தமிழ்நாடு

கல்விச் சாலைகளில் அறிவு ஒளி வீசட்டும்.. பள்ளி மாணவ - மாணவியருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

இடையில் தடைபட்ட வாய்ப்பை இப்போது அதிகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாணவ - மாணவியர் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கல்விச் சாலைகளில் அறிவு ஒளி வீசட்டும்.. பள்ளி மாணவ - மாணவியருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப் பட உள்ளன. இதைத்தொடர்ந்து வருகிற 20-ந்தேதி பிளஸ்-2 வகுப்புகளும் 27-ந்தேதி பிளஸ்-1 வகுப்புகளும் தொடங்குகின்றன. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வரும் நிலையில், பள்ளிவளாகம் மற்றும் பள்ளி வாகனங்களை முறையாக பராமரிப்பது உள்ளிட்டவை குறித்து வழிகாட்டு நெறி முறைகளை பள்ளிக் கல்வித்துறை வழங்கியுள்ளது அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களுக்கும் தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் இருந்து பாட நோட்டு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

பள்ளிக்கூடங்கள் இன்று (திங்கட் கிழமை) தொடங்கியதும் இலவச பாடப்புத்தகம் மற்றும் நோட்டுகளை வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் பள்ளிக் கூடங்களில் ஒரு வாரத்துக்கு பாடங்களை நடத்தாமல் புத்துணர்வு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வகுப்புகள் தொடங்கப் பட்டு முதல் ஒரு வாரத்துக்கு பாடங்களை நடத்தாமல் புத்துணர்வு பயிற்சியும், நல்லொழுக்கம் மற்றும் உளவியல் ரீதியான வகுப்புகளும் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஒரு வாரத்திற்கு பிறகு வழக்கமான பாடங்களை அட்டவணைப்படி நடத்தலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது.

இந்நிலையில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. துள்ளி வரும் பிள்ளைச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன். கொரோனா என்ற பெருந்தொற்றால் பள்ளிக்கு நேரில் வந்து பயிலும் முறை தடைபட்டது. இருந்தாலும் ஆன்லைன் மூலமாகக் கல்வி கற்றீர்கள்.

ஆனாலும் பள்ளியில் அமர்ந்து கற்கும் அனுபவத்துக்கு இணையானது ஏதுமில்லை. பள்ளிச்சூழலே கற்கும் திறனையும், அறிவாற்றலையும் மேன்மைப்படுத்தும். இடையில் தடைபட்ட வாய்ப்பை இப்போது அதிகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாணவ - மாணவியர் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல் இருபால் ஆசிரியப் பெருமக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகளை நோக்கிப் பிள்ளைகள் வருகிறார்கள். அவர்களைக் கனிவுடன் வரவேற்று அரவணைப்புடன் பாடங்களைக் கற்பிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

தடைபட்ட கல்வியைத் தாராளமாக வழங்கி முழுமைப்படுத்த வேண்டிய முழுப்பொறுப்பும் உங்கள் கைகளில்தான் இருக்கிறது. கல்விச் சாலைகளில் அறிவு ஒளி வீசட்டும்! மாநிலம் பயன்பெறட்டும்!” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories