தமிழ்நாடு

“தமிழ்நாட்டை மேம்படுத்த முழுமையாக தன்னை ஒப்படைத்துக்கொண்ட இயக்கம் தி.மு.க” : முதல்வர் மு.க.ஸ்டாலின்

கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் “உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி” என்ற தலைப்பிலான தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

“தமிழ்நாட்டை மேம்படுத்த முழுமையாக தன்னை ஒப்படைத்துக்கொண்ட இயக்கம் தி.மு.க” : முதல்வர் மு.க.ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி” என்ற தலைப்பிலான தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம் – என்று தமிழ்நிலப்பரப்பின் எல்லையாகப் போற்றப்படுகின்ற இந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் ‘உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி’ என்ற சிறப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு உங்களை எல்லாம் காணொலி மூலமாக சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன்.

தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய பிறகு குமரி பகுதியில் கோட்டாறு என்ற ஊரில் சுயமரியாதை வாசகசாலை தொடங்கப்பட்டது.

வைக்கம் சென்று போராடிய பெரியார் அவர்கள், குமரி வட்டாரத்தில் உள்ள சுசீந்திரம் கோவில் நுழைவுப் போராட்டத்திலும் பங்கெடுத்தார்கள். குமரி மாவட்டமானது இன்றைக்குத் தமிழ்நாட்டுடன் இருந்தாலும் 1956-க்கு முன்னதாகத் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இணைந்து இருந்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த தமிழர் வாழும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று தென் எல்லையில் போராட்டம் நடந்தபோது பேரறிஞர் அண்ணா அவர்கள் அந்தப் போராட்டத்தை முழுமையாக ஆதரித்தார்கள்.

தென் எல்லைப் போராட்டத்தைப் பொறுத்தவரையில் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக “நாகர்கோவில் மாவட்டச் செயலாளரான ஜான் அவர்களுக்கு முழு அதிகாரம் தருகிறேன்” என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் அறிவித்தார்கள்.

தென் எல்லைப் போராட்டத்தை ஆதரிப்பதற்காக நாகர்கோவிலுக்கே அண்ணா அவர்கள் வருகை தந்தார்கள். தொடர் மறியல் போராட்டத்தில் இறங்கியது திமுக. 1954-ஆம் ஆண்டு நடந்த தென் எல்லை விடுதலைப் போராட்ட மறியலில் கைதான 900 பேரில் திமுகவைச் சேர்ந்தவர்கள் 110 பேர் ஆவர். மரியாதைக்குரிய தலைவர் மார்ஷல் நேசமணி அவர்கள் கைதானபோது அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று தி.மு.க., மாநாட்டில் தீர்மானமே நிறைவேற்றப்பட்டது.

ஏராளமானோரின் உயிரைக் கொடுத்துப் பெற்ற உரிமையின் காரணமாக 1956-ஆம் ஆண்டு இந்த கன்னியாகுமரி மாவட்டம் உருவானது. 1974-ஆம் ஆண்டு தென் எல்லைப் போராட்டத் தியாகிகளுக்கு நிதி உதவி செய்து மரியாதை செய்த அரசுதான் திராவிட முன்னேற்றக் கழக அரசு ஆகும். புதுக்கடைத் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 11 பேர் குடும்பத்துக்கு தலா 2000 ரூபாய் நிதி உதவியும் – மாற்றுத்திறனாளிகளாக ஆக்கப்பட்ட 25 பேர்க்குத் தலா 500 ரூபாயும் - 82 தியாகிகளுக்கு தியாகச்செம்மல் விருதும் வழங்கியவர் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். சிறைசென்ற தியாகிகளுக்கு மாதம் 75 ரூபாய் வழங்க உத்தரவிட்டார்கள். 2000-ஆம் ஆண்டு மொத்தம் 142 தியாகிகளுக்கு உதவி செய்யும் பட்டியலை அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அங்கீகரித்து நிதி உதவி செய்ய உத்தரவிட்டார்கள்.

இந்திய விடுதலைப் போராட்டத் தியாகிகளைப் போல - மொழிப்போராட்டத் தியாகிகளைப் போல - கன்னியாகுமரி எல்லைப் போராட்டத் தியாகிகளையும் மதித்துப் போற்றிய இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். மதித்துப் போற்றிய ஆட்சிதான் திமுக ஆட்சி என்பதை இக்கூட்டத்தின் வாயிலாகப் பெருமையோடு சொல்கிறேன்.

சமத்துவம் – மதச்சார்பின்மை – மொழிப்பற்று – பொதுவுடைமை என நாட்டுக்குத் தேவையான அடையாளங்களை இந்தியத் துணைக்கண்டத்துக்கே உணர்த்தும் ஒற்றைச்சொல்தான் கன்னியாகுமரி.

*சமத்துவத்தைப் போதிக்கும் - மனிதத்தைப் போற்றும் – திருக்குறளை உலகத்துக்குக் கொடையாக வழங்கிய திருவள்ளுவருக்கு இந்தியத் துணைக்கண்டத்தின் துவக்கமான குமரிக் கடல் முனையில் விண்ணைமுட்டும் வண்ணம் 133 அடியில் அழகிய கலைநயத்துடன் கம்பீரமாக வடக்குநோக்கிச் சிலைவைத்து இந்தியத் துணைக்கண்டத்தைத் தெற்குநோக்கித் திரும்பிப் பார்க்கவைத்தவர்தான் முத்தமிழறிஞர் கலைஞர். வானுயர நிற்கும் அய்யன் திருவள்ளுவரின் சிலை தமிழ் மண்ணில் இருந்து சமத்துவக் கருத்துகளை உலகுக்கு உரக்கச் சொல்கிறது. தமிழர்களின் பெருமையையும் தொன்மையையும் எட்டுத் திக்கும் எடுத்துச் செல்கிறது. அன்னைத் தமிழ் மொழியின் சிறப்பை அடையாளப்படுத்துகிறது. சமத்துவத்தைப் போதித்த வள்ளுவருக்கு ஆதிக்கச் சக்திகள் கறைபூச நினைத்தாலும் அவர்களைத் தன் கருத்துகளால் அம்பலப்படுத்தித் தமிழ்நாட்டின் அரணாய் உயர்ந்து விளங்குகிறார், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்றார் அய்யன் வள்ளுவர்.

மதச்சார்பற்ற இந்தியாவின் மாபெரும் தலைவரான பெருந்தலைவர் காமராஜரின் தொண்டினைப் போற்றி, அவரது புகழை உயர்த்திப் பிடித்துக் கொண்டாடியதும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்தான்.

கடலோரத்தில் கட்டடம் கட்டத் தடை இருந்த காரணத்தால் அன்றைய ஒன்றிய அரசுடன் போராடிப் பெருந்தலைவர் காமராசருக்கு மணிமண்டபம் அமைத்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்.

குமரித் தந்தை மார்ஷல் நேசமணியைப் போற்றும் வகையில் நாகர்கோயில் வேப்பமூடு சந்திப்பில் மார்ஷல் நேசமணிக்கு மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பொதுவுடைமை வீரர் தோழர் ஜீவானந்தம் அவர்களுக்கு நாகர்கோயிலில் மணிமண்டபம் அமைக்கப்பட்டது.

இவை மட்டுமா, இன்னும் எத்தனையோ சாதனைகளை இந்தக் குமரி மாவட்டத்துக்காகச் செய்து தந்துள்ளோம். அவற்றில் சிலவற்றை மட்டும் சொல்ல வேண்டுமானால்…

* குளச்சல், தேங்காய்ப்பட்டணம் பகுதிகளில் அரசு சார்பில் மீன்பிடி துறைமுகங்கள் 2009 -ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. அப்போது துணை முதலமைச்சராக இருந்த நானே இதனை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தேன்.

*ஆரால்வாய்மொழிப் பகுதியில் பொய்கை அணைத் திட்டம் உருவாக்கப்பட்டது.

* மாம்பழத்துறையாறு அணையும் கழக ஆட்சியில்தான் அமைக்கப்பட்டது. அதையும் துணை முதலமைச்சராக இருந்தபோது நான் வந்து திறந்து வைத்தேன்.

* புத்தேரி மேம்பாலம் அமைத்தோம்.

* ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புற்றுநோய் மையம் அமைத்துத் தந்தோம்.

* 1989-ஆம் ஆண்டு பத்மநாபபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் உருவாக்கப்பட்டு இன்று வரை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

* தச்சமலை, பிராமலை, தோட்டமலை, முடவன்பொற்றை உள்ளிட்ட 50 -க்கும் மேற்பட்ட மலையோரக் கிராமங்களுக்கு சுமார் 750 புதிய மின் கம்பங்கள் நட்டு மின்சார வசதி செய்து கொடுக்கப்பட்டது.

இப்படி பல்வேறு நலத்திட்டப்பணிகளை குமரி மாவட்டத்தில் செய்து கொடுத்த ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி.

இப்போது கழக ஆட்சி அமைந்ததும் – இந்தக் குறுகிய காலத்தில்,

* 21 ஆண்டுகளாகத் திறக்கப்படாத பொய்கை அணை, வேளாண் பாசனத்துக்காகத் திறந்து விடப்பட்டுள்ளது.

* திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறை இணைப்புக் கடல்சார் பாலம் அமைக்க 37 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*பகவதி அம்மன் கோவில் நவராத்திரி விழா நடத்திட அனுமதி அளிக்கப்பட்டது. 85 லட்சம் ரூபாய் மதிப்பில் கோவில் திருப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

* திக்குறிச்சி மகாதேவர் கோவில் சுற்றுச்சுவர் மற்றும் படித்துறை பராமரிப்புப் பணிகள் 75 லட்ச ரூபாய் செலவில் செய்யப்பட உள்ளது.

* குலசேகரம் - அருமநல்லூர் - நாகர்கோவில் இடையே புதிய பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

* ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய இரண்டு பேரூராட்சிகளையும் சேர்த்து நகராட்சியாக ஆக்கப்பட்டுள்ளது.

* கீழ்வண்ணான்விளையில் அங்கன்வாடிக் கட்டடம் -

* வல்லக்குமாரன்விளை தொடக்கப்பள்ளிக்குப் புதிய கட்டடம்-

* இளங்கடை- ப்ரியா நகரில் புதிய சாலைகள் -

* மீனாட்சிபுரம் அரசு உயர்நிலைப்பள்ளிக்குப் புதிய கட்டடம் -

* கொட்டில்பாடு பகுதிக்கு புதிய சாலைகள் -

* ஏ.வி.எம் கால்வாய் தூர்வாருதல் -

* தக்கலை முஸ்லீம் நடுநிலைப்பள்ளிக்கு நிதி -

* புலியூர்க்குறிச்சி அங்கன்வாடி மையத்துக்கு அடிக்கல் -

* அ.தி.மு.க ஆட்சியில் இயக்கப்படாமல் இருந்த தென் தாமரைக்குளம் முதல் நாகர்கோவில் வரையிலான பேருந்து இயக்கப்பட்டது.

இப்படி, பல்வேறு பணிகளை இந்தக் குமரி மாவட்டத்துக்குச் செய்தோம் - செய்து வருகிறோம்.

தமிழை வளப்படுத்துவதாக இருந்தாலும் - தமிழர்களைக் காப்பதாக இருந்தாலும் - தமிழ்நாட்டை மேம்படுத்துவதாக இருந்தாலும் - அனைத்திலும் 100-க்கு 100 தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்ட இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம்தான்!

இது தமிழ்நாட்டு மக்கள் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.

எனவே, சமத்துவம் - மதச்சார்பின்மை - மொழியுணர்வு - பொதுவுடைமை ஆகியவை சங்கமித்துள்ள குமரி மக்களிடம், ‘உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி’ என்று ஆதரவு கேட்கிறேன்." என உரையாற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

banner

Related Stories

Related Stories