தமிழ்நாடு

“கருப்பு - சிவப்பு என்பது கழகத் தொண்டர்களின் குருதியுடன் கலந்த உணர்வு” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!

“எதையும் தாங்கும் இயக்கம்! இயக்கத்தைத் தாங்கி நிற்கும் இளைஞரணி!” எனக் குறிப்பிட்டு தி.மு.கழக உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.

“கருப்பு - சிவப்பு என்பது கழகத் தொண்டர்களின் குருதியுடன் கலந்த உணர்வு” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

“திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கம் எப்போதுமே இளைஞர்களின் பாசறையாக - பாடிவீடாக விளங்குகின்ற இயக்கம். கருப்பு - சிவப்பு என்பது கழகத் தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் குருதியுடன் கலந்த உணர்வு.” எனக் குறிப்பிட்டு தி.மு.க உடன்பிறப்புகளுக்கு தி.மு.க தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்,

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், இளைஞரணியின் ஈட்டிமுனைகளான இனிய செயல்வீரர்களுக்கும் உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கம் எப்போதுமே இளைஞர்களின் பாசறையாக - பாடிவீடாக விளங்குகின்ற இயக்கம். அதனால்தான் என் இளமைப் பருவத்திலேயே பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் - நாவலர் நெடுஞ்செழியன் - இனமானப் பேராசிரியர் உள்ளிட்டோரின் செயல்பாடுகளைக் கண்டு, அதனால் உந்துதல் பெற்று, நண்பர்களுடன் இணைந்து கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. என்ற அமைப்பைத் தொடங்கினேன்.

“கருப்பு - சிவப்பு என்பது கழகத் தொண்டர்களின் குருதியுடன் கலந்த உணர்வு” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!

மாநகராட்சித் தேர்தல் பரப்புரைப் பணியில் ஈடுபட்டேன். பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கினேன். கழகப் பிரச்சார நாடகங்களில் மேடையேறினேன். முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றும் மேடைகளில் ஓரமாக அமர்ந்து, அவர்களின் உரைகளை ஒரு டேப்ரெகார்டரில் பதிவு செய்து, பின்னர் அதனை முரசொலியில் அச்சிட ஏற்ற வகையில் எழுதித்தரும் பணியையும் மேற்கொண்டேன்.

கருப்பு - சிவப்பு என்பது கழகத் தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் குருதியுடன் கலந்த உணர்வு. அந்த உணர்வுமிக்க இளைஞர்களைக் கொண்டு, 1980-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் நாள் கழகத் தலைவர் கலைஞர் அவர்களால் மதுரை ஜான்சிராணி பூங்காவில் தி.மு.கழகத்தின் துணை அமைப்பாக இளைஞரணி உருவாக்கப்பட்டது.

‘கழகம் வில்லாம்! நின் அணியே கணையாம்’ என நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள் சொன்னதற்கேற்ப, அன்றைக்கு எதிர்க்கட்சியாக இருந்த கழகத்தினை வலிமைப்படுத்திடவும், இளைய ரத்தம் கொண்ட புதிய பட்டாளத்தை ஜனநாயகப் போர்ப்படையாக உருவாக்கிடவும் உங்களில் ஒருவனான என்னிடம் இளைஞரணியின் செயலாளர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

உடன்நின்ற இளைஞரணித் தோழர்களுடன் தமிழ்நாடு முழுவதும் பயணித்து, கழகக் கொடிகளை ஏற்றி வைத்தும், மன்றங்களைத் தொடங்கி வைத்தும், படிப்பகங்களைத் திறந்து வைத்தும் இந்த அமைப்பை வலுப்படுத்தினோம். இனமானப் பேராசிரியர் வைத்த ஆரோக்கியமான போட்டியில் மற்ற அணிகளுக்கு முன்பாக 11 லட்ச ரூபாய் நிதி திரட்டித் தந்து இளைஞரணி சார்பில் அதனை வழங்கி அன்பகம் எனும் அலுவலகத்தைப் பெற்றோம்.

“கருப்பு - சிவப்பு என்பது கழகத் தொண்டர்களின் குருதியுடன் கலந்த உணர்வு” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அறிவித்த அனைத்துப் போராட்டங்களிலும் முதன்மையாக நின்றது இளைஞரணி. ‘வெட்டிவா என்றால் கட்டிவரக் கூடியவர்கள் என் உடன்பிறப்புகள்’ என்ற முத்தமிழறிஞர் கலைஞரின் சொற்களுக்கு இலக்கணமாக இளைஞரணி செயல்பட்டது.

இந்தி ஆதிக்கத்திற்கு எதிராகவும், ஈழத் தமிழர் நலன் காத்திடுவதற்காகவும், அன்றைய ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளை எதிர்த்தும் தமிழினத் தலைவர் கலைஞர் அறிவித்த ஜனநாயகப் போர்க்களங்களில், காராகிரகத்திற்கு அஞ்சாத பட்டாளமாக முன்னின்று சிறைச்சாலைகளை நிரப்பியது இளைஞரணி.

கழகத்தின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்டபோதும், சமூகநீதிக் காலவர் வி.பி.சிங் உள்ளிட்ட அகில இந்தியத் தலைவர்கள் பங்கேற்ற தேசிய முன்னணி தொடக்க விழாவின் போதும் சென்னை அதிர்ந்திடவும், இந்திய துணைக்கண்டமே ஆச்சரியமடையும் வகையிலும் இளைஞரணியின் வெண்சீருடை அணிவகுப்பு அமைந்தது. அதுவரை ஊர்வலம் எனச் சொல்லப்பட்டு வந்ததை, ‘பேரணி’ என மாற்றிய பெருமை கழகத்தின் இளைஞரணிக்கே உரியது.

ஒரு மாநிலக் கட்சியின் இளைஞரணியின் கட்டமைப்பும் அதன் உறுப்பினர்கள் எண்ணிக்கையும் இந்திய அளவிலான அரசியல் கட்சிகளை வியந்து நோக்க வைத்தன. தேர்தல் களப் பணிகளாக இருந்தாலும், கழகத்திற்கு நெருக்கடி சூழும் நேரங்களில் தலைவர் கலைஞரின் கரங்களை வலுப்படுத்தும் செயல்பாடுகளாக இருந்தாலும், அதில் இளைஞரணியின் பங்களிப்பை எவராலும் மறுக்க முடியாது.

“கருப்பு - சிவப்பு என்பது கழகத் தொண்டர்களின் குருதியுடன் கலந்த உணர்வு” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!

அன்றைய ஆட்சியாளர்களின் பொய் வழக்குகள், தடைகள் இவற்றைக் கடந்து இளைஞரணி தனது தெளிவான பாதையில் உறுதியாகப் பயணித்து கழகத்தைக் கட்டிக் காக்கும் அணியாகத் திகழ்ந்தது. இளைஞரணியின் வளர்ச்சி கண்டு நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள் மட்டற்ற மகிழ்ச்சி கொண்ட நிகழ்வுகள் பலவற்றைக் கண்டிருக்கிறேன். இளைஞரணி முன்னெடுக்கும் நிகழ்வுகளில் தலைவர் கலைஞரின் வாழ்த்துரை என்பது அத்தனை பேருக்கும் உத்வேகம் தரும்.

2003-இல் விழுப்புரத்தில் நடந்த கழகத்தின் மண்டல மாநாட்டில் இளைஞரணிச் செயலாளரான என்னைத் தலைமையேற்கப் பணித்தவர் தலைவர் கலைஞர். 2004-இல் சேலத்தில் நடந்த சிறப்பு மாநாட்டில் கழகக் கொடியினை உயர்த்தி வைக்கும் வாய்ப்பையும் இளைஞரணிச் செயலாளரான எனக்கு வழங்கினார்.

எல்லாவற்றுக்கும் சிகரமாக 2007-ஆம் ஆண்டு நெல்லையில் நடைபெற்ற இளைஞரணியின் வெள்ளி விழா மாநாட்டில் தமிழ்நாட்டின் முதலமைச்சரான கழகத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் நிதியமைச்சரான கழகப் பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் அவர்களும் கழக முன்னோடிகளும் பங்கெடுத்து, கொட்டும் மழையில் நடந்த வண்ணமிகு பேரணியை தனி மேடையில் கண்டு ரசித்து வாழ்த்தியதையும், இளைஞரணியினர் ஊக்கம் பெறும் வகையில் மாநாட்டில் எழுச்சியுரை ஆற்றியதையும் வாழ்வில் மறந்திடவே இயலாது. அவை கழக வரலாற்றுப் பக்கங்களின் அழிக்க முடியாத பதிவுகளாகும்.

நம் உயிர் நிகர் தலைவர் கலைஞர் அவர்களை இயற்கை சதி செய்து நம்மிடமிருந்து பிரித்த நிலையில், திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கத்தின் தலைவர் பொறுப்பை உங்களில் ஒருவனான என் தோளில் உடன்பிறப்புகளான நீங்கள் சுமத்தியிருக்கிறீர்கள். தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற பொறுப்பை இந்த மாநிலத்து மக்கள் பெரும் நம்பிக்கையுடன் என்னிடம் அளித்திருக்கிறார்கள்.

“கருப்பு - சிவப்பு என்பது கழகத் தொண்டர்களின் குருதியுடன் கலந்த உணர்வு” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!

இரண்டு பொறுப்புகளிலும் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்படவேண்டும் என்ற உறுதியுடன் என் பணிகளைத் தொடர்ந்து வருகிறேன். இத்தனை பொறுப்புகள் இருந்தாலும் என் இளமைப் பருவம் முதல் இயக்கத்தோடு என்னை இரண்டறக் கலக்கச் செய்த கோபாலபுரம் இளைஞர் தி.மு.க அமைப்பும், தலைவர் கலைஞர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இளைஞரணியும் இயக்கத்தில் எனக்குத் தாய் மடியாகும். அதில் தவழ்ந்த காலத்தை இப்போது நினைத்தாலும் இனிமை தருகிறது. எண்ணம் எல்லாம் இளமை ஆகிறது.

இளைஞரணி தொடங்கப்பட்டு 42 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தற்போது அதனை தம்பி உதயநிதி அவர்கள் சிறப்பாக முன்னெடுத்து வருவதைக் கண்டு தந்தையாக அல்லாமல், கழகத்தின் தலைவராக மகிழ்கிறேன். காலத்திற்கும் களத்திற்கும் ஏற்ற வகையில் அதன் செயல்பாடுகள் தொடரவேண்டும் என விரும்புகிறேன்.

நாடாளுமன்ற - சட்டமன்றத் தேர்தல் களத்தில் தம்பி உதயநிதியும் அவரது இளைஞரணிப் பட்டாளத்தினரும் ஆற்றிய முனைப்பான பணிகள் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மகத்தான வெற்றிக்குத் துணை நின்றன. குடியுரிமைத் திருத்தச் சட்டம் எதிர்ப்பு, நீட் விலக்குப் போராட்டம், கொரோனா கால நிவாரணப் பணிகள் ஆகியவற்றில் இளைஞரணியின் பங்களிப்பை ஒரு தாயின் உணர்வுடன் கவனித்து பெருமை கொண்டேன்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 99-ஆவது பிறந்த ஆண்டினையொட்டி நடைபெற்ற மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறைக்கு திராவிட இயக்கக் கொள்கைகளையும் சாதனைகளையும் சரியான முறையில் கொண்டு சேர்த்து, மதவாத அரசியல் சக்திகள் அந்த மண்ணில் ஊடுருவச் செய்யாமல் தடுத்திடும் வகையில் தமிழ்நாடு முழுவதும் திராவிட மாடல் பயிற்சிப் பாசறைக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உடனே, வில்லில் இருந்து பாயும் கணையாக இளைஞரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள் நடத்தப்படும் என அறிவித்து, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் சிறப்பான கருத்தரங்கை நடத்தி, அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு தொகுதியிலும் பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

இத்தகைய வேகமும் இளைஞர்களிடம் இலட்சியத்தைக் கொண்டு சேர்க்கின்ற வியூகமும், எதையும் தாங்கும் இந்த இயக்கத்தைக் கட்டிக்காத்து தமிழ்நாட்டை உலகளவில் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வற்குத் துணை நிற்கக்கூடியதாகும். இயக்கத்தைக் கட்டிக் காக்கும் பல்வேறு துணை அமைப்புகளுடன் இளைஞரணி தன் பணியைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நமக்கு ஐம்பெரும் முழக்கங்களைத் தந்திருக்கிறார்.

அண்ணா வழியில் அயராது உழைப்போம்

ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்

இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்

வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்

மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி

- இதுதான் திராவிட மாடலின் இலக்கணம். அந்த இலக்கணத்தைக் கடைப்பிடித்து, ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற உன்னத இலட்சியத்தைக் கொண்ட இயக்கத்தைக் கட்டிக்காக்கும் பெரும்பணியில் இளைஞரணிப் பட்டாளத்தின் உறுதிமிக்க செயல்பாடுகள் தொடர்ந்திட தாயுள்ளத்தோடு வாழ்த்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories