தமிழ்நாடு

UPS-ல் தீ.. மூச்சுத்திணறி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாப பலி - செல்ல நாயும் பலியான சோகம்!

கோவை உருமாண்டம்பாளையம் ஜோஸ் கார்டன் பகுதியில் ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அம்மா, மகள்கள் என 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

UPS-ல் தீ.. மூச்சுத்திணறி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாப பலி - செல்ல நாயும் பலியான சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கோவை உருமாண்டம்பாளையம் ஜோஸ் கார்டன் பகுதியில் வசித்து வருபவர் விஜயலட்சுமி. இவருக்கு அர்ச்சனா மற்றும் அஞ்சலி என இரு மகள்கள் உள்ளனர். இவரது கணவர் ஜோதிலிங்கம் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

ஒரு மகள் ஐ.டி கம்பெனியிலும் மற்றொருவர் பைனான்ஸ் தொழிலும் செய்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று காலை அவர்களது வீட்டில் இருந்து புகை வருவதைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த கவுண்டம்பாளையம் வடக்கு தீயணைப்பு துறையினர் வந்து கதவை உடைத்து, எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். உள்ளே சென்று பார்த்தபோது சமையல் அறையில் ஒரு பெண்ணும் அவரது அம்மாவும், படுக்கை அறையில் இன்னொரு பெண்ணும் இறந்து கிடந்துள்ளனர்.

இதுகுறித்து தீயணைப்புத்துறையினர் விசாரணையில், வீட்டின் ஹாலில் இருந்த யூ.பி.எஸ்-ல் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக புகை ஏற்பட்டுள்ளது. இதை அணைக்க அஞ்சலி மற்றும் அவரது அம்மா ஆகியோர் முயற்சித்துள்ளனர். ஆனால் அதற்குள் புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சமையல் அறையில் இருந்த அஞ்சலி மற்றும் அவரது அம்மா ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

அர்ச்சனா படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது. இத்தகவல் அறிந்து அங்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜபாண்டியன், துடியலூர் காவல் ஆய்வாளர் ஞானசேகரன் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு, தொடர்ந்து தடய அறிவியல் துறையினரை வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தனர்.

இவ்விபத்தில், அவர்கள் வீட்டில் வளர்த்து வந்த நாயும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலியாகியுள்ளது. தீ விபத்தால் மூச்சுத்திணறல் ஏற்பாட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories