தமிழ்நாடு

”திராவிட மாடல் ஆட்சிக்கான அங்கீகாரம்தான் மக்கள் கொடுத்த இந்த வெற்றி” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூரிப்பு

9 மாத கால ஆட்சிக்கு மக்கள் வழங்கியிருக்கக்கூடிய நற்சான்றுதான் இந்த வெற்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

”திராவிட மாடல் ஆட்சிக்கான அங்கீகாரம்தான் மக்கள் கொடுத்த இந்த வெற்றி” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூரிப்பு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. அதில் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான இடங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் பெரும்பான்மை பலத்தோடு வெற்றியை பெற்று வருகிறது.

இதன் காரணமாக சென்னையில் உள்ள தி.மு.க. தலைமையகமாக அண்ணா அறிவாலயம் தொண்டர்களின் கொண்டாட்டத்தால் விழாக்கோலம் போல காட்சியளித்தது. இப்படி இருக்கையில் அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களை சந்தித்து மகிழ்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதன் விவரம் பின்வருமாறு:-

இந்த தேர்தல் நேரத்திலே தமிழ்நாட்டு மக்களிடத்தில் ஒரேயொரு வேண்டுகோளை வைத்திருந்தேன். அது, எங்கள் கூட்டணிக்கு முழு வெற்றியை கொடுங்கள். அதனை பயன்படுத்தி உங்களுக்காக பணியாற்ற தொண்டாற்ற காத்திருக்கிறோம் எனக் கோரினேன்.

தற்போது அந்த முழு வெற்றியை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தமிழ்நாட்டு மக்கள் வழங்கியிருக்கிறார்கள்.

கடந்த 9 மாத கால ஆட்சிக்கு மக்கள் வழங்கியிருக்கக்கூடிய நற்சான்றுதான் இந்த வெற்றி. என்னை பொறுத்தவரையில் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கக் கூடிய திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் கொடுத்திருக்கும் அங்கீகாரம்தான் இது.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியமைத்தால் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவார்கள், அந்த நம்பிக்கையை இந்த 9 மாத காலத்தில் முழுமையாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் நிறைவோற்றுவோம் என உறுதியளிக்கிறேன்

மக்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற தயாராக இருக்கிறோம். எத்தனையோ நல்ல திட்டங்களை வரலாற்றும் பதிவாகும் அளவுக்கான சாதனையை செய்துக் கொண்டிருக்கிறோம். செய்யப்போகிறோம்.

இது தமிழ்நாட்டு மக்களுக்கு 100 சதவிகிதம் கிடைக்க வேண்டுமென்றால் உள்ளாட்சி நிர்வாகத்திலும் 100 விழுக்காடு திமுக கூட்டணி இருக்கவேண்டும் என்றுதான் பிரசாரத்தின் போதும் எடுத்துரைத்தேன்.

இதற்காக ஸ்டாலின் பேராசை கொள்கிறார் என நினைத்துவிடாதீர்கள். இந்த தேர்தலில் உங்களது வாக்குகள் மூலமாக உங்களுக்கான உரிமையை நிலைநிறுத்தியிருக்கிறீர்கள்.

இந்த வெற்றியைக் கண்டு கர்வம் கொள்ளவில்லை. மக்கள் நம் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்ற உறுதிதான் இங்கே நிற்க வைத்திருக்கிறது.

அந்த வகையில் பொறுப்புகளை உணர்ந்து நம்முடைய அரசின் சார்பில் நிறைவேற்றப்படும். இவ்வளவு சிறப்பான வெற்றிக்கு காரணமாக அமைந்திருப்பது திராவிட் முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிதான்.

இது தேர்தலுக்காக மட்டும் உருவாக்கப்பட்டது அல்ல. கொள்கை அடிப்படையில் வலிமையாக இருப்பதால்தான் இந்த வெற்றி கிட்டியிருக்கிறது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற, சட்டமன்ற, ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் இந்த கூட்டணி பல வெற்றிகளை கண்டிருக்கிறோம். அதன்படி கூட்டணி கட்சித் தலைவர்கள் அயராது பரப்புரை மேற்கொண்டு இந்த வெற்றியை தந்திருக்கிறார்கள்.

உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவிகிதம் பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஒதுக்கீடு மூலம் சமூகத்தில் உள்ள சரிபாதி பெண்கள் உள்ளாட்சி பொறுப்புக்கு வந்திருக்கிறார்கள். இது மாபெரும் சமூக நீதி, திராவிட மாடல் புரட்சியாகும்.

பெண்களுக்கு அதிகளவு அதிகாரம் வழங்குவதுதான் நம்முடைய கழகத்தின் லட்சியம், குறிக்கோள். ஆகையால் வெற்றி பெற்றிருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

என்னுடைய பணிவான உரிமைகலந்த வேண்டுகோள் என்னவென்றால், இந்த வெற்றியை ஆடம்பரமாக கொண்டாடாமல் அமைதியாக கொண்டாட வேண்டும். மக்கள் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும்.

மக்களுக்காக உண்மையாக இருந்து உழைக்க வேண்டும். மக்கள் அடிப்படை பிரச்னைகளை உடனடியாக சரிசெய்யவேண்டும். உங்கள் மீது எந்த புகாரும் வராத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். இதனை நான் தொடர்ந்து நிச்சயமாக உறுதியாக கண்காணித்துக் கொண்டே இருப்பேன். யாராக இருந்தாலும் தக்க நடவடிக்கை எடுப்பேன். தயங்க மாட்டேன்.

மாபெரும் வெற்றியை தந்திருக்கக் கூடிய தமிழ்நாட்டு மக்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இதயப்பூர்வமான நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.” இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார்.

banner

Related Stories

Related Stories