தமிழ்நாடு

“தொழில்துறையின் பெயர் மாற்றம்.. புதிய சிப்காட் தொழிற்பூங்காக்கள்” - அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!

சென்னையில் 2-வது விமான நிலையம் அமைய உள்ள இடம் விரைவில் அறிவிக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

“தொழில்துறையின் பெயர் மாற்றம்.. புதிய சிப்காட் தொழிற்பூங்காக்கள்” - அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் மீது தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரையாற்றினார். அப்போது அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

பேரவையில் பதிலுரையாற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழ்நாடு முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக மாறி வருகிறது. முதலமைச்சர் மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். ஏற்றுமதிக்காக தமிழ்நாட்டில் தனிக்கொள்கையை உருவாக்கியது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு.

தமிழ்நாடு அதிக அளவில் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்த்து வரும் மாநிலமாகவும் திகழ்கிறது. 80-க்கும் மேற்பட்ட குளோபல் பார்ச்சூன் 500 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளன. 2019-ஆம் ஆண்டினை ஒப்பிடுகையில் இது 33.33 சதவீதம் வளர்ச்சி ஆகும். உலகளாவிய முதலீட்டு மையமாக தமிழ்நாட்டின் மீது முதலீட்டாளர்கள் வைத்துள்ள பெரும் நம்பிக்கையை இந்த புள்ளி விவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

தொழில்துறையானது, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை என பெயர் மாற்றப்படுகிறது. முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கல் ஆணையரகம் உருவாக்கப்படும்.

கிருஷ்ணகிரியில் ரூ.1,800 கோடியில் 3,000 ஏக்கர் பரப்பில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும். தஞ்சாவூர், உதகமண்டலத்தில் சுமார் ரூ.70 கோடி மதிப்பில் Mini Tidel Parks அமைக்கப்படும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் ரூ.1,000 கோடி மதிப்பில் தொழிலக வீட்டுவசதி திட்டம் செயல்படுத்தப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் ரூ.500 கோடி மதிப்பில் பல்துறை தொழிற்பூங்கா, தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்.

ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் முதலீடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு, ‘ஹைட்ரஜன் எரிசக்திக் கொள்கை’ வெளியிடப்படும்.

சுற்றுச்சூழல் தரத்தை மேம்படுத்த ‘எத்தனால் கொள்கை 2022’ வெளியிடப்படும்.

சென்னையில் 2-வது விமான நிலையத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுவிட்டது. சென்னையில் எந்த இடத்தில் Greenfield Airport அமைய உள்ளது என்பது விரைவில் அறிவிக்கப்படும்.

வான்வெளி & பாதுகாப்பு தொழில்கள் தொடர்பாக ஒரு பொது வசதி மையம் ரூ.500 கோடி மதிப்பில் கோவையில் அமைக்கப்படும். கோவையில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா ரூ.300 கோடியில் அமைக்கப்படும். விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சாலைகள் மேம்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் அதிவேக ரயில் வழித்தடத்தை அடையாளம் காண சாத்தியக்கூறு ஆய்வு சுமார் ரூ.3 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். சரக்கு போக்குவரத்துக்கான வழித்தடத்தை அடையாளம் காண சாத்தியக்கூறு ஆய்வு ரூ.3 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

பணியாளர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில், பொருட்களுக்கு மதிப்பு கூட்டல் பணியை செய்தால், உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியும். அதற்கான கையேட்டினை மாநில திட்டக்குழு உருவாக்கி உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories