தமிழ்நாடு

“தாய் - தந்தை உயிரோடு இருக்கும்போதே..” : உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேரறிவாளன் உருக்கம் !

விடுதலைக்காகக் குரல் கொடுத்த அனைவருக்கும் பேரறிவாளன் நன்றி தெரிவித்துள்ளார்.

“தாய் - தந்தை உயிரோடு இருக்கும்போதே..” : உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேரறிவாளன் உருக்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி 2016ம் ஆண்டு பேரறிவாளன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீது விவாதம் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த நிலையில் இன்று பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை அடுத்து விடுதலைக்காகக் குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகப் பேரறிவாளன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த பேரறிவாளன், " எனது விடுதலைக்காகக் குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரையும் நேரில் சென்று சந்திக்க விரும்புகிறேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளேன்.

உலகத் தமிழர்கள் அனைவரும் தங்கள் வீட்டு பிள்ளையாக என்னைக் கருதினர். என் விடுதலைக்காக போராடிய எனது தாயார் பல அவமானங்களைச் சந்தித்தார். பல்வேறு தடைகளைக் கடந்து எனது விடுதலைக்காகப் போரடி வென்றுள்ளார் எனது தாயார்.

சிறையிலிருந்தபோது மக்சிம் கார்க்கி எழுதி தாய் நாவலை 4 முறை படித்துள்ளேன். அந்த நாவலில் வரும் தாயாரை எனது தாயுடன் ஒப்பிட்டுப் பார்த்தேன். 31 ஆண்டு சட்டப் போராட்டத்தில் ஒவ்வொரு முறை வீழும்போதும் எனது தாயாரைப் பார்க்க நான் அஞ்சுவேன்.

பெற்றோருக்கு வயது அதிகமாகும் நிலையில் அவர்களது வாழ்க்கையை வீணடிக்கிறோமோ என்று எண்ணினேன். தாய் - தந்தை உயிரோடு இருக்கும்போதே எனது விடுதலை அவர்கள் பார்க்க வேண்டும் என்று கருதினேன்.எனது விடுதலைக்கு எனது தந்தை, சகோதரிகள், அவர்களது கணவர்கள் ஆகியோர் ஆதரவாக இருந்தனர்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories