44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கவுள்ளது. இந்த போட்டி தொடர் இன்று தொடங்கி (ஜூலை 28) வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி முடிவடைகிறது.
இதில் கலந்துகொள்ள 187 நாடுகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்டவர்கள் வருகை புரிந்துள்ளனர். இவர்களை வரவேற்கும் விதமாக சிறப்பு பாடல்கள், நடன நிகழ்ச்சிகள் என்று சிறப்பு ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்துள்ளது. அதோடு இவர்களுக்காக சிறப்பு நடச்சத்திர விடுதி, 3500 வகை உணவுகள் என தமிழ்நாடு அரசு அமர்க்களப்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு அரசின் வரவேற்பை பலரும் தங்களது சமூக வலைதளங்கள் மூலம் பலரும் பாராட்டி வருகின்றனர். அதோடு போட்டியில் பங்குபெற வந்த ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற வீரர் ஒருவர், தமிழ்நாடு அரசை குறைகூற முயற்சி செய்தும் அதற்கு ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை என்று தமிழ்நாடு அரசை பாராட்டியுள்ளார்.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் உபசரிப்பில் நிற வேறுபாடு உள்ளதா என்றும், கறுப்பினத்தவர்களுக்கு அங்கே வரவேற்பு எப்படி அளிக்கப்பட்டது என்று இணையத்தில் சிலர் கேள்வியெழுப்பி வருகின்றனர். அதற்கு இந்தியா-தமிழ்நாட்டை சேர்ந்த இணையவாசிகள் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
அதாவது வெள்ளை இன மக்களுக்கு மட்டும் தான் சிறப்பான வரவேற்புகள் கொடுக்கப்படுகிறதா? நிறப்பாகுபாடு உள்ளதா? என்று ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, "இந்தியா பல்வேறு மொழிகளை கொண்ட, கருப்பு, வெள்ளை, பிரவுன் நிறத்தை கொண்ட மக்கள் வாழும் இடம்" என்று ஒருவரும், "இந்தியா ஒரு செஸ்போர்ட் போன்றது.. அதில் தமிழ்நாடு தான் ராஜா" என்று மற்றொருவரும் பதிலளித்துள்ளனர்.
மேலும், தமிழ்நாட்டில் உபசரிப்புகள் எப்படி உள்ளது என்று மற்றொருவர் எழுப்பிய கேள்விக்கு, "கறுப்பின மக்கள் இங்கே இப்படி தான் வரவேற்கப்படுகின்றனர்" என்று கூறி, உகாண்டா, ஆஃப்ரிக்கா உள்ளிட்ட இடங்களில் இருந்து வருகை தந்த வீரர்களுக்கு மாலை, சால்வைகள் ஆகியவை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து பதிலளித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.