் உரையாற்றியவர்கள் மணமக்களை வாழ்த்தியவர்கள் குறிப்பிட்டுச் சொன்னார்கள்.
அவர் மாணவராக இருந்த காலத்தில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு ஒரு தொண்டராக, ஒரு செயல்வீரானாக பணியாற்றிக் கொண்டிருப்பவர். தொடர்ந்து இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், தாத்தாவாக ஆகப் போகும் காலத்தில்கூட அவர் தொடர்ந்து தன்னுடைய கடமையை அவர் நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறார்.
புதுச்சேரி தாகூர் கலைக் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் படித்த சிவக்குமார் அவர்கள், 1978 முதல் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு தொடர்ந்து இந்நாள் வரையில் பணியாற்றிக்கொண்டு இருக்கிறார். அப்போது நடந்த கல்லூரியின் மாணவர் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு மாணவர் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
அந்த மாணவர் பேரவைத் தொடக்க விழாவிற்கு தலைவர் கலைஞர் அவர்களே நேரடியாக வருகை வந்து தொடங்கி வைத்திருக்கிறார். அதன் பின்னர் புதுவை சட்டக்கல்லூரியில் சிவக்குமார் அவர்கள் சேர்ந்து அந்த படிப்பை படித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் அங்கும் மாணவர் திமுக தலைவராக அவர் செயல்பட்டிருக்கிறார்.
அதற்குப் பின்னர் புதுச்சேரி மாநிலத்தினுடைய மாணவர் அணி அமைப்பாளராகவும், அந்த மாநிலத்தினுடைய இளைஞர் அணி அமைப்பாளராகவும் பொறுப்பேற்று அவர் சிறப்பாக தன்னுடைய கடமையை நிறைவேற்றியிருக்கிறார்.
திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தியிருக்கக்கூடிய அனைத்துப் போராட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு தன்னுடைய தியாகத்தை, தன்னுடைய பங்கை அவர் தொடர்நது செலுத்தியிருக்கிறார்.
புதுவை வடக்கு மாநில துணை அமைப்பாளராகச் செயல்பட்டு அதற்கு பின்னர் அமைப்பாளராகவும் செயல்பட்டு இப்போது இந்த மாநிலத்தினுடைய அவைத்தலைவராக பொறுப்பேற்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
சிவக்குமார் அவர்கள் வெறும் செயல்வீரர் மட்டுமல்ல எப்போதும், எதையுமே எதைப்பற்றிக் கவலைப்படாமல் வெளிப்படையாகப் பேசக் கூடிய ஒருவர் நம்முடைய சிவக்குமார் அவர்கள். அதை நீங்களும் அறிவீர்கள், நானும் அறிவேன்.
நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களை ஒரு முறை தன்னுடைய கல்லூரிக்கு சிறப்பு பேச்சாளராக பேச வைத்து அதற்காக அழைத்திருக்கிறார். அப்போது தலைவர் கலைஞர் அவர்கள் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியில் சிவக்குமார் அவர்கள் பேசுகிறபோது, தலைவர் கலைஞரிடத்தில் ஒரு வேண்டுகோளை வைத்திருக்கிறார். வேண்டுகோள் என்றுகூட சொல்லமாட்டேன். ஒரு கட்டளை, என்னவென்றால், “நீங்கள் நீண்ட நேரம் பேச வேண்டும்” என்று.
கட்சித் தலைவருக்கு இப்படி கட்டளையிடலாமா என்று அக்கூட்டத்தில் பேசிய ஒருவர் சொன்னதைச் சுட்டிக் காட்டி தலைவர் கலைஞர் அவர்கள் அந்த நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார்.
'இளங்கன்று பயமறியாது என்பதைப் போல சிவக்குமார் பேசி இருக்கிறார். சிவக்குமாரைப் போன்ற இளைஞர்கள் கட்டளையிடவும் என்னைப் போன்றவர்கள் அதனை நிறைவேற்றவும் காத்துக் கொண்டிருக்கிறோம்" என்று அப்போதே தலைவர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார். எதற்கு சொல்கிறேன் என்றால், அந்தளவுக்கு துணிச்சல் மிக்கவர் நம்முடைய சிவக்குமார் அவர்கள்.
அவர் பொதுவாழ்விற்கு வந்து நாற்பது ஆண்டுகள் ஆனதையொட்டி கடந்த 2020-ஆம் ஆண்டு அப்போது நான் அவருக்கு மறக்காமல் வாழ்த்துச் செய்தியை அனுப்பி இருந்தேன், அதில் குறிப்பிட்டு இருந்தேன்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவரணி பொறுப்பில் இருந்த காலத்தில் இருந்தே புதுச்சேரி மாநிலத்தில் இயக்கம் வளர்க்கும் பணியில் ஈடுபடுத்திக் கொண்டவர் என்றும் - தலைவர் கலைஞரின் அன்பைப் பெற்றவர் என்றும்- இனமானப் பேராசிரியரின் வாழ்த்தைப் பெற்றவர் என்றும்- புதுவை மக்களுடைய நன்மதிப்பை, ஆதரவைப் பெற்றவர் என்றும் நான் பாராட்டி இருந்தேன். ஆகவே, புதுவை மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினராகவும், மாநில அமைச்சராகவும் அவர் ஆற்றிய பணிகளை யாரும் மறந்து விட முடியாது. தமிழகத்தையும் புதுவையையும் யாரும் பிரித்து பார்க்க முடியாது.
அதனால் தான் நாங்கள் தமிழ்நாட்டில் பேசுகிறபோது அடிக்கடி சொல்வதுண்டு, புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகள் என்று அடிக்கடி எடுத்துச் சொல்வதுண்டு. அந்தளவுக்கு புதுவை இணைபிரியாத ஊர்!
இங்கேகூட பேசுகிறபோது பாவேந்தரை நம்முடைய ஜெகத்ரட்சகன் குறிப்பிட்டுச் சொன்னார். பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் பிறந்த ஊர் என்கிற காரணத்தால், திராவிட இயக்கத்தின் இலக்கியத் தலைநகர் என்று சொல்லத் தக்க பெரும்புகழைக் கொண்டதுதான் இந்த புதுச்சேரி!
தலைவர் கலைஞர் அவர்கள் பிறந்தது திருவாரூராக இருந்தாலும், அவர் பயின்று வளர்ந்தது குருகுலம் என்று அடிக்கடி சொன்னது ஈரோடு தான். அவர் கொள்கை உரம் பெற்ற ஊர் எது என்றால் இந்த புதுச்சேரிதான். திராவிடர் கழகப் பரப்புரை, பிரச்சாரம், நாடகங்களை ஊர் ஊராகச் சென்று தலைவர் கலைஞர் அவர்கள் நடத்தினார். அந்த நாடகத்தின் அரங்கேற்றம் எங்கே நடந்தது என்றார் இந்த புதுச்சேரியில்தான். சாந்தா அல்லது பழனியப்பன் என்று அந்த நாடகத்தினுடைய பெயர். அந்த நாடகத்தில் சிவகுரு வேடமேற்று தலைவர் கலைஞர் அவர்கள் நடிக்கிறார்.
அந்த நாடகத்தினுடைய அரங்கேற்ற நிகழ்ச்சி புதுச்சேரியில் நடக்கிறபோது பாதியில் நிறுத்தப்படுகிறது. காரணம் என்னவென்று கேட்டால், திடீரென்று ஒரு கலகக்கார கும்பல் உள்ளே புகுந்து அங்கு அராஜகத்தில் ஈடுபடுகிறார்கள். மிகப் பெரிய கலவரத்தை ஏற்படுத்தினார்கள்.
அப்போது நம்முடைய கலைஞர் அவர்கள் பலமாக தாக்கப்பட்டு, தாக்கப்பட்ட கலைஞரை கொண்டு போய் சாக்கடையில் தூக்கி வீசிவிட்டு போகின்றார்கள். அதைப் பார்ப்பவர்கள் எல்லாம் செத்துட்டார், செத்துட்டார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆக, எல்லோரும் அந்த அளவுக்கு சந்தேகப்படக் கூடிய அளவிற்கு தாக்கப்பட்டு கலைஞர் அவர்கள் ஒரு சாக்கடையில் விழுந்து கிடக்கிறார்.
மறுநாள் காலையில் தந்தை பெரியார் அதை கேள்விப்பட்டு, ஓடோடி வந்து தலைவர் கலைஞரை தூக்கி தன்னுடைய தன்னுடைய மடியில் மீது படுக்க வைத்து, மருந்து போட்டு, அதற்குப் பிறகு “இனிமேல் நீ இங்கு இருக்க வேண்டாம். என்னோடு வா, ஈரோட்டிற்கு வா” என்று அழைத்துக் கொண்டு போய்விடுகிறார். ஆக, ஈரோட்டிற்கு தலைவர் கலைஞர் தந்தை பெரியாருடன் போகிறார். உடனடியாக ஈரோட்டிற்கு அழைத்து வந்து என்னுடைய ‘குடியரசு’ என்ற வார இதழில் துணை ஆசிரியராக இருந்து பணியாற்று என்று உத்தரவிடுகிறார்.
குடியரசு இதழுக்கு பணியாற்றச் செல்லவும் - தந்தை பெரியாருடன் பழகக்கூடிய வாய்ப்பைப் பெறவும், புதுப்பாதை அமைத்துக் கொடுத்த ஊர் தான் இந்த புதுவை!
எனவேதான் தலைவர் கலைஞருக்கு புதுவை என்றால் ஒரு பாசம் வந்துவிடும். அவருக்கு மட்டுமல்ல, அவருடைய மகனாக இருக்கக்கூடிய இந்த ஸ்டாலினுக்கும் அந்த பாசம் வந்துவிடும்.
அந்த கொள்கை உணர்வோடுதான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். நம்முடைய சிவக்குமார் இல்லத்தில் அவருடைய அருமை மகனுக்கு நடைபெறக்கூடிய இந்த மணவிழா நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருக்கிறேன்.
கால் நூற்றாண்டு காலமாக நான் சிவகுமாரை நன்கு அறிவேன். நான் பார்த்தபோது எந்த கொள்கை பிடிப்போடு இருந்தோரோ அதே கொள்கை பிடிப்போடு அதிலிருந்து கொஞ்சம் கூட விடுபடாமல், நன்றி சொல்கிறபோது சொன்னார். எனக்கு எதுவும் வேண்டாம், இதை அவர் எலெக்ஷன் வரும்போதும் சொல்ல வேண்டும். சொல்லுவார். கேட்பது அவரது உரிமை. ஆனால் தலைமை சொல்லிவிட்டால் அதை கட்டுப்பட்டு நடப்பவர் தான் நம்முடைய சிவக்குமார்.
போட்டி போட்டுக் கொண்டு நாம் பணியாற்ற வேண்டும். போட்டி இருக்க வேண்டும், பிரச்சனை இருக்க கூடாது, அப்போதுதான் கட்சி வளரும். கலைஞரே பல இடங்களில் சொல்லியிருக்கிறார். போட்டி என்பது நமக்குள் இருக்க வேண்டும். பொறாமையாக இருந்துவிடக்கூடாது. இந்த போட்டி வருகிறபோது, பிரச்சனை வருகிறபோது தலைவர் கலைஞர் அழைத்து ஒரே ஒரு சொல்தான் சொல்லுவார், அப்படியே நிறைவேற்றுவார்கள்.
அதே மாதிரி தான் இன்றைக்கு தலைவருடைய மகன் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தாலும், இன்றைக்கு நான் என்ன சொல்கிறேனோ, அப்படியே அடிபிறழாமல் ஏற்றுக்கொள்ளக்கூடிய தொண்டர்கள்தான் இன்றைக்கு இந்த இயக்கத்தில் இருக்கிறார்கள். அதில் உள்ளபடியே எனக்கு பெருமை.
ஆகவே, ஒரே தலைமையின் கீழ் எந்தவித மாறுபாடு இல்லாமல் செயல்பட்டு வரக்கூடியவர்கள் அதில் சிவக்குமாரும் ஒருவராக விளங்கிக் கொண்டிருக்கிறார். எனவே, கட்சியினுடைய தலைவர் என்கின்ற முறையில் நான் அவரை மனதார வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன். போற்றுகிறேன்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி அங்கே ஒரு பெரிய மாற்றம் அங்கே உதயசூரியனின் ஆட்சி மலர்ந்துள்ளது. மலர்ந்திருக்கக்கூடிய இந்த ஆட்சியைப் பொறுத்தவரைக்கும் திராவிட மாடல் ஆட்சி என்று இன்றைக்கு பெருமையோடு சொல்கிறோம். அப்படிப்பட்ட ஒரு திராவிட மாடல் ஆட்சி புதுவைக்கு வருவது தேவைதான்.
அதைத்தான் சொன்னார்கள், நம்முடைய உணர்வுகள் எல்லாம், நம்முடைய எண்ணங்கள் எல்லாம், உங்களுக்கு மட்டுமா ஆசை இருக்கிறது, எனக்கும் ஆசை இருக்கிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதுகூட அந்த வாய்ப்புக் கிட்டிருக்கும். ஆனால் போய்விட்டது, அதைப்பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. இப்போது இதே புதுவை மாநிலத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி தான். இல்லையென்று மறுக்கவில்லை. ஆனால் அது மக்களுக்காக நடைபெறுகிறதா? ஒரு முதலமைச்சர் என்று ஒருத்தர் இருக்கிறார். உயர்ந்த மனிதர்தான். உயரத்தில், ஆனால், அடி பணிந்து கிடக்கிறார். பொம்மையாக ஒரு முதலமைச்சராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
நான் அவரை குறைசொல்ல விரும்பவில்லை. நல்லவர் தான். ஆனால் நல்லவர், வல்லவராக இருக்க வேண்டாமா? இல்லையே, ஒரு கவர்னர் ஆட்டிப்படைக்கக்கூடிய வகையில் புதுவையில் ஒரு ஆட்சி நடக்கிறது என்று சொன்னால், வெட்கப்பட வேண்டாமா? அதை கண்டு வெகுண்டு எழுந்திருக்க வேண்டாமா? ஆனால் அடங்கி ஒடுங்கி போயிருக்கக்கூடிய நிலையில் இன்றைக்கு ஒரு ஆட்சி நடக்கிறதென்பது இந்த புதுவை மாநிலத்திற்கு மிகப் பெரிய இழுக்காக அது அமைந்திருக்கிறது. ஏதாவது ஒரு நன்மை நடந்திருக்கிறதா என்றால் இல்லை.
அப்படிப்பட்ட நிலையில், புதுவை மாநிலத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கக்கூடிய நேரத்தில்தான் நம்முடைய தோழர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் எல்லாம் இங்கு ஒரு ஆட்சி வரவேண்டும், நம்முடைய ஆட்சியாக வரவேண்டும் என்ற எண்ணத்தில் வெளிப்படுத்திக் காட்டுகிறார்கள். அதில் தவறில்லை. ஏற்கனவே, நாம் ஆட்சியில் இருந்தவர்கள்தான்.
பாரூக் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இதே புதுவை மாநிலத்தில் நடைபெற்றிருக்கிறது. திரு. டி. ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில், இதே புதுவை மாநிலத்தில் நம்முடைய ஆட்சி நடைபெற்றிருக்கிறது. ஜானகிராமன் அவர்கள் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இதே புதுவை மாநிலத்தில் நடைபெற்றிருக்கிறது. நிச்சயமாக, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி மீண்டும் புதுவை மாநிலத்தில் உதயமாகும் அதில் எந்தவிதமான சந்தேகமும் வேண்டாம்.
காங்கிரஸ் கட்சியினுடைய முதலமைச்சராக வைத்தியலிங்கம் தலைமையில் கூட்டணி ஆட்சி நடக்கவில்லையா? திரு. நாராயணசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி நம்முடன் இணைந்து நடக்கவில்லையா? நடந்திருக்கிறது. அது எந்த ஆட்சியாக இருந்தாலும் சரி, நிச்சயமாக உறுதியாக புதுவை மாநிலத்தை பொறுத்தவரையில் மதவாத ஆட்சி உருவாகிவிடக்கூடாது அதில் நாம் கண்ணும் கருத்துமாக இருந்தாக வேண்டும்.
விரைவில் நாம் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கிறோம். புதுவை மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல, அதைத் தொடர்ந்து நடைபெறவிருக்கக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் நாம் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற இலக்கோடு இப்போதே நீங்கள் பணியாற்ற வேண்டும். உங்களுடைய பணிகள் தொடங்குங்கள், தொடங்குங்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
தேர்தல் நேரத்தில் யார் கூட்டணி, எப்படி கூட்டணி அது எந்தவகையில் அமையப் போகிறது என்பது அப்போது முடிவெடுக்கப்படும். அது வேறு. ஆனால் வெற்றிக்கு இப்போதே நாம் அச்சாரமாக நமது கடமையை நிறைவேற்றுவதற்கு முன்வரவேண்டும் என்று இந்த நேரத்தில் உங்களையெல்லாம் கேட்டுக் கொண்டு, இன்றைக்கு நம்முடைய சிவக்குமார் பற்றி எல்லோரும் சிறப்போடு சொன்னீர்கள். எல்லோரும் பேசுகிறபோது சொன்னார்கள், நம்முடைய இல்லத்தில் நம்முடைய குடும்பத் திருமண விழாவாக இது நடந்து கொண்டிருக்கிறது என்று பெருமையோடு சொன்னீர்கள்.
அதைத்தான் நம்மை ஆளாக்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கித் தந்திருக்கக்கூடிய ஒப்பற்ற தலைவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் தனித் தனி தாயின் வயிற்றில் பிறந்திருந்தாலும், நாம் அத்தனை பேரும் அண்ணன், தம்பிகளாக இருக்க வேண்டும் என்பதற்காகதான் தம்பி, தம்பி என்று அவர் அழைத்தார். அதைத் தொடர்ந்து அது அண்ணனாக இருந்தாலும், தம்பியாக இருந்தாலும், ஒன்றாக மதித்து, சமமாக இருந்திடவேண்டும் என்பதற்காகத்தான் அத்தனைபேரையும் ஒன்று சேர்த்து சகோதரியாக இருந்தாலும் சரி, தந்தையாக இருந்தாலும், அக்காவாக இருந்தாலும், அத்தனை பேரையும் ஒன்று சேர்த்து உடன்பிறப்பே என்று அழைத்தவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.
இன்றைக்கு அவர்கள் வழியில் உங்களை வழிநடத்தக்கூடிய இந்த பொறுப்பேற்றிருக்கக்கூடிய நான் உங்களில் ஒருவனாக இருந்து என்னுடைய கடமையை ஆற்றிக் கொண்டிருக்கிறேன். ஆகவே, இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான் பதவி ஏற்றுக்கொள்கிற நேரத்தில் மட்டுமல்ல, எந்த நேரத்தில், எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருந்து உங்களுடன் கடமையாற்ற நான் காத்திருக்கிறேன். அப்படிப்பட்ட நிலையிலிருந்து உங்களையெல்லாம் நான் அன்போடு கேட்டுக்கொள்ள விரும்புவது நம்முடைய சிவக்குமார் அவர்கள் தொடக்கக்காலத்தில் இருந்து இந்த காலம் வரை அவர் ஆற்றியிருக்கக்கூடிய பணிகள் எல்லாம் மறக்க முடியாதது. கட்சிக்கு, கட்சியினுடைய தலைமைக்கு, கட்சியினுடைய தலைவருக்கு என்றைக்கும் கட்டுப்பட்டவராக பணியாற்றக்கூடியவர்களில் ஒருவராக இயங்கிக் கொண்டிருக்கிறார்.
அவருடைய இல்லத்தில் நடைபெறக்கூடிய இந்த மணவிழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறபோது இது நம்முடைய இல்லத்தில் நடைபெறக்கூடிய திருமணம் என்ற அந்த நிலையிலேதான் நாம் அத்தனை பேரும் கலந்து கொண்டிருக்கிறோம். அந்த உணர்வோடு தான் வாழ்த்துகிறோம். எனவே அப்படிப்பட்ட நிலையில் உங்களோடு சேர்ந்து நானும் மணமக்களை வாழ்க, வாழ்க என்று வாழ்த்துகிறேன்.
புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கக்கூடிய வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்கு தொண்டர்களாய் வாழுங்கள், வாழுங்கள், வாழுங்கள் என்று வாழ்த்தி, அதே நேரத்தில் மணமக்களிடத்தில் ஒரு அன்பான வேண்டுகோள் உங்களுக்கு பிறக்கக்கூடிய செல்வங்களுக்கு, குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டுங்கள், சூட்டுங்கள் என்று கேட்டு விடைபெறுகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.