தமிழ்நாடு

“காஷ்மீர் மக்களுக்காக தமிழ்நாடு குரல் கொடுத்து தோளோடு தோள் நின்றதை மறக்கமாட்டோம்”: உமர் அப்துல்லா பேச்சு!

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ஒன்றிய அரசு விலக்கியபோது அதனை எதிர்த்து குரல் கொடுத்தவர் மு.க.ஸ்டாலின் என உமர் அப்துல்லா பேசியுள்ளார்.

“காஷ்மீர் மக்களுக்காக தமிழ்நாடு குரல் கொடுத்து தோளோடு தோள் நின்றதை மறக்கமாட்டோம்”: உமர் அப்துல்லா பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது வாழ்க்கைப் பயணத்தின் சுவடுகளை விளக்கும் வகையில், "உங்களில் ஒருவன்" என்ற பெயரில் தன்வரலாற்று நூலை எழுதியுள்ளார். 1976ஆம் ஆண்டு வரை உள்ள 23 ஆண்டு கால நினைவுகள் இந்தப் புத்தகத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்றுள்ளன. "உங்களில் ஒருவன்" நூலின் முதல் பாகம் வெளியீட்டு விழா, சென்னை - நந்தம்பாக்கத்தில் உள்ள ‘சென்னை வர்த்தக மைய கூட்டரங்கில்’ நடைபெற்று வருகிறது

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய நூலை வெளியிட்டார். இந்த நிகழ்வில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர்-ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

புத்தகம் வெளியீட்டுக்கு பின்னர் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா வாழ்த்துரை வழங்கினார். அப்போது பேசிய அவர், “தனது 13 வயதிலிருந்து களத்தில் இருப்பவர் மு.க.ஸ்டாலின். தனது செயலால் மக்கள் மனதில் நிற்கிறார். அதனாலேயே மக்களின் மனநிலையை உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் எதிரொலித்துள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து வெகுதொலைவில் ஜம்மு - காஷ்மீர் இருந்தாலும், எங்களுக்காக மு.க.ஸ்டாலின் குரல் கொடுத்தார். காஷ்மீர் மக்களுக்காக தமிழ்நாடு குரல் கொடுத்து, தோளோடு தோள் நின்றதை மறக்கமாட்டோம். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ஒன்றிய அரசு விலக்கியபோது அதனை எதிர்த்து குரல் கொடுத்தவர் மு.க.ஸ்டாலின். இந்த இரண்டு மாநிலங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அதனால்தான் நான் இங்கு நிற்கின்றேன்.

தமிழ்நாட்டின் கொள்கை, இந்தியாவின் பல மாநிலங்களில் பரவியுள்ளது. இந்தியா மிகப் பெரிய நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நிறைந்த நாடு. இங்கு வசிக்கும் மக்களில் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் என்ன அணிய வேண்டும், இஸ்லாமியராக இருப்பவர்கள் என்ன அணிய வேண்டும் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஹிஜாப் அணிவது, தாடி வளர்ப்பது, டர்பன் கட்டுவது எல்லாம் நமது விருப்பம். அது கடவுளுக்கும் நமக்குமானது. ஆனால் அதில் கூட தலையீடும் அளவிற்கு ஒன்றிய அரசு துணிந்துவிட்டது.

அதன்தொடர்ச்சியாகத்தான் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் வசிக்கும் மக்களின் கருத்துகளை கேட்கமாலேயே எங்களது மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு, யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றில் எங்குமே இதுபோல நடந்திருக்காது” எனத் தெரிவித்து, நாளை தினம் பிறந்தநாள் காணும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்தைக் கூறிவிட்டு ஜம்மு - காஷ்மீரின் பாரம்பரியமான கம்பளத்தை, உமர் அப்துல்லா பரிசாக வழங்கினார் .

banner

Related Stories

Related Stories