தமிழ்நாடு

"கூவத்தூரில் ஊர்ந்தார்-ஊழலில் புரண்டார்-ரெய்டுகளுக்கு குனிந்தார்-சுயமரியாதை துறந்தார்": விளாசிய முதல்வர்!

“பழனிசாமியின் காமெடி தர்பார் எப்படி நடந்தது என யாராவது வரலாற்றைப் புரட்டி பார்த்தால், பரமார்த்த குரு மற்றும் சிஷ்யர்களுடைய கதையை படித்த மாதிரிதான் இருக்கும்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

"கூவத்தூரில் ஊர்ந்தார்-ஊழலில் புரண்டார்-ரெய்டுகளுக்கு குனிந்தார்-சுயமரியாதை துறந்தார்": விளாசிய முதல்வர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மதுரை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி என்ற தலைப்பிலான தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “அதிமுக ஆட்சியில், மதுரையை இலண்டன் ஆக்கப் போகிறோம், சிங்கப்பூர் ஆக்கப் போகிறோம் என்று அப்போதைய அமைச்சர்கள் சிலர் நித்தமும் பேட்டி கொடுத்தார்கள்.

ஆனால், ஏற்கனவே இருந்த மதுரையையும் இன்னும் கொஞ்சம் சீரழித்து விட்டுப் போனதுதான் அவர்கள் ஆட்சியின் இலட்சணம்.

அதிமுக ஆட்சியில், ஊராட்சியில் நிர்வாகம் இல்லை.

நகராட்சியில் நிர்வாகம் இல்லை.

ஏன், மாநகராட்சியிலும் நிர்வாகம் இல்லை!

இதே மதுரை மாநகராட்சியின் ஊழல் நாற்றம், ஊர் பூராவும் வீசியது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எவ்வாறு சென்னையை வெள்ளத்தில் மூழ்க வைத்தார்களோ, அவ்வாறுதான் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரையை ஊழலில் மூழ்கடித்தார்கள்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுற்றி நடைபாதை அமைப்பதில் ஊழல் செய்தார்கள்.

வைகை ஆற்றுக் கரை அமைப்பதில் ஊழல் செய்தார்கள்.

ஸ்மார்ட் சிட்டிக்காகப் பள்ளம் தோண்டினால், அந்த இடத்தில் கிடைக்கின்ற மண்ணையும் எடுத்து விற்றார்கள்.

இதையெல்லாம் கண்டுபிடித்துவிடக் கூடாதென்று, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைக் கண்காணிக்கும் சிறப்பு அதிகாரியைப் போடாமல் இருந்தார்கள்.

அதற்கென்று இருக்கின்ற ஆலோசனைக் குழுவைக் கூட நியமிக்காமல் இருந்தார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நம்முடைய மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் அவர்களும் அதற்காக எவ்வளவோ போராடிப் பார்த்தார்.

அதெல்லாம் மதுரை மக்களுக்குத் தெரியும்!

நம்முடைய மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள்கூட, அமைச்சரானதும் மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகளை பார்த்துவிட்டு, எப்படி எல்லாம் ஊழல் நடந்திருக்கிறது என்று பேட்டியே கொடுத்திருக்கிறார்.

நீங்களும் அதைப் படித்திருப்பீர்கள்.

ஓ.பி.எஸ்- பழனிசாமிக்கு வேணும் என்றால் மதுரை ஸ்மார்ட் சிட்டி ஊழல் மறந்திருக்கலாம்.

ஆனால் மதுரை மக்கள் மறக்கவில்லை!

ஏற்கனவே சென்னை ஸ்மார்ட் சிட்டி பணி ஊழல்களை விசாரிக்கத் தனி ஆணையம் அமைக்கப்படும் என்று சொல்லியிருக்கிறேன்.

அதில், மதுரை ஸ்மார்ட் சிட்டி ஊழலும் சேர்த்து விசாரிக்கப்படும் நாள், வெகு தொலைவில் இல்லை!

இந்த மாதிரி மாநகராட்சிகள் நிர்வாகத்தை எல்லாம் ஊழல்மயமாக்கிய அதிமுகவிற்கு, நகர்ப்புறத் தேர்தலில் நிற்கவே யோக்கியதை இல்லை என்பதுதான் உண்மை.

மதுரைக்கு மோனோ இரயில் என்று சொன்னார்கள். எங்கே அது ஓடுகிறது?

முத்துராமலிங்கத் தேவர் சிலையருகே பறக்கும் பாலம் என்று கூட சொன்னார்கள். பறக்கும் பாலம் ஏதாவது இருக்கிறதா?

மதுரை வைகை நதியை, லண்டனின் தேம்ஸ் நதி போல மாற்றுவோம் என்றும்; மதுரையை சிட்னி நகரைப் போல மாற்றுவோம் என்றும்; மதுரையை ரோம் நகரைப் போல மாற்றிவிடுவோம் என்றும், விஞ்ஞானி செல்லூர் ராஜூ சொன்னார்.

ஆனால் எதையும் செய்யவில்லை. இதுதான் அதிமுகவின் லட்சணம்.

மீடியா மைக்கை நீட்டினாலே எதையாவது காமெடியாகச் சொல்வார்கள். அது மட்டும்தான் அ.தி.மு.க.வினருக்குத் தெரியும்.

‘தி.மு.க. ஆட்சிக்கு இன்னும் 27 அமாவாசைகள்தான் இருக்கிறது'- என்று புதிதாக ஜோசியம் சொல்லியிருக்கிறார்கள்.

அரசியல் அமாவாசைகள் யார் என்று தெரிந்துதான், ‘அமைதிப்படை’யாக வாக்களித்து, அவர்களை இன்றைக்கு புலம்ப விட்டிருக்கிறார்கள் நம் தமிழக மக்கள்.

அ.தி.மு.க. அஸ்தமனத்தில் இருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு இடத்தில் வெற்றி பெற்ற கட்சி, அதிமுக.

சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பறிகொடுத்த கட்சி, அதிமுக.

ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோதே, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் மரண அடி கொடுத்த கட்சிதான் - அதிமுக!

அடுத்து நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில், சுத்தமாகக் காணாமல் போன கட்சி- அதிமுக!

இப்படி பழனிசாமி-பன்னீர்செல்வம் தலைமையில் முடங்கிப்போன கட்சி- முடக்கத்தப் பற்றி பேசலாமா?

இப்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் படுதோல்வியைச் சந்திக்கப்போகின்ற கட்சிதான் - அதிமுக.

அவர்களுக்கு ஆக்கப்பூர்வமான அரசியல் தெரியாது. அடிமைத்தனம்தான் தெரியும்!

அவர்களுக்குத் தெரிந்த அரசியல் எல்லாம், அமாவாசை அரசியல்தான்.

ஆட்சியை விட்டு இறக்கப்பட்டு ஒன்பது மாதம் ஆனதால், இவர்கள் ஆட்சியில் நடந்த கோமாளிக் கூத்துகளை மக்கள் மறந்துவிட்டு இருப்பார்கள் என்று நினைத்து, திமுக ஆட்சிக்கு சட்டம் ஒழுங்கு பற்றிப் பாடம் எடுக்கிறார் பழனிசாமி.

அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது என்று கொஞ்சம் நினைவூட்டவா?

* பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் - 6 பேர் பலி.

* ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் -13 பேர் பலி.

* சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் அடித்துக் கொலை.

- இதுதான் அ.தி.மு.க. ஆட்சி லட்சணம்!

நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் சுவாதி கொலையும், சிறையில் ராம்குமார் மரணமும்தான் அ.தி.மு.க. ஆட்சி!

* திருச்சி ராமஜெயம் கொலை.

* ஏர்வாடி காஜா மொய்தீன் கொலை.

* கச்சநத்தம் பட்டியல் இனத்தவர் மூன்று பேர் படுகொலை.

* உதவி ஆய்வாளர் ஆல்வின் சுதன் கொலை.

உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை.

* ஏன், அம்மையார் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவிலேயே கொலை, கொள்ளை நடந்தது.

இப்படி நாள்தோறும் ‘கொலை - கொள்ளைதான்’ அ.தி.மு.க. ஆட்சியில் தலைப்புச் செய்தியாக இருந்தது!

* தமிழ்நாடு முழுவதும் தந்தை பெரியார் சிலை, அண்ணல் அம்பேத்கர் சிலை, திருவள்ளுவர் சிலைகள் அவமதிக்கப்பட்டது.

மானுட சமுதாயத்தின் உயரிய சிந்தனையாளர்களான இவர்கள் மேல் கறை பூச, நாசகார சக்திகளை சுதந்திரமாக அனுமதித்து, கறை படிந்து, அழுக்கோடு தேங்கி நிற்கிறது அ.தி.மு.க.

* பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றது யார்?

அப்படி ஒரு கொடூரமான கும்பலைக் காப்பாற்ற வெட்கமேபடாமல் செயல்பட்டதுதான்- ‘பச்சைப் பொய்’ பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி!

* தமிழ்நாடு அரசின் தலைமைப் பீடமான தலைமைச் செயலகத்துலேயே வருமான வரித்துறை சோதனை, தமிழ்நாட்டு வரலாற்றில் அழிக்க முடியாத கறையாக இருக்கிற அந்த சம்பவம் நடந்தது அதிமுக ஆட்சியில்தான்.

* டி.ஜி.பி. வீட்டில் சோதனை நடந்ததும் அ.தி.மு.க. ஆட்சியில்தான்!

இப்படியெல்லாம் ஆட்சி நடத்தி- தமிழர் விரோத பா.ஜ.க.விற்கு அடிமைச் சேவகம் செய்து, மோசமான, பாதுகாப்பற்ற ஆட்சியை நடத்திய பழனிசாமி - பன்னீர்செல்வம் காமெடி நாடகக் கம்பெனி, எந்த முகத்தை வைத்துக் கொண்டு வாக்கு கேட்கிறார்கள்?

எந்தத் தகுதியோடு திமுக ஆட்சியை விமர்சிக்கிறார்கள்?

இவர்கள் முகத்தை மக்கள் அருவெறுப்போடத்தான் பார்க்கிறார்கள்!

ஒருபக்கம் மக்கள் விரோத ஆட்சியை நடத்திவிட்டு, இன்னொரு பக்கம் கோமாளிக் கூத்துகளை நடத்திக் கொண்டு இருந்தவர் பழனிசாமி!

கம்பராமாயணத்தை எழுதியது- சேக்கிழார் என்று பழனிசாமி சொல்வார்!

தெர்மாகோல் வைத்து வைகை அணையில் நீர் ஆவியாவதை தடுக்கிறேன் என்று அறிவியல் மாமேதை செல்லூர் ராஜூ சொல்வார்.

மக்கள் சோப்பு போட்டு குளிப்பதால்தான், நொய்யல் ஆற்றில் நுரை அதிகமாகியிருக்கிறது என்று கருப்பண்ணன் சொல்வார்.

இவ்வாறு, திண்டுக்கல் சீனிவாசன்- ராஜேந்திர பாலாஜி- ஆர்.பி.உதயகுமார் என்று ஒவ்வொருவரும், ஒவ்வொரு நாள் வித விதமாக காமெடி செய்வார்கள்.

இது எல்லாவற்றிற்கும் மேலாக, ஓ.பன்னீர்செல்வம் ‘தர்மயுத்தம்’-என்று ஒன்றை செய்ததுதான் மிகப் பெரிய மெகா காமெடி!

எதிர்காலத்தில், பழனிசாமியின் காமெடி தர்பார் எப்படி நடந்தது என்று யாராவது வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், பரமார்த்த குரு மற்றும் சிஷ்யர்களுடைய கதையை படித்த மாதிரிதான் இருக்கும்.

இந்த லட்சணத்தில்தான், என்னவோ சிறப்பான ஆட்சியைக் கொடுத்துவிட்ட மாதிரியான மிதப்பில், பழனிசாமி புளுகுமூட்டைகளாக அவிழ்த்துவிடுகிறார். பன்னீர்செல்வம் அதற்குப் பக்கவாத்தியம் வாசிக்கிறார்!

பழனிசாமி ஆட்சியை சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், கூவத்தூரில் ஊர்ந்தார்- ஊழலில் புரண்டார்- ரெய்டுகளுக்கு குனிந்தார்- சுயமரியாதையைத் துறந்தார்- நீட் தேர்வு முதல்- மாநில உரிமைகள் அனைத்தையும் டெல்லிக்கு அடகு வைத்துப் பணிந்தார்! இவ்வாறுதான் வரலாற்றில் பதிவாகியிருக்கிறது.” என உரையாற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

banner

Related Stories

Related Stories