தமிழ்நாடு

“தமிழ்நாட்டை தலை நிமிர வைக்க ஒவ்வொரு நாளும் உழைத்து வருகிறேன்..இது திராவிட மாடல் அரசு”: முதல்வர் பேச்சு

தமிழ்நாட்டைத் தலைநிமிர வைக்கத்தான் ஒவ்வொரு நாளும் நான் உழைத்துக் கொண்டிருக்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“தமிழ்நாட்டை தலை நிமிர வைக்க ஒவ்வொரு நாளும் உழைத்து வருகிறேன்..இது திராவிட மாடல் அரசு”: முதல்வர் பேச்சு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அதன் விவரம் வருமாறு:-

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் திறப்பு விழா நிகழ்ச்சிகள், திட்டப்பணிகளை தொடங்கி வைக்கக்கூடிய அடிக்கல் நாட்டு விழாக்கள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து எழுச்சியோடு நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய இந்த விழாவிற்கு முன்னிலை பொறுப்பு ஏற்று இதை உணர்ச்சியோடு, உத்வேகத்தோடு நடத்திக் கொண்டிருக்கக்கூடியகூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களே!

நிகழ்ச்சியிலே பங்கேற்று சிறப்பித்துக் கொண்டிருக்கக்கூடிய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு அவர்களே! வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்களே!

இந்த மாவட்டத்தோடு ஒன்றி நம்முடைய கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களுக்கு உற்ற துணையாக இருந்து அது கட்சிப் பணியாக இருந்தாலும், ஆட்சிப்பணியாக இருந்தாலும் இரண்டிலும் முத்திரை பதித்துக் கொண்டு இருக்கக்கூடிய உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர. சக்கரபாணி அவர்களே!

திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி அவர்களே! கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் அன்பிற்கினிய சகோதரி செல்வி ஜோதிமணி அவர்களே! திண்டுக்கல் மாநகராட்சியின் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் அவர்களே!சட்டப்பேரவை உறுப்பினர் காந்திராஜன் அவர்களே! பழனி சட்டமன்ற உறுப்பினர் மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் அவர்களே!

தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் லியோனி அவர்களே!துவக்கத்தில் அனைவரையும் வரவேற்று மகிழ்ந்திருக்கக்கூடிய மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் எஸ். விசாகன், அவர்களே! நிறைவாக நன்றியுரை ஆற்றவிருக்கக்கூடிய வருவாய் அலுவலர் லதா அவர்களே!

வருகை தந்திருக்கக்கூடிய சட்டமன்ற, நாடாளுமன்ற முன்னாள், இந்நாள் உறுப்பினர்களே! உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளே! அரசு அதிகாரிகளே! அரசு அலுவலர்களே!அரசினுடைய நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக வருகை தந்திருக்கக்கூடிய பயனாளிப் பெருமக்களே! த்திரிகை மற்றும் ஊடகத் துறையைச் சார்ந்திருக்கக்கூடிய நண்பர்களே! அருமை பெரியோர்களே! அன்பிற்கினிய தாய்மார்களே!

என் உயிரோடு கலந்திருக்கக்கூடிய தலைவர் கலைஞர் அவர்களின் உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புக்களே!உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.

தென்னவன் சிறுமலை என்று சிலப்பதிகாரக் காப்பியத்தில் இளங்கோவடிகளால் போற்றப்பட்டதுதான் இந்தத் திண்டுக்கல். விடுதலைப் போராட்ட வரலாற்றின் பக்கங்களில் சிறப்பிடம் கொண்ட மண்தான் இந்தத் திண்டுக்கல் மண். இத்தகைய பெருமைக்குரிய இந்த மாவட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய இந்த அரசு விழாவில் கலந்து கொண்டு உங்களை எல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நம்முடைய மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்களும், மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர் அவர்களும் அதேபோல இந்த மாவட்டத்திற்குட்பட்டு இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் ஒருங்கிணைந்து இதை மிகப் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்து, இது ஒரு வெற்றி விழாவாக, வெற்றி விழா மாநாடு போல் இதை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நம்முடைய ஐ.பெரியசாமி அவர்களைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், வானமே வாழ்த்தக்கூடிய மழை கொட்டிய நேரத்தில், மண்டல மாநாட்டைப் பற்றி தலைவர் கலைஞர் அவர்கள் எழுதும்போது, அவர் குறிப்பிட்டுச் சொன்னார். திண்டுக்கல் திமுக-வினுடைய இலட்சிய வைரக்கல் என்று குறிப்பிட்டார். அந்த திண்டுக்கல்லில் திமுகவுக்கு ஒரு வைரக்கல் அல்ல, ஓராயிரம் வைரக்கற்கள் உண்டு. அத்தகைய வைரக்கற்களில் முதன்மையான வைரங்கள்தான் நம்முடைய ஐ.பெரியசாமி அவர்களும், இங்கு இருக்கக்கூடிய சக்கரபாணி அவர்களும். கழகத்திற்கு என்று சொன்னாலும் அல்லது ஆட்சிப் பொறுப்பிற்கு வந்து மக்கள் பணி ஆற்றக்கூடிய அந்த நிலை இருந்தாலும், அந்த இரண்டையும் ஒன்றாகக் கருதி அதிலே தங்களை ஒப்படைத்துக் கொண்டு, அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றக்கூடியவர்கள் இவர்கள்.

அதனால்தான் எந்தத் தேர்தலாக இருந்தாலும், அந்தத் தேர்தலில் நம்முடைய கழகம் வெற்றி வாகை சூடக்கூடிய ஒரு பகுதியாக, வெற்றி வாகை சூடக்கூடிய ஒரு மாவட்டமாக இந்த மாவட்டம் தொடர்ந்து விளங்கிக் கொண்டிருக்கிறது என்பதை நான் மட்டுமல்ல, அனைவரும் அறிந்திருக்கும் செய்தி தான்.

நம்முடைய சக்கரபாணி அவர்கள் பேசும்போது குறிப்பிட்டுச் சொன்னார். செந்தில் அவர்களும் அதை குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார். நான் இந்த மாவட்டத்திற்கு பல நேரங்களில் வந்தது உண்டு. கட்சிப் பொறுப்பில் இருக்கக்கூடிய நேரத்தில் இளைஞர் அணியின் செயலாளராக, கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராக, பொருளாளராக, செயல் தலைவராக இப்படி பல்வேறு பொறுப்புக்கள் ஏற்றுக் கொண்டிருக்கக்கூடிய நேரத்தில், இந்த திண்டுக்கல் மாவட்டத்திற்கு நான் வந்ததுண்டு. அதேபோல், மக்கள் பணியாற்றக்கூடிய மேயராக இருந்தபோதும் வந்திருக்கிறேன், உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த நிலையிலும் வந்திருக்கிறேன், துணை முதலமைச்சராக இருந்த அந்த சூழ்நிலையிலும் வந்திருக்கிறேன். இப்போது முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கக்கூடிய இந்த நிலையிலும் உங்களைத் தேடி, நாடி வந்திருக்கிறேன். அதையெல்லாம் எடுத்துச் சொன்னார்கள்.

என்னைப் பொறுத்தவரையில் நான் பணிவோடு தெரிவித்துக் கொள்ள விரும்புவது, இப்படிப்பட்ட பொறுப்புக்களை ஏற்று வருகிற நேரத்தில் அடைகிற பெருமைகளை விட, எந்த சூழ்நிலையிலும், எப்படிப்பட்ட நிலையிலும் உங்களில் ஒருவனாக இருந்து என்னுடைய கடமையை ஆற்றிட வேண்டும் என்று விரும்பிய நிலையிலே தான் நான் பெருமைப்படுவது உண்டு.

•மாங்கரையாற்றின் குறுக்கே எட்டுப் பாலங்கள்!

•கொடகனாற்றின் குறுக்கே நான்கு பாலங்கள்

•திண்டுக்கல் - நத்தம் ரயில்வே மேம்பாலம்

•திண்டுக்கல் முதல் பழனி வரை பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் நடப்பதற்கென்று தனியாக 5 கோடி ரூபாய் செலவில் நடைபாதை.

•கன்னிவாடி நாயோடையின் குறுக்கே அணை.

•யானைவிழுந்தான் ஓடையின் குறுக்கே அணை

•நங்காஞ்சியாற்றின் குறுக்கே அணை

•நல்லதங்காள் ஆற்றின் குறுக்கே அணை

•சிறுமலையாற்றின் குறுக்கே அணை

•சுக்காம்பட்டி, ரெட்டியார் சத்திரம், பஞ்சம்பட்டி, அய்யம்பாளையத்தில் உயர் அழுத்த மின் நிலையங்கள்.

•ரெட்டியார்சத்திரம் அருகே அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி

•கன்னிவாடியில் மகளிர் விடுதி மற்றும் மாணவர் விடுதிகள்!

•மருதாநதி அணையில் கிணறு அமைத்துக் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குழாய் பதித்து 20 ஆண்டு கால குடிநீர்ப் பிரச்சினை கழக ஆட்சியில் நிவர்த்தி செய்யப்பட்டது.

•அய்யங்கோட்டை பொதுமக்கள் மருதாநதி ஆற்றினைக் கடந்து செல்ல கழக ஆட்சியில் மேம்பாலம் கட்டப்பட்டிருக்கிறது.

•திண்டுக்கல் வட்டத்தை இரண்டாகப் பிரித்து ஆத்தூர் தாலுகாவை புதிதாக ஏற்படுத்தி அதற்கான அலுவலகக் கட்டடங்களைக் கட்டிக் கொடுத்தது கழக ஆட்சிக் காலத்தில்தான்.

- இப்படி பல்வேறு சாதனைகளை இந்தத் திண்டுக்கல் மாவட்டத்திற்குச் செய்து கொடுத்த அரசுதான் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையிலான ஆட்சி.

ஐந்து முறை தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்றிருந்த நேரத்தில் இந்தப் பணிகளெல்லாம் நடந்திருக்கின்றன.

இப்போது ஆறாவது முறையாக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறக்கூடிய இந்த ஆட்சியில் ஏராளமான பணிகள், அதற்கெல்லாம் நன்றி தெரிவித்து நம்முடைய அமைச்சர் பெருமக்கள் எடுத்துச் சொன்னார்கள்.

•ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு இந்த ஓராண்டில் மூன்றடுக்கு ஊராட்சிகளுக்கு மாநில நிதிக்குழு மானியம் மூலம்

121 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டிருக்கிறது.

•குடிநீர்த் தேவையினை நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் ரூ.27 கோடி மதிப்பீட்டில் 709 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

•சுகாதாரப் பணிகளுக்காக ரூ.27 கோடி மதிப்பீட்டில் 822 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

•அடிப்படை வசதிக்கான பணிகளுக்காக ரூ.37 கோடி மதிப்பீட்டில் 1,128 பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

•கிராமப்புறங்களில் குடியிருக்க வீடு இல்லாமல் தவிக்கிற ஏழை மக்களுக்குத் தேவையான வீடுகள் கட்டும் திட்டத்தின்கீழ் ரூ.107 கோடி மதிப்பீட்டில் 3,907 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

•இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்காக புதிதாக 8 உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய 321 வீடுகள் கட்டும் பணி ரூ.17.16 கோடி மதிப்பீட்டில் முடிவடையக்கூடிய தருவாயில் இருக்கிறது, அதற்காக தேதியை நம்முடைய அமைச்சர்களும், ஆட்சித் தலைவர் அவர்களும் இன்றைக்கு நினைவுபடுத்தி எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

•தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 69 கி.மீ நீளத்திற்கு 43 தார்ச்சாலைகள் அமைக்கும் பணிகள் ரூ.21.51 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

•மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் அடிப்படையில் 10,463 பணிகள் ரூ.411 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. வரும் நிதியாண்டிற்கு ரூ.108 கோடி உத்தேச ஒதுக்கீடு வரப்பெற்றிருக்கிறது.

•தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் 6,165 தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டும் பணி ரூ.7.40 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

•தூய்மை இந்தியா இயக்கம் திட்டத்தின்கீழ் 102 சமுதாய சுகாதார வளாகம் கட்டும் பணிகள் ரூ.5.35 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டிருக்கிறது.

•சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.21 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வகையான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

•நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.2 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வகையான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

•நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 18 பணிகள் ரூ.4.28 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

•தேசிய கிராம சுயாட்சி திட்டத்தின் கீழ் 2 பணிகள் 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

•ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மலைகிராமங்களில் 243 பணிகள் ரூ.1.85 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

•அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் 102 கிராம ஊராட்சியில் உள்ள நூலகங்கள் பழுது நீக்கம் செய்வதற்கு ரூ.1.76 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

•அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 70 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு ரூ.44 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயார்படுத்தப்பட்டு வருகிறது.

•திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 பெரியார் நினைவு சமத்துவபுரங்களில் முதற்கட்டமாக 6 சமத்துவபுரங்களில் 695 மறுசீரமைப்புப் பணிகள் ரூ.6 கோடியில் நடைபெற்று வருகிறது.

•நபார்டு திட்டத்தின்கீழ் 10 பாலங்கள் கட்டும் பணிகள் ரூ.15.42 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

•ஆக மொத்தம் திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் 2021-22 ஆம் ஆண்டில் ரூ.1,080 கோடி மதிப்பீட்டில் 27,265 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களுக்கு தெரிவிப்பதில் நான் பெருமைப்படுகிறேன்.

இதுவரை, நான் சொன்னவை அனைத்தும் திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்து வரும் இந்த ஓராண்டுப் பணிகள் மட்டும்தான். இப்படி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டுக்கான சில திட்டங்களை இந்த விழாவின் மூலமாக நான் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

•930 கோடி ரூபாய் மதிப்பில் மாபெரும் கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஒன்றைத் தீட்டி இருக்கிறோம்.

•ஒட்டன்சத்திரம் நகராட்சி நெய்க்காரப்பட்டி மற்றும் கீரனூர் பேரூராட்சி ஆகியவற்றிற்கும், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 217 குடியிருப்புகளுக்கும், பழனி ஒன்றியத்தில் உள்ள 116 குடியிருப்புகளுக்கும், தொப்பம்பட்டி ஒன்றியத்தில் உள்ள 173 குடியிருப்புகளுக்கும், ஆழியாறு நதியை ஆதாரமாகக் கொண்டு இத்திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. இதனுடைய மொத்த மதிப்பு 930 கோடி ரூபாய்.

•இதேபோல் மேலும் ஒரு குடிநீர்த் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. காவிரி நீரை ஆதாரமாகக் கொண்டு, திண்டுக்கல் மாநகராட்சி, ஆறு பேரூராட்சிகள் மற்றும் கரூர் மாவட்டத்தில் இருக்கிற 815 குடியிருப்புகளுக்குக் குடிநீர் வழங்கக் கூடிய திட்டம், காவிரி கூட்டுக்குடிநீர்த் திட்டம் கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலமாக, தற்போது 21 எம்.எல்.டி. குடிநீர் மட்டுமே அளிக்க முடிகிறது. இத்திட்டத்தின் கீழ், கூடுதலாக 23 எம்.எல்.டி குடிநீரைத் திண்டுக்கல் மாவட்டத்திற்கு அளிக்கும் வகையில் 95.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் மேம்படுத்தப்படும் என்பதை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

நான் அறிவிப்பு செய்கிறேன் என்றால், அந்த அறிவிப்பைச் செயல்வடிவம் கொடுத்து நிச்சயமாக நிறைவேற்றிக் காட்டுவேன் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். ஏதோ அறிவித்துவிட்டு சென்று விடுவேன் என்று நினைக்காதீர்கள். அறிவித்த திட்டம் எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் பற்றி வாராவாரம் அது சம்பந்தப்பட்ட அமைச்சரிடத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரியிடத்தில், ஏன், இன்னும் சொல்ல வேண்டுமென்றால், கோட்டையில் என்னுடைய அறையிலேயே ஒரு போர்டு வைத்திருக்கிறேன். அதன் பெயர் Dash Board. அந்த Dash Board எதற்கு என்று கேட்டீர்கள் என்றால், என்னென்ன திட்டங்களை நாம் அறிவித்திருக்கிறோம், அந்தத் திட்டங்கள் எப்போது தொடங்கியிருக்கிறது, அது எந்தெந்த நிலையில் இருக்கிறது என்பது நான் கோட்டையிலே முதலமைச்சர் அறையில் உட்கார்ந்துகொண்டே பார்க்கக்கூடிய அளவிற்கு ஒரு வசதியை செய்து வைத்திருக்கிறேன். எனவே, யாரும் அதிலிருந்து தப்பி விட முடியாது, அதில் நான் உஷாராக இருப்பேன் என்பதை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். அதை தினந்தோறும் நான் கண்காணித்துக் கொண்டு இருப்பேன்.

எனவே, திண்டுக்கல் மாவட்டத்திற்க்கு அறிவிக்கப்பட்ட திட்டமாக இருந்தாலும் - வேறு எந்த மாவட்டத்துக்கு அறிவிக்கப்பட்ட திட்டமாக இருந்தாலும் - திட்டத்தை அறிவித்ததோடு நம் பணி முடிந்துவிட்டது என்று அமைதியாக இருந்துவிட மாட்டேன். திட்டத்தின் பயனை மக்கள் அடையக்கூடிய வகையில் அதை தொடர்ச்சியாக நான் கண்காணித்துக் கொண்டு இருப்பேன் என்பதை மீண்டும் மீண்டும் உறுதியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஒரு கட்சியினுடைய ஆட்சி முடிந்து, இன்னொரு கட்சியினுடைய ஆட்சி வந்திருக்கிறது என்று இல்லாமல், ஒரு மிகப் பெரிய மாற்றத்திற்கான அடித்தளத்தை நாங்கள், தமிழ்நாட்டில் அமைத்துக் கொண்டு வருகிறோம். சமூகத்தில் சமூகநீதியை உருவாக்குவதிலும் - பொருளாதாரத்தில் எல்லார்க்கும் எல்லாம் என்பதைக் கிடைக்க வைப்பதிலும் - மாணவர்கள், இளைஞர்கள் உயர்கல்வியை அடைவதிலும் - தகுதிக்கு ஏற்ற வேலையைப் பெறுவதிலும் – சமூகத்தின் அனைத்து தடைகளை எல்லாம் தாண்டி, பெண்களைச் முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லக்கூடிய - தொழில் வளர்ச்சியானது இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலகத்தரத்துடன் போட்டி போடக் கூடியதாக, உலகத்தின் தலைசிறந்த நிறுவனங்களையும் ஈர்க்கத்தக்க வகையில் தமிழ்நாடு எழுச்சி பெறுவதும்தான் இந்த ஆட்சியின் நோக்கம்.

ஆட்சியினுடைய நோக்கம் என்று சொன்னால், இப்போது தொடர்ந்து நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம், இந்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சியாக நடைபோடுகிறது என்பதை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம். இன்னும் சொல்ல வேண்டுமென்று சொன்னால் - இதுதான் நான் காண விரும்பும் கனவு தேசம். தமிழ்நாட்டைத் தலைநிமிர வைக்கத்தான் ஒவ்வொரு நாளும் நான் உழைத்துக் கொண்டிருக்கிறேன். தமிழ்நாட்டை வழிநடத்தி - தமிழ்நாட்டின் உயர்வுக்குக் காரணமான சமூகநீதி - மாநில சுயாட்சி - கூட்டாட்சித் தத்துவம் - சமத்துவம் - சகோதரத்துவம் ஆகிய அனைத்தும் இந்தியா முழுமைக்கும் பரவ வேண்டும் என்று நான் நினைக்கக்கூடியவன்.

“தமிழ்நாட்டை தலை நிமிர வைக்க ஒவ்வொரு நாளும் உழைத்து வருகிறேன்..இது திராவிட மாடல் அரசு”: முதல்வர் பேச்சு

இத்தகைய உன்னதமான சிந்தனையானது தனிப்பட்ட என்னால் அல்ல, தனிப்பட்ட ஸ்டாலினால் அல்ல, தனிப்பட்ட ஒரு முதலமைச்சரால் அல்ல, இதையெல்லாம் முழுமையாக நிறைவேற்ற வேண்டுமென்று சொன்னால், இதற்கு அமைச்சர் பெருமக்கள், நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், துறைகளைச் சார்ந்திருக்கக்கூடிய அதிகாரிகள் அனைவருக்கும், அதேபோல மாவட்டங்களை வழிநடத்திக் கொண்டிருக்கக்கூடிய அதிகாரிகள் அனைவருக்கும், அந்தப் பொறுப்புணர்வு இருந்து, நீங்கள் கை கோற்க வேண்டும் என்று இந்த இலக்கை வைத்து நான் மட்டும் நினைத்தால் அதில் வெற்றி பெற்றுவிட முடியாது. இந்த இலக்கு என்பது அதிகாரத்தை கொண்டு செலுத்தக்கூடிய நூற்றுக்கணக்கான மனிதர்களுக்கும் வந்துவிடுமானால் தமிழ்நாட்டின் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது. அந்த இலக்கோடு அனைவரும் பணியாற்றிட வேண்டுமென்ற அந்த வேண்டுகோளை இந்த நேரத்தில் நான் எடுத்துவைக்க விரும்புகிறேன்.

மாநிலங்களின் அரசியல் உரிமைகளை - மாநிலங்களின் நிதி உரிமைகளை -மாநிலங்களின் சட்ட உரிமைகளைப் பறித்துவிடுவதன் மூலமாக மாநிலங்களை முடக்கிவிட சிலர் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதாவது மாநிலங்களை முடக்குவதாக நினைத்து, மக்களை முடக்க நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்வதுதான் மாநிலங்களுடைய உரிமை. அதை மாநிலங்கள்தான் செய்தாக வேண்டும்.

மிகக் கடுமையான நிதி நெருக்கடி இருந்தாலும், இத்தனை திட்டங்களைத் தீட்டுகிறோம் என்றால் - எல்லாம் யாருக்கு, உங்களுக்கு. எல்லாம் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மக்களுக்குத்தான். ஆக, மக்களுக்காக இருப்பவர்கள் நாங்கள். மக்களோடு இருப்பவர் நாங்கள். மக்களுக்காகவே வாழ்பவர்கள் நாங்கள். எனவே, நாங்கள் எல்லாம் மக்களுடைய தொண்டர்கள். உங்களால் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் ஒரு தலைமைத் தொண்டனாக இருந்து - உங்கள் தேவைகள் அனைத்தையும் நிச்சயமாக, உறுதியாக செய்து தருவேன். ஐ.பெரியசாமி அவர்கள் குறிப்பிட்டத்தைப் போல 70 சதவீதம், 80 சதவீதம் பணிகள் தேர்தல் நேரத்தில் அளித்திருக்கக்கூடிய உறுதிமொழிகள் எல்லாம் நிறைவேற்றியிருக்கிறோம். மீதமுள்ள இருக்கக்கூடிய அந்த உறுதிமொழிகளையும் மிக விரைவிலே, படிப்படியாக, நிதிநிலை சூழ்நிலைக்கேற்ப அனைத்தையும் நிறைவேற்றித் தருவோம் என்ற அந்த உறுதியை இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, எல்லார்க்கும் எல்லாம் என்ற திராவிடக் கொள்கை தமிழ்நாட்டில் நிலைக்க நித்தமும் பாடுபடுவோம்! பாடுபடுவோம்! என்று சொல்லி,

இந்த எழுச்சிமிகுந்த நிகழ்ச்சியை மிகுந்த சிறப்போடு ஏற்பாடு செய்து தந்திருக்கக்கூடிய மாவட்டத்தினுடைய ஆட்சித் தலைவர், அவருக்கு துணை நின்று பணியாற்றியிருக்கக்கூடிய அரசு அதிகாரிகள், அலுவலர்கள் அத்தனை பேருக்கும், அதையெல்லாம் முறையாகக் கண்காணித்து இதை மிகச் சிறப்பாக நடத்திட வேண்டும் என்று திட்டமிட்டு அந்தப் பணியில் வெற்றி கண்டிருக்கக்கூடிய நம்முடைய மதிப்பிற்குரிய மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்களுக்கும், அதேபோல, உணவுத் துறையின் அமைச்சர் திரு.சக்கரபாணி அவர்களுக்கும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் அத்தனை பேருக்கும் மீண்டும் ஒருமுறை என்னுடைய இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

banner

Related Stories

Related Stories