தமிழ்நாடு

“நீதிமன்றத்திற்கு பயப்படாத பிரதமர் மோடி தமிழ்நாட்டு MP-க்களை பார்த்து அஞ்சுகிறார்” : ஆ.ராசா பேச்சு!

உச்சநீதிமன்றத்தை பார்த்து பயப்படாத பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.,க்களை பார்த்து பயப்படுகிறார் என ஆ. ராசா தெரிவித்துள்ளார்.

“நீதிமன்றத்திற்கு பயப்படாத பிரதமர் மோடி தமிழ்நாட்டு MP-க்களை பார்த்து அஞ்சுகிறார்” : ஆ.ராசா பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உதகை நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் போட்டியிடும் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும், அவர்களை அறிமுகம் செய்து வைத்தும் தி.மு.க., துணைப் பொது செயலாளர் மற்றும் நீலகிரி எம்.பி., ஆ.ராசா உதகை ஐந்து லாந்தர் மற்றும் காந்தல் பென்னட் மார்க்கெட் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது, ஆ.ராசா பேசியதாவது, கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, வட மாநிலங்களில் மோடி அலை வீசியபோதிலும், தமிழகத்தில் மோடி அலை வீசவில்லை. மாறாக, தமிழகத்தில் 39 இடங்களில் தி.மு.க., வெற்றி பெற்றது. தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை அழிக்க முயற்சி செய்யும் பா.ஜ.க.,விற்கு மக்கள் வாக்களிக்கவில்லை. தமிழக மக்களுக்காக குரல் கொடுப்பவர்களுக்கு வாக்களித்தனர்.

பிரதமர் மோடி உச்சநீதிமன்றத்தை பார்த்து பயப்படுவதில்லை. ஆனால், தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றம் சென்ற தி.மு.க., எம்.பி.,க்களை பார்த்து மட்டுமே பயப்படுகிறார். இந்திய பிரதமரை கட்டுப்படுத்தும் தகுதி தற்போது தமிழகத்தை சேர்ந்த எம்.பி.,க்களுக்கு மட்டுமே உள்ளது.

அனைத்து பிரதமர்களும் நாடாளுமன்ற கூட்டம் நடக்கும்போது வருவது வழக்கம். ஆனால், மோடி நாடாளுமன்றத்திற்கு வருவதில்லை. குறிப்பாக, கேள்வி நேரத்தின்போது வருவதே இல்லை. நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு அனுப்பிய மசோதவை கவர்னர் திருப்பி அனுப்பினார். இதனை கண்டித்து நாடாளுமன்றத்தை 39 எம்.பி.,க்கள் முடக்கினோம்.

கொரோனா பாதிப்பு உச்சகட்டத்தில் இருந்தபோது, அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வெளியில் கூட வரவில்லை. ஆனால், தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியில் வந்து பொதுமக்களை சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறியது மட்டுமின்றி, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தார்.

மேலும், கொரோனா பாதித்த மக்கள் சிகிச்சை பெறும் மையத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தது மட்டுமின்றி, ஆறுதல் கூறினார். மேலும், பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆட்சி பொறுப்பேற்றவுடன் ரூ.4 ஆயிரத்தை வழங்கி மக்களை காப்பாற்றினார். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவிகளை செய்தார். மேலும், தமிழகத்தில் டீசல் விலையை குறைத்தார்.

இதனை பார்த்த பிரதமர் மோடி, பா.ஜ.க., ஆளும் அனைத்து மாநிலங்களிலும், அந்தந்த முதல்வர்களிடம் டீசல் விலையை குறைக்க கேட்டுக் கொண்டார். தேர்தல் வாக்குறுதியில் கூறிய 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். விரைவில், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.ஆயிரம் வழங்கப்படும். இன்னும் நான்கு ஆண்டுகள் நான்கு மாதங்கள் ஆட்சி உள்ளது. எனவே, படிப்படியாக அனைத்து வாக்குறுதிகளையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவார்.

ஊட்டி நகராட்சிக்குட்பட்ட மார்க்கெட் கடைகளின் வாடகை பிரச்னை உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர். இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இது போன்ற அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண வேண்டும் எனில், அதற்கு தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் 36 போரையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும். அப்போது, தான் எந்த ஒரு பிரச்னையானலும், அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் அவர்கள் சென்று முறையிட முடியும். எனவே, தி.மு.க., சார்பில் ஊட்டி நகராட்சியில் போட்டியிவும் 36 பேரையும் வெற்றியடையச் செய்ய வேண்டும் என்றார். இந்த பிரச்சார கூட்டத்தில், தி.மு.க துணை செயலாளர் ரவிக்குமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் இளங்கோ, முஸ்தபா, எக்ஸ்போ செந்தில் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

banner

Related Stories

Related Stories