தமிழ்நாடு

முதலில் இந்திமயமாக்கல்; அதன் பிறகு சமஸ்கிருதமயமாக்கல்: மோடி அரசின் போலி மொழிப் பாசத்தை தோலுரித்த முரசொலி!

பாரதிய மொழிகளில் கல்வி இருக்க வேண்டும் என்றும் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இந்த பாரதிய மொழிப் பாசம் எல்லாம் ஆங்கிலத்தை அகற்றவே தவிர, மாநில மொழிகளைக் காக்க அல்ல.

முதலில் இந்திமயமாக்கல்; அதன் பிறகு சமஸ்கிருதமயமாக்கல்: மோடி அரசின் போலி மொழிப் பாசத்தை தோலுரித்த முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஹிந்தியா அல்ல - 2

இந்திக்காக இவர்கள் துடிக்கவில்லை. சமஸ்கிருதத்துக்காகவே துடிக்கிறார்கள். இந்தியாவின் ஆட்சி மொழியாக சமஸ்கிருதத்தை ஆக்குவோம் என்பதுதான் ஜனசங்கத்தின் கொள்கை. இது அவர்களது 1952 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலேயே இருக்கிறது.

சமஸ்கிருதம் ஆட்சி மொழி என்று சொன்னால் அதனை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது மட்டுமல்ல, இவர்கள் யார் என்பது இந்தியா முழுமைக்கும் தெரிந்துவிடும் என்பதால் அதனை மறைக்கிறார்கள். ‘இந்தியை ஆட்சி மொழி ஆக்குவது. அதன் பிறகு சமஸ்கிருதத்தை ஆட்சி மொழி ஆக்குவது’தான் இவர்களது முழு முதல் கொள்கை. ‘சமஸ்கிருதம் ஆட்சி மொழியாகும் வரை இந்தியை வைத்துக் கொள்வோம்’ என்று அன்றைய ஜனசங்கத் தலைவர்களே சொல்லி இருக்கிறார்கள்.

சமஸ்கிருதத்தை ‘தேசிய பாஷையாக’ அறிவிக்கக் கோரும் பொது நல மனு ஒன்றை, ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரியும், வழக்குரைஞரும் (பா.ஜ.க. ஆதரவாளரும்) ஆன கே.ஜி.வன்சுரா என்பவர் சமீபத்தில் தாக்கல் செய்திருந்தார். உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் கிருஷ்ணமுராரி ஆகியோர் அடங்கிய அமர்வு அதனைத் தள்ளுபடி செய்துள்ளது.

‘‘எத்தனை நகரங்களில் சமஸ்கிருதம் பேசப்படுகிறது? நீங்கள் சமஸ்கிருதத்தில் பேசுவீர்களா? அல்லது நீங்கள் போட்டிருக்கும் இந்த மனுவை சமஸ்கிருதத்தில் உங்களால் மொழி பெயர்க்க முடியுமா? ஒரு மொழியை தேசிய மொழியாக அறிவிப்பது நீதிமன்றத்தின் கைகளில் இல்லை. அதற்கு அரசமைப்பில் (சட்டத்தில்) திருத்தம் கொண்டு வரவேண்டும். உங்கள் விளம்பரத்திற்காக இந்த வழக்கை ஏற்க முடியாது’’ என்று திட்டவட்டமாகக் கூறி, ‘டிஸ்மிஸ்’ செய்தனர்!

சமஸ்கிருதம் பேசுவோர் தொகை 24,821 பேர்தான்! ஆனால் அதற்கு பல நூறு கோடியைச் செலவு செய்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. புதிய கல்விக் கொள்கையில் சமஸ்கிருதத்தின் புகழ் பல இடங்களில் பாடப்படுகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளதும் மற்றுமொரு முக்கியமான நவீன மொழியுமான சமஸ்கிருதம், - ஒன்றுகூட்டப்பட்ட கிரேக்க மற்றும் லத்தீன் மொழிகளின் இலக்கியங்களைக் காட்டிலும் செறிவு மிக்கதாகவும், கணிதம், தத்துவம், இலக்கணம், இசை, அரசியல், மருத்துவம், கட்டிடக் கலை, உலோகவியல், நாடகம், கவிதை, கதை சொல்லல் மற்றும் பிற (சமஸ்கிருத ஞான மரபு என்றறியப்பட்ட) ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்களாலும், மதச் சார்புடையவர்களாலும் வாழ்வின் பலதரப்பட்ட சமூகப் பொருளாதார மற்றும் வாழ்வியல் முறைகளைச் சார்ந்த எழுத்தாளர்களால் எழுதப்பட்ட ஏராளமான செல்வங்களையும் உள்ளடக்கி உள்ளது.

 சமஸ்கிருதம், மும்மொழிப் பாடத்திட்டத்தின் ஒரு மொழியாகப் பள்ளிக் கல்வித் திட்டத்தின் எல்லா நிலைகளிலும், கல்லூரிகளிலும் ஒரு முக்கியமான வளமூட்டக் கூடிய விருப்பப் பாடமாக வழங்கப்படும்.

 மொழிச் சுவையுடனும், அனுபவப் பூர்வமாகவும் மட்டுமல்லாமல் தற்காலத்திற்குப் பொருந்தும் வகையில் சமஸ்கிருத ஞான மரபுகளின் வழியில் முக்கியமாக ஒலிப்பு மற்றும் உச்சரிப்பு முறைகளின் மூலமாகக் கற்பிக்கப்படும். ஆரம்ப மற்றும் இடைநிலை சமஸ்கிருதப் பாடப் புத்தகங்கள் எளிய, தரமான சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டு, மாணவர்கள் உண்மையிலேயே அனுபவித்துக் கற்கும் வண்ணம் சமஸ்க்ரித மொழியின் மூலமே கற்பிக்கப்படும்.

 சமஸ்கிருத பாடத்தை சமஸ்கிருத மொழியிலேயே ஆரம்ப மற்றும் இடைநிலை மாணவர்களுக்கு கற்றுத்தருவதற்காக சமஸ்கிருத பாடப் புத்தகங்கள் உருவாக்கி வழங்கப்படும்” .

 உயர்கல்வித் துறையில் முழுமையான பல்துறை (Holistic Multidisciplinary) பயிற்று மொழியாக சமஸ்கிருதம் விளங்கும். நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையில் உள்ள சமஸ்கிருத ஆசிரியர்கள் பாடப் புலமை பெற்றவர்களாக (Professionalized) ஆக்கப்படுவார்கள்.

– இப்படி எல்லாம் புதிய கல்விக் கொள்கையில் இருக்கிறது. இதனால்தான் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம். முதலில் இந்தி மயமாக்கல், - அதன் பிறகு சமஸ்கிருத மயமாக்கல்; இதுதான் அவர்களது தந்திரப் பாதையாகும்.

அதற்கு அவர்களுக்குத் தடையாக இருப்பது ஆங்கிலம். ஆங்கிலத்தை அகற்றிவிட்டால் இந்தியை அங்கு வந்து உட்கார வைத்துவிடலாம். ‘ஆங்கிலத்தை நீங்கள் எதிர்க்காதீர்கள், ஆங்கிலத்தை அகற்றினால் அங்கு இந்தி வந்து குந்திக்கும்’ என்று பெருந்தலைவர் காமராசர் அவர்கள் சொன்னது எவ்வளவு தீர்க்கதரிசனமான சொற்கள்!

ஆங்கிலக் கல்விக்கு எதிராகவும், ஆங்கிலேயர்க்கு எதிராகவும் தமிழ்நாட்டு ஆளுநர் அடிக்கடி பேசிவருவதும் இதனால்தான். பாரம்பர்யக் கல்வியை ஆங்கிலேயர் தடுத்துவிட்டார்கள் என்ற பம்மாத்துக்குப் பின்னால் இருப்பதும் இதே நோக்கம்தான். ஆங்கிலத்தை நேரடியாக எதிர்ப்பதைவிட தாய்மொழிக் கல்வி என்று சொல்லி அதன் மூலமாக ஆங்கிலத்தை அகற்றி, அங்கு இந்தி - சமஸ்கிருத சிம்மாசனம் வழங்குவதே இவர்களது நோக்கம்.

10.03.2018 அன்று நாக்பூரில் கூடிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில இந்தியப் பிரதிநிதிகள் சபை. மாநில மொழிகள் குறித்து அதிகமாகக் கவலைப்பட்டது. பாரதிய மொழிகளில் கலந்துள்ள அந்நியச் சொற்களை நீக்க வேண்டும் என்றது. தமிழில் கலந்துள்ள சமஸ்கிருதச் சொற்களைப் பற்றி இவர்கள் பேசுவார்களா? மாட்டார்கள்.

பாரதிய மொழிகளில் கல்வி இருக்க வேண்டும் என்றும் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இந்த பாரதிய மொழிப் பாசம் எல்லாம் ஆங்கிலத்தை அகற்றவே தவிர, மாநில மொழிகளைக் காக்க அல்ல.

இந்தி நூல்களில் இருந்து உருது மற்றும் அரபி வார்த்தைகளை நீக்க வேண்டும் என்றும் இவர்கள் சொல்லி வருகிறார்கள். அப்படி நீக்கினால் அதுதான் ஒரிஜினல் சமஸ்கிருதம் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். எனவே, இவர்களது தாய் மொழிப் பாசத்தின் நடிப்பு அனைத்தையும் தமிழகம் அறியும்.

“மொழிப் போராட்டம் என்பது அரசியல் போராட்டம் அல்ல, அது இன - பண்பாட்டுப் போராட்டம்” என்று தந்தை பெரியார் வழிகாட்டியிருக்கிறார். இது ஹிந்தியாவாகவும் ஆக முடியாது. சமஸ்கிருதியாவாகவும் ஆக முடியாது!

banner

Related Stories

Related Stories