தமிழ்நாடு

சட்ட முன்வடிவை திருப்பியனுப்பிய ஆளுநர்; தாமதிக்காது மீண்டும் நீட் விலக்கு மசோதாவை தாக்கல் செய்த தமிழகஅரசு

நீட் விலக்கு கோரும் சட்ட முன்வடிவை மீண்டும் நிறைவேற்ற தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று கூடியுள்ளது.

சட்ட முன்வடிவை திருப்பியனுப்பிய ஆளுநர்; தாமதிக்காது மீண்டும் நீட் விலக்கு மசோதாவை தாக்கல் செய்த தமிழகஅரசு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிப்பது தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்ட முன்வடிவு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் 142 நாட்களுக்குப் பின் கடந்த 1ம் தேதி பேரவைத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பியனுப்பியதுடன், சட்ட முன்வடிவை மறு பரிசீலனை செய்யும்படியும் தெரிவித்திருந்தார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன.

இந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியால் திருப்பி அனுப்பப்பட்ட சட்ட முன்வடிவு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள சட்டப்பேரவை கட்சித் தலைவர்களின் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 5ம் தேதி நடைபெற்றது.

இந்த கூட்டத்தை அ.தி.மு.க, பா.ஜ.க ஆகிய கட்சிகள் புறக்கணித்தன. இருப்பினும், அடுத்த கட்டமாக சட்டப்பேரவை சிறப்புக்கூட்டத்தை கூட்டி, மீண்டும் நீட் தேர்வுக்கு விலக்கு கோருவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்புவது என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, இன்று காலை 10 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை கூட்ட அரங்கில் சிறப்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது. கொரோனா காரணமாக கடந்த 2020ம் ஆண்டில் இருந்து சட்டப்பேரவைக் கூட்டம் கலைவாணர் அரங்கில் நடத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது இந்த சிறப்புக் கூட்டம் ஜார்ஜ் கோட்டையில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரான மா.சுப்பிரமணியன் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்களிக்கக் கோரும் மசோதவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தாக்கல் செய்தார்.

அப்போது, நீட் தேர்வால் ஏழை எளிய மாணவர்களே கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். நீட் அறிமுகமான காலத்தில் இருந்தே தமிழ்நாடு அரசு நீட் தேர்வை எதிர்த்து வருகிறது. வசதிபடைத்தவர்கள் மட்டுமே ஒன்றுக்கு மேற்பட்ட முறை நீட் தேர்வை எழுதி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் அனைத்து தரப்பினரும் ஒட்டுமொத்தமாக ‘நீட்’ தேர்வை எதிர்க்கிறார்கள். நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் தன்னிச்சையாக முடிவெடுத்து ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார்.

குடியரசு தலைவருக்கு மசோதாவை அனுப்பாமல், நீதிபதி குழு அறிக்கை பற்றி தனது கருத்தை ஆளுநர் கூறியிருப்பது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. நீட் விலக்கு மசோதா பற்றிய ஆளுநரின் மதிப்பீடுகள் அனைத்தும் தவறானது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் நீட் தேர்வை ஏன் எதிர்க்கிறோம் எனக் குறிப்பிட்டு பேரவையில் உரையாற்றி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories