சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 66-வது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம் எனச் சூளுரைத்து உறுதியெடுப்போம் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஒடுக்கப்பட்ட மக்களின் அடிமை விலங்கை ஒடிக்க புரட்சி செய்த புத்துலக புத்தர்; சமத்துவத்தை நோக்கிய போராட்டப் பயணத்தில் வடக்கு கண்ட பெரியார்; புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவுநாளில் ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம் எனச் சூளுரைத்து உறுதியெடுப்போம்" என தெரிவித்துள்ளார்.
அதேபோல், மக்களவை உறுப்பினரும், தி.மு.க துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டத்தைப் பேணி காப்போம் என தெரிவித்துள்ளார். இது குறித்து கனிமொழி எம்.பி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், :"அண்ணல் அம்பேத்கரின் 66-வது நினைவுநாள் இன்று. தன் வாழ்வெல்லாம் சமூகநீதி காக்கப் போராடிய புரட்சியாளரை, நவீன இந்தியாவின் சிந்தனை பெருவூற்றாக விளங்கிய மாமேதையின் நினைவைப் போற்றிடுவோம். அவர் தந்த அரசியலமைப்புச் சட்டத்தைப் பேணி, அவர் வழியில் சமூகநீதி காத்திடுவோம்." என தெரிவித்துள்ளார்.