தமிழ்நாடு

நம் இலக்குக்கு ‘திராவிட மாடல்’.. ஓராண்டு நிறைவையொட்டி பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய முழு உரை!

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும், இனமானப் பேராசிரியப் பெருந்தகை அவர்களும் என் மீது வைத்த நம்பிக்கையை இந்த ஓராண்டு காலத்தில் காப்பாற்றி இருக்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நம் இலக்குக்கு ‘திராவிட மாடல்’.. ஓராண்டு நிறைவையொட்டி பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய முழு உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன்கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை அளித்தார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' என்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான் பொறுப்பேற்று இன்றோடு ஓராண்டு நிறைவு பெறுகிறது. இந்த ஓராண்டு காலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையுடனும், உளப்பாங்குடனும் உழைத்திருக்கிறேன் என்கிற மனநிறைவோடுதான் இந்த மாமன்றத்தில் நான் நின்றுகொண்டு இருக்கிறேன்.

ஒரு தனிமனிதனின் வரலாற்றில் வேண்டுமானால் ஓராண்டு என்பது மிக நீண்டதாக இருக்கலாம். ஆனால், ஒரு நாட்டின், மாநிலத்தின் வரலாற்றில் ஓராண்டு என்பது ஒரு துளிதான். துளி போன்ற இந்த ஓராண்டு காலத்தில், கடல் போன்ற விரிந்த சாதனைகளைச் செய்துள்ளோம் என்ற பெருமிதத்தோடு இந்த மாமன்றத்தில் நான் நின்றுகொண்டு இருக்கிறேன்.

'இந்தத் தமிழ்ச் சமுதாயத்திற்காக நானும், பேராசிரியரும் உழைத்துக்கொண்டு இருக்கிறோம். எங்களுக்குப் பின்னால் இந்தப் பணியை யார் செய்வார்கள் என்று கேட்பீர்களேயானால், இந்த மேடையில் உட்கார்ந்திருக்கிற தம்பி ஸ்டாலின்தான் அதனைச் செய்ய வேண்டும். சிறப்பாகச் செய்வார் என்று நானும் பேராசிரியரும் நம்புகிறோம்' என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த கூட்டத்திலே வெளிப்படையாக அறிவித்தார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும், இனமானப் பேராசிரியப் பெருந்தகை அவர்களும் என் மீது வைத்த நம்பிக்கையை இந்த ஓராண்டு காலத்தில் காப்பாற்றி இருக்கிறேன் என்ற மகிழ்ச்சியோடுதான் இந்த மாமன்றத்தில் நான் நின்றுகொண்டு இருக்கிறேன். என்னை மட்டுமல்ல; இந்த அவையில் இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தவர்களை மட்டுமல்ல; தமிழ்நாட்டின் எட்டுத்திசையிலும் வாழக்கூடிய எத்தனையோ இலட்சோபலட்சம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீரர்களை உருவாக்கியவர்தான் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். எங்களை எல்லாம் உருவாக்கிவிட்டு அவர் நிறைந்தபோது, அவர் வகித்த கழகத் தலைவர் பொறுப்பு என்னுடைய தோளில் சுமத்தப்பட்டது.

'நான் கலைஞர் அல்ல; அவரைப் போலப் பேசத் தெரியாது; அவரைப் போல எழுதத் தெரியாது; அவரைப் போல உழைக்க முயன்று பார்ப்பேன்' என்று அப்போது நான் உறுதி அளித்தேன். அந்த உறுதிமொழியை இந்த ஓராண்டு காலத்தில் காப்பாற்றி இருக்கிறேன் என்று சொல்லும் துணிச்சலோடுதான் உங்கள் முன்னால் நான் நின்று கொண்டிருக்கிறேன்.

நூற்றாண்டு பழமை கொண்ட இந்தத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இத்தகைய மகிழ்ச்சிக்குரிய மனநிலையுடன் என்னைத் தலைநிமிர்ந்து நிற்க வைத்த கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்களுக்கு நான் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இதே மாமன்றத்தில் நின்று முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்கள் உரையாற்றிக் கொண்டு இருந்தார். அரங்கமே அமைதியாகக் கேட்டுக் கொண்டு இருந்தது. ஆனால் அரங்கினுடைய வெளியே, வாசலில் ஏதோ சத்தம் வந்து கொண்டேயிருந்தது. காவலர்களிடம் கண் அசைவில், “என்ன?” என்று அண்ணா அவர்கள் கேட்டிருக்கிறார். காவலர்கள் அண்ணா அவர்களிடம் ஏதோ சொன்னார்கள். பேரவைத் தலைவருடைய அனுமதி பெற்று அரங்கை விட்டு வெளியில் போன முதலமைச்சர் அண்ணா அவர்கள், ஐந்து நிமிடம் கழித்து உள்ளே வந்திருக்கிறார். தனது பேச்சைத் தொடர்வதற்கு முன்னால், “என்னைப் பார்ப்பதற்காக தமிழ்நாட்டின் எங்கோ ஒரு மூலையில் இருந்து எங்களது கழகத் தொண்டர்கள் வந்துள்ளார்கள். நான் இந்த அவைக்குள் நுழைவதற்குக் காரணமான அவர்களை மதித்து வணங்கி, வழியனுப்பி வைத்துவிட்டுத்தான் இங்கே வந்திருக்கிறேன்” என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

தமிழ்நாட்டின் எங்கோ ஒரு மூலையில் இருந்து என்னை இந்த மாமன்றத்துக்குள் இத்தகைய தகுதியோடு நிற்க வைத்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீரர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தோழமைக் கட்சிகளாக மட்டுமில்லாமல், தோழமை உறவுகளாக எங்களோடு எப்போதும் பயணித்துக் கொண்டிருக்கக்கூடிய கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இவர்களால்தான் நான் இங்கு தலைநிமிர்ந்து நிற்கிறேன். அவர்கள் என்மீது வைத்த நம்பிக்கையை இந்த ஓராண்டு காலத்தில் காத்து வந்திருக்கிறேன் என்று உறுதியாக நான் நம்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அனைத்துத் தரப்பு மக்களுடைய நலனைக் காத்து, அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, சமச்சீரான வளர்ச்சியை சாதித்துக் காட்டுவதாக இந்த ஓராண்டுக் கழக ஆட்சி திகழ்கிறது. நமது திட்டங்களின் பயன்கள் சென்று சேராதவரே தமிழ்நாட்டில் இல்லை என்ற ஒரு நிலை உருவாகியுள்ளது.

மகளிருக்கு இலவசப் பேருந்துப் பயணம் என்ற ஒரு திட்டம் பெண்கள் சமூகத்தில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை மட்டும் தயவு செய்து எண்ணிப் பார்க்க வேண்டும். இப்போதுகூட, இந்தச் சட்டமன்றத்திற்கு வருவதற்கு முன்பு, கோபாலபுரத்திற்கு, தலைவர் கலைஞர் அவர்களுடைய இல்லத்திற்குச் சென்று, அவருடைய திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்துவிட்டு, என்னைப் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாயிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு, நானும், நம்முடைய அவை முன்னவர் அவர்களும் மற்றும் அமைச்சர் பெருமக்கள் எல்லாம் காரிலே வந்து கொண்டிருந்தபோது, டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலையிலே ஒரு பேருந்து நிலையத்திலே இறங்கி நின்றபோது, ஒரு பேருந்து வந்தது.

‘நீங்கள் எல்லாம் காரிலேயே உட்கார்ந்திருங்கள், நான் அந்தப் பேருந்திலே கொஞ்சம் நேரம் பயணம் செய்துவிட்டு வருகிறேன்’ என்று சொல்லி, 29-C அந்தப் பேருந்தில் ஏறினேன். 29-C பேருந்து என்னுடைய வாழ்நாளிலே மறக்கமுடியாத பேருந்து. ஏனென்றால், பள்ளிப் பருவத்திலே இருந்தபோது, நான் கோபாலபுரத்திலிருந்து 29-C மூலம் பள்ளிக்குச் சென்று வந்தேன். அப்போது தலைவர் கலைஞர் அவர்கள், பொதுப் பணித் துறை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் இருந்தார்.

நான் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி பேருந்து நிறுத்தத்திலிருந்து, 29-C பேருந்தைப் பிடித்துத்தான் என்னுடைய பள்ளிக்கு, ஸ்டெர்லிங் சாலையில் இறங்கி, அங்கிருந்து சேத்துப்பட்டிற்கு நடந்து போய், பள்ளிக்குச் சென்று படித்தேன். 29-C என்ற அந்தப் பேருந்தில்தான் இன்றைக்குக் காலையில் நான் ஏறி பயணித்தேன். அந்தப் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த மகளிரிடத்திலே, ‘எப்படி இந்த ஆட்சி நடக்கிறது – ஒரு வருடம் ஆகியிருக்கிறது; இரண்டாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறோம் – உங்களுக்குத் திருப்தியாக இருக்கிறதா?’ என்று கேட்டேன். ‘ரொம்ப திருப்தியாக இருக்கிறது. உங்களைப் பார்த்ததே அளவுகடந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.’ என்று சொன்னார்கள். இந்த இலவசப் பயணத்தினால் உங்களுக்கு என்ன இலாபம், எவ்வளவு மிச்சமாகிறது? என்ற கேள்விகளையெல்லாம் கேட்டேன். அதற்குரிய விளக்கத்தையெல்லாம் சொன்னார்கள்.

ஏற்கெனவே இதுகுறித்து மூன்று வழித் தடங்களில் கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டது. கோயம்பேடு முதல் திருவொற்றியூர் வரை; தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை; பிராட்வே முதல் கண்ணகி நகர் வரை பயணம் செய்யக் கூடிய 465 பயனாளிகளிடம் கருத்துக் கேட்கப்பட்டது. மாநிலத் திட்டக் குழுவால் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக் கேட்பின் வாயிலாக, இந்தத் திட்டத்தால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலினப் பெண்கள் அதிக அளவிலே பயன்பெற்று வருகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. அதிலும் குறிப்பாகப் பட்டியலினப் பெண்கள் அதிகமாக பயனடைந்திருக்கிறார்கள். இந்தச் சலுகை மூலமாக யார், எவ்வளவு பயனடைந்துள்ளார்கள் என்றும் கேட்கப்பட்டது.

வீட்டு வேலை பார்க்கும் ஒரு பெண், மாதத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெறுவதாகச் சொன்னார். அரசுப் பேருந்துச் சலுகை வழங்கியதன் காரணமாக தனக்கு மாதம்தோறும் 850 ரூபாய் மிச்சமாகிறது என்று அவர் சொன்னார். பொருள்களை விற்பனை செய்யக்கூடிய ஒரு பெண், இந்த மாதம் 9 ஆயிரம் ரூபாய் சம்பாதித்ததாகச் சொன்னார். அரசுப் பேருந்துச் சலுகை வழங்கியதன் காரணமாக இந்த மாதம் 900 ரூபாய் மிச்சமானது என்று சொன்னார். இதுதான் இந்த அரசாங்கத்தினுடைய உண்மையான சாதனை என்று நான் சொல்வேன்.

ஒரு நிறுவனத்தில் பராமரிப்புப் பணியாற்றக்கூடிய ஒரு பெண் மாதம் 9 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெறுகிறார். அவருக்கு ஆயிரத்து 70 ரூபாய் மாதம்தோறும் மிச்சம் ஆகிறது. இதுதான் இந்த அரசாங்கத்தினுடைய உண்மையான சாதனையாகும். தினக்கூலித் தொழிலாளியாக ஒரு பெண் இருக்கிறார். அவர் 9 ஆயிரம் ரூபாய் மாத ஊதியம் பெறுகிறார். அவருக்கு மாதம் 750 ரூபாய் மிச்சம் ஆகிறது.

அதாவது ஒவ்வொரு பெண்ணுக்கும் சராசரியாக 600 ரூபாயில் இருந்து 1,200 ரூபாய் வரைக்கும் மிச்சம் ஆகிறது. 30-4-2022 வரை 106 கோடியே 34 இலட்சம் பயணங்களை பெண்கள் இலவசமாக மேற்கொண்டுள்ளார்கள். இதுதான் மகத்தான சாதனை. அவர்கள் வாங்கும் மாத வருமானத்தில் 11 விழுக்காடு மிச்சம் ஆகிறது. அன்றாடக் கூலி வேலை பார்ப்பவர்களுக்கு அவர்களது செலவில் 20 விழுக்காடு மிச்சம் ஆகியிருக்கிறது. இப்படி மிச்சமாகும் பணத்தைச் சேமித்து வைப்பதாக அந்தப் பெண்கள் சொல்கிறார்கள். அதாவது, அன்றாடச் செலவுக்கு இல்லை என்ற நிலையில் இருக்கக்கூடிய பெண்கள் சேமிக்கக் கூடியவர்களாக ஆகியிருக்கிறார்கள். 5 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை சம்பாதிக்கக்கூடிய பெண்களுக்கு வாழ்க்கைச் சுமையைக் குறைக்கக்கூடிய திட்டமாக இது அமைந்திருக்கிறது.

ஒரே ஒரு கையெழுத்தின் மூலமாக கோடிக்கணக்கான பெண்களுடைய வாழ்வில் ஒளியேற்ற முடியும் என்பதை நிரூபித்திருக்கும் ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய திராவிட மாடல் ஆட்சி! ஒரே ஒரு திட்டத்தைப் பற்றித்தான் நான் சொன்னேன். இப்படி ஒவ்வொன்றைப் பற்றியும் நான் விரிவாகச் சொல்ல முடியும்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஒரே ஒரு கையெழுத்தின் காரணமாக, ஆயிரம் பேருக்கு, பல்லாயிரம் பேருக்கு, இலட்சம் பேருக்கு, பல இலட்சம் பேருக்கு, கோடிப் பேருக்கு, பல கோடிப் பேருக்கு நன்மைகள் கிடைத்திருக்கிறது. இவை அனைத்தும் ஏதோ வாய்வார்த்தையாக நான் சொல்லவில்லை.

4,000 ரூபாய் கொரோனா உதவித் தொகை பெற்ற குடும்பங்கள் 2 கோடியே 9 இலட்சத்து 81 ஆயிரத்து 900.

கொரோனா கால நிவாரணமாக 13 மளிகைப் பொருள்களைப் பெற்ற குடும்பங்கள் 2 கோடியே 7 இலட்சத்து 77 ஆயிரத்து 535.

21 விதமான பொங்கல் பொருள்களை பெற்ற குடும்பங்கள் 2 கோடியே 12 இலட்சத்து 17 ஆயிரத்து 756.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் - 10 கோடியே 83 இலட்சத்து 7 ஆயிரத்து 713 பேர்.

கொரோனாவில் இறந்த மருத்துவ முன்களப் பணியாளர்கள் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட நிதி உதவி 79 கோடியே 90 இலட்சம்.

ஆவின் பால் விலையை 3 ரூபாய் குறைத்த காரணத்தால் பயன் பெறுபவர்கள் 1 கோடி பேர்.

புதிதாக குடும்ப அட்டை பெற்றவர்கள் 11 இலட்சத்து 47 ஆயிரத்து 844 பேர்.

புதிதாக மின் இணைப்பினைப் பெற்றவர்கள் 9 இலட்சத்து 91 ஆயிரம் பேர்.

அகவிலைப்படி உயர்வால் பயனடைந்த அரசு ஊழியர்கள் 9 இலட்சத்து 32 ஆயிரம் பேர். அகவிலைப்படி உயர்வால் பயனடைந்த ஓய்வூதியதாரர்கள் 7 இலட்சத்து 15 ஆயிரம் பேர்.

நகைக்கடன் தள்ளுபடி பெற்றவர்கள் 22 இலட்சத்து 20 ஆயிரத்து 109 பேர்.

மகளிர் சுய உதவிக் குழுக்களால் கடன் பெற்றவர்கள் 54 இலட்சத்து 5 ஆயிரத்து 400 பேர்.

மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்ததால், அதன்மூலமாகப் பயன்பெற்றவர்கள் 15 இலட்சத்து 88 ஆயிரத்து 309 பேர்.

புதிதாக உருவாக்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களில் இணைந்தவர்கள் 4 இலட்சத்து 76 ஆயிரத்து 175 பேர்.

மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தால் பயன்பெற்றவர்கள் 93 இலட்சத்து 34 ஆயிரத்து 315 பேர்.

‘நம்மைக் காக்கும் 48’ திட்டத்தால் பயன்பெற்றவர்கள் 39 ஆயிரத்து 542 பேர்.

104 மருத்துவ சேவை மையத்தால் பயன் பெற்றவர்கள் 3 இலட்சத்து 16 ஆயிரம் பேர்.

108 அவசர கால ஊர்தியால் பயன்பெற்றவர்கள் 16 இலட்சத்து 41 ஆயிரம் பேர்.

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டவர்கள் 1 கோடியே 34 இலட்சம் பேர். கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தால் சிகிச்சை பெற்றவர்கள் 3 இலட்சத்து 43 ஆயிரம் பேர். கலைஞரின் வருமுன் காப்போம் முகாம் மூலம் பயன் பெற்றவர்கள் 8 இலட்சத்து 25 ஆயிரம் பேர். நடமாடும் மருத்துவக் குழு மூலம் சிகிச்சை பெற்றவர்கள் 1 கோடியே 54 இலட்சம் பேர்.

124 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் புதிதாக உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் 1 இலட்சத்து 90 ஆயிரம் பேர்.

குறு, சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கொரோனா காலக் கடன் பெற்றவர்கள் 539 பேர்.

தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம்மூலம் ஏற்படுத்தப்பட்ட தொழில்கள் மூலமாக வேலை பெற்றவர்கள் 27 ஆயிரத்து 771 பேர். தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் கடன் பெற்றவர்கள் 124 பேர்.

கொரோனாவால் உயிரிழந்த முன்களப் பணியாளர் குடும்ப நிவாரணத் தொகை பெற்றவர்கள் - 315 பேர். கொரோனாவால் உயிரிழந்த குடும்பத்துக்கான இழப்பீட்டுத் தொகை பெற்றவர்கள் – 55 ஆயிரத்து 743 பேர். கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான இழப்பீடு தொகை பெற்றவர்கள் – 10 ஆயிரத்து 824 பேர். தொற்றால் உயிரிழந்த பத்திரிக்கையாளர் குடும்பத்துக்கான நிதியுதவி பெற்றவர்கள் - 16 பேர்.

1 இலட்சம் ரூபாய் நிதி உதவி பெற்ற எல்லைப் போராட்ட வீரர்கள் - 76 பேர்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இழப்பீடு பெற்ற குடும்பங்கள் – 96 ஆயிரத்து 273 பேர். மழை வெள்ளத்தால் பயிர்கள் பாதிக்கப்பட்டு இழப்பீடு பெற்றவர்கள் – 3 இலட்சத்து 59 ஆயிரம் பேர். உதவித் தொகை பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் – 2 ஆயிரத்து 457 பேர்.

வருவாய்த் துறையால் பட்டா பெற்றவர்கள் - 1 இலட்சத்து 51 ஆயிரம் பேர். இலவச வீட்டு மனைப் பட்டா பெற்றவர்கள் – 24 ஆயிரத்து 883 பேர். இலவச வீட்டு மனை பெற்ற ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் - 53 ஆயிரம் பேர். புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றவர்கள் - 16 ஆயிரம் பேர். நத்தம் திட்டத்தின்கீழ் வீட்டுமனைப் பட்டா பெற்றவர்கள் - 56 ஆயிரம் பேர். இணையவழிப் பட்டா மாறுதல் பெற்றவர்கள் – 19 இலட்சத்து 52 ஆயிரம் பேர். உழவர் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் பயன்பெற்றவர்கள் – 1 இலட்சத்து 24 ஆயிரம் பேர்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, வீட்டு வசதி வாரியம் மூலமாக வீடு பெற்றவர்கள் – 6 ஆயிரத்து 323 பேர்.

மாதம் 3 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை பெறும் கலைஞர்கள் - 1000 பேர்.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தால் வேலை பெற்றவர்கள் - 24 பேர்.

ஒரு கால பூஜை கோவில் பூசாரிகளுக்கான உதவித்தொகை பெற்றவர்கள் – 9 ஆயிரத்து 982 பேர்.

மொட்டை போடும் தொழிலாளர்களுக்கான ஊதியம் பெற்றவர்கள் ஆயிரத்து 744 பேர்.

இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தால் பயன்பெற்ற பிள்ளைகள் - 30 இலட்சம் பேர்.

புதிய கைபேசிச் செயலி மூலம், பள்ளிக்குச் செல்ல முடியாத குழந்தைகள் எனக் கண்டறியப்பட்டு, மீண்டும் பள்ளிக்கு அனுப்பப்பட்டவர்கள் 1 இலட்சத்து 80 ஆயிரம் பேர்.

எண்ணும் எழுத்தும் திட்டத்தால் பயன்பெறும் மாணவர்கள் - 16 இலட்சம் பேர்.

கட்டாயக் கல்வித் திட்டத்தால் சேர்க்கப்பட்டவர்கள் - 56 ஆயிரம் பேர்.

உயர்த்திய 1,500 ரூபாய் மாதாந்திர உதவித் தொகை பெற்ற மாற்றுத் திறனாளிகள் – 2 இலட்சத்து 11 ஆயிரம் பேர். இலவசக் கருவிகள் பெற்ற மாற்றுத்திறனாளிகள் - 37 ஆயிரம் பேர். உதவித்தொகை பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் 23 ஆயிரத்து 326 பேர். தேசிய அடையாள அட்டை பெற்ற மாற்றுத்திறனாளிகள் 4 இலட்சத்து 82 ஆயிரத்து 518 பேர். வேலைவாய்ப்பு பெற்ற மாற்றுத்திறனாளிகள் 553 பேர்.

கருவுற்ற மகளிருக்கு நடந்த சமூகப் பாதுகாப்பு வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கெடுத்தவர்கள் 90 ஆயிரம் பேர். சொந்தத் தொழில் தொடங்க திருநங்கைகளுக்காக வழங்கப்பட்ட மானியத்தைப் பெற்றவர்கள் 141 பேர்.

முதியோர் இல்லங்களில் பயன்பெற்ற முதியோர் - 711 பேர்.

கொரோனாவால் பெற்றோரை இழந்தவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை பெறும் குழந்தைகள் 285 பேர்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் மனு கொடுத்து உதவிகள் பெற்றவர்கள் 2 இலட்சத்து 29 ஆயிரம் பேர். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் நிலப்பட்டா பெற்றவர்கள் 32 ஆயிரத்து 283 பேர். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் ஓய்வூதியம் பெற்றவர்கள் 30 ஆயிரத்து 455 பேர். தனிநபர் வீடு பெற்றவர்கள் 19 ஆயிரத்து 665 பேர். போட்டித் தேர்வு முகாம்களில் பயிற்சி பெறுபவர்கள் 12 ஆயிரம் பேர்.

5 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை பெற்ற மீனவக் குடும்பங்கள்

1 இலட்சத்து 71 ஆயிரம். சிறப்பு ஊக்கத் தொகை பெற்ற மீனவக் குடும்பங்கள் – 1 இலட்சத்து 51 ஆயிரம் பேர். மீனவ சேமிப்பு நிவாரணத் திட்டத்தின்கீழ் தொகை பெற்றவர்கள் 3 இலட்சத்து 45 ஆயிரம் பேர்.

குடிநீர் இணைப்புப் பெற்ற ஊரக வீடுகள் – 14 இலட்சத்து 32 ஆயிரம்.

பயிற்சி பெற்ற மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் 2 இலட்சத்து 42 ஆயிரம் பேர்.

ஊரக சுய வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் பயிற்சி பெற்ற இளைஞர்கள் - 15 ஆயிரம் பேர். சுய தொழில் தொடங்கிய இளைஞர்கள் - 13 ஆயிரம் பேர்.

மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் மூலமாக வேலை பெற்றவர்கள்

32 ஆயிரம் பேர். மிதிவண்டிகள் பெற்ற மாணவ மாணவியர் 4 இலட்சம் பேர். முதியோர் ஓய்வூதியத் திட்டப்படி பணம் பெற்றவர்கள் 3 இலட்சத்து 263 பேர்.

தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்களின் மூலமாக வேலைவாய்ப்பு பெற்றவர்கள் 68 ஆயிரத்து 800 பேர்.

7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டால் பயனடைந்த மருத்துவக் கல்லூரி மாணவ மாணவியர் 437 பேர். 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டால் பயனடைந்த பல் மருத்துவ மாணவ மாணவியர் 107 பேர்.

பயிர்க்கடன் பெற்றவர்கள் 14 இலட்சத்து 83 ஆயிரத்து 961 பேர். கூட்டுறவுக் கடன் பெற்றவர்கள் 48 இலட்சத்து 93 ஆயிரத்து 174 பேர்.

டெல்டா மாவட்டத்தில் குறுவை சாகுபடி தொகுப்பு பெற்றவர்கள்

2 இலட்சத்து 87 ஆயிரத்து 401 பேர்.

காவலர்களுக்கு ஒருநாள் விடுமுறை என்பதால் பயன்பெற்றவர்கள்

63 ஆயிரத்து 77 பேர்.

பல்வேறு நலத்திட்டங்களைப் பெற்ற இலங்கைத் தமிழர்கள் 92 ஆயிரத்து

669 பேர்.

பஞ்சுக்கு ஒரு விழுக்காடு வரியைக் குறைத்த காரணத்தால் பயன் பெற்றவர்கள் 3 ஆயிரத்து 52 பேர்.

மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் - 291 பேர்.

கொரோனா காலத்தில் உதவி பெற்ற புலம்பெயர் தொழிலாளர்கள் –

1.29 இலட்சம் பேர்.

உதவித்தொகை பெற்ற அமைப்பு சாராத் தொழிலாளர்கள் - 1.85 இலட்சம் பேர்.

உரிமை பாதுகாக்கப்பட்டு மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட தொழிலாளர்கள் – 5,235 பேர்.

மீட்கப்பட்ட கொத்தடிமைகள் - 198 பேர்.

நலத்திட்ட உதவி பெற்ற தொழிலாளர்கள் - 50 ஆயிரம் பேர்.

உதவித்தொகை பெற்ற வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்கள் - 55 ஆயிரம் பேர்.

உதவித் தொகை பெற்ற மாற்றுத்திறனாளி பதிவுதாரர்கள் – 14,541 பேர்.

2021 ஆம் ஆண்டு, மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்படுவதற்கு முன்பாக, 67 கோடி ரூபாய் செலவில் 4,213 கி.மீ. நீளத்துக்குத் தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுக் கடைமடை வரை பாசன நீர் செல்வது உறுதிசெய்யப்பட்டது. அதேபோல், நடப்பாண்டில் 80 கோடி ரூபாய் செலவில் 4,694 கி.மீ. நீளத்துக்குத் தூர்வாரும் பணிகள் பருவமழைக்கு முன்னதாக நடந்து வருகின்றன.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நீண்ட பட்டியலைச் சொன்னேன். இவற்றின்மூலம் கோடிக்கணக்கான தமிழக மக்கள் இந்த ஓராண்டு காலத்தில் நேரடியாகப் பயனடைந்திருக்கிறார்கள். இந்த ஆட்சியானது தமிழ்நாட்டின் ஒவ்வொரு மனிதருக்கும் நேரடியாகப் பயன் தரக்கூடிய ஆட்சியாகச் செயல்பட்டு இருக்கிறது என்பதைப் பெருமையோடு நான் இங்கே பதிவு செய்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த ஓராண்டு காலத்தில் மகத்தான முன்னெடுப்புகள் பல செய்யப்பட்டுள்ளன.

75-ஆவது சுதந்திர நாள் நினைவுத்தூண், சென்னையில் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிண்டியில் மாபெரும் மருத்துவமனை, மதுரையில் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகம், சென்னையில் கலைஞர் நினைவு மண்டபம், அரசுப் பணியிடங்களில் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம், வேளாண்மைத் துறைக்காகத் தனி நிதிநிலை அறிக்கை, இல்லம் தேடிக் கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், நான் முதல்வன் திட்டம், இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48, தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப் பதக்கத் தேடல், அறிவுசார் நகரம், சமத்துவபுரங்கள், உழவர் சந்தைகள், அரசு முன் மாதிரிப் பள்ளிகள், பத்திரிகையாளர் நலவாரியம், எழுத்தாளர்களுக்குக் கனவு இல்லம், இலக்கிய மாமணி விருது, கலைஞர் எழுதுகோல் விருது, பேராசிரியர் அன்பழகனார் பெயரில் பள்ளிகள் மேம்பாட்டுத் திட்டம், பெருந்தலைவர் காமராசர் பெயரில் கல்லூரிகள் மேம்பாட்டுத் திட்டம், முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர், பெரியார் பிறந்தநாள் ‘சமூகநீதி நாள்’, அம்பேத்கார் பிறந்தநாள் ‘சமத்துவநாள்’, வள்ளலார் பிறந்தநாள் ‘தனிப்பெரும் கருணை நாள்’, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், அன்னைத் தமிழில் அர்ச்சனை, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர், மாவட்டம் தோறும் புத்தகச் சந்தைகள், புத்தகப் பூங்கா அமைக்க நிரந்தர இடம், கோயில் நிலங்கள் மீட்பு, 10 கலை அறிவியல் கல்லூரிகள், 11 புதிய ஐ.டி.ஐ நிறுவனங்கள், காவல் ஆணையம், பொருநை அருங்காட்சியகம், மீண்டும் மஞ்சப்பை முன்னெடுப்பு - இப்படி ஏராளமான திட்டங்களை சாதித்து வருகிறது தமிழ்நாடு அரசு.

இவை அனைத்தையும், அதன் உள்ளார்ந்த நோக்கம் சிதையாமல் அமல்படுத்திக் காட்டினோம் என்றால் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக உயரும். அப்படி உயர்வதற்கு நான் ஒரு கருவியாகப் பயன்பட்டேன் என்பதுதான் எனக்கு இருக்கக்கூடிய மகிழ்ச்சியாகும்.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்தத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தையும் ஐந்தாண்டு காலத்தில் நிறைவேற்றுவோம் என்பதுதான் வாக்குறுதி. ஆனால் இந்த ஓராண்டு காலத்தில் 60 முதல் 70 விழுக்காடு நிறைவேற்றி இருக்கிறோம் என்பதை அழுத்தம் திருத்தமாக நான் சொல்ல விரும்புகிறேன்.

இவை அனைத்தையும் பட்டியல் போடுவதற்கு காலநேரம் போதாது. 'புதிதாக இவர்கள் எதையும் செய்யவில்லை, ஏற்கனவே இருந்ததைத்தான் பெயர் மாற்றி இருக்கிறீர்கள்' என்று சிலர் விமர்சிக்கும்போது சிரிப்பாகத்தான் இருக்கிறது. இவர்கள் தெரிந்து பேசுகிறார்களா, தெரியாமல் பேசுகிறார்களா என்பது புரியவில்லை.

நான் கேட்கிறேன்; மகளிருக்குக் கட்டணமில்லா பேருந்து வசதி என்பது ஏற்கனவே இருந்ததா? கொரோனா கால நிவாரணமாக 4,000 ரூபாய் தரப்பட்டதா? ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டதா? பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டதா? இலங்கைத் தமிழர்களுக்கு 317 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டங்கள் தீட்டப்பட்டிருந்ததா? பெரியார் பிறந்த நாள் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்பட்டதா? அம்பேத்கர் பிறந்த நாள் சமத்துவ நாளாகக் கொண்டாடப்பட்டதா?

நெசவாளர்கள் கோரிக்கையை ஏற்று பஞ்சுக்கு ஒரு விழுக்காடு வரி ரத்து செய்யப்பட்டதா? தமிழ்நாடு ஆதி திராவிடர் பழங்குடியினர் நல ஆணையம் உருவாக்கப்பட்டிருந்ததா? கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதா? மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதா? மக்களைத் தேடி மருத்துவம் சென்றதா? இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டதா? நம்மைக் காக்கும் 48 திட்டம் இருந்ததா? ஒலி) தமிழ்வழியில் படித்தவர்க்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை இருந்ததா? கல்லூரிகளை நோக்கி வரும் அரசுப் பள்ளி மாணவியர்க்கு 1,000 ரூபாய் தரப்பட்டதா? இப்படி என்னால் கேட்டுக்கொண்டே இருக்க முடியும்.

நாங்கள் சொன்னதை செய்திருக்கிறோம்; சொல்லாததையும் இந்த ஓராண்டு காலத்தில் செய்திருக்கிறோம். எல்லா அரசுக்கும் ஒரு நோக்கம், ஒரு பாதை இருக்கும். இந்த அரசுக்கும் ஒரு நோக்கம், ஒரு பாதை இருக்கிறது. அதற்கு ’திராவிட மாடல்’ என்று நான் பெயர் சூட்டி இருக்கிறேன்.

'எல்லார்க்கும் எல்லாம்' என்பதுதான் இதனுடைய உள்ளடக்கம். “சமூகத்தில் அடக்கி ஒடுக்கப்பட்டு இருக்கிறானே, அவனை உயர்த்துவதுதான் எனது நோக்கம்” என்றார் தந்தை பெரியார் அவர்கள். “நான் சாமானியர்களுக்காக உழைக்கும் சாமானியன்” என்றார் பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்கள். “நான் அடக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக எந்நாளும் உழைப்பேன்” என்றார் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். இந்த மூவரின் சிந்தனைகளையும் உள்ளத்தில் வைத்து செயல்படுவதால்தான், இந்த ஆட்சியை ‘திராவிட மாடல்’ என்று நாங்கள் அழுத்தந்திருத்தமாகக் கூறிக்கொண்டே இருக்கிறோம்.

‘திராவிட மாடல்’ எது என்று கேட்டால், அது என்னுடைய இதயத்தில் மட்டுமல்ல; தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் முன்னேற வேண்டும் என்ற முற்போக்கான எண்ணம் கொண்ட அனைவரது உள்ளத்திலும் உள்ளது. இந்தக் கூட்டு எண்ணம்தான் அரசின் இதயத்துடிப்பாக விளங்குகிறது.

இந்த அரசாங்கத்தின் இதயம் என்பது, கொரோனா காரணமாக இடையில் நின்றுபோன கல்வியை மீண்டும் பெற்றுக்கொண்ட 1 இலட்சத்து 73 ஆயிரத்து 792 பள்ளிப் பிள்ளைகளின் இதயத்தில் இருக்கிறது. இந்த அரசாங்கத்தினுடைய இதயம் என்பது, ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தால் பயன்பெற்ற 95 இலட்சம் பேரின் வாழ்க்கையோடு கலந்திருக்கிறது. இந்த அரசாங்கத்தின் இதயம் என்பது, 'நம்மைக் காக்கும் 48' திட்டத்தின் மூலமாக உயிர் பெற்ற 39 ஆயிரம் பேரின் மூச்சில் இருக்கிறது.

‘கடலில் கால் நனைக்க முடியவில்லையே’ என்று ஏங்கித் தவித்துக் கொண்டிருந்த மாற்றுத் திறனாளிகளின் ஏக்கம் போக்க, கடல் வரைக்கும் மரப்பாதை அமைத்தோமே! அதனால், கால் நனைத்து மகிழும் மாற்றுத் திறனாளிகளின் மனதில், இதயத்தில் இந்த அரசு வாழ்ந்து கொண்டிருக்கிறது.

இந்த அரசாங்கத்தின் இதயம் என்பது, நெஞ்சில் ஏக்கத்துடனும், முகத்தில் சோகத்துடனும் வாழ்ந்து வந்த முகாம்வாழ் இலங்கைத் தமிழ் மக்களின் புதிய குடியிருப்புகளில் இருக்கிறது.

தஞ்சை மாவட்டம், களிமேடு கிராமத்து கோயில் திருவிழாவில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் 11 பேர் மரணம் அடைந்தார்கள். உடனடியாக நான் அங்கு சென்றேன். ‘செத்தவங்களோட சொந்தக்காரங்க வந்ததைப்போல முதலமைச்சர் உடனடியாக வந்துவிட்டார்’ என்று அந்த ஊர் மக்கள் சொன்ன சொல்லில் இந்த ஆட்சியினுடைய இதயம் இருக்கிறது.

இந்த அரசாங்கத்தின் இதயம் என்பது, மிகக் கொடூரமான குண்டுவீச்சுக்கு மத்தியில், மரண பயத்தில் வாழ்ந்து வந்த உக்ரைன் நாட்டுக்கு படிக்கச் சென்ற தமிழ்நாட்டு மாணவர்களை மீட்டு வந்ததில் இருக்கிறது.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 43 ஆண்டுகள் இல்லாத வகையில் இந்த ஆண்டு நெல் விளைச்சல் அதிகமாகி, பூமி செழித்தது அல்லவா? மண்ணைச் செழிக்க வைத்த மகிழ்ச்சியில் இருக்கிறது இந்த அரசாங்கத்தின் இதயம்.

மாமல்லபுரத்தில் ஒரு நரிக்குறவப் பெண்ணின் மனதில் நம்பிக்கையை விதைத்ததில், அவரது சுயமரியாதையை நிலைநாட்டியதில் இந்த ஆட்சியினுடைய இதயம் இருக்கிறது.

ஆவடியில் இருளர் இன மக்கள் இல்லத்திற்குச் சென்றபோது அவர்கள் கொடுத்த கறிக்குழம்பு காரமாக இருந்தது. ‘இவ்வளவு காரமாகவா சாப்பிடுகிறீர்கள்?’ என்று நான் கேட்டேன். ‘ஆமாம், இவ்வளவு காரமாக சாப்பிடும் காரணத்தினால்தான் எங்களுக்குக் கொரோனாவே வரவில்லை’ என்று அந்த மக்கள் சொன்னார்கள். அது அறிவியல் பூர்வமானதா என்பது வேறு. ஆனால், அந்த உணவின் காரத்தில் அவர்களது அன்பு வெளிப்பட்டது. இந்த அரசும் காரமான அரசுதான். காரம் எப்படி நோய்களில் இருந்து தங்களைக் காக்கும் என்று அந்த மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்களோ, அப்படி சமூக நோய்களிலிருந்து காப்பாற்றும் - மக்கள் நம்பும் காரமான அரசுதான் நம்முடைய கழக அரசு.

அவர்கள் வீட்டுக்கு நான் சென்றபோதுகூட தனக்கென எந்த வாய்ப்பு வசதியும் இல்லாத அந்தப் பள்ளி மாணவி, தன்னுடைய குடும்பத்திற்கு எதுவும் கேட்கவில்லை. பக்கத்து வீட்டில், காது கேளாத ஒரு பையனுக்கு உதவி செய்யுங்கள் என்றுதான் கேட்டார். நம்முடைய மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர் திரு. நாசர் அவர்கள் அந்தக் குழந்தைக்கு தொடர்ந்து உதவி செய்து கொண்டிருக்கிறார். இத்தகைய விளிம்பு நிலை மக்களுக்குச் செய்த உதவிகளில்தான் இந்த ஆட்சியினுடைய இதயம் இருப்பதாக நான் நினைக்கிறேன்.

’’பகுத்தறிவும், பாகற்காயும் கசக்கும். ஆனால், அவை இரண்டும் உடலுக்கு மிக மிக நல்லது’’ என்றார் தலைவர் கலைஞர் அவர்கள். அத்தகைய காலத்தின் தேவையான ’திராவிட மாடல்’ அரசுதான் இது. அரசு விழாக்களில் அல்லது சாலையில் போகின்றபோது, நிகழ்ச்சிகளுக்குப் போகின்றபோது மக்கள் என்னிடம் மனு கொடுக்கும்போது, சில பேர் சொல்வார்கள். 'எத்தனையோ தடவை மனு கொடுத்துள்ளேன், ஆனால் உங்கள் கையில் கொடுக்கும்போது நிறைவேறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது' என்று சாதாரண, சாமானிய மக்கள் சொல்லும்போது - அவர்கள் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கைதான் இந்த ஆட்சிக்கு கிடைத்திருக்கக்கூடிய நற்சான்று, நற்சான்று, நற்சான்று என நான் சொல்கிறேன்.

அரசியலில் மிகச் சிறு வயதிலிருந்தே இருப்பவன் நான். மக்கள் கூட்டத்தைப் பார்த்துப் பார்த்து எனக்குப் பழகிவிட்டது. மக்கள் கூட்டத்தைப் பார்க்கும்போது அவர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை அவர்களது முகம் காட்டிக் கொடுத்துவிடும். இந்த ஓராண்டு காலத்தில் மக்களை நோக்கி நான் செல்லும்போது, அலையைப்போல என்னை நோக்கி மக்கள் வருவதை நான் பார்க்கிறேன். அவர்களது முக மலர்ச்சி என்பது நாட்டில் ஏற்பட்டுள்ள மலர்ச்சியாகத்தான் இருக்கிறது. இதுதான் இந்த ஓராண்டு காலத்தில் நாம் செய்திருக்கக்கூடிய மகத்தான சாதனை.

என்னுடைய கவலையெல்லாம், என்னுடைய பயமெல்லாம் இந்த நம்பிக்கையை எப்போதும் நாம் காப்பாற்ற வேண்டும் என்பதுதான். மக்கள் ஆதரவு பெருகப் பெருக பொறுப்பும், கடமையும் கூடுகிறது. எதிர்பார்ப்பு அதிகம் ஆகிறது. அதனைக் காப்பாற்ற நாம் கடினமாக உழைத்தாக வேண்டும், உழைக்க வேண்டும். அதிகமாக உழைக்க நான் தயாராக இருக்கிறேன். நான் மட்டுமல்ல, இந்த அமைச்சரவையே இன்னும் அதிகமாக உழைக்கத் தயாராக இருக்கிறது.

ஓராண்டு முடிந்து, இரண்டாவது ஆண்டு தொடங்கும் இந்த மகிழ்ச்சிக்குரிய நாளில் மக்கள் மனம் மகிழும் சில அறிவிப்புகளை நான் வெளியிட இருக்கிறேன். சில மிக முக்கியமான ஐந்து பெரும் திட்டங்களை இந்த மாமன்றத்திற்கு அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

முதலாவது திட்டம். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இனிமேல் காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும். நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுகிறார்கள். இதனால் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்கு கிடைத்திருக்கிறது. பள்ளிகள் மிகத் தூரமாக இருப்பது மட்டுமல்ல, சிலருடைய குடும்ப சூழலும் இதற்குக் காரணமாக இருக்கிறது. இதனை மனதில் வைத்துக் கொண்டு இந்தத் திட்டத்தை நாம் தீட்டி இருக்கிறோம். முதற்கட்டமாக சில மாநகராட்சி, நகராட்சிகளிலும், தொலைதூரக் கிராமங்களிலும் இத்திட்டம் தொடங்கப்படவுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும். இதனை உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக வழங்குவோம். படிப்படியாக அனைத்துப் பகுதிகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

இரண்டாவது திட்டமானது, ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆட்சிக்கு வந்த பிறகு எடுக்கப்பட்ட ஒரு புள்ளிவிவரத்தில் கிடைத்த தகவல் மிக மிக மன வேதனையைத் தருவதாக இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைப் பரிசோதித்ததில் அவர்களில் பெரும்பாலானவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களாக இருந்தார்கள். வயதுக்கேற்ற எடையும் இல்லை; வயதுக்கேற்ற உயரமும் இல்லை. மிக, மிக, மெலிந்து இருக்கின்றார்கள். உடலில் உறுதி இல்லாவிட்டால் அவர்களது எதிர்காலம் என்பது கேள்விக்குறியாக ஆகிவிடும் என்பதை உணர்ந்து இதற்கென தனியாக ஒரு திட்டத்தைத் தீட்ட நான் ஆலோசனை கூறினேன்.

6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை நலமுடன் வளர்த்தெடுக்கும் நோக்கத்துடன் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பரந்துபட்ட அளவில் குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்ய இருக்கிறோம். மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு மருத்துவ உதவியும், ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டம் ஒன்றும் ஏற்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.

இத்திட்டத்தின்கீழ், குழந்தைகள் பயனடைவார்கள். தமிழகக் குழந்தைகள் அனைவரையும் திடமான, ஊட்டச்சத்துக் குறைபாடில்லாதவர்களாக மாற்றுவதற்கான திட்டமாக இதனை நாம் வடிவமைத்துள்ளோம்.

மூன்றாவது திட்டம் ‘தகைசால் பள்ளிகள்’ என்ற திட்டம்! ‘Schools of Excellence’ என்று இதற்குப் பெயர். சென்ற ஏப்ரல் மாதம் டெல்லி சென்ற நான், அங்கு டெல்லி அரசின் சார்பில் நடத்தப்படும் மாதிரிப் பள்ளியைப் பார்வையிட்டேன். அப்போது டெல்லியினுடைய முதலமைச்சரே அழைத்துக்கொண்டு சென்று அதையெல்லாம் விளக்கிச் சொன்னார்கள். இதேபோல் தமிழ்நாட்டிலும் உருவாக்கப்படும் என்று அங்கேயே நான் சொல்லிவிட்டு வந்தேன். அந்த அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் தகைசால் பள்ளிகள் உருவாக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

முதலில், முதற்கட்டமாக 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25 மாநகராட்சி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகள் தகைசால் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும். இப்பள்ளிகளின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் சீரமைக்கப்படும். அனைத்துக் கட்டடங்களும் நவீனமயமாக்கப்படும். மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கக்கூடிய அதேநேரத்தில், கலை, இலக்கியம், இசை, நடனம், செய்முறை அறிவியல், விளையாட்டு, கைவினைச் செயல்பாடுகள் என அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய கட்டமைப்பு அந்தப் பள்ளியில் உருவாக்கப்படும். மாணவர்களின் பல்வகைத் திறன்களையும் வெளிக்கொண்டு வருவோம். படிப்புடன் சேர்ந்து அவர்களது தனித்திறன்கள் அனைத்தும் வளர்த்தெடுக்கப்படும். அவர்களுடைய ஆளுமைத் திறன் அனைத்தும் மேம்படுத்தப்படும். இந்தவகைப் பள்ளிகளைத் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் படிப்படியாக விரிவுபடுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதி அளிக்கிறேன்.

நான்காவதாக அறிவிக்கக்கூடிய திட்டமானது நகர்ப்புர மருத்துவ நிலையங்களை அமைக்கும் திட்டம். கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் இருப்பதைப்போல், நகர்ப்புரங்களில் இந்த மருத்துவ நிலையங்கள் அமைய இருக்கின்றன. நகர்ப்புர மக்கள் அரசுப் பொது மருத்துவமனையை நோக்கி வரும்போது மருத்துவமனைகளில் கூட்டம் அதிகமாகி வருகிறது. இந்நிலையை மாற்றி, ஒருங்கிணைந்த, தரமான மருத்துவ சேவைகளை மக்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே வழங்கிடும் நோக்கில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட 21 மாநகராட்சிகள் மற்றும் 63 நகராட்சிப் பகுதிகளில் 708 நகர்ப்புர மருத்துவ நிலையங்கள் புதியதாக ஏற்படுத்தப்படும். இந்த மருத்துவ நிலையங்களுக்கு 180 கோடியே 45 இலட்சம் ரூபாய் செலவில் சொந்தக் கட்டடங்கள் கட்டப்படும். இந்த 708 புதிய நகர்ப்புர மருத்துவ நிலையங்களிலும், காலை 8 மணி முதல் 11 மணி வரையும் மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் இரு வேளைகளிலும் புறநோயாளிகள் சேவைகள் செயல்படுத்தப்படும்.

இந்த மையங்களில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருந்தாளுநர் மற்றும் உதவியாளர் ஆகிய பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்தத் திட்டத்தின் மூலமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புர மருத்துவ நிலையங்களிலும் காலையும் மாலையும் ஏழை எளியோருக்கு இலவச மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்து, 2030 ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் நல்வாழ்வு எனும் இலக்கினை தமிழ்நாடு எட்டும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஐந்தாவது திட்டம் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டம். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக நான் பல்வேறு ஊர்களுக்குச் சென்றேன்; மக்களைச் சந்தித்தேன்; அவர்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றேன் என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். அந்த மனுக்களை ஒரு பெட்டியில் வைத்து பூட்டினோம். வெற்றி பெற்றதும் திறப்பேன் என்று வாக்குறுதி அளித்தேன். வெற்றி பெற்றோம். இந்த மனுக்களை பரிசீலிப்பதற்காகவே 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற தனித் துறை உருவாக்கப்பட்டு மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளன.

இது மக்களுக்குப் பெரும்பயனைத் தந்துள்ள காரணத்தால், இதே திட்டத்தை மேலும் விரிவுபடுத்தத் திட்டமிட்டிருக்கிறோம். இதனடிப்படையில் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டமானது, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நடைமுறைக்கு வரப்போகிறது என்பதை இந்த மாமன்றத்திற்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். 234 தொகுதிகளிலும் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத அவசியத் தேவைகள் குறித்து அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து பரிசீலனை செய்வார்கள்.

அடுத்து வரும் நிதி ஆண்டுகளில் அவற்றை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை அடிப்படையில் நிதி ஒதுக்கப்படும். ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும், தங்களுடைய தொகுதி மக்களுடைய தேவைகளை அறிந்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் 10 முக்கியத் திட்டங்கள் குறித்த பட்டியலை நீங்கள் அளிக்க வேண்டும். அந்தப் பட்டியலில் இருக்கக்கூடிய மிக முக்கியமான திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு, தற்போது நடைமுறையில் உள்ள அரசுத் திட்டங்களின்கீழ் செயல்படுத்த இயலாத திட்டங்களை, முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றுவதற்கு இந்த அரசு முடிவெடுத்துள்ளது. இந்தப் பணிகளுக்காக மட்டும் இந்த ஆண்டு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

இந்தத் திட்டம் நேரடியாக, என்னுடைய கண்காணிப்பிலே நடைபெற போகிறது. எனது கொளத்தூர் தொகுதியாக இருந்தாலும், எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இன்றைக்கு வரவில்லை; இருந்தாலும், அவருக்கு இங்கே நான் சொல்ல விரும்புகிறேன், எதிர்க்கட்சித் தலைவர் அவர்களின் எடப்பாடி தொகுதியாக இருந்தாலும், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அவர்களின் போடி தொகுதியாக இருந்தாலும், அனைத்துத் தொகுதிகளுக்கும் சமமாக நடத்தப்படக்கூடிய திட்டங்கள் தீட்டப்படும் என்று நான் உறுதியளிக்கிறேன்.

ஆட்சிப் பொறுப்புக்கு வந்து இரண்டாம் ஆண்டு தொடங்கக்கூடிய இந்நாளில் இத்தகைய ஐந்து மாபெரும் மகத்தான திட்டங்களை அறிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தேர்தலுக்கு முன்னதாக திருச்சியில் நம்முடைய நேரு அவர்கள் முன்னின்று நடத்திய மிகப் பெரிய தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம். அந்தக் கூட்டத்தில் நான் நிறைவாக பேசுகிறபோது ஏழு முக்கியமான வாக்குறுதிகளை நான் பிரகடனப்படுத்தினேன்.

வளரும் வாய்ப்புகள்-வளமான தமிழ்நாடு! மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயி! குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர்! அனைவருக்கும் உயர்தரக் கல்வி மற்றும் உயர்தர மருத்துவம்! எழில்மிகு மாநகரங்களின் மாநிலம்! உயர்தர ஊரகக் கட்டமைப்பு, உயர்ந்த வாழ்க்கைத் தரம்! அனைவருக்கும் அனைத்துமான தமிழகம்! இந்த ஏழு வாக்குறுதிகளை மையமாகக் கொண்டு இந்த ஐந்து திட்டங்களும் தீட்டப்பட்டிருக்கின்றன. நான் கொடுத்த வாக்குறுதிகளை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன். இந்த ஓராண்டு காலச் சாதனைகள் என்பவை தனிப்பட்ட என்னுடைய சாதனைகள் அல்ல; இவை அனைத்தும் தனிப்பட்ட என்னால் மட்டும் செய்யப்பட்டது என்று நான் சொல்லமாட்டேன். நான் அப்படி வளர்க்கப்படவில்லை. என்னுடைய அமைச்சரவைத் தோழர்கள் துணையோடு செய்யப்பட்டிருக்கக்கூடிய சாதனைகளாகும். அவர்களின் கரங்கள் இணைந்ததால், கிடைத்த பலத்தால், அடைந்த வெற்றியாகும் இது.

இந்த அவைக்கு மட்டுமல்ல, அரசுக்கும் முன்னவராக இருந்து என்னை வழிநடத்தி கொண்டிருக்கிறார் என்னுடைய ஆரூயிர் அண்ணன் திரு. துரைமுருகன் அவர்கள். அவை முன்னவரும், நம்முடைய மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சருமான அண்ணன் திரு. துரைமுருகன் அவர்களுக்கு நான் தனிப்பட்ட முறையிலே இந்த அவையின் மூலமாக நன்றிகூற கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்த அரசுக்கு ஆறு மாபெரும் இலக்குகள் இருக்கின்றன. உள்கட்டமைப்பில் உலகத் தரம்! கல்வி, அறிவாற்றலில் பேராளுமைத் திறம்! அன்றாடத் தேவைகளில் மக்களுக்கு மனநிறைவு! தொய்வு இல்லாத தொழில் வளர்ச்சி! அனைத்து சமூகத்தவர்களுக்குமான மேம்பாடு! நிதி, சட்டம், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை! ஆகிய ஆறு இலக்குகளைக் கொண்டு இந்த அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது.

இந்த இலக்குகளை அடைய என்னோடு தோளோடு தோள் நின்று பணியாற்றக்கூடிய நம்முடைய மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அண்ணன் திரு. துரைமுருகன், திரு. கே.என். நேரு, திரு. இ. பெரியசாமி, முனைவர் க. பொன்முடி, திரு. எ.வ. வேலு, திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், திரு. K.K.S.S.R. ராமச்சந்திரன், திரு. தங்கம் தென்னரசு, திரு. எஸ். ரகுபதி, திரு. சு. முத்துசாமி, திரு. கே.ஆர். பெரியகருப்பன், திரு. தா.மோ. அன்பரசன், திரு. மு.பெ. சாமிநாதன், திருமதி பி. கீதா ஜீவன், திரு. அனிதா R. ராதாகிருஷ்ணன், திரு. R.S. ராஜகண்ணப்பன், திரு. கா. ராமசந்திரன், திரு. அர. சக்கரபாணி, திரு. V. செந்தில்பாலாஜி, திரு. ஆர். காந்தி, திரு. மா. சுப்பிரமணியன், திரு. பி. மூர்த்தி, திரு. எஸ்.எஸ். சிவசங்கர், திரு. பி.கே. சேகர்பாபு, முனைவர் பழனிவேல் தியாக ராஜன், திரு. ஆவடி சா.மு. நாசர், திரு. செஞ்சி K.S. மஸ்தான், திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திரு. சிவ.வி. மெய்யநாதன், திரு. சி.வி. கணேசன், திரு. த. மனோ தங்கராஜ், திரு. மா. மதிவேந்தன் மற்றும் திருமதி என். கயல்விழி செல்வராஜ் என அனைவரும் தங்களை முழுமையாக ஒப்படைத்துக்கொண்டு எனக்கு துணை நின்று பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் நன்றி.

துறை வாரியாக இவர்கள் தீட்டி செயல்படுத்தி வரக்கூடிய திட்டங்கள் அனைத்தும் உன்னதமானவை. தமிழ்நாட்டின் மேன்மைக்கும், உயர்வுக்கும் அடித்தளமாக அமையக்கூடியவை. இவர்களுக்கு உறுதுணையாக செயல்படக்கூடிய நம்முடைய தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அனைவருக்கும் எனது நன்றியைத் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ஓராண்டு காலத்தில் அனைத்தையும் சாதித்துவிட்டேன் என்று நான் சொல்லிக் கொள்ளவில்லை. அப்படி சொல்லிக் கொள்ளவும் மாட்டேன். ஓராண்டு காலத்திற்குள் செய்யக்கூடியதைவிட அதிகமாகச் செய்துவிட்டோம் என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும். நாம் போகவேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது என்பதையும் நான் மனதார ஒப்புக் கொள்கிறேன். இன்னும் வேகமாகச் செல்ல முடியாததற்கு தடையாக இருப்பவை நிதிநிலை நெருக்கடியும், ஒன்றிய அரசாங்கத்தின் சில நிலைப்பாடுகளும். இந்த இரண்டு தடைகள் மட்டும் இல்லாமல் போயிருக்குமானால், இன்னும் பல திட்டங்களை நம்மால் தீட்டி இருக்க முடியும்.

தடைகள் இல்லாத வாழ்க்கை ஏது? எனது வாழ்க்கையில் நான் சந்தித்த தடைகள்தான் என்னைக் கூர்தீட்டி இருக்கிறது, பக்குவப்படுத்தி இருக்கிறது. உறுதியானவனாக என்னை இங்கே நிற்க வைத்திருக்கிறது. மனிதர்களை அடையாளம் காட்டி இருக்கிறது. எனவே இதுபோன்ற தடைகள் காலம் காலமாக இருப்பவைதான். இந்தத் தடைகளை மட்டுமே பேசிக்கொண்டு இருக்கக்கூடிய எதிர்மறைச் சிந்தனை கொண்டவனாக இருக்கக்கூடியவன் அல்ல நான். இந்தத் தடைகளைத் தகர்த்து வெற்றி பெற வேண்டும் என்ற நேர்மறைச் சிந்தனைக் கொண்டவன் நான். அத்தகைய நேர்மறையான சிந்தனைகள்தான் இந்த ஓராண்டு கால வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணம் என்று நான் மனதார நம்புகிறேன்.

மற்றவர்களின் பலவீனத்தை நம்பி அரசியல் செய்யக்கூடியவன் அல்ல நான். என் பலத்தை நம்பியே நான் அரசியல் செய்ய நினைக்கிறேன். எனது பலம் என்பது எனது இலக்கில் இருக்கிறது. இந்த இலக்கை எப்படியும் நான் அடைவேன்.

''இந்தியாவைப் போல குறிக்கோள் உள்ள நாடு உலகத்தில் இல்லை. அதேநேரத்தில் குறிக்கோளுக்கும் செயல்முறைக்கும் இடையில் பெரிய அகலம் உள்ள நாடும் உலகத்தில் இல்லை'' என்று இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் குறிப்பிட்டு காட்டியிருக்கிறார்கள். அப்படி இருக்கக் கூடாது என்பதே என்னுடைய குறிக்கோள். குறிக்கோளும் செயல்முறையும் இணைந்து பயணிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதனால்தான் நான் செய்யக்கூடிய அறிவிப்புகளைச் செயல்படுத்த அதற்கான கால அவகாசத்தைக் குறிப்பிட்டு ‘டேஷ்போர்டு’ ஒன்றை உருவாக்கி வைத்திருக்கிறேன். இந்தத் திட்டமிடுதல் இருந்தால் போதும் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தி முடித்துக் காட்டலாம்.

எனவே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றிக் காட்டுவேன் என்பதை இந்த மாமன்றத்தில் உறுதியாகச் சொல்கிறேன்.

என்னுடைய இலக்குக்கு ‘திராவிட மாடல்’ என்று பெயர். அந்த இலக்கை அடைய தந்தை பெரியாரின் கொள்கை வலிமையும், பேரறிஞர் அண்ணாவின் மானுடப்பற்றும், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் விடாமுயற்சியும் இனமானப் பேராசிரியரின் பொறுமையும் கொண்டு நான் எந்நாளும் உழைப்பேன்! உழைப்பேன்! உழைப்பேன்! தமிழ்நாட்டைக் காப்பேன்! காப்பேன்! காப்பேன்!

இந்த முதலாண்டு முத்தான தொடக்கமாக அமைந்திருக்கிறது. இரண்டாமாண்டு இணையற்ற ஆண்டாக இருக்கப் போகிறது. இனி எந்நாளும் கழக ஆட்சி கலைஞரின் ஆட்சி என்பதை வரலாற்றில் பதிய வைக்க எனது ஆட்சிப் பயணத்தை உங்கள் அனைவரது வாழ்த்துகளுடன் தொடர்கிறேன். வாருங்கள் நாம் அனைவரும் இணைந்து நமக்கான தமிழ்நாட்டை அமைப்போம்.

“வாழ்க தமிழ்! வெல்க தமிழ்நாடு!” நன்றி! வணக்கம்

Related Stories

Related Stories